கடத்தியவளும் கடத்தப்பட்டவளும்

நேற்று காலை அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருக்கும்போது திடீரென்று ஒரு இளம் பெண் மிதிவண்டியைத் தள்ளிக்கொண்டு சாலையைக் கடக்க முயன்றாள். ஆனால் அது பாதசாரிகள் கடக்கக்கூடிய இடமில்லை. நல்லவேளையாக நான் குறைவான வேகத்தில் சென்றுகொண்டிருந்ததால் உடனே காரை நிறுத்திவிட்டேன். அவள் சுதாரித்துக்கொண்டு மீண்டும் நடைமேடைக்கே திரும்பிவிட்டாள். நான் புன்னகைத்துக்கொண்டே 'கடந்து செல்லுமாறு' அவளுக்கு சைகை செய்தேன். குற்றவுணர்ச்சியும் அதனால் விழைந்த வெட்கமும், நன்றியுணர்வும், மகிழ்ச்சியும் கலந்ததொரு புன்னகையை என் மீது வீசிக்கொண்டு என்னைப் பார்த்து எதையோ சொல்லியபடி கடந்து சென்றாள். பின்காட்டியூடே மீண்டும் ஒரு முறை அவளை நோக்கினேன். அதே புன்னகையுடன் தனக்குத் தானே பேசிக்கொண்டு சென்றுகொண்டிருந்தாள்.

அதன் பிறகு அந்தப் புன்னகை சூடிய முகம் நேற்றைய நாள் முழுவதும் என் கண்களை விட்டு அகலவில்லை. எனக்குள் மகிழ்ச்சியை உற்பத்தி செய்துகொண்டே இருந்தது. அந்த மகிழ்ச்சி என் செயல்களில் வெளிப்பட்டது. மின்னஞ்சல்களுக்குக்கூட பதில்களை புன்னகையோடு அனுப்பிக்கொண்டிருந்தேன். ஒரு செல்ஃபி எடுத்துப் பார்த்தேன். வழக்கத்துக்கு மாறாக சற்று அழகாக இருப்பதாகத் தோன்றியது. யாரைப் பார்த்தாலும் அன்பு பீறிட்டது.

தோழி ஒருத்தியுடன் மதிய உணவு அருந்தும்போது இதைப் பற்றி சொல்லிவிட்டு, "தேசம், மதம், இனம், சாதி, கட்சி, அது, இது என்று வெறித்தனத்தோடு சுற்றிக்கொண்டிருக்கும் மூர்க்கர்கள் நிறைந்த இந்த உலகின் இன்றைய அத்தியாவசியத் தேவை இதுபோன்ற புன்னகைக்கும் பெண்களே." என்றேன்.

"யு ஆர் ஃபேண்டசைஸிங்" என்றாள் சிரித்துக்கொண்டே.

"இல்லை, நிதர்சனம்!", என்றேன்.

"ஃப்ராய்டு நம்ப மாட்டார்" என்றாள்.

அந்த ஆள் ஒரு விளங்காதவன். எல்லோரையும் கபட வேடதாரி என்று சொல்லிக்கொண்டு. நான் சொல்கிறேன். புன்னகைக்கும் பெண்களே இன்றைய தேவை.





மேலே நான் எழுதியிருக்கும் பதிவுக்கும், இங்கே இணைத்திருக்கும் புகைப்படங்களுக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. நேற்று லூவன் நகரில் நல்ல வெயில். மதிய உணவு முடித்துவிட்டு கொஞ்ச தூரம் நடந்து சென்றோம். அப்போது எடுத்த படங்கள் இவை. இதைப் பார்த்தவுடன் "நிர்வாண கோலத்தில் காளையை அடக்கும் கன்னி" என்று நீங்கள் எண்ணினால், அது தவறு. கன்னி காளையை அடக்கவில்லை. காளைதான் கன்னியைக் கடத்திக்கொண்டு செல்கிறது. "ஐரோப்பாவின் கடத்தல்" கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஐரோப்பியர்களுக்கே ஐரோப்பா என்கிற பெயர் எப்படி வந்தது என்று தெரியாது. அதனால் கவலைப்பட வேண்டாம்.

கிரேக்கப் புராணத்திலிருந்து ஒரு சுவாரசியமான காட்சி. கிரேக்கக் கடவுளான ஜீயஸ் ஒருமுறை வானில் பறந்து சென்றுகொண்டிருக்கும் போது கீழே பூமியில் ஒரு புல்வெளியின் மீது நிர்வாணமாக நடனமாடிக் கொண்டிருக்கும் "ஐரோப்பா" என்கிற அழகான கன்னிப்பெண் ஒருத்தியைப் பார்க்கிறார். ஃபினீசிய அரச வம்சத்து பெண்ணான அவளைப் பார்த்த மாத்திரத்திலேயே அவள் அழகில் சொக்கிக் காதல் வயப்படுகிறார் ஜீயஸ். உடனே அவருக்கு மனைவி ஹீராவின் நினைவு வருகிறது. அவளது கோபத்தைத் தவிர்ப்பதற்காக ஒரு தந்திரமான திட்டம் தீட்டும் ஜீயஸ், தான் ஒரு கம்பீரமான வெள்ளைக் காளையாக உருமாறி ஐரோப்பா இருந்த புல்வெளிக்குச் செல்கிறார். அப்போது அங்கே பூப்பறித்துக்கொண்டிருந்த ஐரோப்பா, அழகான அந்தக் காளையின் மென்மையான நடத்தையைக் கண்டு ஏமாந்து, புன்னகைத்துக்கொண்டே அதனருகே சென்று முதுகில் தடவிக் கொடுத்துவிட்டு அதன் மேல் ஏறி அமர்கிறாள். அடுத்தகணமே அவளைக் கடத்திக்கொண்டு கிரீட் தீவுக்குப் போய்விடுகிறார் மென்மைக் காளையார் ஜீயஸ். அங்கு அவருடைய உண்மையான அடையாளத்தை வெளிப்படுத்தி அவளைத் திருமணம் செய்துகொண்டு, மினோஸைப் பெற்றெடுப்பதாகப் போகிறது அந்தப் புராணக் கதை.

பல நூற்றாண்டுகளாக ஓவியர்களையும், சிற்பிகளையும், வரலாற்று ஆசிரியர்களையும் கவர்ந்த இந்தக் கதை கடைசியில் அரசியல்வாதிகளையும் கவர்ந்ததால் அந்தக் கோமான்கள் இந்தக் கண்டத்துக்கு "ஐரோப்பா" என்று பெயர் சூட்டிவிட்டார்கள். புகைப்படத்தில் நீங்கள் காண்பது - "ரிக் பூட்" என்கிற ஃபிளம்மியக் கலைஞரால் படைக்கப்பட்டு லூவன் நகரின் இரயில் நிலையத்துக்கு அருகே நிறுவப்பட்டிருக்கும் 'ஐரோப்பாவின் கடத்தலை' சித்தரிக்கும் ஒரு சிற்ப வேலைப்பாடு. ப்ரசல்ஸ் நகரில் ஐரோப்பிய யூனியன் தலைமையகத்துக்கு அருகேகூட இதுபோன்றதொரு நவீன சிற்பத்தைப் பார்த்திருக்கிறேன். வரும் ஞாயிறன்று தேர்தல். வரப்போகும் காளைகள் ஐரோப்பாவை எங்கே தூக்கிக்கொண்டு போகப் போகிறார்களோ.

பின்குறிப்பு:

நேற்று நான் எழுதிய இந்தப் பதிவை இன்று காலையில்தான் என் மனைவி ப்ரியா வாசித்திருக்கிறாள். வீட்டில் கடும் நெருக்கடி நிலைமை, நண்பர்களே. கிரேக்கப் புராணங்கள் எல்லாம் இப்போதுதான் எனக்குத் தெளிவாகப் புரிய ஆரம்பிக்கிறது. ஜீயஸ் ஏன் காளை வடிவம் எடுத்தார் என்பது இன்று காலை அவள் எடுத்திருக்கும் ஹீரா வடிவத்தைப் பார்த்த பின்பே புரிகிறது. மேலும் ஹீராவுக்கும் சந்திரமுகிக்கும் நிச்சயம் ஒரு தொடர்பு இருப்பதாகவே தோன்றுகிறது. உலகின் நன்மைக்காக நான் உரைத்த "புன்னகைக்கும் பெண்கள்" என்கிற மூடத்தனமான (?) யோசனையை அவள் நிராகரிக்கிறாள். இது என்னடா இந்தப் பரோபகாரிக்கு வந்த சோதனை! இங்கே தீனன் நகருக்கு அருகே யாராவது மீட்பர்கள் இருந்தால் உடனே என்னைத் தொடர்புகொள்ளவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..