தாய்


சிறுவயதில் இரவு உணவு மட்டுமாவது எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட வேண்டும் என்று எங்கள் வீட்டில் ஒரு விதி இருந்தது. தனியாகச் சாப்பிடுவது என் தந்தைக்குப் பிடிக்காது. இன்றைக்கு வீட்டுக்குச் சென்றாலும் அவருடைய அதே புலம்பலைக் கேட்கலாம். சிறுவயதில் அப்படி எல்லோரும் ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கும் பொழுதெல்லாம் திரும்பத் திரும்ப அவர் சொல்லிக்கொண்டேயிருக்க நான் கேட்டது – ‘நன்றாக மென்று சாப்பிடுங்கள்‘ என்பதுதான். வாயிலேயே பாதி வேலை முடிய வேண்டும் இல்லையேல் அஜீரணக் கோளாறுகள் வரும் என்பார். என்னளவில் இது வாசிப்புக்கும் பொருந்தும்.
மாடுகள் அசைபோட்டுச் சாப்பிடுவதைப் பார்த்திருக்கிறீர்களா? ஒவ்வொரு படைப்பையும் நான் வெறுமனே வாசித்து முடித்துவிட்டுத் தூக்கி எறிவதில்லை. வாசித்து விட்டு வெகுநேரம் அசைபோடுவது வழக்கம். எனக்கு மிகவும் பிடித்த படைப்பாக இருந்தால் நான்கு நாட்களுக்குக்கூட அசைபோட்டுக்கொண்டே இருப்பேன் – "மாடுகளைப் போன்று". அசைபோட அசைபோட படைப்பின் சாரம் எனக்குள் இறங்குவதை உணர்ந்திருக்கிறேன். 
நான் இதுவரை வாசித்திருக்கும் உலகின் சிறந்த இலக்கியப் படைப்புகள் பெரும்பாலானவற்றிலும் என்னுடனோ, என்னுடைய வாழ்க்கையுடனோ, எனக்கு நெருங்கியவர்களின் வாழ்க்கையுடனோ, நான் கேட்டறிந்த செய்திகளுடனோ, என்னை பாதித்த விஷயங்களுடனோ என்று ஏதேனும் ஒரு விதத்தில் என்னுடன் தொடர்புபடுத்திக்கொள்ள ஏதோ ஒன்று இருக்கவே செய்திருக்கிறது. 
நான் பத்தாம் வகுப்பு படிக்கும்போதுதான் மாக்சிம் கார்க்கியின் ‘தாய்‘ நாவலை முதன்முறையாக வாசித்தேன். தொ.மு.சி.ரகுநாதனால் தமிழில் சிறப்பாக மொழிபெயர்க்கப்பட்ட அந்த ரஷ்ய நாவலை என்னுடைய சித்தப்பாவின் திருமண நாளுக்கு யாரோ பரிசளித்திருந்தார்கள். இன்றைக்கும் எங்கள் வீட்டுப் புத்தக அலமாரியில் அந்தப் புத்தகம் இருக்கிறது. அந்த வயதிலேயே என்னை மிகவும் ஈர்த்த நாவல் அது. ஆனால் எனக்கும் ரஷ்யாவுக்கும் என்ன தொடர்பு? அது தற்செயலாக நேர்ந்த தொடர்புதான். 
அந்த நாவலை ஒரு டிசம்பர் மாத இரவில் குளிருக்குக் கம்பளி போர்த்தியபடி என்னதான் இருக்கிறது இந்தப் புத்தகத்தில் என்று வாசிக்க ஆரம்பித்தேன். முதல் பத்து பக்கங்களை வாசித்து முடிக்கவே சிரமமாக இருந்தது. என்னால் அந்த உலகத்தைப் புரிந்துகொள்ள முடியவில்லை; தொடர்புபடுத்திக்கொள்ள முடியவில்லை. புத்தகத்தின் கனத்தைப் பார்த்தேன். நிச்சயமாக இதை நான் வாசித்து முடிக்கப் போவதில்லை என்று தோன்றியது. ஆனால் ஒரு குளிர்காலத்தில் வாசிக்க ஆரம்பித்ததால் கதையில் வரும் ரஷ்யாவின் குளிரும், இரவு நேரங்களில் புத்தகங்களை வாசிக்கும் மகனும், அவனுக்குத் தேநீர் போட்டுக் கொடுக்கும் தாயும், குளிர்காய்ந்துகொண்டே இரவு நேர விவாதங்கள் புரியும் நண்பர்களும்தான் என்னை அந்தப் புத்தகத்தை மேலும் தொடர்ந்து வாசிக்கத் தூண்டினார்கள்.
பள்ளியிலிருந்து வீடு வந்த பிறகு, வீட்டு வேலை எல்லாம் முடித்து, இரவு உணவருந்திய பிறகு படுக்கையில் ஜன்னலுக்கு அருகே அமர்ந்து, கம்பளி போர்த்திக்கொண்டு ‘தாய்‘ நாவலை வாசித்துக் கொண்டிருப்பேன். அந்த நாவலில் வரும் தாயைப் போலவே என்னுடைய அம்மா தேநீர் போட்டுக் கொடுப்பார். அப்போதெல்லாம் அந்தக் கதையில் வரும் பாவெலைப் போல என்னை உணர்வேன். என்னுடைய அம்மா எனக்கு பெலகேயா நீலவ்னாவாகத் தெரிவார்.
ஒரே வித்தியாசம், பாவெலுக்கு தொழிற்சாலையில் வேலை, எனக்குப் பள்ளி வாழ்க்கை. ஆசிரியர்களெல்லாம் அப்போது எனக்குப் பிரபுக்களாகத் தெரிந்தார்கள். இப்படி வேடிக்கையான தொடர்புகள் உண்டான பிறகு முழு நாவலையும் இரண்டு வாரங்களில் வாசித்து முடித்துவிட்டேன். அந்தக் கதையையும் கதாப்பாத்திரங்களையம் என் வாழ்வின் இறுதிவரை என்னால் மறக்க முடியாது. இன்றும்கூட இதையெல்லாம் நினைவிலிருந்தே எழுதிக் கொண்டிருக்கிறேன். வாசிப்புக்குள் நுழைபவர்கள் நிச்சயம் வாசிக்க வேண்டிய நாவல் இது.
சாதாரணர்களின் பாணன் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..