தேர்தல் தினம் and some thoughts

ன்றைக்கு இங்கே பெல்ஜியத்தில் தேர்தல். ப்ரஸல்ஸ் நகரில் ஓரிரு பதாகைகளைப் பார்த்தேன். நான் வசிக்கும் தீனன் நகரில் அதையும் காணமுடியவில்லை. இதுவரைக்கும் ஒரேயொரு பரப்புரையை பார்க்கும் பாக்கியம்கூட கிட்டவில்லை. தொலைக்காட்சிகளிலும் ஆர்ப்பாட்டமில்லை. எந்தவொரு கட்சிக்கும் சொந்தமாக தொலைக்காட்சி சேனல் கிடையாதாம். முகநூலிலும் இந்த பெல்ஜியம் நண்பர்கள் ஒரு மீம்ஸ்கூட போடமாட்டேன் என்று அடம்பிடிக்கிறார்கள். அட மீம்ஸ் வேண்டாம். ஒரு சின்ன நிலைத்தகவல்? ஒரே ஒரு வலதுசாரி கட்சி மட்டும் முகநூல் விளம்பரங்களில் "முதலில் நம் மக்கள்" (ஏர்ஸ்ட் ஆன்ஸ மென்ஸென்) என்று நம்மூரைப் போன்றே முழக்கமிட்டு வருகிறார்கள். அதிலும்கூட அப்படியொரு சாத்வீகம். மற்ற கட்சிகளின் விளம்பரங்களைப் பார்ப்பதற்கு எனக்கென்னவோ தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் விளம்பரப் படங்கள் போன்று தெரிகிறது. பார்த்த மாத்திரத்திலேயே கொட்டாவி வருகிறது. ஒரு உக்கிரம் வேண்டாமா? நல்லவேளையாக இன்று தேர்தல் என்பதை மறக்கவில்லை. தேர்தல் என்றால் ஒரு கொண்டாட்டமாக இருக்கவேண்டாமா? பைசா செலவில்லாமல் தேர்தலை நடத்திக்கொண்டிருக்கும் இது என்ன விந்தையானதொரு ஜனநாயகம். 
தேர்தலுக்காக மொத்தமாகவே ஐந்து மணிநேரம்தான் செலவழித்திருப்பேன். எல்லா கட்சிகளின் கொள்கை விளக்க அறிக்கைகளையும் வாசித்தேன். இருந்தாலும் யாரைத் தேர்ந்தெடுப்பது என்கிற தெளிவு இல்லாமல் இருந்தது. நண்பர் யானிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் ஒரு இணைப்பை அனுப்பி வைத்தார். தேர்தலுக்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தேர்வுத் தளம் அது. நம் தொகுதி மட்டுமல்லாது, தேசம், ஐரோப்பா சார்ந்த கேள்விகளுக்கு நாம் தேர்ந்தெடுக்கும் பதில்களுக்கு ஏற்ப, இறுதியில் எந்தக் கட்சிக்கு ஓட்டளிக்கலாம் என்று அந்தத் தளம் பரிந்துரைக்கிறது. அது நம் முடிவோடு ஒத்துப்போகிறதா என்று சரிபார்த்துக் கொள்ளலாம். அவ்வளவே. 
தாயகத்தில் நாம் இதற்காக செலவழித்த நேரத்தை யோசித்துப் பார்த்தால் பிரமிப்பாக இருக்கிறது. கட்சிகள் இதற்காக செய்த செலவுகளில் எத்தனை நலிந்த குடும்பங்களை வாழ வைத்திருக்கலாம். எத்தனை சாலைகளை சீரமைத்திருக்கலாம். எத்தனைப் பேருக்கு மருத்துவ வசதி கிடைத்திருக்கும். இப்படி எத்தனையோ அறச்செயல்கள் புரிந்திருக்கலாம். அதிலும் என்னை மிகவும் பாதித்தது இந்த அருவருப்பு நிறைந்த அவதூறுப் பரப்புரைகளே. எல்லா கட்சிகளுக்குமே தாங்கள் திருடர்கள் என்கிற தெளிவு இருப்பதாகத் தோன்றுகிறது. அதனாலேயே "மற்றவன் மகா திருடன்" என்கிற ரீதியிலான பரப்புரைகள் அரசியல்வாதிகளுக்குத் தேவைப்படுகிறது. ஆனால் அவர்களின் கோரப் பசிக்கு இரையானவர்கள் பெரும்பாலும் படித்த பெருமக்களே என்பது வேதனை தரக்கூடிய விஷயம்தான். இதில் பலர் எனக்கு இளம் வயதில் கல்வி கற்பித்த ஆசான்கள். அவர்களிடமிருந்து நான் கற்றுக்கொண்ட அடிப்படை அறம், உயர் பண்புகள், இத்யாதி இத்யாதிகளை சாக்கடையில் கொட்டிவிட்டு, தாங்கள் நம்பும் தலைவர்களே புனிதர்கள், மற்றவர்கள் கொடூர அரக்கர்கள் என்று உரக்கக் கத்திக்கொண்டு, அதை எப்பாடு பட்டேனும் நிரூபித்தே ஆகவேண்டும் என்று சபதம் பூண்டு, சாகசமாக சாக்கடையில் குதித்து, கட்டிப் புரண்டு தங்களைத் தாங்களே சிறுமைப்படுத்திக்கொண்டிருப்பதை என்னால் ஒரு கட்டத்தில் சகித்துக்கொள்ளவே முடியவில்லை. அவர்களைத் தொட்டு மீட்கப் பலமுறை முயன்றேன். சாக்கடைத் தண்ணீர் என்மீது தெறித்து நானும் கறைபட்டுக்கொண்டேன். எல்லோருமே பொதுவாக என்னிடம் கூறியது, "அவனை நிறுத்தத் சொல். நான் நிறுத்துகிறேன்" என்பது போன்ற தாதாக்களின் வசனங்கள். அதன் பிறகு என் மீதே பாய்ச்சல்கள். அதனால் இவர்களை விட்டு விலகி நின்று வேடிக்கைப் பார்ப்பதைத் தவிர எனக்கு வேறு வழி தெரியவில்லை. இன்னொருபுறம் எழுத்தாளர்கள் என்கிற அடைமொழியைத் தாங்கிக்கொண்டு இணையத்தில் உலவும் ஆகச் சிறந்த சிந்தனையாளர்கள், சாமான்யர்களைக் காட்டிலும் இன்னும் சிறப்பாக இவற்றையெல்லாம் செய்துகொண்டிருந்ததை அறத்தின் வீழ்ச்சியாக நான் காண்கிறேன். IN BOLD.
முகநூல் தளம் ஒரு நவீன குருஷேத்திரக் களமாகத் தெரிந்தது எனக்கு. அவதூற்று பரப்புரை மீம்ஸ்கள், பெருவெறுப்பு நிறைந்த பதிவுகள், காழ்ப்புக் கொண்ட காணொளிகள் இவையே இங்கு ப்ரம்மாஸ்திரங்கள். ஒரு கூட்டம் இன்னொரு கூட்டத்தின் மீது என்று மாறி மாறி வெறுப்பம்புகளைக் கக்கிக் கொள்கிறார்கள். சண்டை வெறிபிடித்த காட்டுமிராண்டிச் சமூகமாக மாறிக்கொண்டிருக்கிறோமா நாம்? அல்லது இப்படி ஒருவரை ஒருவர் நாராசமாக சீண்டிக்கொண்டு விளையாடுவதை பொழுதுபோக்கு அம்சமாகப் பார்க்கிறார்களா. இதைத் தவிர்த்து, ஆக்கப்பூர்வமாக எதையாவது செய்யலாம் என்று அழைத்துப் பாருங்கள். ஓடி ஒளிந்துகொள்வார்கள் போராளிகள். நம்முடைய முன்னுரிமைகள்தான் என்ன?
பதினோரு வருடங்களுக்கு முன்பு இந்தூரிலுள்ள இந்திய மேலாண்மை கழக வளாகத்தில், பொது மேலாண்மை வகுப்பில் 'இந்திய வணிகச் சூழல்' பற்றி பேசிக்கொண்டிருந்த என்னுடைய பேராசிரியர், "கிட்டத்தட்ட 67 சதவீத இந்தியக் குடும்பங்கள் இன்னமும் சமையலுக்கு விறகுக்கட்டைகளைத்தான் பயன்படுத்திக்கொண்டிருக்கின்றன" என்றொரு தகவலைச் சொன்னார். அதிர்ச்சியாக இருந்தது. இந்த சதவீதத்தில் இன்றைக்கும் பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. சமூக வலைத்தளங்களோ, வளர்ச்சியடைந்த நகரங்களோ, மாநகரங்களோ அல்ல இந்தியா. உண்மையான இந்தியா இன்னமும் அடுப்பில் விறகைப் போட்டு ஊதிக்கொண்டிருக்கிறது. ஒருவருக்கொருவர் அருவருப்பாக வசைபாடிக்கொள்வதாலோ, அடித்துக்கொள்வதாலோ அந்த 67 சதவீத உண்மையான இந்தியர்களின் வாழ்க்கையில் மாற்றம் வந்துவிடப் போவதில்லை. இவர்களின் ஆரவாரங்கள் அவர்கள் காதுகளில் விழப் போவதுமில்லை. இதற்குத்தானா இவ்வளவு அக்கப்போர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..