கடவுளைக் காண.. Reading between the lines..ஞாயிறன்று மாலை பெல்கியத்தின் லிம்புர்க் மாகாணத்திலுள்ள பொர்க்லோன் என்கிற குறுநகருக்குச் சென்றிருந்தோம். லிம்புர்க் மாகாணத்தை பெல்கியத்திலேயே பழத் தோட்டங்கள் நிறைந்த வனப்பு மிகுந்த வளமான பகுதி என்று கூறலாம். இங்கு விளையும் பழங்கள் ஐரோப்பா முழுவதும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. வசந்த கால மாதங்களான மார்ச்சு மாதத்தில் தொடங்கி மேமாத இறுதி வரை ஆப்பிள், செர்ரி, பேரிக்காய் மரங்களில் வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு நிறப் பூக்கள் பூத்துக் குலுங்கும் காட்சி எப்படி இருக்கும் என்பதை என் மகன் மொழியில் கூறினால் உங்களுக்கு எளிதில் புரிந்துவிடும், 'அப்பா இந்த ப்ளேசை கட் பண்ணி கண்ணுக்குள்ள போட்டுக்கலாம் போல ப்யூடிபுளா இருக்கு பா' என்பான். லிம்புர்க் மாகாண பேரிக்காய்கள் ரஷ்யாவுக்கும் பெருமளவு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த வருடம் பெல்கிய பேரிக்காய்களுக்கு ரஷ்யா விதித்த தடையால் இங்குள்ள விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டார்கள்.


பொர்க்லோன் நகருக்குச் சற்று வெளியே அமைந்த குன்றின் மீது 'Reading between the lines' என்று அழைக்கப்படும் ஒரு 'sea-through' தேவாலயத்தைக் கட்டியுள்ளார் கிரேஸ் வான் வாரென்பெர்க் என்கிற கட்டிட வடிவமைப்பாளர். முழுக்க முழுக்க இரும்பினால் வடிவமைக்கப்பட்ட இத்தகைய ஊடுருவக்கூடிய கட்டுமான அமைப்பின் சிறப்பம்சம் என்னவென்றால் இதனூடே எதிரே பரந்து விரிந்த இயற்கை நிலக்காட்சியை கண்டு ரசிக்கலாம். பார்வையாளர் நின்று கொண்டிருக்கும் இடத்தைப் பொறுத்து தேவாலயத்தின் தோற்றம் மாறுகிறது. அருகிலிருந்து பார்க்கும்போது திடமான கட்டிடமாக தெரியும் அதே கட்டிடம், சற்று தொலைவிலிருந்து பார்க்கும்போது காற்றில் கரைந்துகொண்டிருப்பதைப் போன்றதொரு தோற்றத்துடன் காட்சியளிக்கிறது. இதுபற்றி அறியாத யாரேனும் அந்த வழியே கடந்து செல்லும் போது எதேச்சையாக காண நேர்ந்தால் அது அவர்களுக்கு வித்தியாசமானதொரு காட்சி அநுபவத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை.

டச்சு மொழியில் இந்த தேவாலயத்தை 'டோர்-கேய்க்-கெர்க்' (Doorkijkkerk) என்று அழைக்கிறார்கள். 'டோர்' என்றால் 'ஊடாக', 'கேய்க்' என்றால் 'பார்த்தல்', 'கெர்க்' என்றால் 'தேவாலயம்'. இந்தக் கட்டிடத்திற்கு 'Reading between the lines' என்று பொருத்தமானதொரு சிறப்புப் பெயரையும் வைத்தவரை உண்மையிலேயே பாராட்டவேண்டும் என்று உட்புறம் சென்ற பிறகுதான் எனக்குத் தோன்றியது. 'எழுதப்பட்ட வரிகளை விட எழுதப்படாத வரிகள் முக்கியம். அவற்றை கொஞ்சம் சிந்தனைக்குப் பின்பு வாசகனால் நிரப்ப முடியும்' என்று சுஜாதா ஒரு கட்டுரையில் எழுதியிருப்பார். இந்த வரிகளின் உண்மையான அர்த்தம் இந்தக் கட்டிடத்தின் உட்புறத்தில் வரி வரியாய் தெரியும் அந்த இரும்பு அடுக்குகளினூடே வனப்பு மிகுந்த இயற்கைக் காட்சியைக் காணும்போதுதான் எனக்குத் தெளிவாகப் புரிந்தது. நீங்களே பாருங்களேன்.
(இது ஆலயத்தின் எந்தப் பகுதி என்று கண்டுபிடிப்பவர்களுக்கு ஒரு பரிசு காத்திருக்கிறது)

இதை வடிவமைத்தவன் அப்போது எனக்கு ஒரு கட்டிட வடிவமைப்பாளராக மட்டுமல்லாமல் ஒரு கவிஞனாகவும் தெரிந்தான். உள்ளே நுழைந்தவுடன் வரிகள் மட்டுமே தெரிந்தது. சிறிது நேரம் உற்று நோக்க ஆரம்பித்த பிறகே அதனூடே அழகு விரிய ஆரம்பித்து வரிகள் தொலைந்து போனது. 

இன்னும் சொல்லப்போனால் உட்புற அந்த வடிவமைப்பே பெரிய காதுகளையுடைய ஒரு மொட்டை மனிதனின் தலை போன்று இருப்பதை நான் எடுத்த புகைப்படத்தில் நீங்கள் பார்க்கலாம். அதைத் திட்டமிட்டு வடிவமைத்திருப்பார்களா என்று தெரியவில்லை. ஒருவேளை என் கண்களுக்கு மட்டும் அப்படித் தெரிகிறது போலும். 


எப்படியாகிலும், கடவுளைக் காண விரும்புபவர்கள் நிச்சயம் போக வேண்டிய தேவாலயம் இது. 

Go and Read GOD between the lines!

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஞாநி

பலகுரல் மன்னனும் கலவர நண்பனும்

போதிதர்மரும் தங்கமீன்களும்