டின்னிட்டஸ் டு டீட்ஸே

டந்த மூன்று வாரங்களாக மார்புப் பகுதியில் ஊசியால் தைப்பது போன்றதொரு வலி அடிக்கடி வந்து போய்க்கொண்டிருந்தது. அத்தோடு மூச்சுத்திணறலும் கைகோர்த்துக் கொண்டுவிட்டது. மனைவியிடம் சொல்லிக்கொண்டே இருந்தேன். தொடர்ந்து மூச்சுப் பயிற்சி செய்து வருபவன். உணவுக் கட்டுப்பாட்டுக்கு முக்கியத்துவம் கொடுப்பவன். உடற்பயிற்சி தொடர்ந்து செய்து வந்தவன். இதயக் கோளாறாக இருக்க வாய்ப்பே இல்லை. ஆனால் கடந்த ஜனவரி மாதம் தாயகத்திலிருந்து திரும்பியதிலிருந்து உடலியக்கமே அதிகம் இல்லாமல் போய்விட்டது. நடுவில் பன்றிக் காய்ச்சல் வேறு வாட்டி வதைத்துவிட்டது.

கடந்த புதனன்று நடிப்புப் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது திடீரென்று கிறிஸ்டோபர், "உனக்கு சுவாசக் கோளாறு இருக்கிறதா? என்னால் இந்த இம்பல்ஸை வடிகட்ட முடியவில்லை" என்றார். "ஆமாம். ஓரிரு வாரங்களாகவே அப்படித்தான் இருக்கிறது. மருத்துவரிடம் போகவேண்டும்" என்றேன்.

அடுத்தநாள் அலுவலகத்திலிருந்து வீட்டிற்கு காரோட்டிக்கொண்டு போகும்போது மீண்டும் நெஞ்சுப் பகுதியில் பயங்கர வலி. அதைத் தொடர்ந்த மூச்சுத்திணறல். ஒழுங்காக வீடு போய் சேர்வோமா என்கிற சந்தேகம் எழுந்தது. மிதவேகத் தடத்திலேயே காரை ஒடித்துக்கொண்டு நலமுடன் வீடு வந்து சேர்ந்தேன். உடல்வலி, மூச்சுத்திணறல் காரணமாக அன்று இரவு சரிவர தூக்கமில்லை. குடும்ப மருத்துவர் சோஃபியைப் பார்க்கச் சென்றோம். திருப்பத்தூரில் எங்கள் குடும்ப மருத்துவர் சம்பந்தம் அவர்களுக்குப் பிறகு எனக்கு மிகவும் பிடித்த மருத்துவர் சோஃபிதான். இருவருமே நோய் கண்டறிதலில் வித்தகர்கள். பெரும்பாலும் இங்கிருக்கும் மருத்துவர்கள் என்ன நோய் என்று கண்டுபிடித்துச் சொல்வதற்குள், ஒன்று நோய் நம்மை விட்டு நீங்கியிருக்கும் அல்லது அதைத் தாங்கும் பக்குவம் நமக்கு வந்திருக்கும். என்னுடைய டின்னிட்டஸ் கட்டுரைகளிலேயே அதுபற்றி நிறைய எழுதியிருக்கிறேன். இதயம், இரத்தம் என்று அத்தனை பரிசோதனைகளும் செய்தாயிற்று. "டீட்ஸே" என்கிற அரிய நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறினார் சோஃபி.

"டின்னிடஸ், டீட்ஸே என்று உனக்கு மட்டும் ஏன் வித்தியாசமாக வியாதிகள் வருகிறது?" என்று கிண்டலடித்தார்கள் என் மனைவியும் மகனும். ஒரு பகடியோடு அவர்கள் அதை எதிர்கொண்டதை பார்த்தவுடன், 'பரவாயில்லையே, இவர்களை இந்த அளவுக்கு மாற்றிவிட்டோமே' என்று மனதுக்குள் அத்தனைக் கொண்டாட்டம். பிரச்சினைகள் அல்ல பிரச்சினை. பிரச்சினைகளை எதிர்கொள்ளும் துணிவின்மையே என்னளவில் மாபெரும் பிரச்சினை. முதலில் தீர்க்கப்பட வேன்டிய பிரச்சினை அதுவே.

"தெரிந்த வியாதிகளுடன் போராடுவது போரடிக்கும், சாய். டீட்ஸேவோடு சற்று விளையாடிப் பார்ப்போம். மோரோவர் டின்னிட்டஸுக்கு முன்னாடி டீட்ஸேவெல்லாம் கொசு." என்று கூறிவிட்டு, வியாழக்கிழமை கார் ஓட்டும் பொழுது ஏற்பட்ட அனுபவத்தின் காரணமாக என் மகனிடம் ஒரு கேள்வி கேட்கவேண்டும் என்று தோன்றியது. மனைவியிடமும்.

"ஒருவேளை நான் இறந்துவிட்டால் என்ன செய்வாய், சாய்?" என்று கேட்டேன்.

"முதலில் கண்டிப்பாக கஷ்டமாக இருக்கும், அப்பா. உன்ன மிஸ் பண்ணுவேன். ஆனா உனக்கு சோகமாக இருப்பது பிடிக்காது. அதனால ஜாலியாக இருக்க வேற ஏதாச்சும் செய்யப் போய்விடுவேன்" என்றான்.

"நீதான் என் மகன்" என்று அவனை அணைத்து முத்தமிட்டேன்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..