கொஞ்சம் சினிமா.. கொஞ்சம் அரசியல்..

குழந்தைகளுடன் அமர்ந்து பார்க்க ஏதுவான படங்களைப் பரிந்துரைக்கச் சொன்னான் நண்பன். நான் கொடுத்த பட்டியலில் தமிழ் படங்கள் இல்லாதது கண்டு அதைப் பற்றி கேட்டான். பொதுவாகவே தமிழ் படங்களில் பெரியவர்களுக்கே நல்ல படங்கள் கிடைப்பது கடினம். தமிழில் சமீபத்தில் வெளியான சிறந்த படங்களைப் பட்டியலிட்டால் நான்கைந்து தேறும். அவ்வளவே. சமீபத்திய இயக்குநர்கள் சிலர் நம்பிக்கையளிக்கிறார்கள். அவர்களை வணிக தமிழ் சினிமா உலகம் விழுங்காதிருக்கவேண்டும். பெரும்பான்மையாக தமிழ் சினிமா காதலை விட்டு இன்னும் வெளியே வரவேயில்லை. விதம் விதமாக காதலைப் படம்பிடிக்கிறார்கள். இல்லையென்றால் நாயகன் நரம்பு புடைக்க வெறித்தனத்துடன் பத்துப் பேரைப் பந்தாடும் ரகம். மறைந்த இயக்குநர் மகேந்திரன் ஒரு நேர்காணலில் இதையே வருந்திச் சொல்லியிருந்தார்.

நான் வணிக திரைப்படங்களுக்கு எதிரியல்ல. அவற்றையும் ரசிக்கிறேன். ஆனால், பத்து வணிக திரைப்படங்கள் வருகிறதென்றால், அதில் குறைந்தபட்சம் இரண்டாவது நல்ல திரைப்படங்களாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறேன். மலையாளத்தில் அதுதானே நடக்கிறது. ஒரு நல்ல திரைப்படம் வாழ்க்கையைக் காண்பிக்கவேண்டும் என்பது என் எண்ணம். நாளைக்கே மனித இனம் அழிந்துவிடுகிறது என்று வைத்துக்கொள்வோம். பல மில்லியன் ஆண்டுகளுக்குப் பிறகு பூமிக்கு வரும் வேற்று கிரகவாசிகளுக்கு நம்முடைய திரைப்படங்கள் எல்லாம் கிடைக்கிறது என்று வைத்துக்கொள்வோம். "ஓ.. இது போன்று ஐம்பது பேரை அடிக்கும் ஆட்களெல்லாம் பூமியில் இருந்திருக்கிறார்களா.." என்று நினைக்கமாட்டார்களா? அவர்களே "கப்பி" (Guppy) படத்தை பார்த்தார்களேயானால் அந்தச் சிறுவனின் மீது எவ்வளவு மரியாதை வரும். கப்பி மீன் பற்றி, அந்தச் சிறுவனைப் பற்றி, தாய் மீதான அவனுடைய அன்பு பற்றி, அவளுக்கான அவன் கனவு பற்றி, அவனுடைய பதின்ம வயது நண்பர்களின் குறும்புகள் பற்றி, அந்த கடலோர கிராமத்து மக்களின் வாழ்க்கைமுறையைப் பற்றி தெரிந்துகொள்ள எவ்வளவு இருக்கும்? இதுபோன்ற மக்களும் தமிழகத்திலும் இருக்கத்தானே செய்கிறார்கள். ஆனால் அவர்களுடைய வாழ்க்கையைப் பதிவு செய்ய படைப்பாளிகளுக்கு அக்கறை இருப்பதாகத் தெரியவில்லை. அப்படியே அவர்கள் எடுத்தாலும் அதைப் பார்ப்பதற்கு மக்களுக்கு ரசனையும் இல்லை.

கடந்த வருடம் கமல்ஹாசனின் நேர்காணல் ஒன்றை யூட்யூபில் பார்த்துக்கொண்டிருந்தேன். "உங்களுக்கு யாரவது blank cheque கொடுத்தால் என்ன படம் எடுப்பீர்கள்?" என்ற கேள்விக்கு, "மருதநாயகம்" என்று பதில் சொல்வார் என எல்லோரைப் போலவே நானும் எதிர்பார்த்தேன். மாறாக கமல் தெளிவுடன், "With that money, I will prepare the audience to watch good movies" என்றார். முற்றிலும் உண்மை. பார்வையாளர்களை நல்ல படங்களைப் பார்க்கத் தயார்படுத்தவேண்டும். அவ்வாறு அவர்கள் பார்த்து ரசிக்க ஆரம்பித்தால், படைப்பாளிகள் நிறைய நல்ல படங்கள் எடுப்பார்கள். அதன் பாதிப்பு சமூகத்திலும் பிரதிபலிக்கும். ஆனால், அது பேராசை என்பதை நன்கு அறிவேன்.

தமிழ் மட்டுமல்லாமல் மலையாளம், வங்கம், மராட்டி, ஹிந்தி, அரபு, பிரெஞ்சு, ஆங்கிலம் என்று பிறமொழித் திரைப்படங்களைத் தொடர்ந்து பார்க்கும் போது, பல மொழிகளைக் கற்றுக்கொள்ள ஆர்வம் பிறக்கும். அவர்களின் பண்பாட்டையும், வாழ்க்கைமுறையையையும் தெரிந்துகொள்ள உதவும். அதனால் பரந்த மனப்பான்மை வரும். சக மனிதனை நம் மொழி, நம் இனம், நம் மதம், நம் தேசம் என்கிற குறுகிய வட்டத்தைத் தாண்டி நேசிக்கத் தோன்றும். ஒரு சில குறிப்பிட்ட பண்பாட்டுக் கூறுகளை விலக்கிவிட்டுப் பார்த்தால், "அவனும் நம்மில் ஒருவனே" என்கிற புரிதல் ஏற்படும். "திதி" என்கிற கன்னடப் படம் பார்த்தேன். Wow! இதுபோன்ற மனிதர்களை ஏலகிரிக்கு அருகிலுள்ள என் தாத்தாவின் கிராமமான பொன்னேரியிலேயே பார்த்திருக்கிறேன். அந்த கிராமத்தில் ஒரு மின்சார கம்பத்தின் மீது ஒரு காமெராவை யாருக்கும் தெரியாமல் வைத்துவிட்டுப் படம் எடுத்தது போலிருந்தது. மொழி மட்டுமே வேறு. ஆனால் அவர்கள் நம்மைப் போன்றவர்களே என்று தோன்றியது. அதுவே பெரிய வெற்றி. அன்றோ?

தமிழக இஸ்லாமிய சமூகத்தை எடுத்துக்கொள்ளுங்கள். அவர்களுடைய வாழ்வியலைப் பற்றி நமக்கு என்ன தெரியும்? பிரியாணியைத் தவிர! எத்தனைப் படங்கள் அவர்களின் வாழ்க்கையை நேர்மையாக படம்பிடித்துக் காட்டியிருக்கிறது. அப்படியே ஒன்றிரண்டு படங்கள் வந்திருந்தால் அவற்றிலும் மிகையாக "அல்லா-அருணாசலா" போன்ற செயற்கைக் காட்சியமைப்புகள். சமீபத்தில் நடந்த ஒரு போராட்டத்தின் போது அதில் பங்குபெற்றவர்களுக்கு ஒரு முஸ்லீம் பெரியவர் குடிதண்ணீர் வழங்குகிறார். அந்தப் புகைப்படத்தை புளகாங்கிதத்துடன், "முஸ்லீம் பெரியவரே தண்ணீர் கொடுக்கிறார்" என்று ஒருவர் பகிர்ந்திருந்தார். அந்த "ரே"-வில் ஒளிந்திருக்கிறது சமூகத்தின் குரூரம். இதில் என்ன விந்தை இருக்கிறது. அவரும் நம்மில் ஒருவர்தானே என்கிற கேள்விதான் எனக்குள் எழுந்தது. ஆனால் அவரை அவ்வாறு பார்க்க ஆரம்பிக்கவில்லை இந்தச் சமூகம். அதற்குப் படைப்பாளிகளின் பங்கு என்ன? மலையாளத்தில் வெளிவந்த "ஆதாமிண்டே மகன் அபு" படத்தைப் போன்று ஒன்று வந்திருக்கிறதா தமிழில்?  அது சரி. மற்றவர்களைப் பற்றித்தான் எத்தனைப் படங்களில் நேர்மையாகப் பதிவு செய்திருக்கிறோம். அதிசயத்திலும் அதிசயமாக அந்த விஞ்ச் ஆபரேட்டர் காளியைப் போன்றவர்களைக் காணமுடிந்தது. இந்த விஷயத்தில் இலக்கியவாதிகள் சிறப்பாக பங்காற்றியிருக்கிறார்கள். என் ஆதர்ச எழுத்தாளரான திலீப்குமார் எழுதிய "ஒரு குமாஸ்தாவின் கதை" சிறுகதையை வாசித்துப் பாருங்கள். "உங்கள் பெயர் மெஹபூப் கான்" என்று துவங்கும் அந்தச் சிறுகதையை வாசிக்கையில், நீங்கள் மெஹபூப் கானாகவே வாழ்ந்து, கதையின் இறுதியில் மெஹபூப் கானாகவே சாவீர்கள். தேசிய கீதத்தால் செய்ய இயலாத வேலையை திலீப்குமாரின் ஒரு படைப்பு செய்துவிடும். இந்தச் சிறுகதையை என்னோடு சேர்த்து அதிகபட்சமாக ஐநூறு பேருக்கு மேல் வாசித்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், வன்மத்தைத் தூண்டக்கூடிய "smear campaign" மீம்ஸ்களுக்கு கோடிக்கணக்கான வாசகர்கள்! பிறகு எப்படி சமூகத்தில் நல்லிணக்கம் நிலவும்? இந்தப் பதிவின் இந்த வரி வரை வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் ஒரு குறிஞ்சி மலர். 

ஒரு படைப்பாளியாக இருப்பது என்பது மிகப் பெரிய பொறுப்பு. அது வெறும் பொழுதுபோக்கு மட்டுமல்ல. பொழுதுபோக்கு வணிக சினிமாக்களில் காணப்படும் இன்னொரு போக்கு - "பிராண்டிங்". சமீபத்தில் என் நண்பரொருவர், "முந்தைய படங்களைப் போல் இல்லை, மாதவன். இது ஆகச் சிறந்த தமிழ் படம். நீங்கள் நிச்சயம் பார்க்கவேண்டும்", என்று சொன்னாரே என்பதால் ஒரு படம் பார்த்தேன். தமிழகத்தில் நடக்கும் அத்தனைப் பிரச்சினைகளுக்கும் தீர்வாக அந்த நாயகனைக் காண்பிக்கிறார்கள். இது திரைப்படமா, இல்லை அந்த நாயகனை பெப்ஸி, கோகோ கோலா போன்று வர்த்தகச் சின்னமாக்கும் உத்தியா என்று தெரியவில்லை. கிட்டத்தட்ட விளம்பரப் படம் போன்று இருந்தது. தமிழின் முன்னணி நாயகர்களின் பெரும்பாலான படங்கள் இத்தகைய விளம்பரப் படங்களாகத்தான் எனக்குத் தெரிகின்றன. 

அரசியலிலும் இதே கதை. தேசத்தின் எல்லா பிரச்சினைகளுக்கும் தீர்வாக ஒரு தலைவரை காட்டுவார்கள். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. நமக்கு வேண்டியது நல்லதொரு அமைப்பு. We need a Democratic system - not a Superman or a Spiderman! இதுபோன்ற நாயகர்கள் மக்களாட்சிக்கு எதிரானவர்கள், அவர் எவராயினும். இது என்னுடைய கருத்து மட்டுமல்ல. நான் மிகவும் மதிக்கும் அம்பேத்கர் "தனிநபர் வழிபாடு மக்களாட்சியை சீரழித்து சர்வாதிகாரத்துக்கு வித்திடும்" என்று அன்றைக்கே எச்சரித்திருக்கிறார். பாகுபலி இரண்டாம் பாகத்தைப் பார்த்துவிட்டு, "விஷுவல்ஸ் அருமையாக இருக்கிறது. ஆனால் எல்லாவற்றுக்கும் தீர்வாக ஹீரோவை காட்டுவது சற்று பயமாக இருக்கிறது." என்று ஒரு நண்பரிடம் கூறினேன். கொதித்தெழுந்துவிட்டார். 

இந்தியாவில் ஒரு கோடி பேருக்கு ஒன்று பிடித்துவிட்டால், அதற்கு உடனடியாக புனிதத்துவம் கிட்டிவிடுகிறது. பிறகு நாம் அதை விமர்சனமே செய்யக்கூடாது. மதம், சினிமா, அரசியல் என்று எல்லாவற்றிலும் இதே கதை. ஆனால் விமர்சனத்துக்கு அப்பாற்பட்ட புனிதம் என்கின்ற ஒன்று இல்லவே இல்லை என்பதே என் எண்ணம். சமூக வலைத்தளங்களில்கூட மூளைச்சலவை செய்யப்பட்டுவிட்ட கூட்டங்களையே பெரும்பாலும் பார்க்க முடிகிறது. அதில் மட்டும் ஜனநாயகம் மிளிர்கிறது. மற்றபடி "சுயாதீன சிந்தனை" (Independent Thinking) என்பதற்கு வாய்ப்பே இல்லாததுபோல் தெரிகிறது. அப்படியே ஓரிருவர் இருந்தாலும் அவர்களையும் ஏதோ ஒரு கூட்டத்தில் சேர்க்க முயல்வார்கள். பிம்பங்கள் உடைக்கப்பட வேண்டும் என்பதே என் எண்ணம். என் மீது சமூகம் உருவாக்கும் நேர்மறையான பிம்பத்தை பிற்காலத்தில் என் மகன் தன் விமர்சனம் மூலம் உடைத்து எறிவானேயானால், அதைத் தட்டிக்கொடுத்து முதலில் வரவேற்பவன் நானாகத்தான் இருப்பேன். எவரையும் எதையும் முழுமையாக ஏற்றுக்கொள்வதோ அல்லது முற்றிலும் நிராகரிப்பதோ என்னளவில் மூடத்தனம் என்று முழுமையாக நம்புகிறேன். "அவர் சொன்னார், இவர் சொன்னார் என்று எதையும் சிந்திக்காமல் அப்படியே ஏற்காதே." என்று சொன்ன சாக்ரடீஸையும் அப்படியே ஏற்றுக்கொள்ளக்கூடாது என்பதே என் சித்தாந்தம். எழுத்தாளர் சுந்தர ராமசாமி கூறியது போல் சந்தேகம் இல்லாத மனிதர்களைப் போன்ற ஆபத்தானவர்கள் யாருமில்லை. 

பாகுபலி பற்றி நான் கூறியது சில மாதங்களில் அப்படியே நிகழ்ந்தது. பாகுபலி பாடல்களில் அந்த நாயகனின் தலையைத் தூக்கிவிட்டு ஒரு அரசியல் தலைவரின் முகத்தைப் பொருத்தி வீடியோ மீம்ஸ்கள் சில நாட்களில் வெளிவந்துவிட்டது. நாம் இன்னும் மன்னராட்சி முறையிலிருந்து மக்களாட்சிக்கு வரவேயில்லை. I repeat.

கருத்துகள்

  1. "நாம் இன்னும் மன்னராட்சி முறையிலிருந்து மக்களாட்சிக்கு வரவேயில்லை.. "உண்மை..

    Who is your favorite Hero?
    Who is your favourite player?

    இதுபோன்ற கேள்விகளுக்கு என்னிடம் பதில் இல்லை..
    எல்லாமே பிடிச்சிருக்கு...
    எதுவுமே பிடிக்கல...
    என்ற பதில் கூட பெரும்பாலும் விரும்பப்படுவதில்லை..

    மிகவும் சிறிய பதிவு.. தெளிவான கருத்துக்கள்..

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..