காஃப்கா கஃபேவும் ப்ரூகல் பாதையும்..


நண்பர்கள் பாபு, ஆலினுடன் ப்ரசல்ஸ் நகர வீதியில் உலவிக் கொண்டிருந்தபோது ஒரு அருந்தகத்தின் பெயர் என் கவனத்தை ஈர்த்தது - "காஃப்கா கஃபே". அருந்தகத்துக்கு காஃப்காவின் பெயரா என்று ஆச்சர்யப்பட்டோம். "நீ காஃப்காவை வாசிக்கிறாயா? ஹெவி ஸ்டஃப் ஆயிற்றே!" என்றார் ஆலின். நான் பெல்ஜியத்துக்கு வந்த புதிதில் எனக்கு காஃப்கா, அல்பேர் காம்யு போன்ற எழுத்தாளர்களைப் பற்றியெல்லாம் தெரிந்திருக்கிறது என்பதே என் பெல்ஜியம் நண்பர்களுக்கு வியப்பாக இருந்தது. அவர்களுக்கெல்லாம் இந்தியாவில் என்ன வேலை என்பது போன்று பார்வை வீசியிருக்கிறார்கள். காஃப்காவின் "உருமாற்றம்" (The Metamorphosis) பற்றி பலரும் பேசியிருக்கிறார்கள். அதைவிடவும் அவருடைய "தீர்ப்பு" (The Judgement) கதைதான் சிறந்ததென்பது என் தீர்ப்பு. என்னை உலுக்கிப்போட்டதொரு இலக்கியப் படைப்பு அது. 
உண்மையிலேயே இந்த அருந்தகத்துக்கு ஃபிரான்ஸ் காஃப்காவின் பெயரைத்தான் வைத்திருக்கிறார்களா என்றொரு சம்சயம் எனக்கு. நம்மூரில் புதுமைப்பித்தன், அசோகமித்திரன் இவர்கள் பெயரிலெல்லாம் தேநீர் கடைகளைப் பார்த்து நமக்குப் பழக்கமில்லையே. சாரு நிவேதிதாவிடம் சொன்னால் "பிலிஸ்டைன் சொசைட்டி" என்று திட்ட ஆரம்பித்துவிடுவார். அருந்தகத்துக்குள் சென்று பார்த்தால் அங்கு சுவரின் மீது காஃப்காவின் புகைப்படத்தையும், பெயரையும், ஜெர்மன் மொழியில் "Guilt is never to be doubted" என்கிற அவரது புகழ்பெற்ற வாசகத்தையும் தாங்கிய பெரிய அளவிலான ஒளிப்பலகையை மாட்டியிருந்தார்கள்.


ஐரோப்பாவில் இதுபோன்று பல இடங்களில் கலைஞர்களின் பெயர்களில் அருந்தகங்களையும், உணவகங்களையும் பார்த்திருக்கிறேன். இதே காஃப்காவின் பெயரில் ஒரு விமான நிலையமே இருக்கிறது. தற்போது பெல்ஜியம் விமான நிலையமும் கூடிய விரைவில் "ப்ரூகல்" விமான நிலையமாகப் போகிறது என்று கேள்விப்பட்டேன். ப்ரஸல்ஸ் நகரைச் சேர்ந்த பதினாறாம் நூற்றாண்டு ஃபிளம்மிய (டச்சு) ஓவியரான "பீட்டர் ப்ரூகல்" மறைந்து 450 வருடங்கள் நிறைவடைந்ததையொட்டி ப்ரஸல்ஸ் நகரில் மட்டுமன்றி பெல்ஜியத்தில் பல இடங்களில் கண்காட்சிகளையும், பல்வேறு நிகழ்ச்சிகளையும் ஏற்பாடு செய்திருக்கிறார்கள். அவற்றில் சுவாரசியமான முயற்சியாக எனக்குப் பட்டது - "ப்ரூகல் பாதை". அவரால் வரையப்பட்ட இயற்கை நிலக்காட்சிகளைக் காண்பதற்காகவே கிட்டத்தட்ட நாற்பது கிலோமீட்டர் தொலைவு சைக்கிள் பாதை ஒன்றை அமைத்திருக்கிறார்கள். வழியில் ஆங்காங்கே அவருடைய புகழ்பெற்ற ஓவியங்களை முப்பரிமாணக் கலைவடிவில் வைத்திருக்கிறார்களாம். நான் இன்னும் போகவில்லை. நண்பர் கிரிஸ் புகைப்படங்களை அனுப்பியிருந்தார். ”இவ்விதம் கலை மட்டுமல்ல நாமும் உடல்நலத்தோடு நீண்டகாலம் வாழலாம்” என்று அவரிடம் கூறினேன். ஆமோதித்துச் சிரித்தார். கண்டிப்பாக ஒரு சுற்று பார்த்துவிட்டு வந்து விரிவாக எழுதுகிறேன். 
இரண்டு வருடங்களுக்கு முன்பு ஆன்ட்வெர்ப் நகர ஓவியர் பீட்டர் பால் ரூபென்ஸை இப்படித்தான் கொண்டாடினார்கள். தெற்கு பெல்ஜியத்திலுள்ள தினா(ன்) நகருக்குச் சென்றால் ஊரெங்கும் பார்க்குமிடமெல்லாம் பிரமாண்ட சாக்ஸோபோன்கள். அடால்ப் சாக்ஸ் அந்த நகரில் பிறந்தவர். கலைஞர்களை இந்த ஊரில் எப்படியெல்லாம் கொண்டாடுகிறார்கள்? இதையெல்லாம் பார்க்கும்போது ஹங்கேரி நாட்டு இசையறிஞர் பிரான்ட்ஸ் லிஸ்ட்டினுடைய வாசகம் ஒன்று நினைவுக்கு வருகிறது - "விசனம் தோய்ந்தது ஆயினும் வீறார்ந்தது கலைஞனின் விதி". How true!
“Mournful and yet grand is the destiny of the Artist".

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..