படைப்பாளியும் எதிர்ப்புகளும்

முகநூலில் என்னுடைய இயக்கம் அதிகரித்திருப்பதை அங்கு என்னைத் தொடரும் உணர்ந்திருக்கலாம். ஒரு கட்டுப்பாடுடன்தான் இயங்கி வருகிறேன். இன்னமும் கட்டுப்பாடு தேவை என்றும் சொல்வேன். 'பாலில் விஷம்' என்று கூறி விலக்குவது சரியல்ல என்கிற தரிசனம் கிடைத்ததன் பொருட்டு மீண்டும் உள்ளே வந்தேன். இங்கே விஷத்தைக் கொட்டிக்கொண்டே இருக்கிறார்கள். அதைப் பிரித்து எடுக்கும் வல்லமை என்னிடம் இல்லை. ஆனால் பாலை ஊற்றிக்கொண்டே இருப்பதன் மூலம் விஷத்தின் வீரியத்தை ஒன்றுமில்லாமல் செய்துவிட முடியும் என்கிற அசாத்திய நம்பிக்கையைப் பெற்றதன் பொருட்டே வந்தேன். சமூக வலைத்தளங்களிலிருந்து விலகி இருந்தேனே ஒழிய என்னுடைய அன்றாட நடப்பு குறிப்புகள் எழுதுவதை என்றுமே நிறுத்தியதில்லை. முகநூலை எனது நாட்குறிப்புச் சுவடியாகவே பயன்படுத்தி வருகிறேன். ஆயினும் இங்கே நான் பகிரும் பதிவுகள் என்னுடைய நாட்குறிப்புச் சுவடியின் ஒரு பகுதி மட்டுமே. நான் இதுவரை எழுதியிருக்கும் அத்தனையுமே பொதுவெளிக்குக் கொண்டுவர வேண்டும் என்பதே என் விருப்பம். ஆனால் அதற்கு என்னைச் சுற்றியுள்ளவர்கள் இன்னும் பக்குவப்படவில்லை என்று எண்ணுகிறேன். 
நண்பர் வெங்கட் ஒருமுறை அவர் எழுதிய சிறுகதை ஒன்றை வாசிப்புக்கு அனுப்பி இருந்தார். அவரை நேரில் சந்தித்து அதுபற்றி ஒரு நீண்ட சுவாரசியமான விவாதம் புரிந்துகொண்டிருந்தேன். அந்தக் கதையின் இறுதிப் பகுதியில் சில விஷயங்கள் தேவையில்லையே என்று கூறினேன். அதற்கு அவர், "இது உண்மையாக நடந்த சம்பவம், மாதவன்" என்று அதன் பின்னணியை விவரித்தார். உடனே நான், "இப்போது நீங்கள் சொல்வது போலவே எழுதியிருக்கலாமே, நிச்சயம் நல்ல சிறுகதையாக வந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஏன் மாற்றினீர்கள்?" என்று என்னுடைய ஆதங்கத்தைத் தெரிவித்தேன். அவரோ, "இல்லை மாதவன். நெருங்கிய உறவு. பெயரை மாற்றிப் போட்டால்கூடத் தெரிந்துவிடும். தவறாக எடுத்துக் கொள்வார்கள். பகைத்துக்கொள்ள விரும்பவில்லை" என்று கூறினார். 
நான் கூற வருவதும் அதே பிரச்சினையைப் பற்றியே. கதை, கவிதை என்று எதை எழுதினாலும் என் நெருங்கிய நண்பர்களும் சுற்றங்களும் அதை என்னோடும் தங்களோடும் தொடர்புபடுத்திக் கொள்கிறார்கள். அதில் உண்மை இருக்கவும் செய்கிறது. ஆனால் அது பாதி உண்மை மட்டுமே. இதைப் பற்றி மேதைகள் பலர் ஏற்கனவே எழுதிவிட்டார்கள். என்னுடைய சிறுகதை ஒன்றை வாசித்த நெருங்கிய உறவினர் ஒருவர் ஆறு வருடங்களாக என்னோடும் என் குடும்பத்தினருடனும் பேசுவதில்லை. உறவை முறித்துக்கொண்டு விட்டார். பெற்றோரைப் புறக்கணிக்கும் ஒரு வெளிநாடு வாழ் இந்தியரைப் பற்றிய கதை அது. மூன்று வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு காலகட்டங்களில், வெவ்வேறு மனிதர்களுடன் ஏற்பட்ட அனுபவங்களைத் தொகுத்து புனைவு கலந்து எழுதினேன். ஒரு உண்மையைச் சொல்லவேண்டுமென்றால் அந்தக் கதை ஒரு சுயவிமர்சனம். வெளிநாடுகளில் வாழ்பவர்கள் எல்லோருமே ஒருவகையில் சுயநலவாதிகள்தானே. நான் உட்பட. என் பெற்றோர்களை வருடத்துக்கு ஒருமுறையோ அல்லது இரண்டு முறையோ சென்று பார்க்கிறேன். எப்படிப் பார்த்தாலும் அருகே இருந்து பார்த்துக்கொள்ளும் பிள்ளைகள் உன்னதமானவர்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. "பறவைகள்கூட சிறகு முளைத்ததும் தன் குஞ்சுகளைப் பறக்கவிட்டு ரசிக்கின்றன. மனிதன் மட்டுமே சிறைப்படுத்தி வைக்கிறான்" என்று ஒரு பதிவில் எழுதியிருந்தேன். பிள்ளைகளைச் சிறைப்படுத்த நினைக்கும் பெற்றோர்கள் மீதான விமர்சனம் அது. ஆனால் அதை வாசித்துவிட்டு பெற்றோர்களை விட்டு விலகி வாழும் எவரேனும் மகிழ்ச்சியடைவார்கள் எனில் அவர்கள் முன்பு என்னுடைய இன்னொரு சிறுகதையைத் தூக்கி எறிந்து விமர்சிப்பேன். பறந்துசெல்லக்கூடாது என்று சொல்லவில்லை. பறந்து சென்றவர்களின் நடத்தைகள் மீது விமர்சனம் இருக்கிறது என்றே சொல்லுகிறேன். அந்த விமர்சனம் படைப்பாகிறது. ஆனால் அது சமூகத்தின் மீது வைக்கப்பட்ட விமர்சனம். தனிப்பட்ட எந்த நபரின் மீதும் வைக்கப்பட்ட ஒன்றல்ல. ஒரு தனிநபர் சமூகத்தின் அங்கம் என்கிற முறையில் அதை நிச்சயம் பரிசீலிக்க முயலவேண்டும். பரிசீலனையின் முடிவில் இந்த விமர்சனம் நிராகரிக்கப்படவேண்டியது என்று தோன்றினால், தாராளமாக அதைச் செய்யலாம். 
புனைக்கதைக்கே இத்தனை விளக்கங்களைத் தரவேண்டி இருக்கிறதென்றால், நேரடியாக அப்பட்டமாக நான் எழுதி வைத்துள்ள நாட்குறிப்புகளுக்கு? படைப்புகளால் மட்டுமல்லாமல் வேறு சில காரணங்களுக்காகவும் இப்படி சில உறவுகளுடனான தொடர்பு அறுந்துவிட்டிருக்கிறது. ஆனால், 'முற்றிலுமாக' என்று சொல்ல மாட்டேன். மீண்டும் வருவார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு நிச்சயம் இருக்கிறது. வராவிட்டால் நான் செல்வேன். எந்த உறவிலும் எந்த காரணத்துக்காகவும் முற்றுப்புள்ளி வைப்பதை நான் விரும்புவதில்லை. உறவுகளில் விரிசல் என்பது என்னளவில் காற்புள்ளியே. பலருடன் உறவுச் சிக்கல்கள் இருந்திருக்கிறது; இருக்கிறது. ஒவ்வொரு பிரச்சினைக்குப் பின்பும் தீவிரமாக அலசி ஆராய்ந்துவிட்டு, என்னிடம் தவறிருப்பின் மன்னிப்பு கேட்கவும் தயங்கமாட்டேன். அப்படிப் பலரிடம் மன்னிப்பு கேட்கவும் செய்திருக்கிறேன். பிரச்சினைகளுக்குப் பிறகு எந்தவித காழ்ப்புணர்ச்சிக்கும் என்னில் இடம் கிடையாது. ஆனால், என்னை விட்டு விலகிச் சென்ற ஒருவர்கூட இதுவரை என்னிடம் மன்னிப்பு கேட்டதாக நினைவிலில்லை. இதற்குப் பல காரணங்கள் இருக்கலாம். உண்மையிலேயே அவர்கள் பக்கம் நியாயம் இருக்கலாம் (அல்லது) என்புறமுள்ள நியாயங்களை பரிசீலித்துப் பார்த்திருக்க மாட்டார்கள் (அல்லது) தாங்கள் முழுக்க முழுக்க சரியானவர்கள் என்கிற மாயையில் வாழ்பவர்கள் (அல்லது) மன்னிப்பு கேட்பதற்கு அவர்களுடைய ஆணவம் இடம் கொடுத்திருக்காது (அல்லது) வேறு ஏதோ ஒரு காரணத்துக்காக பொதுவாக என்னை வெறுப்பவர்கள். இவையெல்லாம் எனக்கு மட்டுமல்ல, தன்னைச் சுயபரிசோதனைக்கு உட்படுத்தி சுயமேன்மையை நோக்கிச் செல்ல விளையும் எவருக்கும் பொருந்தக் கூடியதே.
சரி, மற்றவர்கள் மேல் பழி எதற்கு? படைப்புகளை வெளியிட்டு சார்ந்தோரின் எதிர்வினைகளையும், பின்விளைவுகளையும் தாங்கிக்கொள்ளும் துணிவை முற்றிலுமாக நான் இன்னமும் பெறவில்லை என்பதே உண்மை. ஒரு படைப்பாளிக்கு இருக்கவேண்டியது துறவு மனநிலை. அது இன்னமும் எனக்கு வாய்க்கவில்லை. படைப்பாளிகள் சமூகத்துக்குச் சொந்தமானவர்கள். ஒரு உண்மையான படைப்பாளி இது போன்ற தன்விளக்க அறிக்கைகளை விட்டுக்கொண்டிருக்க மாட்டான். ஆனாலும் என்னைப் போன்ற வாசகர்களுக்கு இதைச் சொல்லியாக வேண்டியிருக்கிறது. தன்னுடைய நண்பர்களை, உறவுகளைப் பற்றி விமர்சிக்க மட்டும் எழுதும் குறுகிய மனம் படைத்தவனல்ல ஒரு படைப்பாளி. அவனுடைய கனவுகள் பிரமாண்டமானவை. தன் நண்பன் தன்னைப் பற்றி எழுதிவிட்டான் என்று பார்ப்பதைவிட, ஒரு படைப்பாளி தன்னைப் போன்ற ஒருவனைப் பற்றி எழுதியிருக்கிறான். அதைப் பரிசீலித்துப் பார்க்கவேண்டும் என்று நினைப்பவனே உண்மையான வாசகன். அதுவே கற்றவர்கள் செய்யக்கூடியது. 
சென்னையில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டம். உடன்பணிபுரியும் ஒருவர் மீது எப்போது பார்த்தாலும் துர்நாற்றம் வீசும். "அவரருகே நின்று பேசுவதற்கே சற்று சங்கடமாக இருக்கிறது. அவர் ஏன் இப்படி இருக்கிறார்?" என்று அவர் இல்லாத வேளையில் அவருடைய இந்தப் பிரச்சினையைப் பற்றி எல்லோரும் பேசிக்கொண்டிருப்பார்கள். ஆனால் அது அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லையே. அவரிடம் இதைச் சொல்வதற்கு எனக்கும் தயக்கம் இருந்தது. பூனைக்கு யாரேனும் மணி கட்டவேண்டுமே. அதனால் ஒருமுறை அவருக்கு விலையுயர்ந்த வாசனைத் திரவியம் ஒன்றை வாங்கிச் சென்று அன்பளித்துவிட்டு இந்தப் பிரச்சினையை எடுத்துச் சொன்னேன். நடந்தது என்ன தெரியுமா? அவர் அந்த அன்பளிப்பைப் பெற்றுக்கொள்ளவில்லை. அதன் பிறகு என்னுடன் பேசுவதையே நிறுத்திக்கொண்டு விட்டார். அவரைப் பற்றி அவர் இல்லாத வேளையில் புறம் பேசிக்கொண்டிருந்த எல்லோருடனும் சகஜமாகப் பழகினார். என்னைப் புறக்கணித்தார். நான் எதைச் செய்தாலும் சொன்னாலும் விமர்சிக்கவும் ஆரம்பித்தார். மற்றவர்களோ அவர் இல்லாத வேளையில் அவரைப் பற்றி பேசுவதை தொடர்ந்துகொண்டிருந்தார்கள். ஆனால் சில நாட்களில் அவர்மீது துர்நாற்றம் வீசுவது நின்றிருந்தது. என்னைப் புறக்கணித்தாலும் என் கருத்தைப் பரிசீலித்திருக்கிறார் என்பதே எனக்குப் போதுமானதாக இருந்தது. இனி அவரைப் பற்றி அவர் இல்லாத வேளையில் குறைந்தபட்சம் மேற்சொன்ன காரணத்துக்காக யாரும் கிண்டலடித்துப் பேசமாட்டார்கள். 
படைப்பாளிக்கு இருக்கவேண்டிய கருணை எனக்கு இருக்கிறது என்று என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஆனால், துறவு மனநிலையும் துணிவும் என்னை நோக்கிச் சற்று மெதுவாகவே நகர்ந்து வந்துகொண்டிருக்கிறது. இந்தத் துணிவு என் ஆயுளுக்குள் ஒருவேளை எனக்குக் கிட்டாமல் போகுமானால், என் மறைவுக்குப் பிறகு என்னுடைய நாட்குறிப்புகள் அத்தனையும் என் தோழியும் காதலியும் மனைவியுமான ப்ரியா வெளியிடுவாள். அவளுக்கு அந்தத் துணிவு நிச்சயம் இருக்கிறது. இல்லையெனில் சமூகம் உண்டாக்கி வைத்திருக்கும் குல பேதங்களை எதிர்த்து விமர்சித்து என்னைத் திருமணம் செய்திருக்கமாட்டாள். அதற்கான எதிர்வினைகளை ஒவ்வொரு நாளும் எதிர்கொண்டு வருபவள். ஓரிரு நல்லெண்ணம் கொண்ட உறவுகளைத் தவிர மற்றெல்லோராலும் இன்று வரை ஒதுக்கிவைக்கப்பட்டிருப்பவள். காஃப்கா தான் இறந்த பிறகு தன்னுடைய படைப்புகள் அத்தனையும் எரிக்கப்படவேண்டும் என்று தன்னுடைய நண்பர் மேக்ஸ் ப்ராடுக்கு அறிவுறுத்தினார். அவர் மேதை. நான் சாமான்யன். ஆனாலும் எரிக்க அறிவுறுத்த மாட்டேன். எழுதும் அத்தனையும் பொதுவெளிக்கு வரவேண்டும். படைப்பதும், கொண்டுபோய் சேர்ப்பதும் மட்டுமே படைப்பாளியின் கடமை. படைப்புகளை பரிசீலிக்கும், ஏற்றுக்கொள்ளும், நிராகரிக்கும், எதிர்க்கும், எரிக்கும் வேலைகளை வாசகர்கள் செய்துகொள்ளட்டும்.

கருத்துகள்

  1. உண்மை...
    துணிவு கண்டிப்பாக வேண்டும்.
    அதுதான் பலருக்கு இருப்பதில்லை எனக்கும்தான்
    நல்ல பகிர்வு.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..