காலை 8.45 மணிக்கு புனித யாகோபு சதுக்கத்தில்

காலை 8.45 மணி. லூவன் நகரத்தின் புனித யாகோபு சதுக்கம் பேருந்து நிறுத்தம். என்னுடைய நாள் துவங்கும் நேரமும் இடமும் இது. தினமும் ஆறு மணிக்கே எழுந்து விட்டாலும், ஆறிலிருந்து எட்டு வரை நான் செய்யும் அத்தனைக் காலைக்கடன்களையும் ஒருவித தியான நிலையிலேயே செய்து முடிப்பேன். ஆறுமணிக்கெல்லாம் அலாரம் வைத்துவிட்டுத் தூங்கும் நண்பர்கள் பலர் காலையில் செய்வதை பார்த்திருக்கிறேன். அலாரம் அடிக்கும் போது, கை மட்டும் விழித்துக்கொண்டு ஒரே அழுத்தாக சேவலின் கழுத்தை நெறிப்பது போல, அலாரத்தை அழுத்தி உறக்கநிலைக்கு அனுப்பிவிட்டு அதுவும் தூங்கிவிடும். இதுபோன்று ஒரு பத்து முறையாவது அந்தக் கையுடன் அலாரம் பரிதாபமாகப் போராடும். நான் நிச்சயம் அந்த ரகம் அல்ல. அலாரம் அடித்த அடுத்த நொடி குபீரென்று விழித்தெழுந்து, ஸ்னூஸ் செய்துவிட்டு, கண்களை மூடிக்கொண்டு படுக்கையிலேயே அமர்ந்து தியானம் செய்யத் தொடங்குவேன். தியானம் தொடங்கிய சில நொடிகளில் தலை தொங்கிவிடும். இதுபோன்று ஒரு பத்து ஸ்னூஸ்களுக்கு என் தியானம் தொடரும். அதிலும் திங்கட்கிழமைகளைப் பற்றிச் சொல்லவேண்டியத் தேவையே இல்லை. தியான நிலையிலிருந்து விடுபட முடியாமல் தவிக்கும் நாட்கள் அவை. அதனால் என்னுடைய பெரும்பாலான விடுப்பு தினங்களைப் பார்த்தீர்களேயானால் அவை சந்தேகத்திற்கு இடமின்றி திங்கட்கிழமைகளாகத்தான் இருக்கும்.   

8.45 மணி ஆவதற்கு இன்னும் பத்து நிமிடங்கள் இருக்கிறது. நான் வழக்கமாக என் அலுவலகத்துக்குச் செல்லும் 317-ஆம் எண் பேருந்து, புனித யாகோபு சதுக்கத்தை ஒட்டியுள்ள பேருந்து நிறுத்தத்திற்கு 8.45 மணிக்கு வரும். நிறுத்தத்தின் பெயரும் அதுவே. அநேகமாக, லூவன் மையம் உட்பட பான்ட்கெனோடன்லான் சாலையில் உள்ள அத்தனைப் பேருந்து நிறுத்தங்களுக்கும் அடுத்து, அதிகமான பேருந்துகள் நிற்கும் நிறுத்தமும், அதிகமான கூட்டம் சேரும் இடமும் இதுவாகத்தான் இருக்கும். நான் பெரும்பாலும் 8.35 மணிக்கே அங்கு வந்து சேர்ந்து விடுவேன். இந்தப் பேருந்தை விட்டுவிட்டால் 9.15 மணி வரை காத்திருக்கவேண்டும். பணிச்சுமை அதிகமாக இருக்கும் நாட்களில் மட்டும் 8.15 மணிக்கு இதே எண் பேருந்தைப் பிடிப்பேன். ஆனால் அது அரிதினும் அரிதாகத்தான் நடக்கும்.    

லூவன் நகரில் யாகோபு சதுக்கத்தைப் போலவே பல சதுக்கங்கள் உள்ளன. டச்சு மொழியில் சின்ட்-யாகோப்ஸ்பிளைன் என்று கூறுவார்கள். பெரும்பாலும் இதுபோன்ற சதுக்கங்களுக்கு அருகிலேயே தேவாலயங்களோ அல்லது ஏதேனும் புராதன கட்டிடங்களோ இருக்கும். லூவன் நகராட்சி இதுபோன்ற இடங்களில் ஆண்டு முழுவதும் பலவித விழாக்களை நடத்துவார்கள்.. குறிப்பாக கோடைகாலத்தில். சதுக்கங்களுக்குக் கீழே பெரும்பாலும் பல்லடுக்கு நிறுத்திடங்கள் இருக்கும். ஆனால், புனித யாகோபு சதுக்கம் அப்படிப்பட்டதல்ல. சதுக்கமே கார்களுக்கான நிறுத்திடம்தான்

செப்டம்பர் மாதம் முதல் திங்கட்கிழமை அன்று மட்டும், அங்கு கால்நடைச் சந்தை வெகு விமரிசையாகவும், கோலாகலமாகவும் நடக்கும். அந்த நாளில் சதுக்கத்திற்கு வரும் அத்தனைச் சாலைகளையும் தற்காலிகமாக அடைத்துவிடுவார்கள். ஒரே ஒரு வருடம் அது எப்படி நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்வதற்காகவே அலுவலகத்துக்கு விடுப்பு எடுத்துக்கொண்டு போய் பார்த்தேன். விடியற்காலை ஐந்து மணியிலிருந்தே கூட்டம் கூடிவிடும். நம்மூர் சந்தைகளில் நடப்பது போன்று பேரம் பேசி குறைந்த விலைக்கு வாங்குவதை அங்குதான் முதன்முதலாகக் காண நேர்ந்தது. கால்நடைகளும், மனிதர்களும் நிரம்பிக் கிடக்கும் அந்தச் சதுக்கம், அடுத்த நாள் காலையே கார்களுக்கு மட்டுமானதாக மாறியிருக்கும். முந்தைய நாள் கால்நடைச் சந்தை நடந்த சுவடே தெரியாமல் மாற்றியிருப்பார்கள். அது எப்படி லூவன் நகராட்சிக்கு மட்டும் இது சாத்தியப்படுகிறது. மற்ற ஊர்களிலும் இதுதான் வழக்கமாக இருக்க வேண்டும். நான் சென்று பார்த்ததில்லை
  
சதுக்கத்தை சுற்றியுள்ள நெடிதுயர்ந்த மரங்கள், தெருக்கள், மாட்டர் டேய் பள்ளி, வீடுகள், நான் கணக்கு வைத்திருக்கும் கே.பி.சி வங்கி உட்பட இரண்டு வங்கிகளின் கிளை அலுவலகங்கள், சதுக்கத்திற்கு மறுபுறம் பிரம்மாண்டமாய் உயர்ந்து நிற்கும் புனித யாகோபு தேவாலயம் என என்ன இல்லை அங்கே? தேவாலயத்தை பலமுறை கைபேசியில் க்ளிக்கியிருக்கிறேன். எப்போதாவது ஆலய மணியடிப்பதையும் கேட்டிருக்கிறேன். ஆயினும் அங்கு வழிபாடுகள் நடக்கிறதா என்று தெரியவில்லை. தேவாலயத்தைக் கடந்து மறுபுறம் இருக்கும் ப்ரசல்சு ஸ்ட்ராட்டிற்குச் சென்றால், நேபாளிய இந்தியக் கடைகளைப் பார்க்கலாம். கொத்தமல்லியிலிருந்து, துவரம் பருப்பு  வரை அத்தனையும் அங்கு கிடைக்கும்.

மாட்டர் டேய் லூவன் நகரின் மிகவும் பிரபலமான பள்ளி . நிறுத்தத்திற்கு நேரெதிரே உயர்ந்து நின்றுகொண்டிருக்கும் பள்ளிக் கட்டிடத்தின் சுவரில் 1667 என்று பொறித்து வைக்கப்பட்டிருக்கும். நகருக்குள் இருக்கும் பல கட்டிடங்களில், வீட்டுச் சுவர்களில் அது கட்டப்பட்ட ஆண்டை எழுதியிருப்பார்கள். பார்ப்பதற்கு அந்த வருடத்தில் கட்டிய கட்டிடமாகவா இருக்கிறது? உள்ளே மட்டும் புதுப்பித்திருப்பார்களாக இருக்கும். இருந்தாலும், நம்ப முடியவில்லை. டீன்செபோர்ட் பகுதியில் உள்வட்ட சாலையை ஒட்டி உயர்ந்து நிற்கும் சிறைச்சாலையின் சுவர்கள் கூட இது போலவே இருக்கும். உள்ளே என்ன நடக்கிறதென்றே தெரியாது. உள்ளே இருப்பவர்களுக்கும் அப்படியே. பெல்கியத்தில் பள்ளிக்கூடங்கள் 8.30 மணிக்குத் தொடங்கிவிடும். சில பெற்றோர்கள் தாமதாக மழலைகளைக் கைப்பிடித்து இழுத்துக்கொண்டு ஓடிக்கொண்டிருப்பார்கள். அந்த மழலைகளைப் பார்ப்பதற்குப் பரிதாபமாக இருக்கும். என்னைப் போன்றே தியான நிலையிலேயே தம் பெற்றோர்களைப் பின்தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் அந்தப் பிஞ்சுகளை, அவர்கள் அறியாமலேயே இந்த இயந்திரத்தனத்துக்குள் சிக்க வைத்துவிடுகிறார்கள் பெற்றோர்கள். பாவம். ஒவ்வொரு மனிதனுக்கும் இரண்டரை, மூன்று வயது வரை தான் இயந்திரத்தனம் இல்லாத வாழ்க்கை கிடைக்கிறதோ? அப்போது நடந்தது எது நினைவில் இருக்கிறது? 

சற்று முன்னதாவே நிறுத்தத்திற்கு வந்துவிடும் நாட்களில் சுற்றி இருப்பவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் என்னுடைய பொழுதுபோக்கு. எத்தனை வகையான மனிதர்கள் இங்கே. ஒவ்வொருவரைப் பார்க்கும்போதும் ஒரு வார்த்தை மனதில் தோன்றும். அது அவர்களின் செய்கைகளாலா, உருவ அமைப்பினாலா, உடல்மொழியாலா என்னவென்று எனக்குத் தெரியாது, ஆனால் தோன்றும். அது என்ன வகையான மன வரைபடம் என்று எனக்கு இன்றளவும் விளங்கியதில்லை. நான் பார்க்கும் எல்லோருக்கும் இன்னொருவர் இருக்கிறார். எல்லாவற்றிற்கும் இன்னொன்று இருக்கிறது. சிலவற்றிற்கு இன்னொருவர் இருக்கிறார். சிலருக்கு இன்னொன்று இருக்கிறது. இவற்றையெல்லாம் ஆராய்ச்சி செய்ய எனக்குத் தோன்றியதில்லை; விருப்பமும் இல்லை. இருந்துவிட்டுப் போகட்டும். யாருக்கு என்ன ஆகிவிடப் போகிறது.   

காதில் ஹெட்போனை மாட்டிக்கொண்டு, லெதர் ஜாக்கட்டைப் போட்டுக்கொண்டு, முதுகில் பையைத் தூக்கிக்கொண்டு நிற்கிறானே அந்த ஆப்பிரிக்க ஐரோப்பியன், அவனைப் பார்த்தால் எனக்கு மனதில் தோன்றும் முதல் வார்த்தை - 'தறுதலை'. நான் ஏற்கனவே சொன்னது போல் இது எதனால் என்று எனக்குத் தெரியாது. அவனுடைய காற்சட்டையைப் பாருங்கள். இடுப்புப் பகுதியில் பொருந்தியிருக்க வேண்டிய அது, நழுவிக் கீழிறங்கி, புட்டத்திற்குப் பாதியில் வந்து நின்று, இன்னும் இரண்டே நொடிகளில் விழுந்துவிடுவது போல் இருக்கும். அவனைப் பார்க்கும்போதெல்லாம், எனக்கு உள்ளூர பயம் வந்து, என் கை என்னை அறியாமலேயே என்னுடைய காற்சட்டையை தூக்கிவிட்டுக் கொள்ளும். இவன் அநேகமாக இந்தப் பேருந்தில் கடைசி நிறுத்தம் வரை செல்பவனாக இருக்கக்கூடும். ஒருநாளும் எனக்கு முந்தைய நிறுத்தங்களில் இறங்கியதில்லை என்பதால் கூறுகிறேன்.
   
நிறுத்தத்தில் வழக்கமாக நான் பார்க்கும் இளம் பெண் ஒருத்தி இருக்கிறாள். வெள்ளைக்காரிதான். ஆனால், நிச்சயமாக அவள் இந்த ஊர்க்காரியாகத் தெரியவில்லை. ஃபிளம்மியப் பெண்கள் அழகுதான். ஆனால், இவ்வளவு அழகு இல்லை. மேலும் இவள் பார்ப்பதற்கு வெளியூரிலிருந்து வந்து இங்கு படிப்பவளைப் போல் தெரிகிறது. லூவன் மாணவர்களின் நகரமாயிற்றே. அதிலும் வெளியூர்க்காரர்களை எளிதில் கண்டுபிடித்துவிடலாம். ஆனால் ஒன்று, இந்த ஊரின் மிக அழகிய பெண்களைப்  பட்டியலிட்டால், இவள் நிச்சயம் முதல் நான்கு இடத்தில் இருப்பாள். அது என்ன நான்கு? மற்ற மூன்று பேரை பார்த்திருக்கிறாயா என்று வரிந்துகட்டிக்கொண்டு சண்டைக்கு வந்துவிடவேண்டாம். ஊருக்கு நான்கு பேர் இப்படி இருந்தால் நன்றாக இருக்கும் என்கிற ஆசைதான். அவளைப் பார்த்தால் ஒரு வார்த்தை இல்லை, சாரு நிவேதிதாவின் ஒரு புத்தகத் தலைப்பே தோன்றும் - 'ஊரின் மிக அழகான பெண்!'

இவள் அன்றாடம் எங்கு செல்கிறாள், என்ன படிக்கிறாள் என்று எனக்கு எதுவும் தெரியாது. சில நாட்கள் கேஸ்தௌஸ்பெர்க் மருத்துவமனை நிறுத்தத்தில் இறங்கிச் செல்வதைப் பார்த்திருக்கிறேன். பெரும்பாலும் யார் யார் எங்கு இறங்குகிறார்கள் என்பதையெல்லாம் நான் பார்த்தது கிடையாது. பேருந்தில் ஏறியவுடன் ஓடிச்சென்று இடத்தை பிடிப்பதில் குறியாக இருப்பேன். கிராய்னெம் வரை செல்ல வேண்டுமே. லூவனில் முக்கால்வாசிப்  பேருந்துகள் முக்கால்வாசி நேரம் காலியாகத் தான் ஓடிக்கொண்டிருக்கும். காலைவேளைகளைத் தவிர. மாலை நேரங்களில்  சில சமயம் எனக்காக மட்டுமே ஓடியிருக்கிறது இந்த 317 பென்சு பேருந்து. ஒரு மகாராஜாவைப் போன்று என்னை உணரும் தருணங்கள் அவை. பேருந்திலும், இரயிலிலும் பயணிக்கும் போது என் எண்ண ஓட்டமும் அதிவேகமாக இருக்கும். மனம் எங்கெங்கோ பயணிக்கும். பயணங்களில் போது மட்டும் எனக்குத் தோன்றுவதை எல்லாம் நான் சொல்லச் சொல்ல எழுதுவதற்கு எனக்கு ஒரு அமேனுயென்சிஸ் கிடைத்தால், நான் ஒரு பெரிய எழுத்தாளராகி விடுவேன். வீட்டிலோ, அலுவலகத்திலோ, பூங்காவிலோ வெறுமனே அமர்ந்துகொண்டிருக்கும் போது எழும் சிந்தனைகளைவிட, பயணங்களின் போது ஏன் இத்தனை எண்ணங்கள் ஒன்றடுத்தொன்றாய் விழுந்துகொண்டே இருக்கிறது. சில சமயங்களில் கோர்வையாகவும் இருக்கிறது. பல கேள்விகளுக்கு விடை கிடைக்கிறது. பல குழப்பங்களுக்குத் தீர்வு கிடைக்கிறது. இதற்கு ஏதேனும் உளவியல், அறிவியல் காரணங்கள் இருக்கிறதா, இல்லை இதெல்லாம் வெறும் பிரமையா என்று எனக்குத் தெரியவில்லை.
      
அதை விடுங்கள். அதோ, இப்போது நிறுத்தத்தின் கண்ணாடிக் கூண்டுக்குள் அமர்ந்துகொண்டு இந்தக் குளிரிலும் ஏதோ புத்தகம் படித்துக்கொண்டிருக்கும் அந்த அறிவுஜீவிக் கிழவியைப் பற்றி மட்டும் என்னிடம் எதுவும் கேட்கவேண்டாம். எனக்குப் பெருங்கோபம் வந்துவிடும். அவள் கிழவியா என்று தெரியாது. ஆனால் பார்ப்பதற்கு அப்படித்தான் தோன்றுகிறது; அப்படித்தான் இருக்கிறாள். என்னுடைய அலுவலகத்தில்தான் வேலை செய்கிறாள்.  தினமும் ஒரே நிறுத்தத்தில் ஏறி, ஒரே நிறுத்தத்தில் இறங்கி அலுவலகத்திற்குச் செல்கிறோம். ஒருமுறை தெரியாமல் பேருந்தில் தூங்கியிருக்கிறேன். என்னை எழுப்பாமல் கூட இறங்கி விட்டாள். பார்ப்பதற்குக் கிட்டத்தட்ட ஜெர்மானிய அதிபர் ஏஞ்சலா மெர்கெல் போலவே இருப்பாள். ஒரு அதிசயம் பாருங்கள். அவளை ஒருநாளும் என் அலுவலகத்தில் நான் சந்தித்ததே இல்லை. மாலையில் சீக்கிரமே கிளம்பிப் போய்விடுவாள் போலிருக்கிறது. இருப்பினும் தற்செயலாகக்கூடச் சந்திக்க நேர்ந்ததில்லை. இவளைப் பார்க்கும்போதெல்லாம் எனக்குத் தோன்றுவது - 'திமிர் பிடித்த' ஏஞ்சலா மெர்கெல். இந்தத் 'திமிர் பிடித்த' என்கிற அடைமொழி நிச்சயம் மெர்கெலுக்கு ஆனதல்ல. இந்தப் பேரிளம் பெண்ணிற்கானது.

தாடி வைத்துக் கொண்டு, குளிர்காலம் மட்டுமல்லாமல் எல்லா நேரமும் குல்லா அணிந்த அந்த மனிதனுக்கு அப்படியே ஓஷோ ரஜனீஷின் சிறு வயது முகம். அவனுக்கு நான் வைத்திருக்கும் பெயர் 'ஓஷோ'வேதான். பேருந்தில் ஏறியவுடன் கடைசி இருக்கையில் சென்றமர்ந்து சாய்ந்து தூங்கி விடுவான். அவனால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. அவனால் மட்டுமல்ல, இங்கிருக்கும் பெரும்பாலானவர்களால் யாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை; பலனும் இல்லை. அது பரவாயில்லை. தொல்லைக் கொடுத்துக்கொண்டே இருப்பதைவிட, அமைதியாக இருந்துவிடுவது நல்லதுதானே. அவனுக்கு நான் ஒரு பெயர் வைத்திருப்பது போல, எனக்கு ஒரு பெயர் வைக்க அவனுக்கு தோன்றியிருக்க வாய்ப்பேயில்லை. எனக்கான அவன் மன வரைபடம் என்ற ஒன்று இருக்கவும் சாத்தியமில்லை. தெரியாமல் கூட அவன் என் பக்கம் திரும்பியது இல்லை. அவன் மட்டுமல்ல, யாருமே என் பக்கம் திரும்பிப் பார்த்ததாக நான் கவனித்ததில்லை.
    
இன்னொரு பெண் இருக்கிறாளே, அவள் பெண்தானா? மீசை இல்லாத, பெண்ணைப் போன்ற அழகிய முகம் கொண்ட ஒரு ஆண் என்று வேண்டுமானால் கூறலாம். ஆஜானுபாகுவான தோற்றம். எவ்வளவு உயரம்! என்னவோ தெரியவில்லை இவள் மீது எனக்கு ஒரு இனப் புரியாத பரிவு. இதுபோன்று இங்கு பல பெண்களைப் பார்த்திருக்கிறேன். அவள் கைபேசியில் பேசி ஓரிரு தடவை கேட்டிருக்கிறேன். நமீதா சரளமாக டச்சு மொழியில் பேசுவது போன்று இருக்கும். அவளது காலணியைப் பாருங்கள். அது காலணியா அல்லது கார் டயரா? சில நாட்களில் நான் பேருந்துக்குள் காலடி எடுத்து வைக்கும் போது, குதிரைக் குளம்பொலி சத்தம் கேட்டுத் திரும்பிப் பார்த்தால், இந்தப் பெண் வேகமாக ஓடிவந்துக் கொண்டிருப்பாள். மூச்சிரைக்க ஓடிவரும் அவளுக்காகவே பேருந்தை பலதடவை நிறுத்தியிருக்கிறேன். நேர விஷயத்தில் இவள் நிச்சயம் நம்மூர் ரகம். இவளைப் பார்த்தால் தோன்றும் வார்த்தை - 'அரேபியக் குதிரை'. 

இவள் வழக்கமாக டெர்வூரனில் இறங்கிவிடுவாள். சில சமயங்களில் ஓரிரு இந்தியர்களும் அங்கு நின்று கொண்டிருப்பார்கள். இந்த ஊர் மனிதர்கள் பார்க்கவே மாட்டார்கள் என்றால், நம் ஆட்கள் பார்த்துவிட்ட பிறகும் பார்க்காதது போலிருக்க என்னென்னவோ சாகசங்களை எல்லாம் செய்வார்கள். நான் என்ன இவர்களிடம் கடனா கேட்டுவிடப் போகிறேன்  

இரண்டு குழந்தைகளைக் கூட்டிக்கொண்டு ஒரு இசுலாமியப் பெண்மணி வருவாள். ஒன்று கைக்குழந்தை. இன்னொரு குழந்தைக்கு ஒரு ஐந்து வயது இருக்கலாம். ஆனால் பேருந்தில் ஏறிய ஆறேழு நிமிடங்களில் இறங்கிவிடுவாள். அதற்குள் அவள் அந்தக் குழந்தைகளை வைத்துக்கொண்டு படும் பாட்டை பார்ப்பதற்குப் பரிதாபகரமாக இருக்கும். இரண்டு குழந்தைகளும் ஒன்றடுத்தாக ஒன்றாக அழுதுக்கொண்டே இருக்கும். சில சமயம் இரண்டு குழந்தைகளும் கதறும். ஆனால் அந்தக் குழந்தைகளை விடவும், ஓரிடத்தில் தங்காது ஓடிக்கொண்டிருக்கும் கைக்குழந்தையின் தள்ளுவண்டியோடுதான் அந்தப் பெண்மணி அதிகம் போராட வேண்டி இருக்கும். 

ஒருமுறை அந்தக் குட்டிப்பெண் அழகாக மழலைப்பாடல் ஒன்றைப் பாடிக்கொண்டிருந்தாள். எனக்கு டச்சு மொழி சிறிதளவே தெரியுமென்றாலும், 'ரோட், ஹேல் என் ஸ்வார்ட் பெல்கிஸ்ஸ க்லூரன்' என்று பெல்கிய நாட்டின் கொடியின் நிறங்களைப் பற்றிய பாடலை அவள் உரக்கப் பாடிய விதத்தையும், அழகிய முகபாவங்களையும் பார்த்து ரசித்துக்கொண்டிருந்தேன்

திடீரெனெ ஏதோ தோன்றி, தலையைச் சற்று உயர்த்தி சுற்றி இருந்தவர்களை நோட்டம் விட்டேன். ஒரே ஒரு மனிதர் மட்டும் என்னைப் போலவே புன்னகைத்துக்கொண்டு இருந்தார். பெரும்பாலானோர் ஏதோ அவர்களுடைய உணவை வேறு யாரோ தெரியாத நபர் பிடுங்கித் தின்றுவிட்டதைப் போன்று அந்தக் குழந்தையை முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். வெறுப்பை  உமிழ்ந்துகொண்டும், அருவருப்பு உணர்வுகளை ஏந்திக்கொண்டும் இருந்த அவர்களின் பார்வை, அந்தப் பிரயாணமே ஒரு மழலை உரக்கப் பாடியதால் வீணடிக்கப்பட்டுவிட்டது போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்தியது. இன்னபிறர் ஐபாடில் பாட்டு கேட்டுக்கொண்டு கண்களை மூடிக்கொண்டிருந்தார்கள்.

நிறுத்தத்தை ஒட்டி 'தி பிரிட்டோரிஸ்ட்' பிரெஞ்சு பிரைஸ் கடை இருக்கிறது. மிகவும் பிரபலமான கடை. பெரும்பாலும் மாலை நேரங்களில்தான்  திறப்பார்கள். சில சமயங்களில் காலை வேளைகளிலும் திறப்பார்கள். குறிப்பாக குளிர்காலங்களில். டிசம்பர் மாத மாலைகளில் இங்கு கூட்டம் நிரம்பி வழியும். நம்மூர் வடை, பஜ்ஜி, போண்டாக் கடைகளைப் போன்று பிரசித்தமானவை இவை. ஆனால் இந்த அமெரிக்கர்கள் ஏன் இதற்கு பிரெஞ்சு பிரைஸ் என்று பெயர் வைத்தார்கள் என்று தெரியவில்லை. இது பெல்கியர்களின் கண்டுபிடிப்பு. அவர்கள் 'ப்ரீட்யெஸ்' என்றுதான் அழைக்கிறார்கள். அதனால்தான் ப்லோரிஸ்ட் என்பது போன்று பிரிட்டோரிஸ்ட் என்று இந்தக் கடைக்கு பெயர் வைத்திருக்கிறார் உரிமையாளர்

'ப்ரீட்யெஸ்' பெல்கிய நாட்டவர்களின் பெருமிதமும்கூட. இங்கு வந்த ஆரம்ப நாட்களில் ஒருமுறை புரூகு நகரத்தில் ஒரு ப்ரீட் கடையில், 'பிரெஞ்சு பிரைஸ் கொடுங்கள்' என்று  கேட்கப் போய், "உனக்குத் தரமாட்டேன்" என்று கூறிவிட்டார் கடையை நடத்திய பெண்மணி. என்ன ஒரு அகங்காரம் என்று நினைத்துக்கொண்டே  திரும்பிய என்னிடம், "இனிமேல் பெல்ஜியம் பிரைஸ்" என்றுதான் கூற வேண்டும் என்று சத்தியம் வாங்கிக்கொண்டுதான் தந்தார். நம் 'ஊரின் மிக அழகிய பெண்' இருக்கிறாளே, அவள் பிரிட்டோரிஸ்ட் காலைவேளையில் திறந்திருக்கும் நாட்களிலெல்லாம் மறக்காமல் தை வாங்கிச் சாப்பிட்டுக்கொண்டு இருப்பாள். ப்ரீட்யெஸ் என்றால் அவளுக்கு அத்தனை விருப்பம் போலும் - என்னைப்போலவே
     
காலங்கள் மாற மாற மனிதர்களின் உடை, நடை என அனைத்தும் மாறுவதைப் பார்ப்பதற்கு, இங்கு வந்த புதிதில் எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது. பருவ மாற்றங்களை நம்மூரில் எங்கே காணமுடிகிறது - மழை, வெயில் என்கிற இரண்டைத் தவிர. ஊரின் மிக அழகி பெண்ணையே எடுத்துக்கொள்ளுங்களேன். கடுங்குளிர் காலத்தில் அந்த அழகிய வெள்ளை முகமும், தொப்பிக்குள் இருந்து தப்பி வெளியே வந்து தொங்கும் சுருண்ட முடியைத் தவிர வேறெதுவும் தெரியாவண்ணம் உடைக்குள் புதைந்து போயிருப்பாள். இளவேனில் பிறந்த வாரத்தில் மேலுடை களைய ஆரம்பித்தவள், வசந்தம் கடந்து, கோடை பிறக்க, சூரியன் எரிக்க, நாட்பட நாட்பட, சிறிது சிறிதாக உடைகளைக் களைந்து,  ஜூலை மாதத்தில், உச்சக் கோடையில் ஒரு குட்டைப் பாவாடையோடு நின்றுகொண்டு, கண்களில் சன்கிளாஸ் அணிந்துகொண்டு, பாட்டு கேட்டுக் கொண்டிருப்பாள்.

இயற்கை இதற்கு நேர்மாறாக நடந்துகொள்ளும். இடத்தின் நிறத்தையும் மாற்றிக்கொண்டே இருக்கும். இந்தப் பெண்கள் மேலாடையைத் தூக்கி எறியும் மாதம், இலைகள் துளிர்க்க ஆரம்பிக்கும். மலர்கள் மலர ஆரம்பிக்கும். இவர்களின் ஆடை குறைவாக இருக்கும் அதே காலத்தில் கிளைகளை மறைத்துப் போர்த்திக் கொண்டிருக்கும் மரங்கள். எனக்கு மிகவும் பிடித்த காலம் கோடைதான். பச்சை இலைகள் பழுப்பாய் மாறி, மிச்சம் இன்றி முழுதும் விழுந்து, மொட்டை கிளைகளை மட்டும் காட்டும் குளிர்காலம் எவனுக்குப் பிடிக்கும். இரவு நேர பனிப்பொழிவுக்குப் பிறகு அங்கு பனிப்போர்வைக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் கார்களைப் பார்ப்பதற்கு மட்டும் அழகாக இருக்கும். மற்றபடி கோடை எப்போது வருமோ என்று இருக்கிறது. 

கோடையின் அழகே தனிதான். அதிலும் ஒரு மெல்லிய காற்று வீசினால் கூடும் அழகு இருக்கிறதே! அதோ அங்கிருக்கும் அந்த ஆப்பிரிக்க ஐரோப்பியனும், இன்னும் சிலபேரும் கூட கோடை உடை அணிந்திருக்கலாம். அவர்களைப் பற்றி எனக்கென்ன கவலை? எனக்கு இயற்கைதான் முக்கியம். உண்மையில் கோடையில் நான் இயற்கையை மட்டுமே ரசிக்கும் குறுகிய மனம் படைத்தவனாக ஆகிவிடுகிறேன். 

அது ஒரு குளிர்காலம். பிப்ரவரி மாதக் கடுங்குளிர் வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. அதற்கு முந்தைய ஞாயிறன்றுதான் இந்தியாவிலிருந்து வந்தேன். குளிரிலிருந்து தப்பிப்பதற்காகவே ஜனவரியில் அங்கு வந்துவிடுகிறேன். ஒவ்வொரு வெள்ளிக்கிழமைக் காலையும் அந்த நேரத்திற்கு குப்பை மூட்டைகளைச் சேகரித்துக்கொண்டு, மெதுவாகப் போகும் வண்டியின் பின்னால் பொறுமையாக நின்று கொண்டிருந்தது பேருந்து 317. அது நிறுத்தத்தை எப்போது வந்தடையுமோ என்று பார்த்துக்கொண்டே நின்று கொண்டிருந்தபோது, "எப்போ வந்தீங்க இந்தியாவிலிருந்து, பாஸ்கர்?" என்று ஒரு தமிழ்க் குரல். பின்னால் திரும்பிப் பார்த்தால் என் நண்பர் முனீர். கேஸ்தௌஸ்பெர்க் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றுகிறார். அவருடைய மகள்கூட இந்த மாட்டர் டேய் பள்ளியில்தான் படிக்கிறாள். இவரைப் பார்க்கும் போதெல்லாம் அசோகமித்திரனின் ஒரு சிறுகதைத் தலைப்பு நினைவுக்கு வரும் - 'முனீரின் ஸ்பானர்கள்'.

முனீரும் நானும் பேருந்தில் ஏறுகையில், ஆம்னிபாஸை தேடுவது போல் பாசாங்கு செய்து அரேபியக் குதிரைக்காக மூன்று நொடிகள் பேருந்தை நிறுத்தினேன். முனீருக்கு அதெல்லாம் தெரிந்திருக்கவோ, புரிந்திருக்கவோ வாய்ப்பில்லை. அவர் அங்கிருந்து மூன்றாவது திருத்தத்தில் இறங்கிவிடுவார். வழக்கமாக பேருந்தில் போகும் போது, அவர் நடந்து செல்வதைப் பார்த்திருக்கிறேன். அன்றைக்கு என்னவோ பேருந்தில் வந்தார். இந்தியப் பயணத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்த போது, "லூவன் விஷயம் தெரியுமா?" என்று இடைமறித்தார். 

"என்ன விஷயம்?" என்று கேட்டேன். 

"ஒரு ட்ராஜெடி. பையர் ஆக்சிடெண்ட். நீங்க பஸ் ஸ்டாப்புக்கு வரும்போது நோட்டிஸ் பண்ணல? மிஸ் பண்ணமுடியாதே." என்று கேட்டார்.

"சாரி, பாக்கல. எந்த எடத்துல, முனீர்" என்றேன். 

"உங்க வீட்டுக்கு ரொம்ப பக்கத்துலைங்க. கபுசேனபூர் ரோட்லதான், பாங்க்ஸ்ட்ராட் (வங்கி வீதி) கார்னர்ல." என்றார். 

"இல்ல முனீர். நான் ஹெய்லிகெ கேஸ்ட் (பரிசுத்த ஆவி) ஸ்ட்ராட் வழியாதான் இங்க வந்துட்டிருக்கேன். ஈவினிங் பாக்கறேன்." என்று கூறினேன்.

அதற்குள் கேஸ்தௌஸ்பெர்க் வந்துவிட்டது. முனீர் இறங்கிச் சென்று விட்டார். பேச்சுத்துணைக்கு இதுபோன்று கிராய்னெம் வரை யாராவது வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டேன். இதற்கு மேல் என் அருகே அமர்ந்துகொண்டிருக்கும் இந்த ஓஷோ தூங்குவதைத் தான் பார்க்கவேண்டும். இல்லையேல் நானும் தூங்கிவிட வேண்டும்
         
அன்று மாலை நிறுத்தத்தில் இறங்கியவுடன் முனீர் சொன்னது நினைவுக்கு வர, கபுசேனபூர் சாலை வழியாக வீட்டுக்குச் சென்றேன். தொலைவில் பாங்க்ஸ்ட்ராட்டின் முனையில் இருந்த வீடு கருகிய நிலையில் தெரிந்தது. வீட்டை நெருங்கினேன். அந்த வீட்டைச் சுற்றிலும் தடுப்பு வேலி அமைத்திருந்தார்கள். தடுப்புக்கு உட்புறமும், வெளிப்புறமும் எண்ணற்ற மலர்ச்செண்டுகள், மலர்வளையங்களை வைத்து அஞ்சலி செலுத்தியிருந்தார்கள் லூவன் நகரத்தினர். தடுப்புக்கு உட்புறமாக இருந்த மலர்ச்செண்டுகளுக்கு இடையே இரண்டு பெண்களின் புகைப்படங்கள் தெரிந்தது. குனிந்து பார்த்தேன். அந்த இரண்டு இளம் பெண்களில் ஒருத்தி - 
'ஊரின் மிக அழகிய பெண்'. 

அப்படியே எழுந்து, அந்த இடத்தில் நிற்கப் பிடிக்காமல் வீட்டிற்கு வேகமாகச் சென்றேன். என் ஒவ்வொரு அடிக்கும் இதயம் நான்கு முறை துடித்தது. வீட்டுக்குச் சென்றால் மின்தூக்கி வேலை செய்யவில்லை. படிக்கட்டு வழியாக ஏறிச் சென்று கதவைத் திறந்து, கணிப்பொறிக்குள் புகுந்து, 'லூவன் பையர் ஆக்சிடன்ட்' என்று கூகிளில் தேடினேன். பாங்க்ஸ்ட்ராட் முனையிலுள்ள அந்த வீட்டில், முந்தைய வாரம் அதிகாலையில் பிடித்த தீயிலிருந்து காத்துக்கொள்ள அலமாரிக்குள் சென்று ஒளிந்துகொண்ட அந்த இரு பெண்களையும் கருகிய நிலையில் கண்டெடுத்துள்ளார்கள். அவள் பெயர் சோபியா என்பதையும், லாட்விய தேசத்தைச் சேர்ந்தவள் என்பதையும் இப்படித்தான் தெரிந்து கொள்வேன் என்று கனவிலும் நினைத்ததில்லை. எத்தனையோ தருணங்கள் பேருந்திலோ, நிறுத்தத்திலோ அல்லது அவள் ப்ரீட்யெஸ் சாப்பிடும்போதோ கேட்டுத் தெரிந்துகொண்டிருந்திருக்கலாம் என்று மனம் அடித்துக்கொண்டது. அந்த சம்பவத்தை தினந்தோறும் நாளிதழ்களில் நான் காணும் விபத்துச் செய்திகளில் ஒன்றாக என்னால் சேர்க்க முடியவில்லை. அப்போதே வெளியே சென்று மலர்ச்செண்டிற்குப் பதிலாக, பிரிட்டோரிஸ்ட் கடையில் ப்ரீட்யெஸ் வாங்கிக்கொண்டு போய், அங்குக் குவிந்து கிடந்த மலர்ச்செண்டுகளுக்கிடையே அதை வைத்தேன். இதை யாரேனும் பார்த்திருந்தால் என்னைப் பைத்தியக்காரன் என்று நினைத்திருப்பார்கள். மறுநாள் வந்து பார்க்கப் போகிறவர்களுக்கும் அது ஏன் என்று புரியப்போவதில்லை.  

அடுத்தநாள் சனிக்கிழமை. அமைதியற்ற மனதோடு தனியாக வீட்டிலிருக்கப் பிடிக்கவில்லை; நல்லதும் இல்லை. டெர்வூரனில் இருக்கும் நண்பன் ஷாகுல் வீட்டுக்குக் கிளம்பினேன். அந்த வீட்டைக் கடந்து நிறுத்தத்திற்குச் செல்லும்போது நடுக்கமாக இருந்தது. திரும்பிக்கூட பார்க்கவில்லை. இனிமேல் இந்த வழியாக வரவே கூடாது என்று நினைத்துக்கொண்டேன். காலை 8.45 மணி. அதே புனித யாகோபு சதுக்கம். அதே 317 எண் பேருந்துக்காக நான் மட்டும் தனியாக அங்கு காத்துக்கொண்டிருந்தேன். இன்னும் வந்து சேரவில்லை. பிரிட்டோரிஸ்ட் கடை மூடியிருந்தது. ஆனால் என்னருகே யாரோ நின்றுகொண்டு ப்ரீட்யெஸ்  சாப்பிட்டுக்கொண்டிருப்பதை என்னால் உணர முடிந்தது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..