நீலக் கன்னியின் கண்ணீர்



நேற்று மாலை ப்ளாவ்ஸீயைப் பார்க்கப் போயிருந்தோம். "ப்ளாவ்ஸீ" (Blausee) என்றால் நீலக்கடல் என்று எடுத்துக்கொள்ளக்கூடாது. ஜெர்மன் மொழியில் "ஸீ" என்றால் ஏரி. எனவே, ப்ளாவ்ஸீ என்பதை "நீல ஏரி" என்று மொழிபெயர்க்கலாம். "கான்டெர்" பள்ளத்தாக்கில் "கான்டெர்க்ரூன்ட்" என்கிற இடத்தில் உள்ளது இந்தக் கண்கவர் ஏரி. அவ்வளவு ஒன்றும் பெரிய ஏரியெல்லாம் இல்லை. ஸ்விட்சர்லாந்தில் உள்ள பிற ஏரிகளான தூன், ப்ரீன்ஸ், லேமான் போன்ற ஏரிகளுடன் ஒப்பிட்டால் ப்ளாவ்ஸீயை குளம் அல்லது குட்டை என்றே சொல்லவேண்டும். "லூஸான்" நகரைச் சுற்றியுள்ள "லேமான்" ஏரிதான் ஐரோப்பாவிலேயே ஆகப் பெரிய நன்னீர் ஏரி. 
ப்ளாவ்ஸீயின் சிறப்பு அதன் பளிங்கு போல் தெளிந்த வானீல நிற நீர். இதை வழக்கமான சொல் விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டாம். முற்றிலும் உண்மை. ஐம்பதாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பனியுகத்தின் முடிவில் உருவான பனிச்சரிவின் காரணமாக உருவான ஏரி என்கிறார்கள். ஏரியை ஒட்டி "கான்டெர் ஆறு" ஓடுகிறது. ஏரியைச் சுற்றிலும் சதா மேகங்களை முத்தமிட்டுக்கொண்டிருக்கும் மலைகள் சூழ்ந்த வனப்பகுதி. 




இந்த ஏரியின் இன்னொரு சிறப்பு இதன் வெப்பநிலை எப்போதுமே கோடைகாலத்தில் பத்து டிகிரிக்கு அதிகமாகவோ, குளிர்காலத்தில் ஆறு டிகிரிக்குக் குறைவாகவோ செல்வதில்லை. எனவேதான் ஸ்விட்சர்லாந்தின் கடுங்குளிர்காலத்தில்கூட இந்த ஏரி மட்டும் உறைவதேயில்லை. கனிம வளம் செறிந்த இந்த ஏரியின் நீர், நீல நிற ஒளிக்கற்றையை மட்டுமே உட்கிரகித்துக்கொள்வதால் எப்போதுமே கண்கவர் வானீல நிறத்தில் காட்சியளிக்கிறது. 

நான் புகைப்படக் கலைஞன் இல்லை. ஆனால் நேற்று ஒரு மாடல் அழகியைப் புகைப்படம் எடுப்பது போன்று, இந்த நீலக் கன்னியை ரசித்து ருசித்து வளைத்து வளைத்து இங்கும் அங்கும் ஓடியபடி க்ளிக்கிக்கொண்டிருந்தேன். இவளின் வனப்பு எவரையும் மயக்கி தன் வசம் இழுத்து புகைப்படக் கலைஞராக்கிவிடும் என்பதில் ஐயமில்லை. இன்னொன்றையும் உறுதியாகச் சொல்கிறேன். இயற்கையின் அழகைப் பொருத்த வரை கண்களால் காண்பதை புகைப்படத்தில் கொண்டுவரவே முடியாது. 'போட்டோஷாப்' வேலை செய்தால்கூட. மனித கண்களின் லென்சு தரம் அப்படி. 


இயற்கைக்கும் மனிதனுக்குமான போட்டியில் இயற்கையே வெல்கிறது. ஆனால் மனிதனும் சாதாரணமானவில்லைதான். இயற்கை தன் மீது அள்ளித் தெளித்திருக்கும் அழகை சக மனிதர்கள் நுகர்வதற்காக நெடுவழி நடைபாதைகளிலிருந்து, சுரங்கப்பாதைகள், கொண்டோலா, வான் பறத்தல் என்று எத்தனை வழிகளை மெனக்கெட்டு உருவாக்கியிருக்கிறான் என்று பட்டியலிட்டால் அதுவே ஒரு தனிப்பதிவு ஆகிவிடும். 
நீலக் கன்னி என்றேன். உண்மையாகவே இந்த ஏரிக்குப் பின்னால் ஒரு கன்னியின் கதை இருக்கிறது. வெகுகாலத்துக்கு முன்பு ஒரு அழகிய இளம்பெண்ணும் அவளுடைய காதலனும் இந்த ஏரிக்கு அடிக்கடி வந்து டூயட் பாடியபடி தமிழ் சினிமா ரகக் காதல் செய்திருக்கிறார்கள். ஆனால் என்ன காரணமோ தெரியவில்லை, அந்த இளைஞன் ஒருநாள் திடீரென்று மரித்துவிட்டானாம். அதன் பிறகு அந்தப் பெண் மட்டும் இரவு நேரங்களில் ஏரிக்கு வந்து தனியாக அழுதுகொண்டிருப்பாளாம். காதலன் மறைந்த துக்கத்திலிருந்து வெளியே வரமுடியாமல், இழப்பின் பெருவலியுடன் தவித்த அந்தப் பெண் ஒருநாள் இந்த ஏரியில் மூழ்கி இறந்துவிட்டாளாம். அந்தப் பெண்ணின் கண்ணீரால்தான் இந்த ஏரி நீல நிற ஏரியாகிவிட்டது என்று ஒரு பழங்கதை சொல்கிறார்கள். அவளுடைய கண்ணீரின் புகைப்படங்கள் இங்கே பிரத்யேகமாக உங்களுக்காக.



அவள் நினைவாக "ரபேல் ஃபூக்ஸ்" என்கிற சிற்பி வடித்த பெண் சிலையொன்றை இந்த ஏரியில் மூழ்க வைத்திருக்கிறார்கள். அந்தப் புகைப்படத்தை இங்கு இணைத்துள்ளேன் (கடைசிப் படம்). பார்க்கவும். உண்மையில் அந்தச் சிலையை படம் பிடிக்கும் போது எனக்கு இப்படி ஒரு பழங்கதை இருப்பது தெரியாது. பிறகு அங்கே இருந்தவரிடம் இந்த சிற்பத்தின் சிறப்பு என்னவென்று கேட்டுத் தெரிந்துகொண்டேன். அந்தப் பெண்ணுக்கு நான் வைத்திருக்கும் பெயர் - 'நீலக்கன்னி'. 

பிறகு அந்த நீலக்கன்னியின் சிவப்புக் காதலன் ஒரு படகாக மாறி அவளுடைய நீலக் கண்ணீரில் மிதந்துகொண்டிருக்கிறான் என்று நம்முடைய கற்பனையையும் கதையுடன்  கலந்து விடுவோம்.


அவனே பிறகு மனித உருவெடுத்து நீலக்கன்னியைக் காண வந்தான் என்று கதையை முடித்து விடுவோம்.


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..