எது முக்கியம்?

ணி நிமித்தமாக அவ்வப்போது ப்ரசல்ஸ் நகரிலுள்ள எங்கள் தலைமையகத்துக்குச் செல்வதுண்டு. ப்ரசல்ஸ் நகருக்குச் செல்லும்போது மட்டும் காரை எடுப்பதில்லை. ஐம்பது கிலோமீட்டர் தூரம்தான். ஒரு ஞாயிற்றுக் கிழமையன்று சென்றால் முப்பது நிமிடங்கள்தான் பிடிக்கும். வார நாட்களில் காலை எவ்வளவு சீக்கிரம் கிளம்பினாலும் இரண்டிலிருந்து இரண்டரை மணிநேரம் ஆகிவிடுகிறது. அதனால் ப்ரசல்சுக்குச் செல்லும்போது மட்டும் இரயிலில் பயணிப்பது வழக்கம். காரை தீனன் இரயில் நிலையத்தில் நிறுத்திவிட்டுச் செல்வது வழக்கம். இருபத்தைந்து நிமிட பயணம்தான். ப்ரசல்ஸ் நோர்டு இரயில் நிலையத்திலிருந்து நான் பணிபுரியும் நிறுவன பேருந்துகள் பத்து நிமிடங்களுக்கு ஒருமுறை பணியாளர்களை அழைத்துச் செல்லும். என்றைக்காவது காரில் போகலாமென்று தோன்றினாலோ, குளிர் அதிகமாக இருந்தாலோ, பயிற்சி வகுப்புகளுக்குத் தேவையான பொருட்களை எடுத்துக்கொண்டு போக வேண்டுமென்றாலோ மட்டுமே காரை எடுப்பேன். இரயிலில் போவதில் இருக்கும் இன்னொரு அனுகூலம் - புத்தகம் வாசிக்க முடிவது. காரை ஒட்டிக்கொண்டு என்ன செய்வது? எவ்வளவு நேரம்தான் பாடல் கேட்பது? இத்தனைக்கும் ப்ரியா அடிக்கடி எனக்குப் பிடித்த பாடல்களை தரவிறக்கம் செய்து வெளியீடு செய்கிறாள் - அவளே இசையமைத்தது போன்ற பெருமிதத்தோடு. ஆனால் அவற்றை பலமுறை திரும்பத் திரும்ப கேட்டு ஒரு சில வாரங்களிலேயே புளித்துப் போய்விடும். சில சமயங்கள் மனதை லேசாக்கிக்கொள்ள கிரேசி மோகன் போன்றோரின் நாடகங்களையும், கு.ஞானசம்பந்தன் அவர்களின் உரைகளையும் கேட்பதுண்டு. எழுத்தாளர்களின் உரைகளையும் விரும்பிக் கேட்பேன். எஸ்ராவின் உரையை கேட்க ஆரம்பித்தால் ப்ரசல்ஸ் வருவதே தெரியாது. ஒரு மணிநேரத்தில் ஒன்பது புத்தகங்களை தலையில் ஏற்றி நம்மை வேறோர் உலகில் கொண்டுபோய் சேர்த்துவிடுவார். சில நாட்களுக்கு முன்பு, வழக்கம்போல் வண்டியைப் பிடிக்க வீட்டிலிருந்து 15 நிமிடங்களுக்கு முன்னதாகக் கிளம்பினேன். இரயில் நிலையத்தை சென்றடைய ஐந்து நிமிடங்கள்கூட ஆகாது. ஆனால் போக்குவரத்து சமிக்ஞை ஒன்றில் சிக்கிக் கொண்டேன். தீனன் ஒரு குறுநகரம். போக்குவரத்து பிரச்சினையெல்லாம் இருந்ததில்லை.அன்று சாலை பராமரிப்புப் பணி நடந்துகொண்டிருந்தது. அது போதாதென்று நான்கைந்து இடங்களில் பாதசாரிகளும், மிதிவண்டிக்காரர்களும் சாலையைக் கடக்க நிற்க வேண்டியதாய்ப் போயிற்று. குறுகிய சாலைகளில் நமக்கு முன்னே மிதிவண்டியொன்று சென்று கொண்டிருந்தால் அவர்களை முந்த முயலக்கூடாது. ஒலி எழுப்பவும் கூடாது. அமைதியாக அவர்கள் பின்னாலேயே செல்ல வேண்டியதுதான். அவர்களாய்ப் பார்த்து பரிதாபப்பட்டு நமக்கு வழிவிட்டால்தான் ஆயிற்று. இல்லையெனில் தெருமுனை வரை உருட்டிக்கொண்டுச் செல்ல வேண்டியதுதான். நகருக்குள் அவர்களுக்குத்தான் முன்னுரிமை. இவர்கள் எல்லோரையும் பொறுமையாக வழியனுப்பி வைத்துவிட்டுச் செல்வதற்குள் இரயில் புறப்பட்டுவிட்டது. அடுத்த வண்டிக்கு அரை மணிநேரம் காத்திருக்க வேண்டும். இதுபோன்ற தருணங்களில் நேரத்தை வீணடிக்காமல் இருக்க, வீட்டிற்குத் திரும்பச் சென்று வீட்டிலிருந்து வேலைப் பார்க்கும் வசதி இருக்கிறது. முக்கியமான கூட்டங்களில் ஸ்கைப் வழியாக கலந்து கொண்டாலே போதுமானது. அதனால் வீட்டுக்குத் திரும்பி வந்துவிட்டேன். கண்டிப்பாக போக வேண்டியிருந்தால், தாமதாக வருகிறேன் என்று குறுஞ்செய்தி அனுப்பிவிட வேண்டியதுதான். என்ன ஆகிவிடப் போகிறது? நமக்கு என்ன அவசரம் வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் சாலைகளில் பொறுமை அவசியம். மற்றவர்களுக்கான முன்னுரிமைகளை நாம் எடுத்துக்கொள்ள முடியாது. இதில் அலட்சியம் கூடாது. நமக்கு எத்தனை முக்கியமான வேலையாக இருந்தாலும் பரவாயில்லை, நாம் அலுவலகத்துக்கு சரியான நேரத்துக்குப் போய்ச் சேர முடியவில்லையென்றாலும் பரவாயில்லை, அடுத்தவர் நலமுடன் வீட்டுக்குத் திரும்புவது அனைத்தையும்விட முக்கியம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..