உங்கள் 15% என்ன?

சென்னையில் ஒருமுறை அப்பாவுடன் அவருடைய நண்பர் ஒருவரின் பிறந்தநாள் விழாவுக்குச் சென்றிருந்தேன். அப்போது இந்திய அரசுப் பணிகளில் சேர்வதற்கான தகுதித் தேர்வுகளுக்காக தீவிரமாக என்னைத் தயார் செய்துகொண்டிருந்த காலம். விழாவுக்கு வந்திருந்த நேர்மையான காவல்துறை உயர் அதிகாரி ஒருவரிடம் என்னை அறிமுகப்படுத்தி வைத்தார் அப்பாவின் நண்பர். நான் எப்போதும்போல் அசட்டுத்தனமாக அவரிடம், "இன்றைய அரசியல் சூழலில் எப்படி உங்களால் நேர்மையுடன் பணியாற்ற முடிகிறது" என்று கேட்டேன்.
அவரோ புன்னகைத்தபடி, "நல்ல கேள்வி. நம் சாலைகளை எடுத்துக் கொள்வோம். போக்குவரத்து சமிக்ஞையில் மஞ்சள் விழுந்தவுடன் முடிந்தால் வண்டியை நிறுத்திவிட வேண்டும் என்பது அடிப்படை விதி. ஆனால் இதை யார் இங்கு பின்பற்றுகிறார்கள்? அவ்வளவு ஏன், சிவப்பு விழுந்தால்கூட பலர் நிற்பதில்லை. நமக்கு முன்னால் விதியை மதிக்காமல் சென்று கொண்டிருப்பவர்களை நாம் ஒன்றுமே செய்ய முடியாது. அது நம் கையில் இல்லை. ஆனால், நாம் வண்டியை நிறுத்திவிட்டால் நமக்குப் பின்னால் வருபவன் நின்றே ஆக வேண்டும். அவனுக்கு வேறு வழியில்லை. ஒருவேளை, அவன் நம்முடைய வாகனத்தை இடிக்கலாம். வண்டியை நிறுத்திவிட்டு வந்து தரங்கெட்ட வார்த்தையில் திட்டலாம். அவ்வளவுதான். ஆனால் அவன் நம்மால் நிறுத்தப்பட்டு இருக்கிறான். நம்மால் ஒரு சிறு மாற்றம் உண்டாகியிருக்கிறது. அதைப்போலவே, என் குறுகிய வட்டத்துக்குள் நான் விதிகளை மதித்து நேர்மையாகச் செயல்படுகிறேன் என்கிற மனநிறைவு எனக்கு இருக்கிறது. எனக்கு அது போதும். என் வட்டத்துக்கு வெளியே இருப்பவர்களை நான் எதுவும் செய்ய முடியாது. ஒருவேளை அதுபோன்ற மனிதர்களால், ஒருநாள் நான் இடித்து நொறுக்கப்படலாம். ஆனால் அதுபற்றி எனக்குக் கவலையில்லை." என்றார்.
எவ்வளவு எளிமையான விளக்கம். ஒவ்வொரு முறையும் நம் சமூகம் குறித்த எதிர்மறைச் சிந்தனைகள் எனக்குள் எழும்போதெல்லாம் அவர் கூறியதை நினைத்துப் பார்ப்பேன். அந்த எதிர்மறை எண்ணங்களிலிருந்து என்னை உடனே வெளியே கொண்டுவர அது உதவும். செயல்திறனற்ற, கருத்தியல்வாதிகளின் கூட்டம் நம் சமூகத்தில் பெருத்து வருகிறது. இதில் "அது சரியா? இது சரியா?" என்கிற விவாதமேடைகள் வேறு. அறிவுப்பூர்வமான விவாதங்கள் நடக்கிறாதா என்றால் அதுவும் இல்லை. குழாயடிச் சண்டைகள்தான் பெரும்பாலும். பட்டியலிட்டால் தனிப்பட்ட முறையில் என்னால் எளிதாகச் செய்து முடிக்கக்கூடிய செயல்களே ஏராளமாக இருக்கின்றன. முதலில் அவற்றைச் செய்ய முனைவது முக்கியம். பிறரைப் பற்றி பேச நேரமில்லை. மேலும், உலகத்தை நம்மால் மாற்றிவிட முடியாது. நம்மையே நம்மால் மாற்றிக்கொள்ள முடிவதில்லையே. 
பிரச்சினைகளிலும், இயலாமை பற்றிய புலம்பல்களிலும்தான் நேரம் வீணடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஒருவேளை என் தாத்தா ஜமீன்தாராக இருந்திருந்தால்.. என் தந்தை என்னை நல்ல பள்ளியில் படிக்க வைத்திருந்தால்.. நான் அழகானவளாக இருந்திருந்தால்.. என்னிடம் நல்ல காமெரா இருந்திருந்தால்.. எனக்கு அவனைப் போன்ற நண்பர்கள் இருந்திருந்தால்.. மழை மட்டும் பெய்திருந்தால்.. எனக்கு டின்னிட்டஸ் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால்.. இப்படி எத்தனை இருந்தால்-கள்? அவையெல்லாம் இருந்திருந்தால் அவன் வேறு மனிதன் அல்லவா. அது நான் இல்லை. எனவே அது எனக்கு வேண்டாம். அவனைப் பற்றி எனக்கு கவலை இல்லை. இது தான் நான். இதுவே என் நிலை. இங்கிருந்தே என் பயணத்தைக் துவங்க வேண்டும். 
நம் கண்களுக்குத் தெரிவதெல்லாம் எதிரே "85 சதவீதம்" விரிந்து கிடக்கும் பிரச்சினைகள்; தடைகள் மற்றும் அவை ஏற்படுத்தும் இயலாமை. ஆனால் நமக்குப் பின்னால் விழும் "15 சதவீதம்" நிழலை மட்டும் மறந்துவிடுகிறோம். அதுவே “நம்மால் முடிந்தது”. உலகின் மிகப் பெரிய மாற்றங்களெல்லாம் இந்த 85% பிரச்சினைகளுக்கு இடையேயும் தன்னுடைய 15% என்ன என்று யோசித்து செயல்படுத்தியவர்களாலேயே நிகழ்ந்திருக்கிறது. அவர்கள் வாழ்ந்த காலத்தில் அவமானப்படுத்தப்பட்டவர்கள்; அலட்சியப்படுத்தப்பட்டவர்கள். கிறித்துவை சிலுவையில் அறைந்தார்கள். சாக்ரடீஸை விடம் பருக வைத்தார்கள். கலிலியோவின் மீது கல்லெறிந்தார்கள். கலீலியோவையும் வின்சென்ஸோவையும் தெரிந்த நமக்கு கல்லெறிந்தவனின் பெயர்கூடத் தெரியவில்லை. அவர்கள் 85 சதவீத்துக்குள் சிக்கிக்கொண்டவர்கள். காலம் அவர்களை தூக்கி எறிந்துவிடும். காஃப்காவின் நார்சிஸிஸவாதத் தந்தை தன் மகனை அவருடைய எழுத்தின் மீதான நாட்டத்திற்காக மோசமாக நடத்தியவர்; ஏளனப்படுத்தியவர். ஆனால் இன்று காஃப்கா அவருக்கு எழுதிய கடிதத்தின் மூலமாக அவருடைய தந்தையாக மட்டுமே அறியப்படுபவர். “என் எழுத்தால் மட்டுமே இன்றளவும் நீ ஜீவித்துக்கொண்டிருக்கிறாய் என் நேசத்துக்குரிய தந்தையே” என்று புன்னகைத்துக் கொண்டிருக்கிறார் காஃப்கா. 
சமீபத்தில் ஐரோப்பாவில் ஒரு பெருநிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரிக்கும் அவருடைய மேலாண்மைக்கு குழுவுக்கு ஒரு பயிற்சிப்பட்டறை நடத்திய போது அவர்களுக்கு "15% தீர்வுகள்" என்கிற ஒரு புதிய முறையை அறிமுகப்படுத்தி வைத்தேன். இது ஏற்கனவே அலுவலகத்திலும், வீட்டிலும், நண்பர்களிடத்திலும், கல்லூரி மாணவர்களிடத்தில் நான் பயன்படுத்தி வருவதுதான். என்னிடம் யார் வந்து பிரச்சினைகளைப் பேசினாலும் அவர்களுக்கான என்னுடைய கேள்வி - "இதில், உங்கள் 15% என்ன?" என்பதே. இந்தப் பதிவை வாசித்துக் கொண்டிருக்கும் இதே நேரம் உங்களை வாட்டிக்கொண்டிருக்கும் ஒரு மிகப் பெரிய பிரச்சினையைப் பற்றிச் சிந்தித்துக்கொண்டோ, அதற்கு உங்கள் பெற்றோர்; உறவினர், நண்பர், அரசாங்கம் என்று யார் மீதோ குற்றம் சுமத்திக்கொண்டோ, புலம்பிக்கொண்டோ இருக்கக்கூடும். உங்களுக்கு என்னுடைய கேள்வி - 
"இதில், உங்கள் 15% என்ன, நண்பரே?"

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..