ஓஷினென் ஏரி


ற்போது "கான்டெர்ஸ்டிக்" என்கிற அழகிய சிற்றூரில் தங்கியிருக்கிறேன். கடந்த இரண்டு நாட்களாகவே நல்ல உறக்கம் அரிதாக வாய்த்திருக்கிறது. நேற்று காலை எழுந்தவுடன் சாளரத்தின் திரைச்சீலையை விலக்கினேன். மலைகளின் பின்னணியில் ஒரு சிறிய அழகிய தேவாலயம் தெரிந்தது. சாளரத்தை திறந்த சமயம் தற்செயலாக ஆலயமணி அடித்தது. வேறு எந்த சத்தமும் கேட்கவில்லை (டின்னிட்டஸ் தவிர்த்து). பிறகுதான் அது தந்த உத்வேகத்தில் "நீலக்கன்னியின் கண்ணீர்" பதிவை எழுதி முகநூலில் பதிவிட்டேன். சிறிது நேரம் உடற்பயிற்சி செய்துவிட்டு உப்பரிகையில் நின்று காலை நேர சூரிய ஒளியில் மின்னிக்கொண்டிருந்த பனிமலையையும், நீல வானத்தையும், தூரத்தில் தெரிந்த அருவியையும் ரசித்துக்கொண்டிருந்தேன். கையில் இந்தியத் தேநீர். வேறு என்ன வேண்டுமெனக்கு! அம்மாவை வாட்சேப்பில் அழைத்து இந்தக் காட்சிகளைக் காட்டினேன். பிறகு சிற்றுண்டி அருந்திவிட்டு முகநூலில் என்னுடைய பதிவுகளுக்கான பின்னூட்டங்களுக்கு பதிலளித்துவிட்டு, நண்பர்களுடன் அளவளாவிவிட்டு, நேற்றைய நாளைத் துவக்கினோம். 



நேற்றைய திட்டம் "ஓஷினென்ஸீ" (Oeschinensee) என்று ஜெர்மன் மொழியில் அழைக்கப்படும் ஓஷினென் ஏரிக்குச் செல்வது மட்டுமே. ஆனால் அங்கு காரில் செல்ல முடியாது. எனவே, நாங்கள் தங்கியிருந்த விடுதியிலிருந்து இருபது நிமிட நடையில் "கோண்டல்பான்" சென்றடைந்தோம். கோண்டோலா கேபிள் கார் நிலையம் அது. அங்கிருந்து கேபிள் காரில் பயணித்து பதினைந்து நிமிடத்தில் "பெர்க்ஸ்டேஷன்" (மலை நிலையம்) சென்று விட்டோம். நிலையத்திலேயே ஒரு அருந்தகம் இருந்தது. அந்த இடத்தைச் சுற்றிலும் பிரம்மாண்டமான பனிமலைகள். சிறிது நேரம் அவற்றின் கம்பீரத்தை ரசித்துவிட்டு நடையைக் கட்டினோம். நெடுந்தூர நடை என்றால் என் மகனுக்கு ஒரே குதூகலம்தான். நடைப்பயணத்தின் இறுதியில் நாங்கள் ஒரு மாயலோகத்தைக் கண்டடைந்தோம். அங்கு அந்த அற்புதக் காட்சியைக் கண்ட நொடி, "என்னப்பா இது?" என்று உரக்கக் கத்தினான் என் மகன். நான் அப்படியே உறைந்துபோயிருந்தேன். அஃதொரு ஜென் நிலை. அந்தக் காட்சிகளைப் படம்பிடித்து உங்களுக்காக இங்கே வழங்குகிறேன். உங்களுக்கும் ஜென் நிலை வாய்க்கட்டும். 

நீண்ட நேரம் அங்கேயே அமர்ந்து பனிமலைகள் சூழக் காட்சியளித்த ஓஷினென் ஏரியையும், நீல வானத்தையும் தரிசித்துவிட்டு கீழே இறங்கி ஏரிக்கரைக்குச் சென்றோம். ப்ரியா மட்டும் இறங்கமுடியாமல் சற்றுத் திணறினாள். ஆனால் சாய் துள்ளிக் குதித்து ஓடிவிட்டான். கீழே போனால், அங்கே ஏரிக்கரையில் சிலர் கற்களைக் கொண்டு அடுப்புகளை உருவாக்கி, சுள்ளிகளைப் பொறுக்கி வந்து பற்றவைத்து, இரும்புச் சட்டத்தின் மீது இறைச்சியை வேகவைத்துத் தின்றுகொண்டிருந்தார்கள். ஏரியை நெருங்கிய மறுகணம் ஒரு இளம்பெண் எதைப்பற்றியும் யோசிக்காமல் தன்னுடைய ஆடைகளைக் களைந்து நீருக்குள் குதித்து நீந்த ஆரம்பித்துவிட்டாள். அவளுடன் சேர்ந்து அவளுடைய நாய்க்குட்டியும் நீந்த ஆரம்பித்துவிட்டது. மலைகளுக்கு மேலே வானில் பல வண்ண வான்குடை மிதவைகளில் உயரப் பறந்துகொண்டிருந்தார்கள் அசகாய சூரர்கள். சிலர் ஏரியில் மீன் பிடித்துக்கொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் அருவிக்குளியல் எடுத்துக்கொண்டிருந்தார்கள். மலையிலிருந்து பனி உருகி வழிந்தோடி ஏரிக்கு வந்துகொண்டிருந்தது. அவற்றுக்கிடையே கற்களைக் கொண்டு அணைகள் எழுப்பிக் கொண்டிருந்தான் என் மகன். தண்ணீரைத் தொட்டுப் பார்த்தேன். ஐஸ்கட்டியைத் தொடுவது போன்று இருந்தது. இதில் எப்படி இந்தப் பெண் நீந்துகிறாள் என்று எனக்கு வியப்பாக இருந்தது. எல்லோருமே கற்காலத்துக்குப் போய்விட்டதாகத் தோன்றியது. 


"ஏரியின் நீர்மட்டம் தற்போது குறைந்துவிட்டிருக்கிறது. இல்லையெனில் இதைவிட இன்னமும் அழகாகக் காட்சியளிக்கும்" என்றார் ஏரிக்கரையில் திறந்தவெளிக் கற்கால விருந்து அளித்துக்கொண்டிருந்த பெரியவர் ஒருவர். "இதற்கும் மேல் அழகா? என்னுடைய இந்த ஆயுளுக்கு இதுவே போதுமய்யா" என்று கைகூப்பி சொல்லத் தோன்றியது. அந்தக்கணம் மரணம் நேர்ந்திருந்தால் ‘கண்ணாரக் கண்டேன்’ என்று கூறிவிட்டு மகிழ்ச்சியோடு மரணத்தை அணைத்திருப்பேன். ஒரு சுற்றுலா வழிகாட்டி ஆல்ப்ஸிலேயே மிக அழகான மலை ஏரி இதுவே என்று கூறினார். நான் மறுக்கவே இல்லை. ஏரியிலிருந்து நிலத்தடி வடிகால்கள் மூலமாக கான்டெர்ஸ்டிக் நீர் மின் நிலையத்துக்கு பெறப்படும் நீரைக்கொண்டு, உள்ளூர் மின்சக்தி நிறுவனம் தயாரிக்கும் நூறு சதவீத பசுமை மின்சக்தியைத்தான் ஆல்ப்ஸ் மலைப்பகுதியிலுள்ள உணவகங்களும், விடுதிகளும் கிட்டத்தட்ட நூறுவருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தி வருகின்றனவாம். விடுதிகளுக்கு மட்டுமா? எனக்குள்ளும் புத்துணர்ச்சியைப் பாய்ச்சி அனுப்பிவைத்திருக்கிறது ஓஷினென்ஸீ. இட்ஸ் எ மஸ்ட்-ஸீ.

கருத்துகள்

  1. முதல் வரியை படித்தவுடன் , bear grylls போல எதுவும் சாகச பயணத்தை பற்றி எழுத போகிறீர்கள் என்று நினைத்தேன் .

    ஆனால் மிக ரம்மியமான இயற்கை அழகை அனுபவித்து வந்த பேரின்பத்தை விவரித்துள்ளீர்கள்

    இயற்கை நமக்கு அளித்த கொடை ஏராளம் .. விரிப்பு எதுவும் இல்லாமல் நீங்கள் தரையில் படுத்திருக்கும் காட்சி அங்கு சுத்தம் எவ்வளவு பேணப்படுகிறது என்பதன் சாட்சி.

    இது இந்தியாவில் என்றால் ,கற்பனையில் எனக்கும் விரியும் கட்சி எல்லாம் பிளாஸ்டிக் பைகள் , கிழிந்த துணிகள் , கால் கூட வைக்க இயலாத குப்பைகளுடனான கறை /கரை.. கலங்குகிறது நெஞ்சம்..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..