நிறங்கள் – ஒரு பார்வை


அது நான் தினந்தோறும் சென்றமர்ந்து ஓய்வெடுக்கும் பூங்கா.

காற்றோடு மரத்தின் இலைகள் உராயும் சத்தம், மழலைகள் உரக்கக் கூச்சலிட்டு விளையாடும் மகிழ்ச்சியின் சத்தம், காதலர்களின் உதடுகள் எழுப்பும் காதல் சத்தம், பறவைகள் சில என் வெகு அருகாமையில் எதையோ கொத்தித் தின்று பசிமுறிக்கும் சத்தம், அருகேயொரு விமான நிலையம் இருப்பதால் சில நிமிடங்களுக்கொருமுறை விமானங்கள் காற்றை ஊடுருவும் சத்தம் என அத்தனையும் கலந்து எனக்கு அன்றாடம் இலவச இசைக்கச்சேரி தான்!

அன்றைக்கு சுரீரென அடித்த வெயிலோடு சேர்ந்துகொண்டது சிறுதூறல்! அதன் விழைவாய், இசைக் கச்சேரியில் இன்னொரு புதிய வாத்தியம் இணைந்திற்று! அழகான இசை, மிதமான வெயில், மிதமான மழை. ஆகா! இதுபோதும் எனக்கு இன்றைய மாலைக்கு! வெயிலும் மழையும் விட, இந்த 'மிதம்', அதுதான் சிறப்பு. கடும் வெயிலும், கடும் மழையும்  யாருக்குப் பிடிக்கும்? மிதம் தான் இதம்.

வெயிலுக்கும் மழைக்கும் இடையே சிலமணித்துளிகள் நான் சிக்குண்டு   லயித்துக் கிடந்த போது, என் செவிகள் 'சிறுவர்கூட்ட வாத்திய அமைப்பில்' ஏற்பட்டதொரு பெருமாற்றத்தைக் கண்டுகொண்டு மேலும் கூர்மையானது.

'வானவில்' 'வானவில்' 'வானவில்' என்று அந்த மழலைகளின் ஆரவாரத்தில் தான் எத்தனை மகிழ்ச்சி?

வானவில்! நான் அறிவேன். ஏழு நிறங்கள் அதற்கு. ஊதாவும், கருநீலமும், நீலமும், பச்சையும் மஞ்சளும், ஆரஞ்சும் சிவப்பும் என ஏழு நிறங்கள்!

ஏழு வெள்ளைப் பிரம்புகளுக்கு வெவ்வேறு வண்ணந்தீட்டி ஒன்றன் மீதொன்றாய், அழகாய் அடுக்கி, வளைத்து வில்லாக்கினாற்போல் இருக்கும் இந்த வானவில்!

எனக்கு நிறங்கள் தெரியாது. விளக்கினாலும் புரியாது. எனக்கு ஒளி தெரியாது. விளக்கினாலும் புரியாது. ஆனால் எனக்கு உணர்வுகள் தெரியும்! எனக்கு ஒலி புரியும்!

நிறங்களும் உணர்வுகளுமா? என்ன தொடர்பு? தொடர்பில்லாமல் இருக்கலாம். ஆனால் எனக்கு இந்தத் தொடர்பு தேவைப்படுகிறது. ஏனென்றால் எனக்கு வேறு வழியில்லை. எனக்குப் புரிய வைக்க முயற்சித்து பல மேதைகளே தோற்றுப்போனதால், எனக்கு புரியவைக்க நானாகவே செய்துகொண்ட ஒரு ஏற்பாடுதான் இந்த நிறங்களும் உணர்வுகளும்.

கோபம், சோகம், மகிழ்ச்சி, பயம், வெறுப்பு, வியப்பு, எரிச்சல் என்று ஒவ்வொரு உணர்வும் ஒவ்வொரு நிறம் எனக்கு.

கோபம் வருகையில் எனக்குள் ஏற்படும் உணர்வின் நிறம் சிவப்பு. யாரேனும் சிவப்பு என்றால், என் மனம் உடனே  அதை கோபம் என்று குணப்படுத்திக் காட்டும் அதனால் எனக்கு சிவப்பு என்றாலே எப்போதும் சிறிது நடுக்கம் தான்!

பச்சை தான் எனக்கு நிரம்பப் பிடித்த நிறம். உங்களுக்குப் பச்சை. எனக்கு மகிழ்ச்சி. மகிழ்ச்சியை யாருக்குத் தான் பிடிக்காது. யாரேனும் பச்சை புல்வெளிகள் என்றாலே, எனக்குள் மகிழ்ச்சி பிறக்கும். நகரங்களில் இப்போதெல்லாம் புல்வெளிகளை உணரமுடிவதில்லை. இதற்காகவே கிராமங்களுக்கு பலமுறை செல்வதுண்டு, உங்கள் பச்சையை உணர்வதற்கும், என்னுடைய மகிழ்ச்சியை காண்பதற்கும்.

பல நேரங்களில் கோபத்திற்கும் மகிழ்ச்சிக்கும் இடையே இருந்து கொண்டு மஞ்சள் நிறத்தைக் காண்பதுண்டு. சூரியன் மஞ்சள் நிறம் என்று கூறுகிறார்கள். சில நேரங்களில் அது உக்கிரமாய் வாட்டுகையில் சிவப்பை உணர்வேன்.

ஊதாவுக்கு  வெறுப்பு, கருநீலத்து சோகம் என்று இப்படி பல ஒப்பீடுகள். சில  சமயம் இருவேறு அல்லது பல்வேறு உணர்வுகளைக் கலந்து வேறு சில நிறங்களையும் காண்பதுண்டு. கோபமும் சோகமும் கலக்கும் போது எனக்கு வாழ்க்கையின் மீது வெறுப்பு தோன்றும்.

இன்னும் எத்தனையோ உணர்வுகள். எத்தனையோ நிறங்கள்...

அத்தனை நிறங்களையும் சரிவிகிதத்தில் கலந்தால் வெள்ளை பிறக்கிறது என்கிறார்கள். பச்சைக்கு அடுத்து எனக்கு வெள்ளை மிகவும் பிடிக்கும். வெள்ளை எனக்கு தூய்மை. யாரேனும் எனக்கு உதவும்போதெலாம் வெள்ளையை உணர்வேன்.

வெள்ளை நிறமற்ற நிலை இல்லை என்றால் சிலரால் புரிந்துகொள்ள முடிவதில்லை என்கிறார்கள். வெள்ளை எல்லா நிறங்களும் உள்ளடக்கிய நிலை. ஆனால், எனக்கு இது நன்றாகப்  புரிகிறது. எல்லா உணர்வுகளையும் உள்ளடக்கிய நிலை வெள்ளை உணர்வு நிலை. அது ஒளியின் நிறம் என்று கூறுகிறார்கள். ஞானிகளைப் பற்றி எண்ணும்போதெல்லாம் நான் வெள்ளை நிறத்தை உணர்வேன். சில சமயங்களில் நானும் ஞானியாவதுண்டு!  

அது அனைத்தையும் உள்ளடக்கிய நிலை.

இதெல்லாம் உங்களுக்குப் புரிகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால், இது நிறங்களைப் பற்றிய என்னுடைய பார்வை. அதில் தவறு இருந்தால் மன்னிக்கவும். எத்தனையோ விஷயங்களைப் பற்றிய உங்களின் பார்வை எனக்கு விளங்கியதே இல்லை. ஆயினும் அதற்காக உங்கள் மீது நான் கோபம் கொண்டதே இல்லை.

கருப்பு எனக்கு - தீவினை அல்லது தீங்கு! கருப்பு நிறமல்ல என்று கூறுகிறார்கள். அது நிறமற்ற நிலை. கருப்பை வெள்ளைக்கு எதிர் என்கிறார்கள்! எனவே அது மனத்தூய்மையற்றவர்களின் நிறமாகத்தான் இருக்கவேண்டும். அது துரோகிகளின் நிறம்; கொலைகாரர்களின் நிறம்! படுகொலைகளைப் பற்றி கேள்விப்படும்போதெல்லாம், நான் கருப்பை உணர்கிறேன்.
உணர்வது மட்டுமல்ல காணவும் செய்வேன்!

ஆமாம், என்னைப் போன்ற பார்வையற்றவர்கள் காணமுடிந்தது அந்தக்  கருப்பு மட்டுமே! அது தீங்கின் நிறம்! இந்த இயற்கை எங்களுக்கு இழைத்த தீங்கின் நிறம்.




நன்றி: வல்லமை

கருத்துகள்

  1. வலைச்சர அறிமுகத்திற்கு வாழ்த்துகள்...
    http://blogintamil.blogspot.in/2014/06/blog-post_11.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பின் இராஜராஜேஸ்வரி அவர்களுக்கு, வணக்கம்!

      இன்று காலை எழுந்தவுடன் நான் பார்த்த முதல் செய்தி. இன்ப அதிர்ச்சி!

      தங்கள் வாழ்த்துகளுக்கும் அன்புக்கும் நன்றிகள் பல!!

      வாழிய நலம்,
      மாதவன் இளங்கோ.

      நீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..