அம்பேத்கர் அழுதுகொண்டிருக்கிறார்..



நேற்று முழுவதும் ஒரு பேயைப் போல் வாசித்துக்கொண்டிருந்தேன். சில நிமிடங்கள் மட்டுமே இடைவெளி எடுத்துக்கொண்டேன். ஆப்தால்மிக் மைக்ரைன் காரணமாக ஒருமுறை கிட்டத்தட்ட இரண்டு மணிநேரங்கள் நான் பார்வையின்றி இருந்தபோது, அம்பேத்கரைத்தான் நினைத்துக்கொண்டேன். தனக்குப் பார்வை குறைபாடு வந்தபோது, "புத்தகங்கள் படிக்க முடியாமல் போய்விடுமே!" என்று அழுதாராம். நானும் அதேபோல் அந்த இருட்டு அறையில் அமர்ந்துகொண்டு, "இப்படியே இருந்துவிட்டால் இனிமேல் எப்படி புத்தகங்கள் வாசிக்கப்போகிறேன்" என்று சிந்தித்து வருந்திக்கொண்டிருந்தேன். உண்மையில் வேறு எதைப் பற்றியும் நினைக்கவில்லை.

இலண்டன் பொருளாதாரப் பள்ளியில் பயின்ற காலத்தில் அம்பேத்கர் ஒரு நாளைக்கு இருபது மணிநேரங்கள் படிப்பாராம். "வாசிக்க நேரம் இல்லை" என்று கூறுபவர்கள் கவனிக்க. அவரிடம் நான் காதல் கொண்டதற்குப் பல காரணங்களில் முதன்மையான காரணமும் இதுவே - "புத்தகங்களின் மீதான அவரது காதல்". பாம்பே சட்டக் கல்லூரி முதல்வராக அவர் இருந்தபோது அவரது வீட்டு நூலகத்தில் வைத்திருந்த புத்தகங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா? ஐம்பதாயிரத்துக்கும் மேல். அந்தக் காலகட்டத்தில் உலகத்திலேயே மிகப்பெரிய தனியார் நூலகம் அவருடையது. இலண்டனுக்கு வட்ட மேஜை மாநாட்டுக்குச் சென்றுவிட்டுத் திரும்புகையில் அறுபது பெட்டிகளில் புத்தகங்கள் கொண்டுவந்தாராம். 

ஒரு மனிதன் எவ்வளவு எளிமையான ஏழ்மையான சூழலிலிருந்து வந்தவனாக இருந்தாலும், கல்வியும் புத்தக வாசிப்பும் அவனை எவ்வளவு உயரத்துக்குக் கொண்டுபோய் அமர்த்தும் என்பதன் குறியீடு பாபாசாகேப். நம்மைப் போன்ற எளிய மனிதர்கள் தன்னம்பிக்கை, கல்வி, உழைப்பு இவை மூன்றையும் வைத்துக்கொண்டு எவ்வளவு தூரம் வரை செல்ல முடியும் என்பதற்கான எல்லையை வரையறை செய்து அதைச் சென்றடைவதற்கான அகத்தூண்டுதலாகவும் அமைந்தது அவருடைய வாழ்க்கை. இந்தியாவின் முதல் சட்ட அமைச்சராக இருந்தவர்; இந்தியாவின் பிரதமராகவும் இருந்திருக்கவேண்டியதற்கான அத்தனைத் தகுதிகளையும் கொண்டிருந்தவர். ஆனால் இன்றைக்கு இட ஒதுக்கீடு மற்றும் தலித் தலைவர் என்று மட்டுமே அறியப்படுவது வேதனை தரும் விஷயம். நவீன இந்தியாவின் சிற்பிகளில் ஒருவர், சுயநலமற்ற அரசியல் தலைவர், மிகச் சிறந்த பேச்சாளர், சிந்தனையாளர், பொருளாதார அறிஞர், சட்ட மேதை என்று பன்முகத்தன்மை கொண்டவர். வரலாறு, பொருளாதாரம், தத்துவம், மதங்கள், மொழி என்று பல துறைகளில் தேர்ந்த ஞானி. அவருடைய அரசியல் எதிரியான காந்தியே "அம்பேத்கர் ஆயிரம் அறிஞர்களுக்கும் ஐநூறு பட்டதாரிகளுக்குச் சமம்" என்று கூறியிருக்கிறார். காந்தி கூறியதில் மிகையே இல்லை. சற்று குறையாகச் சொல்லிவிட்டார் என்று வேண்டுமானால் கூறலாம்.

அம்பேத்கரை உண்மையாக நேசிப்பவர்கள் செய்ய வேண்டியது என்ன தெரியுமா? "நாளுக்கொரு புத்தகம் வாசிப்பது". அதை விடுத்து வெறும் நாமகோஷங்கள் மட்டும் எழுப்பிக்கொண்டிருப்பதை அவரே இன்றிருந்தாலும் விரும்பியிருக்கமாட்டார். "தனிமனித வழிபாடு ஜனநாயகத்தை சீரழித்து இறுதியில் சர்வாதிகாரத்தில் கொண்டுபோய் நிறுத்திவிடும்" என்று அப்போதே எச்சரித்தவர். கடந்த வாரம்கூட நாயக வழிபாடு குறித்து எழுதியிருந்தேன். இப்போது தாயகத்தில் நடந்துகொண்டிருப்பதையெல்லாம் பார்க்கும் பொழுது அந்த எச்சரிக்கை எவ்வளவு சரியானது; நியாயமானது;துல்லியமானது என்று தோன்றுகிறது.

இன்றைக்கு சமூகப் பிரச்சினைகளைப் பற்றி பேசும்போதெல்லாம்அநாகரிகமான, தரங்கெட்ட வார்த்தைகளைக் கலந்து பேசுவதென்பது அரசியல்வாதிகளுக்கும், சமூக வலைதளப் போராளிகளுக்கும், சமூக வலைதள 'எழுத்தாளர்களுக்கும்' பேஷனாகி விட்டது. அருவருப்பான பிரச்சார மீம்ஸ்களைப் பகிர்கிறார்கள். மதம், இனம், கட்சி சார்புடையவர்கள் இந்த விஷயத்தில் நிராயுதபாணிகளாகச் செயல்படுகிறார்கள். அறிவு என்னும் ஆயுதம் அடகு வைக்கப்பட்டுவிட்டதாக உணர்கிறேன். எதிர் கருத்துகளையும், விமர்சனங்களையும் நான் வரவேற்பவன் என்பதை என்னை வாசிப்பவர்கள் அறிவீர்கள். ஆனால் நம் கருத்தை கண்ணியமான முறையில் பதிவு செய்வது முக்கியம். ஆகச்சிறந்த எழுத்தாளர்களும் இதைச் செய்துகொண்டிருப்பதை சமூகத்தின் வீழ்ச்சியாக நான் காண்கிறேன். இவர்களுக்கென்று சுய சிந்தனை என்று எதுவும் இருக்கிறதா என்று சந்தேகம் வருகிறது. வெகுஜனங்களின் உணர்ச்சிகளுக்கு உணவூட்டிக்கொண்டிருப்பவர்கள். அவ்வளவே. ஆனால்,  மிக சென்சிட்டிவான சமூக விஷயங்களைக்கூடத் தன் நிலைத் தடுமாறாமல், நிதானத்துடனும், அறிவுப்பூர்வமாகவும், கண்ணியமாகவும், அதே சமயம் உறுதியுடனும், உணர்ச்சியுடனும், கம்பீரமாகவும் பேசி, கருத்துப் பரிமாற்றம் நிகழ்த்தி தம் சிந்தனைகளை மேலெடுத்துச் செல்வது எப்படி என்பதை அம்பேத்காரின் பேச்சுகளில் இருந்துதான் இன்றைய தலைவர்கள் கற்றுக்கொள்ளவேண்டும். ஆயிரம் அறிஞர்களை விடுங்கள். இன்றைக்கு அவரைப் போன்று ஒரு அறிவார்ந்த அரசியல் தலைவரைக் காணமுடியவில்லை. அவரைப் பின்பற்றுவதாகச் சொல்லிக்கொள்பவர்கள் செய்வதெல்லாம், தம் அலுவலக அறையில் அவருடைய புகைப்படமும், அவர் பிறந்தநாளன்று சிலைக்கு மாலையும், நாம கோஷங்கள் எழுப்புவது மட்டுமே. அதல்ல இன்றைய தேவை. அவரைப் போன்றவர்கள் விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்புவது. அரசியல்வாதிகளை விடுங்கள். நம்மைப் போன்ற எளிய மனிதர்கள் செய்யக்கூடியது என்ன? மாதத்துக்கு ஒரு புத்தகம் வாசிப்பது. குறைந்தபட்சம் அவருடைய பிறந்தநாளன்றாவது. ஆனால், இன்றைய சூழ்நிலையில் அதற்குக்கூட சாத்தியமே இல்லை. கண்களிருந்தும் பார்வையற்றதொரு சமூகத்தை நாம் உருவாக்கி வருகிறோம். இன்று அம்பேத்கர் நம்முடன் இருந்திருந்தால் அதற்காக தினமும் அழுதுகொண்டிருப்பார்.

ஏப்ரல் 15, 2019

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..