நூறு செம்மறி ஆடுகள்


ப்ரஸல்ஸ் விமான நிலையத்துக்கு ஒரு மாத காலத்துக்கு சிறப்பு விருந்தினர்களாக அழைக்கப்பட்டுள்ளவர்களைப் பற்றிய சுவாரசியமான செய்தி ஒன்றை இன்று வாசித்தேன். விமான நிலையத்துக்கு அன்றாடம் ஆயிரக் கணக்கானோர் வந்து போவார்கள். இதில் என்ன சிறப்பு இருக்கிறது என்கிற கேள்வி எழலாம். நிச்சயம் இருக்கிறது. ஏனெனில் இந்த முறை விருந்தினர்களாக அழைக்கப்பட்டவர்கள் மேன்மைவாய்ந்த நூறு செம்மறி ஆடுகள். 
விமானங்கள் புறப்படும்போதும் தரையிறக்கத்தின் போதும் எழும்பும் சத்தம் வெளியில் கேட்காமலிருக்க, விமான நிலையத்தைச் சுற்றி அமைக்கப்பட்டுள்ள மண்மேடுகளில் வசந்த காலத்திலும், இலையுதிர் காலத்திலும் பாரிய புல்லறு பொறிகளைக் கொண்டு புல்மட்டத்தை சரிசெய்வது வழக்கம். ஆனால் இந்த வருடத்திலிருந்து அந்தப் பணியைச் செய்வதற்கு செம்மறி ஆடுகளை வரவழைத்துள்ளார்கள். ஜூன் மாத இறுதி வரை அவை அங்கு மேய்ச்சலில் இருக்கும். புல்வெளி மேடுகளுக்கான பராமரிப்பு வேலையும் ஆயிற்று. ஆடுகளுக்குச் சுவையான விருந்தும் ஆயிற்று. இது ஒரு கால்நடை நட்புத் தீர்வு மட்டுமல்ல, நல்லதொரு சூழல் நட்புத் தீர்வும்கூட. 
இதைப் பற்றி நண்பர் கார்த்திக்கிடம் மாலை பேசிக்கொண்டிருந்தேன். "தோட்டத்தில் புல்வெளியைப் பராமரிப்பது என்பது நமக்கு அத்தனை சுவாரசியமான வேலையில்லை. எனவே இதை ஒரு மாதவன்-நட்பு தீர்வாகவும் நான் காண்கிறேன்" என்றேன். அதற்கு அவரோ, "அருமையான யோசனை, மாதவன். நானும் வீட்டுக்கு இரண்டு ஆடுகள் வாங்கப் போகிறேன். மேய்ச்சல் முடிந்த பிறகு அதே புல்வெளியில் 'லேம்ப் பார்பெக்யூ' ஒன்றுக்கு ஏற்பாடு செய்துவிடலாம். இது ஒரு கார்த்திக்-நட்புத் தீர்வும்கூட." என்றார். ப்ரியா கடுப்பாகி அவரைத் திட்ட ஆரம்பித்துவிட்டாள். அவர்கள் இருவருக்குமிடையேயான இந்த உணவுச் சண்டை புதியது ஒன்றுமில்லை. 
'செம்மறி ஆடுகளே புல்லறு பொறிகளாக' என்கிற யோசனையெல்லாம் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் இதைத்தானே காலங்காலமாக செய்து வருகிறோம், இதிலென்ன விந்தை இருக்கிறது என்று கேட்க வேண்டாம். இன்று நாம் சந்தித்து வரும் பல பிரச்சினைகளுக்கு 'அடிப்படைகளுக்குத் திரும்புவதுதான்' சரியான தீர்வாக இருக்கமுடியும் என்பது எனக்கும் தெரியும். ஆனால் இதுபோன்ற முயற்சிகளைக் கிண்டல் செய்யாமல் பாராட்டுவதன் அவசியத்தை உணர வேண்டும். உலக நடப்புகளெல்லாம் யாவரும் அறிந்த நிலையில், ஒவ்வொரு எளிய முயற்சிக்கும் தோள்கொடுக்க வேண்டிய கட்டாயமும், கடமையும் நம் அனைவருக்கும் இருக்கிறது. நம்முடைய மேதைமையைக் காட்டுகின்ற தருணம் இதுவல்ல. பெரும்பாலான இந்திய முகநூலர்கள் இதைத்தான் சிறப்புடன் செய்து வருகிறார்கள். களத்தில் இறங்கி எதையும் செய்வது கிடையாது. ஆனால், தங்களால் இயன்ற எல்லா நல்ல முயற்சிகளைச் செய்பவர்களையும் பகடி செய்து விமர்சிப்பதன் மூலமாக தங்கள் மேதைமையை நிறுவிக்கொள்ளும் கறுப்பு ஆடுகள் இவர்கள். நம்முடைய இன்றைய தேவையோ எளிமையான நூறு செம்மறி ஆடுகள்.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..