"இயக்குநருடன் ஒருநாள்" ஆவணப்படம்




ப்பாவைப் பற்றி ஒரு ஆவணப்படம் எடுக்க வேண்டுமென்பது என் வெகுநாள் கனாவாக இருந்து வந்தது. கடந்த வருட ஜனவரி மாதம் பொள்ளாச்சி பலூன் திருவிழாவுக்காக தாயகம் வந்தபோது அது சாத்தியமானது. ஆவணப்படம் எடுத்த அன்றைக்கு முந்தைய நாள் நள்ளிரவுதான் ஊருக்கு வந்தேன்.  அடுத்தநாள் பெயருக்கேற்றவாறு ஒரே நாளில் படப்பிடிப்பை முடித்து விட்டோம். படப்பிடிப்பு  என்பது பெரிய சொல். கைப்பேசியைக் கொண்டு நானே பதிவு செய்தது. பயன்படுத்திய கிம்பலிலும் மோட்டார் பிரச்சினை இருந்தது. சரியாக வேலை செய்யவில்லை. மைக் எதுவும் பயன்படுத்தவில்லை. பெரிதாக எதுவும் திட்டமிடவில்லை. மனைவி ப்ரியாதான் கேள்விகளைக் கேட்டாள்என்னென்ன கேள்விகள் கேட்கலாம் என்பதை விமானத்தில் தாயகம் வரும் போது ப்ரியாவும் நானும் பேசிக் குறிப்பெடுத்துக் கொண்டோம். மேலும் பழைய வாழ்க்கை என் நினைவுகளில் இருந்து அகலவில்லை. அதனால் சிரமமிருக்கவில்லை.  

முதல் பாகத்தை அவருடைய பிறந்தநாளன்று முகநூலில் வெளியிட்டேன். இரண்டாம் பாகத்தையும் அதற்கடுத்த மாதமே வெளியிட்டேன். எடிட்டிங் செய்வதற்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. மூன்று இரவுகளில் செய்து முடித்து விட்டேன். மூன்றாம், நான்காம் பாகங்களை எப்போதோ செய்திருப்பேன். நேரம் இல்லை என்று எப்போதும் சொல்வதில்லை. முன்னுரிமை தரவில்லை என்பதே உண்மை. அதற்குக் காரணம் அவருடைய அரசியல் நிலைப்பாடும், அதைத் தாண்டி முகநூலில் அவர் இயங்கிய விதமும் எனக்குள் ஏற்படுத்திய பெரும் சோர்வு. எதைச் செய்தாலும் ஆத்மார்த்தமாகச் செய்ய வேண்டும் என்று நினைப்பவன் நான். அதனால் எடிட்டிங் வேலையைக் கையிலெடுக்காமல் தள்ளிப் போட்டுக்கொண்டே இருந்தேன்.  

நாங்கள் இருவரும் இணையும் புள்ளிகள் குறைவு என்பது நான் ஏற்கனவே அறிந்ததே. புள்ளிகள் வெகு குறைவு என்பதை அவர் பெல்ஜியத்துக்கு வந்த போதுதான் நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது. எங்கள் உரையாடலை பழைய வாழ்க்கை, சுற்றுலா தளங்கள் பற்றிய பேச்சோடு குறுக்கிக் கொள்ள வேண்டியதாகப் போய்விட்டது. மற்ற எல்லாவற்றிலும் கருத்து வேறுபாடுகள் மட்டுமே எஞ்சுகிறது. எங்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் அவ்வளவு பெரிய சித்தாந்த இடைவெளியை நன்றாகவே உணர முடிந்தது. எவற்றையெல்லாம் நான் கைவிட்டிருக்கிறேனோ அவற்றையெல்லாம் அவர் முன்பை விடவும் தற்போது இறுகப் பற்றிக் கொண்டிருக்கிறார். வயதும் ஒரு காரணமாக இருக்கலாம். எனக்கு வயதாகும்போது ஒருவேளை அது புரியலாம்.   

ஆனால் திடீரென்று ஒரு தரிசனம். எந்தப் புள்ளியிலும் நாங்கள் இணையாவிட்டாலும், அவர் தந்தை நான் மகன் என்னும் ஒற்றைப் புள்ளி போதுமானதாக இருக்கிறது எங்களுக்கு. அந்த மனிதனுக்கு    அண்மையில் சென்று விமர்சித்துக்கொண்டே இருந்தாலும், அவருக்குள் இருக்கும் தந்தையை தொலைவிலிருந்து நேசித்துக் கொண்டே இருக்கிறேன் என்பதே உண்மை. குடும்பப் பிரச்சினை காரணமாக, கனவுகளோடு புதிதாகக் கட்டிய பெரிய வீட்டை விட்டு வெளியேறி, அந்த வீட்டு நூலக அறை அளவிலான ஒரு சிறிய வீட்டுக்கு குடியேறி, நடப்பது புரியாமல் ஒரு சிறுவனாக பெரும் மன உளைச்சலுக்கு ஆளானபோது, அவர் சவால்களை எதிர்கொண்ட விதமும், இரவு நேரங்களில் அவர் சொன்ன கதைகளும், அவர் அறிமுகப்படுத்தி வைத்த புத்தக வாசிப்பும்தான் என்னை அதிலிருந்து மீட்டெடுத்தது. 

தந்தை, ஆசான் மற்றேனைய அனைத்திற்கும் மேலாக என்னுடைய தந்தை எனக்கு நான் உரிமையோடு சண்டை போட்டுக்கொள்ளக் கிடைத்த ஒரு அன்பான எதிரி என்றும் சொல்லிக் கொள்ளலாம். நம்மாழ்வார் மீண்டும் நினைவுக்கு வருகிறார். 

"புகழ்வேன் பழிப்பேன் புகழேன் பழியேன் 
இகழ்வேன் மதிப்பேன் மதியேன் - இகழேன்"

அவரை வாழ்த்தியிருக்கிறேன். பழித்திருக்கிறேன். மதித்திருக்கிறேன். சில தருணங்களில் அவமதித்திருக்கிறேன். ஆனால், அதிகம் புகழ்ந்ததில்லை. ஏனோ புகழ வேண்டும் என்று தோன்றியதில்லை. புகழ்வதற்கும், பாராட்டுவதற்கும், நன்றி தெரிவிப்பதற்கும் அத்தனை விஷயங்கள் இருந்தும், இவற்றையெல்லாம் செய்யத் தோன்றியதில்லை. என்னுடைய புத்தக வெளியீட்டு விழாவிலும் அப்படியே. நிறைய குறிப்புகள் எடுத்து வைத்திருந்தும், அதிகம் பேசவில்லை. அவரைப் பற்றி பேசுவதற்கு அதிகம் இருப்பதாலா? இல்லை தந்தைதானே அப்புறம் கூறலாம் என்பதாலா? என்னவென்று தெரியவில்லை. 

கடுமையான உழைப்பாளி. எத்தனைத் தோல்விகள்! ஆனால் அவர் துவண்டதில்லை. அசாத்திய மனோதிடம். ஒன்றிலிருந்து மற்றொன்றுக்குத் தாவி விடுவார். அவருடைய உழைப்பு சாட்சி நானேதான். கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு வரைகூட அயராது உழைத்துக் கொண்டிருந்தவர். ஆனால் தற்போது அரசியலே கதியென்றிருக்கிறார். தனக்கு  சிறப்பாக வரக்கூடிய ஆசிரியப் பணியில் அதிகமாக  நாட்டம் காட்டலாம் என்பதே என் எண்ணம். இந்தக் காணொளிகளைப் பார்த்தால் நான் சொல்ல வருவது புரியலாம்.   

"இயக்குநருடன் ஒருநாள்" ஆவணப்படத்தின் நான்கு பாகங்களையும் தந்தையர் தினமான இன்று யூட்யூபில் பேருவகையுடன் வெளியிடுகிறேன்.

முதல் பாகம்https://youtu.be/r3qj-XPcwmI


உள்ளடக்கம்
- பெற்றோர் 
- பூர்வீகம்
- புத்தக வாசிப்பு 
- திருப்பத்தூர் நகரம் 
- தன் நூலகம் 

இரண்டாம் பாகம்https://youtu.be/bjl91IUlVSI 


உள்ளடக்கம்
- ஆசிரியர்களுடன் உரையாடல்
- பள்ளி வாழ்க்கை 
- கல்லூரி வாழ்க்கை 
- ஆசிரியர்கள் 
- பசுமையான கல்லூரி வளாகம்
- மாணவர்களுடன் உரையாடல் 

மூன்றாம் பாகம்https://youtu.be/9dGTZbn9ftk



உள்ளடக்கம்
- நண்பர் பத்மநாபன் 
- ஐயா பெருமாள் ராசு 
- ஆர். கண்ணன்
- கல்லூரி துவங்கிய போது ஏற்பட்ட நிதிப் பிரச்சினைகள் 
- அறக்கட்டளை உறுப்பினர்கள் 
- கல்லூரியின் சிறப்பு 
- மாணவர்களுடன் உரையாடல் 
- மாதா அமிர்தானந்தமயி 

நான்காம் பாகம்https://youtu.be/_aN3oE6yQNM


உள்ளடக்கம்
- அடுத்த திட்டங்கள் 
- சவால்கள் 
- சுவாமி விவேகானந்தர் 
- ஸ்ரீ அமிர்தா மேல்நிலைப்பள்ளி 
- மாணவர்களுக்கு இனிப்பு வழங்குதல் 
- உறவுகள் நண்பர்கள் வீட்டுக்கு வருகை 
- நிறைவு செய்தல் 

ஆவணப்படத்தின் Playlist :  https://www.youtube.com/playlist?list=PLTc59OkpoiUefAbGCfN398fZwOxotSUIz


அவசியம் பார்த்துவிட்டு உங்கள் கருத்தைத் தெரிவித்தால் மகிழ்ச்சியடைவேன். பிரபலங்களை மட்டும்தான் கொண்டாட வேண்டுமா? நம் நண்பர்கள், உறவுகள், உடன்பணிபுரிவோர், அண்டைவீட்டார் என்று நம் சுற்றத்தைக் கொண்டாட வேண்டும் என்பது என் விருப்பம். இவர்களில் மகத்தான காரியங்களை செய்துவருபவர்கள் எத்தனையோ பேர். ஆனால் அவர்களையும், அவர்தம் அரும்பணிகளையும் நாம் கண்டுகொள்வதே இல்லை. ஆனால், நான் கொண்டாடப்போகிறேன். சொல்லப்படாத கதைகள் இங்கு ஏராளம். கதைசொல்லிகளும் ஏராளமுண்டு. கேட்பதற்குத்தான் யாருமில்லை. நானிருக்கிறேன் என்று உரக்கச் சொல்லவே இந்த முயற்சிபல வருடக் கனா. இந்த முயற்சியை என்னுடைய தந்தையிடமிருந்தே தொடங்கியிருக்கிறேன். 
சில வருடங்களுக்கு முன்பு அவரை இவ்வாறு வாழ்த்தியிருந்தேன்: 

"தேநீர்க் கடையில் எஞ்சிய கரியைவிற்று
மேனிலைக் கல்வியைக் கற்றாய் எந்தையே
நானிந்த உலகில் இருக்கும் வரையில்
மாநிலம் போற்ற நலமாய் நீவாழி!"

இதிலிருந்தே அவர் எங்கிருந்து வாழ்க்கையை துவங்கியிருக்கிறார் என்று அறியலாம். அவருடைய இளம்பிராயத்தில் பல நாட்கள் அவருடைய உணவு வெறும் தேநீரும் பொரியும் மட்டுமே என்று என் தாத்தாவே கூறக் கேட்டிருக்கிறேன். அதைப் பற்றியெல்லாம் இந்தப் படத்தில் பேசியிருக்கிறார். நண்பர்கள் மற்றும் நலம்விரும்பிகள் உதவியுடன் அவர் இப்போது கட்டியெழுப்பியிருப்பது ஒரு மகத்தான கோட்டை என்றால் மிகையில்லை.
அப்பாவிடமிருந்து எதையும் எதிர்பார்த்ததில்லை. புத்தக வாசிப்பு எனும் பெரும் சொத்தை அவர் எனக்கும் என் தம்பிக்கும் என்றோ எழுதிவைத்துவிட்டார். என்னுடைய துணிவு, சுயமரியாதை, தன்னம்பிக்கை, அடாவடித்தனம் என்று அத்தனையும் சந்தேகமின்றி நான் அவரிடமிருந்து பெற்றதே. சிறு வயதிலேயே ரஷ்ய இலக்கியங்களை எங்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தவர். இன்னும் எத்தனையோ இருக்கிறது சொல்வதற்கு. அவர் எனக்குத் தரவேண்டிய அனைத்தையும் ஏற்கனவே தேவைக்கு அதிகமாகவே தந்துவிட்டார். ஒரு காலத்தில் அவருடைய பயணப் பெட்டியிலிருந்து புத்தங்களை எடுத்து வாசிக்க நானும் என் தம்பியும் சண்டையடித்ததுண்டு. இது அவர் ஆரம்பித்துவைத்தது. அவர் எப்போதோ எனக்கு வழங்கிவிட்ட சொத்து. அதுவே நான் என் மகனுக்குத் தர விரும்புவதும். தேவைக்கு அதிகமாகவே அள்ளிக்கொடுக்கும் தேவதைகளான அப்பாக்கள் அனைவருக்கும் இந்த ஆவணப்படம் சமர்ப்பணம். தந்தைகளுக்கும் மகன்களுக்குமான உறவு என்பது 'குறைஒன்றும் இல்லாத கோவிந்தனொடு' ஆழ்வார் கொண்ட உறவு.

"உந்தன்னோடு உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது."

ஆம். ஒழிக்க ஒழியாது. 

கருத்துகள்

  1. ஆளுமைகளை பேட்டி காண்பது என்பது அருமையான விடயம்.. தங்கள் தந்தையே அந்த ஆளுமையை இருக்கும் பட்சத்தில் ஒருவித நெருடல்/கூச்சம் இருப்பது இயல்பு.இதையும் மீறி தாங்கள் அனைவரும் சிறப்புடன் ஆவண படுத்திய விதம் மிக அருமை ..

    ஒளிப்பதிவு மிக நேர்த்தி. Discovery /NGC போன்ற பெரு நிறுவனங்கள் எடுத்த ஆவணப்படம் போல அருமையாக உள்ளது .

    ஆத்மார்த்தமான பதிவு.. மிக எளிமையாகவும் நேர்த்தியாகவும் வந்துள்ளது.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..