இரட்டை வாள்



'மியாமோட்டோ முசாஷி' பற்றி வாசித்துக் கொண்டிருந்தேன். பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த 'கென்ஸே' அவர். கென்ஸே என்றால் ஜப்பானிய மொழியில் 'வாள் புனிதர்' என்று பொருள். சிறந்த வாட்போர்த்திறன் கொண்ட போர்வீரர்களுக்கு வழங்கப்படும் கௌரவப் பட்டம் அது. ஆனால் அந்தப் பட்டத்தைப் பெறுவதற்கு ஒருவர் வெறும் சாமுராயாக இருந்தால் போதாது. ஜப்பானிய தற்காப்புக் கலையான 'கென்ஜுட்சு'-வில் திறமை வாய்ந்தவராக இருக்க வேண்டும். கென்ஜுட்சுவின் ஒரு தனித்துவமான வடிவமான இரட்டை வாள் சண்டை உத்திதான் 'நிதோஜுட்சு'. அதில் கைதேர்ந்தவர் முசாஷி. அதை உருவாக்கியவரும் அவரே. ஜப்பானிய டைகோ டிரம்மர்களால் ஈர்க்கப்பட்டு இந்த பாணியை உருவாக்கி இருக்கிறார்.

வாள்வீச்சு மட்டுமல்லாமல் எழுத்து, வாழ்க்கைத் தத்துவம், சிற்பக்கலை, கட்டிடக்கலை, சித்திர எழுத்து, ஓவியம், போர்த்தந்திரம் என்று பல பரிமாணங்கள் கொண்ட சுவாரசியமான மனிதர். முசாஷியின் ஒன்பது கோட்பாடுகளில் எனக்கு முக்கியமானதாகத் தெரிந்த ஒன்று - "பல வித்தைகளில் தேர்ச்சித்திறம் பெற்றிருக்கவேண்டும்” என்பது. நமக்குத் தெரிந்த உத்தியே ஆகச் சிறந்தது; நம்மிடம் இருக்கும் ஆயுதமே போதும் என்று, நம்மிடம் இருக்கும் ஏதேனும் ஒரு ஆயுதம் அல்லது நமக்குத் தெரிந்த ஒரே ஒரு உத்தியுடன் மட்டுமே பிணைப்பை ஏற்படுத்திக் கொண்டு வெறுமனே அமர்ந்திருப்பது மிகவும் ஆபத்தானது என்று எச்சரித்து, பல கலைகளைக் கற்றுக் கொள்வதன் அவசியத்தைப் பற்றி அழுத்திச் சொல்லியிருக்கிறார் முசாஷி.

என்னடா இவன் ஆயுதம், உத்தி என்று பேசிக்கொண்டிருக்கிறானே என்று எண்ணுகிறீர்கள்தானே? இஃதோர் யுத்த பூமி, நண்பர்களே! இங்கு சாமுராய்களாகவும், கென்ஸேய்களாகவும் இல்லையென்றால் எளிதாக வெகு விரைவில் வெட்டிச் சாய்க்கப்பட்டு விடுவோம். நான் இங்கு ஆயுதம் என்று கூறுவது திறமைகளை. பெருநிறுவனங்களில்கூட இன்று 'I' அல்ல, 'π' வடிவ தேர்ச்சித்திறம் கொண்டவர்களையே பணியிலமர்த்த விரும்புகிறார்கள். அதாவது, முசாஷி சொல்லும் "இரட்டை வாளோடு வாருங்கள்!" என்று அவர்கள் வேண்டுவது வாள் புனிதர்களை. ஆனால் எனக்குத் தெரிந்த வரையில் இன்றைய இளைஞர்கள், குறிப்பாக தகவல் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றும் பெரும்பாலானோர் "ஒற்றை வாளைச் சுழற்றிக் கொண்டிருப்பவர்களே".

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..