செஹோவின் துப்பாக்கி


ஞாயிறன்று மாலை ஒரு கன்னடத் திரைப்படம் பார்த்துக் கொண்டிருந்தோம். அதைப் பார்ப்பது நிச்சயமாக நேர விரயம் என்பதால் என்ன திரைப்படம் என்று சொல்ல விரும்பவில்லை. அதில் ஒரு வருமானவரித் துறை அதிகாரி தொழிலதிபர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று திடீர்ச் சோதனை செய்யும் காட்சியைப் பார்க்கும்போது என்னுடைய மகனிடம், "அந்த ஏர்கூலரில்தான் பணம் இருக்கிறது" என்றேன். நான் சொன்னது போலவே பணம் அதில்தான் இருந்தது. 
என் மகனுக்கு ஒரே வியப்பு. "எப்படிப் பா கண்டுபிடிச்ச?" என்றான். 
"ஏர் கூலர் வர ஃப்ரேமை வழக்கத்தைவிட அதிக நேரம் காட்டினார்கள் அறிவாளிகள். அதனால் அது நிச்சயம் அடுத்த காட்சியில் மீண்டும் வரப் போகிறது என்று யூகிப்பது எளிது." என்று கூறிவிட்டு, "உன்னைப் போன்று கதைகள் எழுதுபவர்கள் அவசியம் தெரிந்திருக்க வேண்டிய யுத்தி ஒன்று இருக்கிறது சொல்லவா? செஹோவ்ஸ் கன் ப்ரின்சிபிள்." என்றேன். 
"ஷூர் பா. சொல்லு."
திரைப்படம் முடிந்த பிறகு அவனுக்கு அதை விரிவாக விளக்கினேன். 
"ஆன்டோன் செஹோவ்" ஒரு தலைசிறந்த சிறுகதை ஆசிரியர். இலக்கிய உலகில் எட்கர் ஆலன் போவை எல்லோரும் சிறுகதையின் தந்தை என்று அழைக்கிறார்கள். ஆனால் என்னளவில் "செஹோவ் இஸ் எ மாஸ்டர்". "தி ஹண்ட்ஸ்மேன்" போன்ற சிறுகதைகளைப் படித்தால் இதைப் புரிந்து கொள்ளலாம். நீ ஏற்கனவே வாசித்துள்ள "வான்கா" சிறுகதையை எழுதியவரும் அவரே. 
செஹோவ், துப்பாக்கியைப் பற்றி அடிக்கடி பல இடங்களில் சொல்லி வந்ததால் அதை இலக்கியத்தில் ஒரு கோட்பாடாகவே ஆக்கிவிட்டார்கள். "கதையின் முதல் அத்தியாயத்தில் சுவரில் ஒரு துப்பாக்கி தொங்கிக்கொண்டிருப்பதாக விவரணையில் வந்தால், இரண்டாவது அல்லது மூன்றாவது அத்தியாயங்களில் அது நிச்சயம் சுடப்பட வேண்டும். இல்லாவிட்டால் அதை முதல் அத்தியாயத்தில் அங்கே தொங்கவிடக்கூடாது." என்பதே செஹோவின் துப்பாக்கி கோட்பாடு.
கதையில் எந்த விதமான தவறான வாக்குறுதிகளையும் தரக் கூடாது. கதைக்குத் தொடர்பில்லாத அத்தனையும் கருணையின்றி நீக்கப்பட வேண்டும். சிறுகதை எழுதும் போது விவரணையில் துல்லியமும், சிக்கனமும் அவசியம். இதனாலேயே என்னுடைய இரண்டு சிறுகதைகளைத் தவிர்த்து மற்ற அனைத்தையும் பொருட்படுத்தவேகூடாது என்பேன். 
செஹோவின் துப்பாக்கியை இலக்கியத்தில் மட்டுமல்ல, எல்லா இடங்களிலும் பயன்படுத்தலாம். திரைப்படங்களுக்கும் அது பொருந்தும். கதைக்குத் தேவையற்ற பாத்திரங்களையும், கதையோட்டத்துக்குப் பொருந்தாத காட்சிகளையும், கதையுடன் ஒன்றாத வசனங்களையும் கருணையின்றி நீக்கிவிட வேண்டும். வசனமே இல்லாமல் இருப்பது அதைவிட மேலானது என்பேன்.
வாழ்க்கையிலும் இந்தக் கோட்பாட்டைப் பின்பற்றலாம். தேவையற்ற பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கலாம். வருடத்துக்கு ஒரே முறைதான் ஒரு பொருளை பயன்படுத்துவீர்கள் என்றால், அதை வைத்திருக்கும் நண்பர்களிடம் உதவியாகப் பெற்று பயன்படுத்தலாமே. அதே போல நாம் வைத்திருப்பதையும் பிறருக்கு கொடுத்து உதவலாம்.
வியாபாரத்தில்கூட முதலீடு செய்வதற்கு முன்பு, அந்த முதலீட்டால் வருங்காலத்தில் வருவாய் பெருக வாய்ப்பிருக்கிறதா என்பதை அலசி ஆராய்ந்த பிறகே தொழிலதிபர்கள் முதலீடு செய்வார்கள். முதலீட்டின் மீதான வருவாய் என்பதேகூட வியாபாரத்தில் செஹோவின் துப்பாக்கி கோட்பாட்டின் பயன்பாடுதான். இலக்கியம் வாசிப்பது எதற்கு என்கிறீர்களா? ஒருமுறை இங்கே நிறுவன அதிகாரிகளுக்கு வகுப்பு எடுக்கும் போது இதைச் சொன்னேன். சிரித்துக்கொண்டே கைத்தட்டிப் பாராட்டினார்கள். (இந்தக் கட்டுரைக்கு இந்தச் செய்தி அவசியமில்லை. கருணையின்றி நீக்கியிருக்க வேண்டும்.) 
எனவே, கலை இலக்கிய படைப்பாளிகள், தொழிலதிபர்கள், குடும்பஸ்தர்கள், சாமான்யர்கள் என்று அத்தனை பேருக்கும் ஆன்டோன் செஹோவ் சொல்வது என்னவென்றால், "சுடும் அவசியம் இல்லையென்றால், துப்பாக்கியைச் சுவரில் தொங்கவிடாதீர்கள்."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..