“எழுத்தில் தொலைதல்” - ப்ரியா இளங்கோ

களிர் தினத்தன்று மனைவியிடமிருந்து ஒரு கடிதம்.

ப்ரியா, என்னுடைய தோழி ஒருவருக்கு நேற்று எழுதிய கடிதத்தை எனக்கும் அனுப்பியிருந்தாள். இனி அதிகம் எழுதப் போகிறாளாம். இனி நமக்கு வேலை இல்லை. மகளிர் தினத்தன்று எனக்கு "காட்டாறு" என்கிற பட்டம் வழங்கி கௌரவித்தமைக்கு நன்றி! தன் மீதும் என் மீதும் எழுதப்பட்ட விமர்சனக் கட்டுரையாகவும் இருப்பதாலும், ப்ரியா எழுதியுள்ள முதல் படைப்பாக (கடித இலக்கிய வகைமையில் சேருமன்றோ?) இருப்பதாலும் முகநூலிலும் இங்கும் பதிவு செய்ய விழைகிறேன்.

"எழுத்து ஒரு அராபிக் குதிரை. வாஹனமும் சவாரியும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டுவிட்டால், அப்பப்பா! என்னென்ன வேகங்கள், அழகுகள், தொடுவானமும் தாண்டிய தூரங்கள்!" - லா.ச.ரா

இனி ப்ரியாவின் கடிதம்..

ன்புள்ள தேவிக்கு,

என்னைப் போன்றதொரு ஆர்வக்கோளாறு மற்றும் கற்றுக்குட்டியின் தமிழ் எழுத்தைப் பாராட்டியும் ஊக்குவிக்கவும் வேறு செய்கிறீர்கள். நன்றி.

இருப்பினும் எழுத்தில் என் எல்லை மிக மிகக் குறுகியது என்று நான் அறிவேன். “நீ ஒரு பக்கம் எழுத வேண்டுமானால் 100 பக்கங்களை முதலில் வாசி” என்பார் மாதவன். தமிழ் இலக்கியமோ உலக இலக்கியமோ எனக்குப் பரிச்சயமானது அல்ல. மிகக் குறுகிய ரசனை என்னுடையது. நான் படிப்பதையெல்லாம் ஜெமோ வணிக எழுத்து என்று கூறுவார். இப்பொழுது உணர்கிறேன் நிறையப் படித்து எல்லைகளை விரிவுபடுத்திக் கொண்டிருக்க வேண்டுமென்று. ஏனெனில் எழுதுவது எனக்கு ஒருவித மனஅமைதியை, சுயமதிப்பை ஈட்டுத் தருவது போல் உள்ளது. இந்த உலகத்தில் தொலைந்து போவது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. ஆனால் மொழி இன்னும் வசப்படவில்லை. என் மன ஓட்டங்களுக்கு ஈடான சொற்களைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்பதை சாபமாக உணர்கிறேன்.

இரண்டு வருடங்களுக்கு முன்பு மாதவன் நிறைய எழுதிக் கொண்டிருந்தார். விடிய விடிய எழுதுவார். சாப்பாடு தூக்கம் எதைப் பற்றியும் சிந்திக்காமல் எழுத்தில் தொலைந்திருப்பார். எனக்கு மிகவும் கோபமும் எரிச்சலும் வரும். இப்படியும் ஒருவரால் இருக்க முடியுமா என்று?! முன்னரே குறிப்பிட்டுருந்தது போல், நானொரு சராசரி நடுத்தர வர்க்கக் குடும்பத்தின் மனைவியாக வாழவே வளர்க்கப்பட்டவள். என்னுடைய வாழ்வின் எதிர்பார்ப்புகளும், கணவரின் மீதான கனவுகளும் அவ்வாறே உருவாகி இருந்தது. அதுவும் எங்கள் சமூகத்தில் மனைவியின் குரலே பெரும்பாலும் உயர்ந்திருக்கும். “இது சேவலின் முட்டை” என்று மனைவி கூறும் போது அதை ஆமோதிக்கும் கணவர்களையே நான் அதிகம் கண்டிருக்கிறேன்.  அவர்களின் கட்டளைகளுக்கு இணங்க வாழும் (Henpecked husband என்று ஆங்கிலத்தில் கூறுவார்களே) அவர்களைத்தான் நான் பழகுவதற்கு எளிமையானவர்கள் என்று புரிந்துவைத்திருக்கிறேன். எதையும் நாம் பொதுமைப்படுத்த முடியாது, எனினும் நான் அறிந்திருந்தவரையில் அப்படித்தான் இருந்தது. நம்முடைய வாழ்க்கையின் எதிர்பார்ப்புகளோ மனக் கட்டமைப்போ நாம் பார்த்து வளர்ந்த சமூகத்தின் மூலமாகவேதானே உருவாகிறது. So, that's a typical middle class Indian family mindset! ஒரு 9 to 5 Job, சிக்கன சமையல், பத்து முதல் ஆறு வரை தூக்கம், வரவு செலவுப்  பட்டியல், மாதாந்திர சேமிப்பு, ஒரு சிறிய பிளாட், கொஞ்சம் நகைகள், இரண்டு  குழந்தைகள், பண்டிகை கொண்டாட்டங்கள் என்று எல்லாம் நடுத்தர வர்க்க சமூக நெறிகளின் விதிகளுக்குட்பட்டவை. இப்படிச் சுழல்வதுதானே எளிது என்று தொடர்ந்து போதிக்கப்படுகிறது.

ஆனால், மாதவன் ஒரு வட்டத்திற்குள் சிக்கிக்கொள்ள எப்போதுமே விரும்பாதவர். மாறுதல் இல்லாத சலிப்பான monotonous வாழ்க்கை முறை அவருக்குப் பிடிப்பது இல்லை. ஆக்கப்பூர்வமாக, புதிது புதிதாக எதையாவது செய்துகொண்டே இருக்க வேண்டும் அவருக்கு. ஒரு சமயம் பித்துப்  பிடித்தது போல் எழுதுவார். திடீரென்று தோட்டக்  கலையில் இறங்குவார், Diet, nutrition and fitness என்று ஆரம்பித்து அதில் சகலமும் படித்து, அதை நடைமுறையும் படுத்திக் கரை காண்பார். நினைத்துக் கொண்டது போல் நடிப்பு வகுப்பிற்குச் செல்வார். ஏதோ ஒரு  விருப்பம் அவரை வழிநடத்திக் கொண்டிருக்கும். அதில் தொலைவதும் மீண்டும் அதிலிருந்து வேறு ஒன்றுக்கு மாறுவதுமாக அவர் பயணம் தொடரும். அவருடைய இயல்பு அது. அப்படித்தான் அவரால் இயங்க இயலும் என்பதைப் புரிந்துகொள்ளவே எனக்கு வெகுகாலம் பிடித்தது. அவரது கனவுகள் மிகவும் பெரியது. அவர் சிலவற்றை ஒரு குழந்தையின் குதூகலத்துடன் விவரிக்கும் போது என்னால் அதில் என்னை பொருத்திக்கொள்ளவே முடியாது. எப்படி எதிர்வினையாற்றுவது என்றுகூட எனக்குத் தெரியாது. நல்லதோ கெட்டதோ ஏதோ ஒரு யோசனை உதிக்கும் போது அதை உடனே செயலாற்ற வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார். He has firm beliefs and values. அதை நாம் அசைப்பது மிக மிகக் கடினம். உதாரணமாக அவரிடம் யாரைப் பற்றியும் அவ்வளவு எளிதாகக் குறை சொல்லிவிட முடியாது. நேற்று பார்த்து அறிமுகமானவராக இருந்தால்கூட. பெண்களுக்கே உரித்தான குணம் எதையுமே பெருந்தன்மையாக எடுத்துக்கொள்வது போல் வெளியில் இருந்துவிட்டு வீட்டிற்கு வந்து கணவரிடம் புலம்புவதுதானே! அதை அவரிடம் செய்யமுடியாது. உன் பிரச்சனைகளை நீதான் எதிர்கொள்ளவேண்டும் என்பார். மற்றவர்களின் ஊதுகுழலாக இருப்பது அவருக்குப் பிடிக்காது. A straight-forward person.

ஏதோ ஒரு இணைக்கும் புள்ளி இருந்தாலொழிய அவரை அணுகுவது சுலபமல்ல. சுற்றங்களோ நட்போ அவருக்கு ஆத்மார்த்தமாக இருக்கவேண்டும். யாரையும் அவர்களாக ஏற்றுக்கொள்வார். அநாவசிய எதிர்பார்ப்புகளை மனிதர்களிடத்தில் அவர் வைப்பது இல்லை. அவர்கள் இச்சமயத்தில் இப்படி நடந்துகொண்டார்கள் என்று சொன்னாலொழிய அதை அவர் பொருட்படுத்தியிருக்கவே மாட்டார். ஏதாவது மனவேற்றுமை, சிக்கல்கள் ஏற்படும் போது நேரடியாக சுட்டிக் காட்டி சரிபடுத்திக்கொண்டு சேர்ந்து பயணிக்க வேண்டும் அவருக்கு. நேரத்தைக் கடத்துவதற்காக, பொழுபோக்கிற்காக மற்றும் உதவிக்காக என்று சிற்சில காரணங்களுக்காக மனிதர்களிடத்தில் பழக அவருக்குப் பிடிப்பது இல்லை. He hates small talks! நிறையப் பேச வேண்டும். அதுவும் அறிவுசார் உரையாடல்களாக நம்முடைய மனதின் எல்லைகளை விரிவுபடுத்திக் கொள்ள உதவும் பேச்சாக இருக்கவேண்டும். கனவுகளைக் குறித்து, பேரார்வங்களைக் குறித்து, இலக்குகளையும் அதை அடைய எடுத்துக்கொள்ளும் முயற்சிகளைப் பற்றியும் பேசவேண்டும் அவருக்கு. அதே சமயம் தன்னிடம் மற்றவர்கள் ஏதாவது குறையோ, விமர்சனமோ கூறி இருந்தால் அதை ஏற்றுக்கொண்டு அது சரியாய் இருப்பின் அதை மாற்றிக்கொள்ள மெனக்கெடுவார். எதையுமே எதிர்மறை மனப்போக்குடன் அணுகமாட்டார். தன் மீது எல்லையற்ற நம்பிக்கை வைத்திருக்கும் நபர் அவர். A self-confident, optimistic and determined person he is.

எதற்காக இத்தனைப் பீடிகை என்றால், "காட்டாறு" என்ற பெயர் இவருக்கு பொருந்தும்தானே? நான் வரையறுக்கப்பட்ட எல்லைக்குள் தேங்கி நிற்கும் ஒரு குளம். எனக்கே உரித்தான புராதான, பாசி படர்ந்த சுயமதிப்பீடுகள், நம்பிக்கைகள். பால்யகாலத்திலேயே தந்தையை இழந்தப் பேரிடரின் விளைவாக உண்டான அச்சங்கள், பாதுகாப்பற்ற சூழல் என்னைத் துரத்தி கொண்டேதான் இருக்கிறது இன்று வரை. எதையுமே முதலில் இது எங்கு போய் முடியுமோ என்ற சந்தேகத்தோடுதான் தொடங்குவேன். Calculated risk எடுக்கக்கூட நான் பழகியதில்லை.  அவ்வளவு எளிதாக யாரையுமே நான் நம்புவதில்லை. முதலில் என்னைத் தற்காத்துக்கொள்ள ஏற்படுத்திக்கொண்ட வேலி இப்பொழுது வானுயர சுவராக எழும்பி நிற்கிறது. அப்படி மீறிப் போய் நான் நட்பு பாராட்டிய போதெல்லாம் அது கசப்பான அனுபவங்களையே கொடுத்ததால் நாம் நினைப்பது சரிதான் என்று மனம் இன்னும் இறுகிவிட்டது. என் நேரத்தையும் ஆற்றலையும் அவர்களுக்காக இழந்ததை எண்ணி எரிச்சல் பட்டிருக்கிறேன். எனக்கு மற்றவர்களின் கண்ணசைவோ உடல்மொழியோ அவர்களின் மன ஓட்டத்தை உடனே உணர்த்தி விடுகிறது. I am super sensitive to others' body language more than their words. அதனால் போலிகளை உடனே கண்டுகொள்ள முடிகிறது. இது வரமா சாபமா என்று தெரியவில்லை. சிலசமயம் ignorant ஆகவே (மனிதர்களைப் புரிந்து கொள்வதில்) இருந்துவிட்டால் எவ்வளவோ மேல் என்று தோன்றுகிறது. My mind is more talkative than my mouth.

Carl Jung-ன் MBTI personality type பற்றி மாதவன் முதலில் தெரிந்துகொண்ட பிறகு எனக்கும் சொல்லிக் கொடுத்தார். அதன் பிறகு ஒருவர் மற்றவரைப்  புரிந்துகொள்வது கொஞ்சம் சுலபமானது, இது எல்லா இடங்களிலும் இப்போதெல்லாம் எனக்கு உதவுகிறது. மாதவன் இதைப் பற்றி உங்களிடம் பேசி உள்ளாரா?

எது எப்படி இருப்பினும் ஊடலில்லாமல் திருமண வாழ்க்கை ஏது? நட்பும் உறவுகளும்தான் ஏது? ஏதாவது ஒரு அரசல் புரசல் வந்துகொண்டுதானிருக்கும். அப்போதெல்லாம் ஜெமோ தளத்திற்குப் போய் அவருக்கும் அருண்மொழி அக்காவிற்கும் நடக்கும் விஷயங்களை விவாதங்களைப் பற்றி எழுதிருப்பார் இல்லையா, அதைப் படித்துவிட்டு மனதைத் தேற்றிக்கொள்வேன் 🙂   We like super heroes and idealistic persons only in movies but not in our real lives. வாசுகியும், செல்லம்மாளும் தனக்காக நேரம் ஒதுக்காமல் திருக்குறளும், கவிதையும் எழுதித் தள்ளின திருவள்ளுவரையும் பாரதியையும் பற்றி புலம்பியிருப்பார்களோ? The creators are too insane to explain but we are very normal to understand.

ஆனால், அவர்களைப் புரிந்துகொள்ள அவர்களின் உலகத்திற்குள் புகுந்தால்தான் உண்டு என்கிற மிகப் பெரிய உண்மையை நான் உங்களுக்கு எழுதும் மின்னஞ்சல்கள் மூலமாக இன்று கண்டுகொண்டேன், தீர்க்கதரிசனம் போன்று. மதியம் 12.30 மணிக்கு எழுத ஆரம்பித்தேன்; பசிக்கிறது. ஆனால் இதை விட்டு போக மனமில்லை. ஏதோ எழுதிக்  கொண்டே இருக்கிறேன். இந்த உலகத்தை உய்விக்க இதில் ஏதும் இல்லை. ஏன்? உங்களுக்கே கூட இதில் ஒன்றும் இல்லை, ஆனால் இது எனக்கான ஒரு வாயில் போல நான் நுழைந்து நடந்து கொண்டே இருக்கிறேன். மாதவன் பலமுறை சொல்லிப் பார்த்து விட்டு விட்டார், எழுதச் சொல்லி . இன்று உங்ககளால் இது சாத்தியப்பட்டுள்ளது. என்னை இவ்வளவு தூரம் எழுத வைத்தது நீங்கள்தான். எப்படி என்னை கண்ணாடி போல் இங்கு பிரதிபலித்துக் கொண்டிருக்கிறேன் என எனக்கே தெரியவில்லை.  எதை பற்றியும் யோசிக்க நேரமில்லாமல் ஒன்று மாற்றி ஒன்று நம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் போதுதான் அது சாத்தியம் போல் உள்ளது. மறுபரிசீலனை செய்துகொள்கிறேன் என்கிற ரீதியில், நடந்தவைப் பற்றியே சிந்தித்துக்கொண்டிருக்கும் பழக்கத்திற்கும், அகச் சிக்கல்களில் இருந்தும் விடுபட்டு ஆக்கபூர்வமான விஷயங்களில் ஈடுபட்டு நம்மைத் தொலைப்பது தவறில்லை என்றுதான் தோன்றுகிறது. அமைதியோடும், சந்தோஷத்தோடும், ஈர்ப்போடும் வாழக்கையை அணுக இதை விட சிறந்த வழி இருப்பதாகத் தோன்றவில்லை. Eureka moment இது. இதையேதான் ஏற்கனவே என் கணவரும் மகனும் சிறப்புடன் பின்பற்றி வருகிறார்கள்.

இந்த மெயில் நீண்டுகொண்டே போகிறது. மன்னிக்கவும்.

அன்புடன்,
ப்ரியா

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..