தண்ணீர்.. தண்ணீர்..


அம்மாவிடம் சென்னை மாநகரின் தண்ணீர் பஞ்சத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். தோழி யாஷிகாவும் இங்கே இணைத்திருக்கும் புகைப்படங்களுடன் வாட்சேப்பில் செய்தி அனுப்பியிருந்தார். அவற்றில் தெரிவது தண்ணீரே இல்லை. வேதியியல் ஆய்வகங்களில் குப்பிகளில் அடைத்து வைக்கப்பட்டிருப்பது போன்றதொரு மஞ்சள் திரவம். "இந்த திரவத்துக்காக இரண்டு நாட்களுக்கு ஒருமுறை முன்னூறு ரூபாய் கொடுக்கவேண்டியதாய் இருக்கிறது. நாங்களாவது பரவாயில்லை. குடிப்பதற்கும், சமையலுக்கும் வேண்டிய தண்ணீரை விலைக்கொடுத்து வாங்கிக் கொள்கிறோம். ஆனால் எங்கள் வீட்டில் வேலை செய்பவர் வீட்டில் இந்தத் தண்ணீரைத்தான் பருகுகிறார்கள். இதைக் கொண்டுதான் சமைக்கிறார்கள். ஏன் நமக்கு மட்டும் இந்த நாதியற்ற நிலைமை? அரசாங்கம் என்ன செய்கிறது? கட்டுகிற வரிப்பணமெல்லாம் எங்குதான் போகிறது?" என்கிற வினாக்களுடன் அந்த குறுஞ்செய்தி ஒரு குறுங்கட்டுரையைப் போல் நீண்டுகொண்டே சென்றது. நியாயமான கேள்விகள்தான். அதில் ஒரு கேள்வி, "இதைப் பற்றி நீங்கள் ஏன் எழுதக்கூடாது?" என்பது. 
"என்னுடைய ஐந்து கொடுங்கனவுகள்" என்று ஒரு கட்டுரை எழுத வேண்டும் என்கிற எண்ணம் எனக்கு நீண்ட காலமாக இருந்து வருகிறது. அவை என்ன தெரியுமா? 
1. சிறுவயதில் என்னுடைய அம்மாவுக்கு நேர்ந்த விபத்தும் அதனால் எங்கள் குடும்பத்தில் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகள் நிலவிய அசாதாரண சூழலும்
2. சிறுவயதில் என் சொந்த ஊரான திருப்பத்தூர் எதிர்கொண்ட தண்ணீர் பற்றாக்குறை பிரச்சினை
3. கல்லூரி நாட்களில் எனக்குச் சற்றும் விளங்காத வெப்பவியக்கவியல் பாடமும் அதை எல்லா வகையிலும் கடினப்படுத்திவைத்திருந்த ஆசிரியர் வீரபத்ரசாமியும்
4. காதலில் விழுந்த பிறகு நான் எதிர்கொண்ட பிரச்சினைகள்
5. ஒரு கொடிய அரக்கனாக எனக்குள் நுழைந்துப் பிறகு நண்பனாகி என்னுடனேயே தங்கிவிட்ட 'டின்னிட்டஸ்'
இவற்றில் டின்னிட்டஸ் பற்றி மட்டும் சற்று விரிவாகவே பல கட்டுரைகள் எழுதிவிட்டேன். மற்றவை காத்திருக்கட்டும். இப்போதைக்கு இரண்டாவது கொடுங்கனவைப் பற்றி மட்டும் சற்றுப் பேசுவோம். நான் எட்டாம் வகுப்பு படிக்கும்போது கொடுமையானதொரு தண்ணீர் பஞ்சத்தை என் சொந்த ஊரான திருப்பத்தூர் எதிர்கொண்டது. தமிழகம் முழுவதும் அப்படி இருந்ததா என்பது நினைவில் இல்லை. அப்போதெல்லாம் சமூக ஊடகங்கள் இல்லையே. அவரவர்கள் உள்ளூர் பிரச்சினைகளைப் பற்றி மட்டும் தெருக்களில் நின்றுகொண்டு அளவளாவிக்கொண்டிருந்த காலம் அது. ஆனால் அந்தச் சமயம் அமெரிக்க அதிபராகப் பதவி ஏற்றுக்கொண்ட பில் கிளிண்டனுக்குக் கடிதம் எழுதியது மட்டும் நினைவிலிருக்கிறது. அப்பாதான் எழுத உதவினார். 
அம்மாவுக்கு நேர்ந்த விபத்தின் காரணமாக எழுந்து நடக்க முடியாத நிலை ஏற்பட்டுவிட்டது. தம்பி மிகவும் சின்னப் பையன். அப்பாவோ ஒரு குடும்பப் பிரச்சினையில் இழந்துவிட்டதையெல்லாம் மீட்க என்னென்னமோ செய்துகொண்டிருந்த காலம் அது. வீட்டுக்கான நேரம் அவருக்குக் கிடைக்கவில்லை. அன்று தொடங்கியவர் இன்று வரை ஓடிக்கொண்டேதான் இருக்கிறார். எனவே குடும்பத்தின் சின்ன சுமைகள் என் தோள்களில் சிறுவயதிலேயே ஏற்றிவைக்கப்பட்டது. காலையில் எழுந்தவுடன் வீட்டு உரிமையாளருக்கு காபி கொடுப்பதிலிருந்து, காய்கறிகள், மளிகைச் செலவுகள் வாங்கி வருவதிலிருந்து, பாத்திரங்கள் கழுவுவது, வீட்டை சுத்தம் செய்வதோடு மட்டுமல்லாமல், பல சமயங்களில் வாசலைப் பெருக்கி நீர் இறைத்து கோலமெல்லாம் போட்டிருக்கிறேன் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன். மாலை 4.05 மணிக்கு பள்ளி விட்டால் அடுத்த பத்து நிமிடங்களில் நேராக வீடு வந்து சேர்ந்துவிடுவேன். அம்மா தனியாக இருப்பார், கஷ்டப்படக்கூடாது என்பதே ஒரே எண்ணம்.
பெரும்பாலும் எல்லா வேலைகளையும் ரசித்துத்தான் செய்தேன் - ஒன்றைத் தவிர. வீட்டில் இருந்த இரண்டு தண்ணீர் பீப்பாய்களையும் நிரப்பும் பணிதான் அது. நீல நிற பீப்பாய்கூடப் பரவாயில்லை. அந்தக் கருப்பு நிற பீப்பாய் இருந்ததே. பேய்ப் பீப்பாய் அது. அவ்வளவு சீக்கிரம் நிரம்பித் தொலையாது. நல்லவேளையாக அப்பாவின் நண்பரொருவர் வந்து அதைத் தூக்கிக்கொண்டு போய்விட்டார். "இது போன்ற பீப்பாய்கள் எல்லாம் உங்களுக்கு மட்டும் எங்கிருந்து கிடைக்கிறது அண்ணா?" என்று சொன்னாரே பார்க்கலாம். உடனே இரண்டில் ஒன்றை எடுத்துக்கொண்டு போகச் சொல்லிவிட்டார் அப்பா. அவர் தேர்ந்தேடுத்தது கறுப்புப் பீப்பாயை. அப்பா நிச்சயம் பரோபகாரிதான். ஆனால், பெரும்பாலான இந்திய ஆண்களைப் போலவே எளிதில் புகழ்சொல்லுக்கு மயங்கிவிடக் கூடியவர். எப்படி இருந்தாலும், பேய்ப் பீப்பாயைத் தொலைத்துக் கட்டியதில் எனக்கு மகிழ்ச்சியே. ஆனால் அம்மாவுக்குத்தான் இதில் பயங்கரக் கோபம். அம்மாவைச் சொல்லிக் குற்றமில்லை தண்ணீர் பஞ்சம் அந்த அளவில்தான் எங்களை வைத்திருந்தது. வீட்டிலுள்ள அத்தனைக் குடங்கள், பாத்திரங்கள், சொம்புகள், குவளைகள் வரை தண்ணீரை நிரப்பிச் சேமித்து வைக்கப் பிரயத்தனம்பட்டுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அத்தனை பெரிய பீப்பாயின் இழப்பு எவ்வளவு பெரியது என்று எண்ணிப் பாருங்கள். உலகிலேயே விலை மதிப்பற்ற பொருள் தண்ணீர் என்று நான் நம்பிக்கொண்டிருந்த காலம் அது. 
அம்மாவின் கோபத்துக்கு இன்னொரு காரணம், என்னுடைய சித்தப்பா ஒருவர்தான் அந்த இரண்டு பீப்பாய்களையும் வாங்கிக் கொடுத்தார். அவர் பெயர் சேகர். என் வீட்டிலேயே எனக்கு மிகவும் பிடித்த மனிதர் அவர்தான். நேர்மையும் எளிமையும் அடக்கமும் அன்பும் நிறைந்த மனிதர். எந்த வம்புகளுக்கும் செல்ல மாட்டார். அவருக்குப் பிறகு அதே குணநலன்கள் என் தம்பிக்கும், இப்போது என் மகனுக்கும் வாய்த்திருக்கிறது. தாத்தாவின் வழியில் தேநீர் கடை வைத்து நடத்திக் கொண்டிருந்தவர். அவருடைய குழந்தையான என் தங்கை தேன் சிறு வயதிலேயே இறந்துவிட்டாள். அதன் பிறகு எங்களைத்தான் குழந்தைகளாகப் பார்த்துக் கொண்டார். என் மீதும் என் தம்பி மீதும் அளவுக்கதிகமான பாசம் வைத்திருந்தவர். என் தந்தை மீது பாசம் மட்டுமல்ல, மிகுந்த மரியாதையும் கொண்டிருந்தவர். அவருக்கு எதிரே நின்று பேசக்கூட மாட்டார். ஒவ்வொரு வாரமும் அம்மா எழுதிக் கொடுக்கும் மளிகைப் பட்டியலை அவரிடம் கொண்டுபோய் கொடுத்துவிட்டு, அவர் போட்டுக் கொடுக்கும் தேநீரும் பஜ்ஜியும் சாப்பிட்டுக் கொண்டிருப்பேன். அவர் மளிகைச் செலவுகனையெல்லாம் வாங்கிக்கொண்டு வந்து சைக்கிளில் கட்டி வீட்டுக்கு அனுப்பி வைப்பார். வீட்டுக்குத் தேவையான அரிசி மூட்டைகளை ஒவ்வொரு மாதமும் வண்டி வைத்து அனுப்பி விடுவார். தண்ணீர் பஞ்சத்தால் நாங்கள் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்த அந்தத் தருணத்தில் பீப்பாய்களை நிரப்பி வீட்டுக்குத் வாராவாரம் தண்ணீர் அனுப்பி வைப்பார். இளம் வயதிலேயே எங்களை விட்டுப் பிரிந்து விட்டார். சாதாரண வயிற்று வலி. இப்போதுகூட அதை என்னால் நம்பவே முடியவில்லை. அவரை நிச்சயம் காப்பாற்றி இருக்க வேண்டும். பெரியவர்கள் எப்படி விட்டார்கள் என்றே புரியவில்லை. இதையெல்லாம் எதற்குச் சொல்கிறேன் என்று கேட்கிறீர்களா? தண்ணீர் பிரச்சினையைப் பற்றி சமூக வலைத்தளங்களில் செய்திகளைப் பார்த்தபோது ஏனோ எனக்கு அவருடைய நினைவு வந்து ஆட்கொண்டுவிட்டது. 
அவர் மறைந்த பிறகு எங்கள் நிலைமை இன்னும் மோசமானது. வீட்டிலிருந்த கிணறு வற்றிப் போய்விட்டிருந்தது. அதனால் குடங்களைக் கயிற்றில் கட்டி மிதிவண்டியில் தொங்கவிட்டுக் கொண்டு தெருத்தெருவாக தண்ணீரைத் தேடியலைந்து கொண்டிருந்த காலம் அது. "தண்ணீர்" என்று யாராவது கத்துவது காதில் விழுந்தால் போதும், தூங்கிக்கொண்டிருந்தாலும் பதறி அடித்துக்கொண்டு எழுந்துவிடுவேன். இல்லாவிட்டாலும் அம்மா உலுக்கி எழுப்பிவிடுவார். சில சமயம் நள்ளிரவுகளிலெல்லாம் தண்ணீர் லாரிகள் வரும். குடத்தைத் தூக்கிக் கொண்டு ஓடுவோம். வரிசையில் முந்திக்கொள்ள ஒரு அடிதடி நடக்கும் பாருங்கள். பலமுறை சட்டை பனியனெல்லாம் கிழித்துக்கொண்டு வந்திருக்கிறேன். அப்போதெல்லாம் வீட்டிலேயே கைப்பம்பு வைத்திருப்பவர்கள் கிட்டத்தட்ட பென்ஸ் கார் வைத்திருப்பது போன்று தோரணையில் நம்மைப் பார்ப்பார்கள். அவர்கள் வீடுகளுக்குச் சென்று வாசலில் பரிதாபமாக முகத்தை வைத்துக்கொண்டு நீண்ட நேரம் நின்றுகொண்டிருந்தால் நமக்கு ஒரு குடம் கிடைக்கும். ஆனால் அதற்குப் பிரதிபலனாக அவர்களுக்கு ஒரு ஐந்து குடம் தண்ணீர் நிரப்பிக் கொடுக்கவேண்டும். வயதானவர்கள் இருக்கும் வீடுகளுக்குச் சென்று அவர்களுக்கு உதவி செய்துவிட்டு இரண்டு குடங்கள் தண்ணீர் கொண்டு வந்துவிடலாம். நல்லவேளையாக எங்கள் வீட்டு உரிமையாளர் எப்படியோ ஒரு கைப்பம்பு வாங்கிவிட்டார். அதன் பிறகு வெளியே தேடியலைவது சற்று நின்றுவிட்டது. நல்ல மனிதர்தான். ஆனாலும் தண்ணீர் விஷயத்திலும் கைப்பம்பைக் கையாளும் விஷயத்திலும் பல கட்டுப்பாடுகளை விதித்திருந்தார். அவ்வளவு ஏன், தண்ணீர் என்று வந்துவிட்டால் அம்மாவே அவருக்கு மேல் சர்வாதிகாரியாக நடந்துகொண்ட காலங்கள் அவை. சில சமயங்களில் வீட்டுக்கு வரும் நண்பர்களும் என்னோடு சேர்ந்து மாட்டிக்கொள்வார்கள். ஆனால் பீப்பாய்களை நிரப்பிக் கொடுத்து விட்டால் போதும், அம்மாவிடம் என்ன கேட்டாலும் ததாஸ்துதான். நண்பர்களுடன் சினிமா பார்ப்பதற்கும், கிரிக்கெட் விளையாடச் செல்வதற்கும் அஃதொன்றே அந்நாட்களில் வழி. நான் பன்னிரண்டாம் வகுப்புக்குச் சென்ற வரைக்கும் என்னிடமிருந்த ஒரே சினிமா பாடல் கேஸட் "கேளடி கண்மணி" என்கிற பட்சத்தில் சினிமா தியேட்டர் செல்வது எவ்வளவு பெரிய விஷயம் என்று நினைத்துப் பாருங்கள். சில சாத்தியங்களை ஏற்படுத்தித் தந்த தண்ணீர் பஞ்சத்துக்கு நான் மிகுந்த நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இன்றைக்குக்கூட 'சாமி' என்றால் திரும்பிப் பார்க்காமல் ஓடுவதற்கும், வாரத்திற்கு இரண்டு திரைப்படங்கள் பார்ப்பதற்கும் இதுவே காரணம் என்று நினைக்கிறேன். அதிகத் திணிப்பு ஒவ்வாமையை ஏற்படுத்தும், அதிகக் கட்டுப்பாடு ஆர்வத்தைத் தூண்டும் என்பதை இன்றைய பெற்றோர்கள் புரிந்துகொண்டு நடக்கவேண்டும். 
இன்றைய தண்ணீர் பஞ்சத்தை செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒன்றாகவே நான் பார்க்கிறேன். போதிய அளவு மழை இல்லாததே பஞ்சத்திற்குக் காரணம் என்று சொல்வது சப்பைக்கட்டு. என் தந்தை என்னிடம் அடிக்கடி நினைவூட்டும் குறள் ஒன்று உண்டு.
"ஆகாறு அளவிட்டி தாயினுங் கேடில்லை
போகாறு அகலாக் கடை"
வருமானம் அளவில் சிறிது என்றாலும் செலவினம் பெரிதாகாதபோது கேடு இல்லை. சேமிப்பின் சிறப்பைக் கூறும் குறள் இது. நீர் மேலாண்மையும் நிதி மேலாண்மையைப் போன்றதே. காலநிலை மாற்றம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தி வருவது உண்மைதான். ஆனால் குறைவான மழை மட்டுமே பிரச்சினை அல்ல. பெய்த மழை ஒழுங்காகச் சேமித்து வைக்கப்படாததும், சரியான திட்டமிடல் இல்லாததும்தான் பிரச்சினை. நம்முடைய நதிகளை பாருங்கள். நதிகளே நாகரிகங்களைத் தோற்றுவித்தது. நதிகளே நகரங்கள் உருவாகக் காரணமாக இருந்தது. சென்னை மாநகரின் ந்திகளை நாம் சாக்கடைகளாக்கி அங்கு ஒரு நரகத்தை உருவாக்கி வருகிறோம். ஒவ்வொரு பயணத்தின் போதும் ஐரோப்பிய நகரங்களிலுள்ள நதிகளைப் பார்க்கும்போதெல்லாம் தாயக நகரங்களின், ந்திகளின் நிலைமையை எண்ணி ஏங்கியிருக்கிறேன். "இல்லாதவனுக்கு எல்லாம் நமதே" என்கிற தரிசனம் கிடைத்த பிறகு, பயணங்கள் புரிந்து கண்டு களிக்கிறேன்; கண்டு கற்கிறேன். ஆனாலும் ஏக்கம் விட்டதாகத் தெரியவில்லை. ஒருசில சமயங்களில் அழுகைக்கூட வந்துவிடுகிறது. நம் மக்களுக்குக் கடவுள் மீதும், மதங்கள் மீதும், கட்சிகள், கேளிக்கைகள் போன்றவை மீதும் இருக்கும் நேசத்தில் ஒரு துளியேனும் நம்முடைய ஓடைகள், ஆறுகள், தடாகங்கள், ஏரிகள், மலைகள், மரங்கள், காடுகள் இவற்றின் மீது விழுமானால், நம் நாடு எவ்வளவு அழகாகவும் சுபிட்சமாகவும் இருக்கும். ஆனால் அது பேராசை என்பதை அறிவேன்.

கருத்துகள்

  1. அன்பின் மாதவன்
    உங்களின் தண்ணீர் பஞ்சம் குறித்த இப்பதிவை பிரமாதமாக எழுதியிருக்கீங்க கே பாலச்சந்தரையும் கோமல் சுவாமிநாதனையும் ஒருங்கே நினைவுக்குகொண் டு வந்திருக்கும் தலைப்பு.
    முன்பு பொள்ளாச்சியில் பெண் எடுக்கவோ கொடுக்கவோ மிகவும் யோசிப்பார்கள் 8 மாதங்கள் தொடர்மழை இருக்கும் ஊரென்பதால். அதே பொள்ளச்சியில் முற்றிலுமாக மழை பொய்த்துப்போன முதல் ஜுன் இப்போதுதான் கடந்தது. வாழ்வின் மீதான எல்லா பிடிப்புக்களையும் விலக்கிக்கொள்ள வேண்டும் தான் போலிருக்கு அத்தனை வெறுமையாக இருக்கின்றது ஒரு பொள்ளாச்சிக்காரியாக . மனசில் இருக்கும் ஈரமும் இனி காய்ந்துபோயிரும் போலிருக்கு வெயிலின் தாக்கத்தில்

    உங்களின் முழு வாழ்க்கையையே ஒரு சின்ன பதிவில் சொல்லிட்டீங்க. படச்சுருளை வெட்டி வெட்டி ஒட்டி, ஓட்டிய ஒரு குறும்படம்போல உங்க வாழ்வை பார்த்துவிட்டேன் அதில். தண்ணீருக்காக பட்ட அல்லல்களை உள்ளது உள்ளபடி சொல்லியிருகீங்க. உண்மையில் சமுதாய ஊடகங்களிலும் நட்பு வட்டாரத்திலும் இருக்கும் உங்களின் பிம்பம் இப்போதுதான் இன்னும் உன்னதமாகியிருக்குன்னு நான் நினைக்கிறேன்

    நேத்து மழையில் இன்னிக்கு முளைச்ச காளான்கள் எல்லாம் நாகராஜ சோழன் MA MPhil என்று ராஜராஜ சோழ பரம்பரையில் வந்ததை ஆதாரங்களுடன் நிரூபித்துக்கொண்டிருக்கையில் எத்தனை நேர்மையாக ஒரு பதிவினை எழுதியிருக்கீங்க

    பதிவின் உள்ளடக்கத்தைக்காட்டிலும் பதிவிட்டவரான உங்க நேர்மை என்னை வெகுவாக கவர்ந்தது. நேரில் சந்திக்கையில் அழுத்தமான கைகுலுக்கல் இதற்கென்றே பிரத்யேகமாக கொடுக்கனும்னு நினைச்சிருக்கேன்
    அப்புறம் டினிட்டஸ் பற்றி எழுதுவது என்னவாயிற்று நான் கேட்பது பதிவுகளையல்ல நாவலைக்குறித்து. நான் என் மனதில் அந்த நாவலுக்கு அட்டையைகூட வடிவமைத்திருந்தேன் கோவில் மணி ஒன்றின் படமும் ஒரு இளைஞன் வலி தாங்கமுடியாமல் காதுகளை பொத்திக்கொண்டிருக்கும் படமும், ECG கோடுகளைப் போல இடையிடையே சித்திரங்களையும் அமைத்திருந்தென். பின்னட்டையில் உங்கள் படமும் உங்களைகுறித்த கச்சிதமான சிறு குறிப்பும் இருக்கும் அதில்

    எழுதுங்களேன் மாதவன்

    முழுநேர எழுத்தாளார்களுக்கு பிரச்சனை இல்லை. உங்களுக்கு பொறுப்பான வேலை குடும்பம் தோழமை கடமைகளெல்லாம் இருப்பதால் இது சிரமம்தான் ஆனால் முயன்றால் முடியுமல்லவா?
    உஙகளால் கண்டுகொள்ளவே படாத, நீங்கள் வெற்றிகரமாகவும் நிறைவாகவும் இயங்கும் ஒரு தளம் காத்துக்கொண் டே இருக்கிறது உங்களுக்காக
    அன்புடன்
    லோகமாதேவி

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..