இன்பத்தை இசை யாழே

ன் வாழ்க்கையில் நான் மிகவும் பலவீனமாக இருந்த தருணங்களில் அதுவும் ஒன்று. உண்மையில் அதுபோன்ற பலவீனமான தருணங்கள்தான் இன்றைய என்னுடைய பலத்துக்கே காரணமாயிருக்கிறது.என்னுடைய பலவீனத்தைக் கூட வெட்கமின்றியும் தயக்கமின்றியும் பேசும் இன்றைய துணிவுக்கும் அவையே காரணம். நூறு புத்தகங்கள் வாசிப்பதால் கிட்டும் ஞானத்தை ஒரு துன்பகர நிகழ்வு எளிதாக போதித்து விடும். அதே சமயம் என்னை அந்தத் தருணங்களில் தம் தோள்களில் தாங்கிப் பிடித்திருந்தவர்கள் இல்லாவிடில் இன்றைக்கு நான் ஏது? 'இன்றைய நான்' ஏது? அந்தத் தருணங்களையும், அந்த நல்மனங்களையும் நினைத்துப் பார்த்து என்னுடைய மீள்நினைவுகளை அவ்வப்போது எழுதி வருகிறேன். அவற்றில் சிலவற்றை அப்போதே பகிர்ந்துவிடுகிறேன். சிலவற்றை அவர்களிடம் மட்டும் பகிர்ந்து கொள்கிறேன். பலவற்றை பகிராமல் கணினிக்குள்ளேயே பூட்டி வைத்து அதற்கான காலம் வரட்டும் என்று காத்திருக்கிறேன். அவற்றையெல்லாம் தொகுத்து 'மீள்நினைவுகள்' என்று நூலாகவும் வெளியிடலாம் என்கிற எண்ணம் இருக்கிறது. வருங்காலத்தில் பார்க்கலாம்.      

என் வலிகளை தன் தோள்களில் தாங்கிப் பிடித்து பிரார்த்தித்த ஒரு சிறுவனைப் பற்றி இன்றைக்கு உங்களிடம் பகிர்ந்துகொள்ள விழைகிறேன். 


பதினைந்து வருடங்களுக்கு முன்பு என்னுடைய மாமா வீட்டில் தங்கியிருந்தேன். என் வாழ்க்கைப் புத்தகத்தின் வலிமிகுந்த, துன்பகர பக்கங்களில் சிலவற்றை அந்த வீட்டில்தான் நான் புரட்டியிருக்கிறேன். என்னால் அந்த வீட்டு உறவுகள் அடைந்த தொல்லைகளுக்கும் துன்பங்களுக்கும் இன்றைக்கு நான் என்ன கொடுத்தாலும் அது ஈடாகப் போவதில்லை. நான் என் கட்டுப்பாட்டிலேயே இல்லாத அத்தகைய நாட்களில் ஒரு தருணத்தில், பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமம் செல்ல விரும்பினேன். நான் வெளியே செல்கிறேன் என்று கூறினாலேயே அப்போதெல்லாம் மிரண்டு விடுவார்கள் என் உறவுகள். அருகாமையில் எங்கேனும் சென்றால்கூட எனக்குத் தெரியாமலேயே என்னைப் பின்தொடர்ந்து ஓரிரு ஒற்றர்கள் வருவார்கள். அதெல்லாம் அன்பின் காரணமாகவே என்று நானறிவேன். பாண்டிச்சேரி வரை நான் தனியே செல்வதில் வீட்டில் எவருக்கும் துளியும் விருப்பமில்லை. அதே சமயம் அதை என்னிடம் சொல்வதற்கும் எவருக்கும் தைரியமிருக்கவில்லை. மூர்க்கத்தனத்தையும், மூடத்தனத்தையும் என்னில் நான் உச்சத்தில் கொண்டிருந்த காலம் அது. சமூகத்தின் மூடத்தனத்துடன்  என்னுடைய மூடத்தனத்தையும் எனவே நான் செல்வதை அவர்கள் தடுக்கவும் முயற்சிக்கவில்லை. ஆனால் அந்த வீட்டுச் சிறுவன், "எனக்கும் நீண்ட நாட்களாக அரவிந்தர் ஆசிரமம் செல்ல ஆசை. நானும் வருகிறேன்." என்று கூறிவிட்டு என்னுடன் வந்து விட்டான். இன்னும் இரண்டு நாட்களில் அவனுக்கு ஏதோ ஒரு முக்கியமான தேர்வு என்பது இன்னும் என் நினைவில் இருக்கிறது. இரயிலில்தான் பயணித்தோம். புத்தகங்களைக் கூடவே எடுத்து வந்திருந்தான். என் அருகிலேயே அமர்ந்திருந்தான். நான் கழிப்பறைக்குச் சென்றாலும் என்னைப் பின்தொடர்ந்தான். 

அரவிந்தர் ஆசிரமத்தில் நீண்ட நேரம் என் பிரச்சினைகள் தீர பிரார்த்தனை செய்தேன். அவனும் தீவிரமாக ஏதோ பிரார்த்தனை செய்துகொண்டிருந்தான். வெளியே வந்த பிறகு, "என்ன வேண்டிக்கொண்டாய்?" என்று அவனிடம் கேட்டேன். "உங்கள் பிரச்சினைகள் எல்லாம் நல்லபடியாகத் தீர வேண்டும் என்று வேண்டிக்கொண்டேன் மாமா" என்றான். அவனுடைய பெருந்தன்மை, அவனை விடப் பெரியவனான என் சுயநலத்தைப் பளாரென அறைந்தது. அவனுக்காகவும் அவன் தேர்வுக்காக நான் வேண்டிக்கொள்ளவேயில்லை. 

இன்றைக்கு அவனுடைய பிறந்த நாள். 

துன்பம் நேர்கையில் யாழெடுத்து இன்பம் சேர்க்க முயன்று துணை நின்றவர்களின் இசையை இவ்வின்பவேளையில் நான் வாசித்து அவர்கள் இன்பத்துக்கு இன்பம் சேர்க்க விழைகிறேன். 

அன்பென்று கொட்டு முரசே! இன்பத்தை இசை யாழே!

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..