வாசக சாலையில் ஒரு நடைப்பயணம்


காலநிலை மாற்றம் பெல்ஜிய வானிலை மீதான தன் பிடியை இறுக்கிக்கொண்டே போகிறது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு பேய் மழை. இங்கு பெய்யும் மழை அங்கு பெய்திருக்கக்கூடாதா என்று எழுதியிருந்தேன். அடுத்த நாளே சென்னையில் மழை. ஆனால் இப்போது இங்கு கடந்த மூன்று நாட்களாக கடுமையான வெப்ப அலை வீசிக்கொண்டிருக்கிறது. இரண்டு வாரங்களில் எவ்வளவு மாற்றம்! நான் பெல்ஜியத்துக்கு வந்த புதிதில் மே, ஜூன் மாதங்களில் கம்பளிச் சட்டை அணிந்து அலுவலகத்துக்குச் சென்றது நினைவுக்கு வருகிறது. ஆனால் கடந்த மாதம் ஆல்ப்ஸ் மலை மீதே அரைக்காற்சட்டையுடன் நடைப்பயணம் புரிந்துகொண்டிருந்தேன். இருந்தாலும் என்னைப் போன்றவர்களைத் தாயகம் நன்றாகவே தயார் செய்து அனுப்பிவைத்திருப்பதால் வெப்ப அலைகள் அவ்வளவாக பாதிக்கவில்லை. ஆனால் பாவம் நண்பர்கள் அதிக அவதிக்குள்ளாகியிருக்கிறார்கள். என் மகனே "உஸ், புஸ்ஸென்று" அமர்ந்திருக்கிறான். இங்குள்ள வயதானவர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது. ஏனென்றால் பெரும்பாலானவர்களின் வீடுகளில் மின்விசிறிகூட இருக்காது. முன்பெல்லாம் இதுபோன்ற அதி வெப்ப நாட்கள் வருடத்துக்கு ஐந்தாறு முறை வரும். அதனால் மின்விசிறி இன்றி சமாளித்திருப்பார்களாக இருக்கும். இப்போது வேறு வழியில்லை என்று வாங்க ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த நேரம் பார்த்து ஐரோப்பாவுக்கு சுற்றுலா வந்திருக்கும் நண்பனும் அண்ணன் ஒருவரும் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள். 


ஆனால், எது நடந்தாலும் இந்த "ஃபிட்னெஸ் ஃப்ரீக்குகள்" மட்டும் அசரமாட்டார்கள். குளிரோ, வெய்யிலோ, மழையோ, வானிலை எப்படி இருந்தாலும் அதையே காரணம் காட்டி வேக நடை புரிந்துகொண்டும், ஓட்டமாய் ஓடிக்கொண்டும், சைக்கிள் ஒட்டிக்கொண்டும் என்று எதிலாவது லயித்துக்கிடக்கும் லய யோகிகள் அவர்கள். அதிலும் பெல்ஜியம் ‘சைக்கிள் காதலர்கள்’ நிரம்பிய தேசம். உலகில் வேறெங்காவது சைக்கிள் ஓட்டுபவர்களுக்காக இவ்வளவு மெனக்கெடுவார்களா என்று எனக்குத் தெரியவில்லை. கோர்ட்ரெய்க் என்கிற நகரத்தில் கிட்டத்தட்ட எழுபதுக்கும் மேற்பட்ட வீதிகளை சைக்கிள் வீதிகளாக அறிவித்திருக்கிறார்கள். பெல்ஜியம் நாட்டின் வடக்கு ஃபிளம்மிய பிராந்தியத்திலேயே மிகப் பெரிய சைக்கிள் மண்டலம் அது. அங்கெல்லாம் சைக்கிள் ஓட்டுபவர்கள் மன்னர்கள். மற்ற வாகனங்கள் அடிபணிந்துதான் செல்லவேண்டும். அதே நகரின் வடக்கு-தெற்கு பகுதிகளை இணைக்கும் சாலையில் ஒரு வேலை நாளில் நாலாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் சைக்கிளில் பயணித்து அலுவலகங்கள், கல்லூரிகள் செல்கிறார்கள். 

என்னுடைய நண்பர் கார்த்திக் ஒரு "சைக்கிள்-ஃப்ரீக்". அலுவலகத்துக்குக்கூட சைக்கிளில்தான் செல்கிறார். அடிக்கடி நடை, ஓட்டம், சைக்கிள் என்று தன்னுடைய உடற்கட்டு செயல்பாடுகளை எனக்கு அனுப்பி கடுப்பேற்றும் ஆசாமி அவர். இன்னொரு நண்பரான ஸ்டீவன் நடந்துகொண்டே இருப்பவர். அவர் எப்போதுதான் மற்ற வேலைகளைச் செய்கிறார் என்றே தெரியவில்லை. இவர்கள் இருவருமே எனக்கு அகத்தூண்டுதலாக இருப்பவர்கள். இன்று காலை கார்த்திக்குடனும் இன்னொரு நண்பருடனும் (அவர் பெயரும் கார்த்திக்கே) நாங்கள் வசிக்கும் தீனன் நகரைச் சுற்றி இருபது கிலோமீட்டர் நெடுந்தூர நடைப்பயணம் புரிந்தோம். 

பெரும்பாலும் கிராமங்கள், வயல்களினூடே நடந்து சென்றோம். அவற்றில் நிறைய பகுதிகளில் பாதசாரிகள் மற்றும் சைக்கிள் ஓட்டுபவர்களைத் தவிர பிற வாகனங்கள் செல்வதற்கு அனுமதி கிடையாது என்பதால் பறவைகளின் கீச்சொலிகளையம், எங்களின் பேச்சொலிகளையும், அவ்வப்போது விருட்டென்று எங்களைக் கடந்து செல்லும் பந்தைய சைக்கிள் கூட்டம் எழுப்பும் சத்தத்தையம் தவிர வேறு எதுவும் கேட்க வாய்ப்பில்லை. வழியில் ஆங்காங்கே இருந்த பேரிக்காய் தோட்டங்களில் பழங்கள் பறித்து சாப்பிட்டோம். இன்னும் முதிர்ச்சி அடையவில்லை. ஆனாலும் சுவையாக இருந்தது. எனவே நெடுந்தூர நடை உடலுக்கும் உள்ளத்துக்கும் மட்டுமல்ல நாவுக்கும் நல்லதே. 



ஒரு கிராமத்தின் சாலையோரம் புத்தகப் புழுக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த ஒரு பிரத்யேக ஏற்பாட்டை கண்ணுற்றுற்றோம். "டெ ரெய்ஸென் ஃபன் கலிவர்" (கலிவரின் பயணங்கள்), "மேய்ன் டாக்புக் - ஸாரா" (என்னுடைய நாட்குறிப்பேடு - ஸாரா) போன்ற புத்தகங்கள் கண்ணில் பட்டது. நாட்குறிப்புகளின் காதலனான எனக்கு வேறு என்ன வேண்டும். ஸாராவின் நாட்குறிப்புப் பக்ககங்களைப் புரட்டிக்கொண்டிருந்தேன். அதில் ஏதோ ஒரு வருடம் மார்ச் மாதம் இரவு பத்து மணிக்கு அவர் எழுதியுள்ள வரிகளை மட்டும் மொழிபெயர்த்துத் தருகிறேன். "எல்லாம் அழகாகத்தான் போய்க்கொண்டிருக்கிறது. ஆனால் இந்த மிகைப்படுத்தல்கள் எல்லாம் தொடர்கிறதா என்று இன்னும் சற்று நேரம் கவனித்த பிறகே முடிவுகளை எடுக்கவேண்டும்" என்று எழுதியிருக்கிறார். மிகைப்படுத்தல்கள் பற்றி அவர் எழுதியுள்ளதை முகநூலில் நான் சிறப்புடன் கடைப்பிடித்து வருகிறேன். அதன் பிறகு, கைப்பேசியை எடுத்து என்னுடைய நாட்குறிப்பிலிருந்து அந்தரங்கமான குறிப்பொன்றை நண்பர்களுக்கு வாசித்துக் காட்டி, நாட்குறிப்பு எழுதுவதின், பொதுவாகவே எழுதுவதின் அவசியம் பற்றி பேசிக்கொண்டிருந்தேன். எனவே இந்தச் சிறிய சாலையோர நூலக ஏற்பாட்டுக்கு, "வாசக சாலை" என்று பெயர் வைத்தால் பொருத்தமாகவே இருக்கும். இதுபோன்ற புத்தக அலமாரிகளை ஐரோப்பிய நகரங்களில் பல இடங்களில் பார்த்திருக்கிறேன். கடந்த வருடம் ஜெர்மனியின் பாடெர்போர்ன் நகர வீதிகளில் எழுத்தாளர் ஜெயமோகனுடன் சென்றுகொண்டிருக்கும்போதுகூட ஒன்றைக் காண நேர்ந்தது. அந்த முயற்சியைப் பாராட்டிய அவர், புத்தகங்களை எடுத்து புரட்டிப் பார்த்துக்கொண்டிருந்தார். "பூட்டுக்கூட இல்லை பார்த்தீர்களா?" என்றேன். "நம்மூரில்கூட புத்தகங்களைப் பூட்டு போடாமல் தைரியமாக வைக்கலாம்" என்றார். நான் மறுக்கவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..