தீர்க்கதரிசனம்

ன்று அசோகமித்திரனின் நினைவுநாளில் அவருடைய "படைப்பாளிகள் உலகம்" வாசித்துக்கொண்டிருக்கிறேன். கடந்த இரண்டு நாட்களாக தற்செயலாக ப்ரியா இந்தப் புத்தகத்தை எடுத்து வாசித்துக்கொண்டிருந்தாள். அதில் ஒரு கட்டுரையில் அவர் எழுதியிருப்பதை இங்கே தருகிறேன். "நிச்சயம் வாசிக்கவும்". இதை அவர் எழுதியது 1980-ஆம் ஆண்டு. கட்டுரைக்கு கிட்டத்தட்ட என் வயது. இரண்டு வாரங்களுக்கு முன்புதான் என் நண்பர் பாபுவிடம், "We were better off with All India Radio" என்று கூறினேன். அது தவறு என்பது போலிருக்கிறது இந்தக் கட்டுரை. நான் சமீபத்தில் எழுதியிருந்த "போதிதர்மரும் தங்கமீன்களும்" கட்டுரையில் வரும் ஒரு சில கருத்துக்களை அன்றே பதிவு செய்திருக்கிறார். காலங்கள் மாறிவிட்டது. கருத்து மாறவில்லை; மாறவேண்டியதில்லை. மாற்றம் வரவேண்டியது மனங்களில். எனவே இந்தக் கட்டுரையில் வாட்சேப், பேஸ்புக் போன்ற சில வார்த்தைகளைச் சேர்த்து மறுபிரசுரம் செய்து விடலாம். அதுவும் அந்தக் கடைசி வரி - “தீர்க்கதரிசனம்". 

/.....
ஒரு பிரமுகரின் ஒவ்வொரு அம்சத்தையும் உடனுக்குடன் அத்தாட்சியோடு உலகுக்குத் தெரிவிப்பது போலத்தான் இன்றைய தகவல் பரிமாற்றச் சாதனங்களாகிய பத்திரிகை, வானொலி, டெலிவிஷன் போன்றவை செயல்படுகின்றன. 
நாலாபுறங்களிலிருந்தும் இன்று நாம் செய்திகளாலும் தகவல்களாலும் தாக்குதலுக்கு உள்ளாகிறோம். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இத்தாக்குதல் நடந்துகொண்டேதான் இருக்கிறது. நாமும் மிக நுண்ணிய முறையில் நமக்குச் சிறிதும் சம்பந்தமில்லாத தகவல்கள் செய்திகளால்கூட மனமாற்றமடைந்து கொண்டிருக்கிறோம். 
எதை உண்மை என்று எடுத்துக்கொள்வது? ஒரு தலைமுறைக் காலம் முடிவதற்குள் முன்பு உண்மையெனக் கருதப்பட்டது பொய்யாகப் போய்விடுகிறது. விஞ்ஞானத்தின் எல்லைகள் மேன்மேலும் விரிந்து உலகத்தின் மூலை முடுக்குக்கெல்லாம் கணக்கற்ற செய்திகளும் தகவல்களும் வெகு எளிதாக, உடனுக்குடன் கிடைக்கக்கூடிய சாத்தியக் கூற்றில் எதையும் நம்பிக்கையுடன் ஏற்றுக்கொள்ள முடியாத சூழ்நிலையும் உருவாகியுள்ளது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஏராளமான விஞ்ஞானத் தொழில்முறைக் கண்டுபிடிப்புக்கள், மனித வாழ்க்கையை அறிவு ஆற்றலுக்கு அவசியமில்லாது இயந்திரமயமாக்கிவிடும் என்றுதான் அறிஞர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த நூற்றாண்டு முடியப்போகும் ஆண்டுகளில்தான் மனிதன் தன் ஆற்றல் அனைத்தையும் பயன்படுத்த வேண்டிய பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டிவரும் என்று தோன்றுகிறது. அதில் முக்கியமானதாக முன் நிற்பது விசுவரூபமெடுக்கும் தகவல் பரிமாற்ற சாதனங்களின் வெளிப்பாடுகளில் உண்மையைப் பிரித்தெடுப்பது.
...../

பிரித்தெடுப்பீர்களா?

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..