கடவுளும் சாத்தானும்

ரோப்பாவுக்குள் எவ்வளவு தூர பயணமாக இருந்தாலும் பெரும்பாலும் காரில் செல்வதே என் வழக்கம். மதிய உணவு முடித்துவிட்டு பெல்ஜியத்திலிருந்து கிளம்பினால், இடையே ஜெர்மனியில் தேநீர் பருகிவிட்டு, பிரான்சு நாட்டைக் கடந்து மாலை உணவுக்கு சுவிட்ஸர்லாந்துக்கே சென்று விடலாம். மேலும் எனக்கு காரில் பயணம் செய்வது மிகவும் பிடிக்கும். சிறு வயதில் உறவுகளோடு சுற்றுலா சென்றுவிட்டு கடைசி நாள் வீடு திரும்பும் போது, "ஊர் செல்ல இன்னும் எவ்வளவு கிலோமீட்டர்கள்?" என்று எங்களுடைய சாரதி பாஸ்கர் அண்ணாவைக் கேட்டுக்கொண்டே வருவேன். தூரம் குறையவே கூடாது என்றும் வேண்டிக்கொள்வேன்.

எனக்கு  ஓடிக்கொண்டே இருக்கவேண்டும். அதனால்தான் இயற்கையில்கூட குளம் குட்டைகளைவிட, ஓடை ஆறு இவற்றின் மீதே எனக்கு அதிக ஈர்ப்பு. குளம் குட்டைகளில் அழுக்குகள் எளிதாகத் தங்கி விடும். யாராவது சுத்தம் செய்துகொண்டே இருக்கவேண்டும். ஆறு தன்னைத் தானே சுத்திகரித்துக்கொள்ளும் வல்லமை பெற்றது. அழுக்கை அண்ட விடாது. பயணங்களின் போது வண்டி உருண்டு ஓடிக்கொண்டே இருக்க, மனதில் பல விதமான சிந்தனைகள் என் முன் வந்து கொட்டிக்கொண்டே இருக்கும். அப்போது மட்டும் எனக்கு ஒரு அமேனுயென்சிஸ் கிடைத்தால் நான் நிச்சயம் ஒரு எழுத்தாளனாகி விடுவேன். இது பற்றி ஏற்கனவே என்னுடைய சிறுகதை ஒன்றில் உளவியல் ரீதியான கேள்வி எழுப்பி இருக்கிறேன். இன்னும் விடை கிடைக்கவில்லை.    

எங்கு சென்றாலும் என்னுடைய கார் வழிகாணுதவி அமைப்பில் நான் செல்லக்கூடிய முகவரியை உள்ளீடு செய்துவிட்டு, அதனுடைய உதவியோடு பயணம் செய்வது வழக்கம். வழிகாட்டும் குரலை நாமே தேர்வு செய்து கொள்ளலாம். நான் தேர்ந்தெடுத்திருப்பது ஒரு பெண்மணியை. கனிவான வழிகாட்டலாக மட்டுமல்லாமல் இனியதொரு வழித்துணையாகவும் இருப்பாரல்லவா. பழக்கப்பட்ட இடத்துக்கு செல்வதாக இருந்தாலும்கூட அந்தப் பெண்மணியின் உதவியோடு செல்வதற்கு ஒரு காரணம் இருக்கிறது. செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் இருப்பின், ஏற்கனவே திட்டமிட்ட வழியில் செல்லாமல் மாற்றி  சாமர்த்தியமாக வேறு வழியில் திருப்பிவிடுவார் அந்தப் பெண்மணி.



ஓரிரு மாதங்களுக்கு முன்பு குடும்பத்துடன் ஜெர்மனியின் ப்ராங்க்பர்ட் நகருக்கு சென்ற பொழுது ஒரு விந்தையான அனுபவம் கிட்டியது. ஜெர்மனியின் 'ஆட்டோபான்' என்று சொல்லக்கூடிய வேக வரம்புகளற்ற நெடுஞ்சாலை அது. நூற்றைம்பது கிலோமீட்டர் வேகத்தில் என் வாகனம் செல்லும் போது, மற்ற வாகனங்கள் சீறிக்கொண்டு மின்னல் வேகத்தில் என்னைக் கடந்து செல்வதை பலமுறை கண்ணுற்றிருக்கிறேன். கண்டிப்பாக இருநூறு கிலோமீட்டர் வேகத்தில் செல்வார்களாக இருக்கும். அன்றைக்கு அதிவேக தடத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, திடீரென்று வழிகாட்டும் பெண்மணி அந்தத் தடத்தில் ஏதோ பொருள் விழுந்து கிடப்பதைத் தெரிவித்து, என்னை உடனடியாக தடம் மாறச் சொன்னார். எனக்குப் பின்னால் இன்னொரு கார் வந்துகொண்டிருந்தது. எதற்கு இப்படி சொல்கிறாள் என்று என் மனைவியுடன் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, மீண்டும் ஒருமுறை "அபாயம்! அபாயம்!" என்று அதே செய்தி. உடனே எனக்கு பின்னால் வரும் காரை எச்சரிக்கை செய்து விட்டு தடம் மாறினேன். நல்லவேளையாக அடுத்த தடத்தில் எந்த வண்டியும் வரவில்லை. நான் தடம் மாறியவுடன் எனக்குப் பின்னால் வருபவரும் என்னைப் பின்பற்றி மாறினார். அடுத்தகணம் நான் முன்பு சென்றுகொண்டிருந்த தடத்தில் காரின் உதிரி பாகமொன்று விழுந்து கிடந்தது. இன்னும் ஓரிரு நொடிகள் அதே தடத்தில் ஓட்டிச் சென்றிருந்தால் நிச்சயம் விபத்து நேர்ந்திருக்கும். நான் சென்றுகொண்டிருக்கும் வேகத்தைக் கணக்கிட்டுப் பார்த்தால் அது மிகப் பெரிய விபத்தாகவே இருந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

தமிழில் தீர்க்கதரிசனம் என்று ஒரு வார்த்தை உண்டு. இதற்கு இணையான ஆங்கில வார்த்தை நிச்சயமாக இல்லை என்பேன். தீர்க்கதரிசனம் என்றால் கடந்த காலம், நிகழ்காலம், எதிர்காலம் அனைத்தையும் தீர்க்கமாக ஒரு அகலப் பரப்பில் காண்பது (panoramic view). அவ்வாறு காணும் சக்தி படைத்தவர்களைதான் "தீர்க்கதரிசிகள்" என்று கூறுகிறோம். ஆங்கிலத்தில் இதை "prophecy" என்றும் தீர்க்கதரிசிகளை "prophet" என்றும் அழைக்கிறார்கள். என்னுடைய வழிகாணுதவி அமைப்பில் பேசும் பெண்மணியை ஒரு வழிகாட்டி என்றும், வழித்துணை என்று மட்டுமே நினைத்தேன். ஆனால் அவர் ஒரு தீர்க்கதரிசி என்பது எனக்குத் தெரியாது. என் எதிர்காலத்தை பார்த்துவிட்டாரே. அதிர்ச்சியும் ஆச்சர்யமும் கலந்த நிலையில் கையில் பாப்கார்னை வைத்துக்கொண்டு அமர்ந்திருந்த என் மனைவியிடம் நான் கூறினேன், "அறிவியல் கிட்டத்தட்ட கடவுளை உருவாக்கிவிட்டது; கூடவே சாத்தானையும்."

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..