எனதன்பு கடவுள் மறுப்பாளர்களுக்கு..



எனதன்பு கடவுள் மறுப்பாளர்களுக்கு, 

நேற்று பக்தர்களுக்கு என்னுடைய செய்தியைச் சொன்னேன். இன்றைக்கு உங்களிடம் சில விஷயங்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். நானும் ஒரு அக்நாஸ்டிக் வகையறாதான். உங்களின் அத்தனை நியாயங்களையும் அறிந்தவன். அதே சமயம் கடவுள் தத்துவத்தைப் புரிந்து கொண்டவன். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்கிற விவாதத்திலேயே ஆயிரமாயிரம் ஆண்டுகளை ஓட்டி விட்டோம். இன்னும் எத்தனை ஆயிரம் ஆண்டுகளுக்கு அரைத்த மாவையே அரைக்கப் போகிறோமோ தெரியவில்லை. இந்தப் பதிவு மறுப்பாளர்களுக்கும், சாமான்ய பக்தர்களுக்குமானது. அடிப்படைவாதிகளுக்கானது அல்ல. அவர்கள் நாம் சொல்லும் எதையும் காது கொடுத்துக் கேட்கப் போவதில்லை. சில மூர்க்க நாத்திகர்களும் அப்படித்தான் என்றாலும், அவர்கள் தங்களை அறிவாளிகள் என்று பிரகடனப்படுத்திக்கொள்பவர்கள் என்பதால், சற்று காது கொடுத்துக் கேட்பார்கள் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

மனிதனின் மிகப் பெரிய பிரச்சனைகள் யாவை என்று என்னைப் பட்டியலிடச் சொன்னால் இவற்றைச் சொல்வேன்.

1. பிரிவு
2. நோய்மை
3. பணம்
4. மரணம்

இவையே மனிதனின் மிகப் பெரிய பிரச்சினைகளும், அச்சங்களும் ஆகும். எல்லா சிறிய பிரச்சினைகளையும் இந்த நான்குக்குள் அடைத்து விடலாம். மனிதன் மரணத்துக்கும் அஞ்சுபவனேயானாலும் இவற்றில் முதல் மூன்று சிக்கல்களைச் சந்திக்க நேரிடும் போது அவன் தன்னுடைய நான்காவது அச்சமான மரணத்தை அணைத்துக் கொள்கிறான். அது ஏன்?

டாம் ஹாங்கிஸின் "கேஸ்ட் அவே" திரைப்படம் எத்தனை பேர் பார்த்திருப்பீர்கள் என்று தெரியாது. பார்த்தவர்களும் அதை நான் பார்த்த கோணத்தில் பார்த்திருப்பார்களா என்றும் தெரியவில்லை. இயக்குநரும் அதைத்தான் சொல்ல வந்தாரா என்றும் தெரியாது. இது எனக்கு வாய்த்த தரிசனம். நண்பர்கள் பலரிடம் உரையாடலின் போது என்னுடைய கருத்தைப் பகிர்ந்திருக்கிறேன். கதையைச் சுருக்கமாகவே சொல்கிறேன்.

கதையின் முதன்மைப் பாத்திரமான சக் நோலான்டு பயணிக்கும் விமானம் பசிபிக் பெருங்கடலில் மோதி விபத்துக்குள்ளாகிறது. எப்படியோ விபத்திலிருந்து தப்பித்து விடும் சக், ஒரு ஆள் அரவமற்ற தீவுக்குள் சிக்கிக் கொள்கிறார். அங்கு அவர் கிட்டத்தட்ட கற்கால மனிதராகவே மாறிவிடுகிறார். கடலில் மீன் பிடிக்கிறார். சிக்கி முக்கிக் கற்களைக் கண்டறிந்து, அவற்றை உரசி, காய்ந்த சருகுகளுக்குத் தீமூட்டி உணவு சமைத்துண்ணும் நிலைக்குத் தள்ளப்படுகிறார். தீவில் தான் சந்திக்கும் அத்தனைப் பிரச்சினைகளையும் துணிவுடன் எதிர்கொண்டு விடும் அவரால், தனிமையுடன் மட்டும் போராட முடிவதில்லை. ஒரு கட்டத்தில் தனிமையைத் தாங்கிக்கொள்ள முடியாத சக், தற்கொலை செய்துகொள்ள முடிவெடுக்கிறார். அந்த முயற்சியிலும் தோல்வியுறும் அவர் ஒரு நசுங்கிய நிலையில் கீழே கிடக்கும் கைப்பந்தை பார்க்கிறார். அது அவரைப் பார்த்துப் புன்னகைப்பது போலவே அவருக்குத் தோன்றுகிறது. அதைக் கையிலெடுத்து "வில்சன்" என்று பெயர் வைத்து தன்னுடனேயே வைத்துக்கொள்கிறார். அதனுடன் உரையாடல் நிகழ்த்துகிறார். சண்டைப் பிடிக்கிறார். அன்பு காட்டுகிறார். ஆனால் வில்சன் அவருடன் உரையாடுவதில்லை. சண்டைப் பிடிப்பதில்லை. அன்பு காட்டுவதில்லை. எப்போதும் புன்னகைத்துக்கொண்டே இருக்கிறது. இருந்தாலும் சக்கிற்கு அது ஒரு உயிருள்ள நண்பனாக, உற்ற துணையாக மாறி விடுகிறது. அவருக்குத் தற்கொலை செய்துகொள்ளும் எண்ணமும் மறைந்து விடுகிறது.

இந்தக் கதையை எதற்குச் சொல்கிறேன் என்றால், இந்த வில்சனை உங்களால் புரிந்துகொள்ள முடிந்தால், கடவுளையும், கடவுள் தத்துவத்தையும், அதற்கான உளவியல் காரணங்களையும் எளிதாகப் புரிந்துகொண்டு விடலாம். பிரிவு, நோய்மை, பணம் என்று நான் மேற்சொன்ன பாரிய பிரச்சினைகளை ஒரு மனிதன் எதிர்கொள்ள நேரிடும் போது அவன் தனிமைப்படுத்தப்படுகிறான். யாருமற்றதொரு தனித் தீவுக்குள் தள்ளப்படுகிறான். சில உறவுகளைப் பிரிய நேரும் போது, வேறு சில உறவுகள் ஆறுதலுக்கு வந்தாலும் தன்னுடைய மனவலியை அவன் தானே எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். நோய்ம்மையும் அப்படியே. தன் உடல்வலியை வேறு யாருக்கும் அவன் தத்துக் கொடுக்க முடியாது. இவ்விரண்டு பிரச்சினைகளுக்கும் ஆறுதலளிக்கவாவது இரண்டு பேர் வருவார்கள். ஆனால் பணப் பிரச்சினை ஏற்படும் போது எவரும் துணைக்கு வரப் போவதில்லை. அதிலும் வறுமை கொடிதினும் கொடிது. இதுபோன்ற நிலையில்தான் மனிதன் தன்னுடைய நான்காவது மிகப் பெரிய அச்சமான மரணத்தைத் தேர்ந்தெடுக்கிறான். எத்தனை தன்னம்பிக்கை மிக்க மனிதனாக இருந்தாலும் ஒரு முறையாவது மரணத்தைப் பற்றி சிந்திக்காத மனிதன் இருப்பானா என்பது சந்தேகமே. அப்போதுதான் அவனுக்கு "வில்சன்" தேவைப்படுகிறான். "கடவுள்" தேவைப்படுகிறார். கடவுள் எப்போதும் புன்னகைத்துக் கொண்டே இருக்கும் ஒரு நசுங்கிய கைப்பந்து. அவர் மனிதனுடன் உரையாடத் தேவையில்லை. எதையும் கொடுக்கத் தேவையில்லை. மாய வித்தைகள் செய்யத் தேவையில்லை. ஆனாலும் அவர் அருகே இருக்கிறார் என்கிற உணர்வு மனிதன் மரணத்தைத் தேர்ந்தெடுப்பதிலிருந்து அவனை காப்பாற்றுகிறது. கைப்பந்துடன் உரையாடுவது என்பது ஒரு மாபெரும் மூட நம்பிக்கை என்பது அறிவுஜீவிகள் மட்டுமல்ல குழந்தைகளும் அறிந்ததே. ஆனால் அஃதொரு உளவியல் தேவை.

எனதன்பு கடவுள் மறுப்பாளர்களே, ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள். கடவுள் மறுப்பு என்பது மட்டுமே பகுத்தறிவாகாது. உங்களில் பலர் கண்மூடித்தனமாக உங்கள் கட்சித் தலைவர்களை நம்புபவர்கள். சாலை விதிகளை மதிக்காமல் செல்பவர்கள். ஒரு வருடத்துக்கு ஒரு புத்தகத்தைக்கூட எடுத்து வாசித்து அறிவைப் பெருக்கிக்கொள்ள முடியாதவர்கள். எந்த அறிவியல் கண்டுபிடிப்புகளையும் செய்திராதவர்கள். உளவியல் அறிந்திராதவர்கள். வெறுமனே கடவுள் இல்லை என்று ஆயிரம் பேர் ஏற்கனவே அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருக்கும் சுய சிந்தனை அற்றவர்கள். பிறகென்ன நீங்களெல்லாம் அறிவுஜீவிகள்? நீங்கள் செய்துகொண்டிருப்பது என்ன தெரியுமா? தனிமைத் தீவில் இருக்கும் மனிதனிடமிருந்து வில்சனை, அந்தக் கடல் தூக்கிச் சென்றது போல் பிடுங்க நினைக்கிறீர்கள். நீங்கள் தன்னம்பிக்கை மிக்கவராக இருக்கலாம். உங்களுக்கு அற்பக் கைப்பந்து தேவையற்றதாக இருக்கலாம். ஆனால் அதை மற்றவரிடமிருந்து பிடுங்குவது எப்படிப்பட்டது தெரியுமா? ஒரு இருபத்தைந்து வயது திடகாத்திரமான இளைஞன், ஒரு வயோதிகரிடமிருந்து ஊன்றுகோலைப் பிடுங்கி எறிவது போன்றது. நாம் எதிர்க்க வேண்டியது மூர்க்க மதவாதிகளையும், அடிப்படைவாதிகளையும், சில மூடத்தனங்களையும் மட்டுமே. சாமான்யர்களின் நம்பிக்கைகளை அல்ல. அவர்களுக்கு வேண்டிய நம்பிக்கையைத் தந்துவிட்டால், தனித்தீவிலிருந்து மீட்டுவிடும் திராணி நமக்கிருந்தால், அவர்களுக்கான உளவியல் தேவை அறிவியலாலாலோ அரசாலோ நிரப்பப்பட்டு விட்டால், கடவுள் எனும் கைப்பந்தை அவர்களாகவே வீசி எறிந்து விடுவார்கள்.

அதுவரை, உங்கள் அறிவுக் குப்பைகளை சாமான்யர்களின் துன்பக் கேணியில் கொட்டாதீர்கள்.

கருத்துகள்

  1. மிகமுக்கியமான உள்ளடக்கம் உடைய கட்டுரை இது. நன்றி. மதத்தை, கடவுளை எப்படி அணுகவேண்டும்? இதற்கு ஒற்றைப் பதில் கிடையாது. ஒருபக்கம், பகுத்தறிவு, நாத்திகம், பொருள்முதல்வாதம், மதச்சார்பின்மை, அறிவியல் என பல முனைகளிலிருந்து அதை அணுகவேண்டும். மற்றொரு பக்கம் மதச் சீர்திருத்தம் என்கிற மிகப்பெரிய அணுகுமுறையும் முக்கியமானது' என்ற கருத்தே நாம் உணர்வில் கொள்ளவேண்டியதாகும்

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..