நடைபாதையில் ஒரு கலைப்படைப்பு


கடந்த ஞாயிறன்று நண்பர்களுடன் பன்னிரண்டு கிலோமீட்டர் நடைபயணம் புரிந்தேன். நடப்பவர்களுக்கும், சைக்கிள் ஓட்டுபவர்களுக்குமாக அமைக்கப்பட்ட பிரத்யேகமான பாதை அது. ஒவ்வொரு முறையும் வெவ்வேறு பாதைகளில் நடந்து செல்வதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம். இந்த முறை நாங்கள் தேர்ந்தெடுத்த பாதையை ஒட்டிய நிலப்பரப்பில் கிடத்தி வைக்கப்பட்டிருந்த இந்த "திருகுசுருள் வடிவ அறுகோண பார்வைக் குழாய்" கலைப்படைப்பு என் கண்களை கவர்ந்திழுத்தது.


"ஹெலிக்ஸகன்" என்று அழைக்கப்படும் இந்தக் கலைப்படைப்பை வடிவமைத்தவர் "ஃப்ரடெரிக் வாஸ்" என்னும் கலைஞர். பிரபஞ்சம் என்பது சிக்கலான ஒன்றோடொன்று இணைந்ததொரு வலைப்பின்னல். இயற்கையில் மையமாகத் திகழும் அறுகோணம், சுருள் போன்ற வடிவியல் வடிவங்களை இணைத்து ஒரு புதிய வடிவத்தை இந்தப் படைப்பின் மூலம் உருவாக்கியுள்ளார் ஃப்ரடெரிக். சுருள் வடிவம் டி.என்.ஏ-வைக் குறிக்கிறது. அறுகோணம் கார்பன் அணுவைக் குறிக்கிறது. அறிவியல் அறிந்தவர்களுக்கு இந்த இரண்டு வடிவங்களின் முக்கியத்துவம் தெரியும். அவ்வளவு ஏன் பள்ளிக்கே போகாத தேனீக்களுக்குக்கூட அறுகோணத்தின் அருமை தெரியும். இந்தப் புகைப்படங்களை எடுத்த பிறகு நண்பர்களிடம் தேனீக்களைப் பற்றி பேசிக்கொண்டே நடந்து சென்றேன். 


ஃப்ரடெரிக் தன்னுடைய கலைத் தேடல் மூலம் ஒரு படைப்பை மட்டும் உருவாக்கவில்லை. அறிவியலுக்கும் ஆன்மீகத்துக்கும் இடையே ஒரு இணைப்பையே உருவாக்கிக் காட்டுகிறார். இயற்கையோடு ஒன்றிணைந்து, நம்மையே இயற்கையாகப் பார்ப்பதே இந்தத் தேடலின் துவக்கப் புள்ளி. இதன் பொருட்டே "ஃபெல்ட் ஒன் வித் நேச்சர்" என்கிற நிலைத்தகவலை முகநூலில் ஞாயிறன்று பதிவு செய்திருந்தேன். ஃப்ரடெரிக்கை நிச்சயம் சந்தித்து உரையாடவேண்டும். மேலும் இந்தப் படைப்பை நெடுந்தூர நடைக்கென்றே பிரத்யேகமாக கழனிகளூடே அமைக்கப்பட்டிருந்த பாதையில் வைத்திருப்பதை ஒரு குறியீடாகக் காண்கிறேன். குழாயினூடே பார்த்தால் நெடுந்தொலைவில் என் வீட்டிற்கு மிக அருகேயுள்ள தீனன் நகர தேவாலயம் தெரிகிறது. அது தற்செயலாக அமைந்ததா அல்லது திட்டமிட்டே அதை அவ்வாறு அங்கு நிறுவியிருக்கிறார்களா என்று தெரியவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..