சிலைகளும் குறிப்புகளும் (1)

ஐரோப்பிய நகரங்களின் வீதிகளில் நடந்து செல்லும்போது கண்களுக்கு விருந்தாகும் எளிமையான நினைவுச்சின்னங்கள், சிற்ப வேலைப்பாடுகளில் பெரும்பாலானவற்றுக்குப் பின்னால் எந்தவித வரலாற்று முக்கியத்துவமும் இல்லையென்றாலும் சிலவற்றுக்குப் பின்னால் சுவாரசியம் தாங்கிய கதைகளும் இருக்கவே செய்கின்றது. இரண்டு வாரங்களுக்கு முன்பு கிரேக்கக் கடவுளான ஜீயஸ் காளையாக உருமாறி வந்து ஐரோப்பாவைத் தூக்கிக்கொண்டு செல்லும் சிலையின் புகைப்படத்தைப் பகிர்ந்து ஐரோப்பிய கண்டத்தின் பெயர்காரணத்தை விளக்கியிருந்தேன். அந்தப் படம் பெல்ஜியத்திலுள்ள லூவன் நகரில் எடுத்தது. அங்குதான் கிட்டத்தட்ட ஐந்து ஆண்டுகள் வசித்தேன். என் சொந்த ஊரை எந்த அளவுக்கு நேசிக்கிறேனோ அதே அளவுக்கு லூவனையும் நேசிக்கிறேன். மாணவர்களின் நகரமான லூவன் என்னுடைய பெரும்பாலான சிறுகதைகளின் கதைக்களமாக இருந்திருக்கிறது என்பதை வாசித்தவர்கள் அறிவீர்கள். 

ஊசிமுனையில் குத்தப்பட்ட வண்டு, நிர்வாண கோலத்தில் மிதந்துகொண்டிருக்கும் பெண், தலையில் தண்ணீரை ஊற்றியபடி புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் மாணவன், ரொட்டி விற்பவன் என்று சாதாரண மனிதர்களுக்கான நினைவுச்சின்னங்களை லூவன் நகரில் பல இடங்களில் பார்க்கலாம். சாதாரணர்களைக் கொண்டாட விரும்புபவன் என்கிற வகையில் இவையெல்லாம் என்னை ஈர்ப்பதால் அவற்றைப் பற்றி அவ்வப்போது எழுதியும் வருகிறேன். இங்கு நான் இணைத்திருப்பவை லூவன் நகரினூடே ஓடும் 'டெய்லே' எனப்படும் அழகிய குறுநதியின் கரையோரம் "நிர்வாண கோலத்தில் மிதந்துகொண்டிருக்கும் பெண்" சிலையின் புகைப்படங்கள். 





இந்தச் சிலையை முதன்முதலில் நான் பார்த்து பத்து வருடங்களுக்கு மேல் ஆகியிருக்கும். இதற்குப் பின்னால் நெஞ்சை கனக்க வைக்கும் ஒரு சோகக் கதை இருக்கிறது. அதை அறிந்த நாளிலிருந்தே அதைப் பற்றி தமிழில் எழுதவேண்டும் என்கிற என்னுடைய அவா இன்றுதான் நிறைவேறியிருக்கிறது. இதை எழுதிக்கொண்டிருக்கும் இத்தருணம் என் குடும்ப மருத்துவர் சம்பந்தம் அவர்கள் என்னிடம் அடிக்கடி உதிர்க்கும் மூதுரைப் பாடல் ஒன்று நினைவுக்கு வருகிறது. 

"அடுத்து முயன்றாலும் ஆகும்நாள் அன்றி
எடுத்த கருமங்கள் ஆகா - தொடுத்த
உருவத்தால் நீண்ட உயர்மரங்கள் எல்லாம்
பருவத்தால் அன்றிப் பழா" 

உண்மைதானே? இன்றுதான் ஆகிவந்திருக்கிறது நான் அன்றெடுத்த கருமம் ஒன்று. சரி, 1240-ஆம் ஆண்டு எழுதப்பட்ட அந்தக் கதைக்கு வருவோம். லூவன் நகரைச் சேர்ந்த "ஃபியர் மார்கரீட்" என்கிற பதின்ம வயதுப் பெண்ணொருத்தி அவளுடைய உறவினரான ஊபெர் என்பவருக்குச் சொந்தமான விடுதியில் பணிப்பெண்ணாக வேலை பார்த்த்து வந்திருக்கிறாள். தீவிர மத நாட்டமுடைய ஊபெரும் அவருடைய மனைவியும் மத வாழ்க்கைக்குள் முழுவதுமாக நுழைய திட்டமிட்டு விடுதியை விற்றுவிடுகிறார்கள். அவர்களோடு சேர்ந்து மார்கரெட்டும் கன்னியாஸ்திரியாக முடிவெடுக்கிறாள். துரதிருஷ்டவசமாக, விடுதியிலிருந்து அவர்கள் வெளியேறுவதற்கு முந்தைய நாளிரவு விடுதிக்குள் நுழைந்த திருடர் கூட்டம் ஊபெரையும் அவருடைய மனைவியும் கொன்றுவிட்டு கொள்ளையடித்துக்கொண்டு வெளியேறும் சமயம் விடுதிக்குள் நுழைகிறாள் மார்கரீட். அங்கு கொலையாளிகளைக் கண்டவுடன் அச்சம்கொண்டு அங்கிருந்து தப்பித்து ஓட முயன்றவளைத் துரத்திச் சென்று டெய்லே நதிக்கரை அருகே பிடித்து தொண்டையைக் கிழித்துக் கொன்று, டெய்லே நதியில் தூக்கி எறிந்துவிட்டு போயிருக்கிறார்கள் இரக்கமற்றக் கொலையாளிகள். அடுத்தநாள் மார்கரீட்டின் உடல் நிர்வாண கோலத்தில் டெய்லே நதியில் மிதந்து வந்திருக்கிறது - ஆனால் ‘நீரோட்டத்துக்கு எதிர்திசையில்’. அதைக் கண்டு அதிர்ச்சியும் ஆச்சர்யமும் அடைந்த பொதுமக்கள் அவளுடைய உடலைத் தூக்கிக்கொண்டு வந்து கரைசேர்த்து இறுதிச் சடங்குகளைச் செய்துவிட்டு டெய்லே நதிக்கரையிலேயே அடக்கம் செய்துவிடுகிறார்கள். இடைக்காலத்தில் மார்கரீட்டின் இந்தக் கல்லறை ஒரு புனிதத்தலமாக இருந்துள்ளது. அந்நாட்களில் அங்கு பல அற்புதங்கள் நிகழ்ந்ததன் பொருட்டு அவளுடைய உடல் நகர மையத்திலுள்ள புனித பீட்டர் தேவாலய முற்றத்துக்கு மாற்றப்பட்டுவிட்டதாகச் சொல்கிறார்கள். 1237-ஆம் ஆண்டு செப்டம்பர் இரண்டாம் நாள் ஆற்றின் நீரோட்டத்துக்கு எதிர்திசையில் மார்கரீட் மிதந்து வந்த அந்தச் சம்பவம் லூவன் நகரின் ஏழு அதிசயங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.


மார்கரீட் டெய்லே ஆற்றில் மிதப்பதை சித்தரிக்கும் இந்த வெண்கலச் சிலையை வடித்தவர் பெல்ஜியத்தின் மெக்கல்லன் நகரைச் சேர்ந்த "வில்லி மேய்ஸ்மான்ஸ்" என்னும் சிற்பி. இந்தச் சிலையை பத்து வருடங்களுக்கு முன்பு முண்ட்ஸ்ட்ராட் பகுதியில்தான் பார்த்தேன். உணவகங்கள் மிகுந்த பரபரப்பான குறுகிய தெரு அது. "கதைக்கும் இந்த இடத்துக்கும் தொடர்பே இல்லையே, ஏன் இங்கு வைத்திருக்கிறார்கள்? டெய்லே நதிக்கரையில் எங்காவது வைத்திருக்கலாமே!" என்கிற எண்ணம் எனக்கு அடிக்கடி தோன்றும். ஒருமுறை கடுங்குளிர் காலத்தில் அந்தத் தெரு வழியே நடந்து செல்லும் போது, நிர்வாணமாக படுத்துக்கொண்டிருக்கும் இந்தப் பெண்ணைப் பார்க்கும்போது எனக்குள் பரிதாப உணர்வு எழுந்தது. அன்று மாலை அலுவலகத்திலிருந்து திரும்பும்போது கடும் பனிப்பொழிவு. அதே தெருவின் வழியாக வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த எனக்கு அந்தச் சிலையை கடக்கையில் மிகுந்த ஆச்சரியம். அந்தப் பெண் பனிப்போர்வைக்குள் புதையுண்டுக் கிடந்தாள். என் மனதில் "பனிப்போர்வை" என்கிற வார்த்தை அப்போது உதித்தது. ஒரு சிறுகதைக்கு அதையே தலைப்பாக வைத்திருந்தேன். ஆனால் இந்தக் கதைக்கும் அந்தக் கதைக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. பிறகு, ஒரு சிறுவனைப் போல் அவளுடைய தலை, முகம், பாதம் போன்ற பகுதிகளிருந்து பனித்துகள்களை அகற்றினேன். அப்போது அந்தப் பெண் வெண்ணிற ஆடை உடுத்தியிருந்தது போல் காட்சியளித்தாள். கன்னியாஸ்திரியாக விரும்பினாள் அல்லவா. அதன் பிறகு லூவன் நகராட்சிக்கு என்ன தோன்றியதோ தெரியவில்லை. இந்தச் சிலையை டெய்லே நதிக்கரைக்குத் தூக்கிச் சென்று அங்கு அவளுடைய கல்லறை இருந்ததாகச் சொல்லப்பட்ட இடத்திலேயே நிறுவிவிட்டார்கள். டெய்லே ஆற்றின் நீர்மட்டம் உயரும் நாட்களில் இந்தச் சிலை ஆற்றில் மிதப்பது போன்ற தோற்றத்தைக் காணலாம்.

தொடரும்..

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..