போணி


திருப்பத்தூர் நகரிலுள்ள சி.கே.சி தியேட்டர் எதிரில் அமைந்த அந்தத் தலைகீழ் 'ப' வடிவில் அமைந்த நீண்ட ஓலைக் குடிசை வீட்டில், மொத்தம் மூன்று படுக்கை அறைகள். இரண்டு சிறிய படுக்கையறைகளுக்கு அடுத்து மூலையில் கோழிகளுக்கான ஒரு திறந்த அறையும் உண்டு. அப்பா அப்போது கோழி வளர்த்து வந்தார். மூன்றாவது படுக்கையறை சமையற்கட்டுடன் கூடிய சற்றுப் பெரிய அறை. அதனுடைய அளவு பத்துக்கு பத்தாகவோ அல்லது அதைவிட சற்று அதிகமாகவோ இருக்கலாம். சரியாக நினைவிலில்லை. குடிசை வீடு என்பதால் குள்ளமானவர்களும் குனிந்துதான் உள்ளே நுழைய வேண்டும். இல்லையெனில் தலை இடிக்கும்.

முதல் அறையில் என் பெற்றோர்களுடன் நானும் என் தம்பியும் வசித்து வந்தோம். இரண்டாவது அறையில் என் சித்தப்பாவும் சித்தியும். மூன்றாவது பெரிய அறையில் என் அத்தையின் குடும்பம் உட்பட மீதி அனைவரும். பெரிய குடும்பம் எங்களுடையது. 

எங்கள் அறையில் வழக்கமாக அம்மாவும் தம்பியும் கட்டிலின் மீது கொசுவலைக்குள் படுத்துக்கொள்வார்கள். நானும் அப்பாவும் தரையில் பாய் விரித்து அதன் மீது படுத்துக் கொள்வோம். இரவு நேரங்களில் அப்பா எதிர்வீட்டு ஆறுமுகம் மிட்டாய் கடையில் அமர்ந்து நள்ளிரவு வரை புத்தகங்கள் வாசித்துக் கொண்டிருப்பார்; ஹார்மோனியம் வாசிக்கப் பழகிக்கொண்டிருப்பார். அந்த சமயங்களில் மட்டும் நான் தம்பியுடன் கட்டிலில் படுத்துக்கொண்டிருப்பேன். அம்மா அவருக்குப் பிடித்தமான "தில்லை அம்பல நடராஜா" போன்ற பாடல்களை சன்னமாகப் பாடி டேப்-ரிகார்டரில் பதிவு செய்துகொண்டிருப்பார். அந்த விதத்தில் அம்மாதான் என்னுடைய முதல் பாட்டு வாத்தியார். பாபநாசம் சிவனின் பேத்தி ருக்மணி ரமணியெல்லாம் பின்னாளில் நான் சென்னை வந்த பிறகே.

ஒருநாள் நள்ளிரவு இரண்டு மணியிருக்கும். பலத்த மழை அன்றைக்கு. பல ஒட்டைகள் நிறைந்த தென்னங்கூரை வேயப்பட்டிருந்த அந்த வீட்டின் எங்கள் அறையில் மழை நீர் இங்குமங்கும் சொட்டிக்கொண்டே இருந்தது. நானும் அப்பாவும் குவளை, கிண்ணம், தட்டுக்கள் என்று சின்னஞ் சிறுப் பாத்திரங்களை எல்லாம் எடுத்து வந்து மழைநீர் சொட்டுமிடங்களில் வைத்துக்கொண்டிருந்தோம். அவை நிரம்பியுடன் அவற்றை எடுத்து பெரிய பாத்திரத்தில் ஊற்றும் பணியையும் நானே ஏற்றுக்கொண்டிருந்தேன். எனக்கு அது குதூகலமாகவே இருந்தது. இருந்தாலும் வெளியே பேய்க்காற்று வீசியதால் குளிர் நடுக்கியெடுத்தது. சால்வையைப் போத்திக்கொண்டு என் பணியை பெரும் கடமையுணர்வுடன் செவ்வனே செய்துகொண்டிருந்தேன். ஆனால் அடிக்கிற காற்றில் கூரை பிய்த்துக்கொண்டு பறந்து விடுமோ என்கிற அச்சம் எங்கள் அனைவருக்குமே இருந்தது. "வீடு கட்டும் பணியை விரைவில் துவங்க வேண்டும்" என்று அப்பாவும் அம்மாவும் பேசிக்கொண்டார்கள்.

தம்பிக்கு வேறு அன்றைக்கு கடும் காய்ச்சல். அழுதுகொண்டே இருந்தான். அவன் அழுதுகொண்டிருப்பது இடி, கனமழைச் சத்தத்தினாலா, குளிரினாலா, பசியினாலா அல்லது காய்ச்சலினாலா, எதற்கு என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் அம்மா மருந்து கொடுத்த பிறகும்கூட அழுதுகொண்டே இருந்தான்.

"தம்பி பசிக்குத்தான் அழுகிறான் என்று நினைக்கிறேன்" என்று சொன்ன அப்பா, "தாத்தா இந்நேரம் கடையைத் திறந்திருப்பார். நீ போய் பால் வாங்கி வா." என்றார்.

தெரு முனையில்தான் தாத்தாவின் தேநீர்க் கடை இருந்தது. அடர்மழையோ, சூரைக் காற்றோ அதெல்லாம் தாத்தாவின் கடமையுணர்வைத் தடுக்க வாய்ப்பே இல்லை. என்ன ஆனாலும் அவர் அதிகாலை மூன்று மணிக்கே எழுந்து சென்று கடையைத் திறந்து விடுவார்.

நான் சொம்பையும் குடையையும் எடுத்துக்கொண்டு கிளம்பினேன். இரண்டு வீடுகள் கடந்து அப்பாவின் நண்பர் மோகன் அண்ணன் வீட்டுக்கு அருகே சென்றுகொண்டிருந்த போது, அப்பா கூப்பிடுவது கேட்டது. திரும்பி வீட்டுக்கு ஓடி வந்தேன். அப்பா நாலணாவை என் கையில் கொடுத்து, "தாத்தாவிடம் கொடு" என்றார்.

"நம்ம தாத்தாவுக்கு எதற்குப்பா காசு?" என்று சிரித்துக்கொண்டே கேட்டேன்.

"போணி" என்றார். 

"அப்படின்னா?" என்று அந்த மழையிலும் எதிர் கேள்வி கேட்டேன்.

"இப்பத்தான் கடைய திறந்திருப்பார். அநேகமாக நீதான் முதல் வாடிக்கையாளராக இருப்பாய். போணி என்றால் கடை திறந்ததும் செய்யும் முதல் வியாபாரம். காசு கொடுக்காமல் வாங்கினால் நன்றாக இருக்காது. அப்புறம் முழு நாளுக்கும் வியாபாரம் சரியாகப் போகாது. இதை உன் கையால் கொடு. அதிர்ஷ்டம்." என்றார்.

எனக்குப் புரியவில்லை. இருந்தாலும் காசைப் பெற்றுக்கொண்டு கடைக்குச் சென்றேன். நான் நினைத்தது போலவே அந்தப் பகுதியில் தாத்தாவின் கடை மட்டுமே திறந்திருந்தது. அவரிடம் விஷயத்தைச் சொன்னேன். அவரது முகத்தில் கவலை ரேகைகள் படர்ந்தது. தாத்தா அகவயமானவர். அதிகம் பேச மாட்டார். என்னை அமரச் சொல்லியவர், தேநீர் போட்டுக் கொடுத்து ஒரு பிஸ்கட் துண்டையும் தந்தார். கடையில் ஒரு சிமெண்டு மேடை இருக்கும். அதுதான் மாலை வேளைகளில் பள்ளி முடிந்து வந்ததும் வழக்கமாக நான் அமருமிடம். அதன் மீது அமர்ந்து தாத்தாவின் தேநீரைச் சுவைத்துக்கொண்டே அடர்மழையை ரசித்துக்கொண்டிருந்தேன்.

தேநீர்க் குவளைத் தாங்கியில் அப்பா அம்மாவுக்கு இரண்டு குவளைத் தேநீரும், தம்பிக்கு மூன்று குவளைப் பாலையும் வைத்து என்னிடம் தந்து, "சொம்பு சூடாக இருக்கும். இதில் எடுத்துக்கொண்டுப் போ. சொம்பை நான் பிறகு கொண்டு வருகிறேன்" என்றார்.

அதைப் பெற்றுக்கொண்டு அப்பா தந்த நாலணாவை எடுத்து அவரிடம் தந்தேன்.

"அடடே" என்று சிரித்தவர், "தாத்தாவுக்கு எதுக்குப்பா காசு?" என்று அப்பாவிடம் நான் கேட்ட கேள்வியை அவர் என்னிடம் கேட்டார். இந்த "அடடே" என்று அவர் சிரித்துக்கொண்டே சொல்வது இன்னமும் என் நினைவிலிருக்கிறது. உரையாடலின் போது அவர் அடிக்கடி உதிர்க்கும் சொல் அது.

"போணிக்காக தாத்தா. உனக்கு அதிர்ஷ்டம் வரும்." என்றேன்.

தாத்தா நாத்திகர். அதைக் கேட்டு மீண்டும் சிரித்தவர், நாலணாவைப் பெற்றுக்கொண்டு டப்பாவில் போட்டு விட்டு, அதிலிருந்து ஐம்பது பைசா நாணயம் ஒன்றை எடுத்து எனக்குத் தந்தார்.

"எனக்கு எதுக்குத் தாத்தா காசு?" என்றேன்.

"இவ்வளவு அதிகாலையிலே என்னுடைய முதல் வாடிக்கையாளர்களுக்கு நீ தேநீர் கொண்டு போய் தருகிறாயே. உன் உழைப்புக்கான ஊதியம்" என்றார். 

"எனக்கும் போணியா?" என்றேன்.

"ஆமாம். உன்னுடைய அதிர்ஷ்டத்துக்காக. நீ கை நிறைய சம்பாதிப்பாய்." என்று புன்னகைத்துக்கொண்டே சொன்னார். 

அன்றைய நாளில் மட்டுமல்ல, என் வாழ்க்கையிலேயே நான் செய்த முதல் வியாபாரம் அதுவே. என் உழைப்புக்கான முதல் ஊதியம் அதுவே.

என் போகணி. 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..