சித்தார்த்தன்

முந்தைய நாள் இரவு வரை பித்துப் பிடித்தவன் போலிருந்த சித்தார்த்தன் காலையில் தெளிவுடன் அரசவைக்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்த பொழுது அவனருகே வந்த யசோதரையிடம், "உன்னை விட்டுப் பிரிந்து சென்றுவிட எண்ணி இருந்தேன், யசோதரா." என்றான். 
"என்ன ஸ்வாமி சொல்கிறீர்கள்?" என்றாள் அதிர்ச்சியடைந்தவளாய் யசோதரா.
சித்தார்த்தன் கடந்த சில தினங்களாகவே அவனுக்கு ஏற்பட்டிருந்த மனக்குழப்பங்களையெல்லாம் மெதுவாக விளக்கி, "இவற்றையெல்லாம் உன்னிடம் சொல்வதற்கு அவசியம் ஏதுமில்லைதான். ஆனால் நேற்று நள்ளிரவு படுக்கையில் உறங்கிக் கொண்டிருக்கும்போது எனக்கு ஞானம் கிடைத்துவிட்டது என்பதை நீ மட்டுமாவது நிச்சயம் தெரிந்துகொள்ளல் வேண்டும், யசோதரா".
சித்தார்த்தன் கூறியதைக் கேட்டு உரக்கச் சிரித்தாள் யசோதரை. 
"ஏன் சிரிக்கிறாய் யசோதரா?" என்று மெல்லிய புன்னகையுடன் வினவினான் சித்தார்த்தன். 
"எத்தனையோ ஞானிகள் காடுகளிலும் மலை முலைகளிலும், ஆற்றங்கரைகளிலும், மரத்தடியிலும் தவம் செய்தும் கிட்டாத ஞானம் தங்களுக்கு மாத்திரம் படுக்கையிலேயே கிடைத்துவிட்டதை எண்ணிச் சிரித்தேன், ஸ்வாமி." என்றாள். 
"ஞானம் கிட்டிய பிறகே ஒருவன் ஞானி என்று அழைக்கப்பட வேண்டும் அல்லவா. குகைகளைத் தேடிச் செல்பவனும், மரத்தடியில் அமர்ந்திருப்பவனும் சாதாரண மனிதனே. எந்த ஞானியும் தனக்கு ஞான தரிசனம் கிடைத்த பிறகு குகையிலும் மரத்தடியிலும் அமர விரும்புவதில்லை. மரத்தடி ஞானம் எனக்கு படுக்கையிலேயே கிடைத்து விட்டது. உண்மையில் மரத்தடி எனக்கானது அல்ல, யசோதரா. அதன் கீழே என்னை அமர வைத்துப் பார்க்காதே." என்றான்.
தன்னுடைய எள்ளலுக்கு சினம் கொள்ளாமல் சாவதானமாக சித்தார்த்தன் பதில் சொன்ன விதம் யசோதரையை அதிர்ச்சியடைய வைத்தது. அவனுடைய முகத்தை உற்று நோக்கினாள். கோயில் சிற்பத்தை ஒத்ததாய் எந்தவித சலனமும் அற்று, பேரமைதியும் மெல்லிய புன்னகையும் சூடிய ஒளி பொருந்திய சித்தார்த்தனின் முகம் அவளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியது. 
"ஐயகோ, என்ன சொல்கிறீர்கள் ஸ்வாமி! மன்னிக்கவும். நீங்கள் எங்கோ சென்று ஞானியாக இருப்பதைக் காட்டிலும், எங்களுடன் இங்கு மகிழ்ச்சியாக இருப்பதையே விரும்புகிறேன்." என்று பதட்டத்துடன் பேசினாள்.
"அதைத்தான் செய்யப் போகிறேன் யசோதரா. நான் துறவு மனநிலையை எய்தியிருப்பதென்னவோ உண்மைதான். ஆனால், எல்லோரையும் துறப்பதல்ல துறவு. எல்லோரையும் நேசிப்பதே துறவு. இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதை நீ இப்போதிருக்கும் மனநிலையில் புரிந்துகொள்வது கடினம்." என்றான்.
"எனக்கும் அத்தகைய ஞானம் கிடைக்க என்ன செய்ய வேண்டும், ஸ்வாமி?"
"நீ என்னை ஸ்வாமி என்று அழைப்பதை முதலில் நிறுத்த வேண்டும். நீ என்னைச் சார்ந்திருப்பதைக் தவிர்க்க வேண்டும். என்னை உனக்கு மேலானவனாகப் பார்க்கலாகாது. என் வாழ்க்கையின் மீது எனக்கு இருக்கும் அத்தனை உரிமைகளும், உன் வாழ்க்கையின் மீது உனக்குண்டு. அதை நீ உணர வேண்டும். நீ உனக்கான தனித்துவத்துடன் வாழ வேண்டும். உண்மையில் எனக்குக் கிட்டிய ஞானம் உனக்குக் கிடைக்க வேண்டும் என்பதில்லை. எனக்கானது எனக்கு. உனக்கானது உனக்கு. மரத்தடியில் அமர்ந்திருப்பவர்களுக்கானது அவர்களுக்கு. உனக்கானது என்ன என்பதை நீயே கண்டடைவதுதானே சரி? உனக்கானதைக் கண்டடைவதற்கு முன்பு முதலில் 
நீ உன்னையே கண்டடைய வேண்டியிருக்கிறது, யசோதரா. எனவேதான் சொல்கிறேன், நீ நீயாகவே, அவர்கள் அவர்களாகவே, நான் நானாகவே இருத்தல் நன்று. சுயமே ஜெயம்."
"உண்மைதான் சித்தார்த்தரே. நீங்கள் பேசப் பேச எனக்குள் ஏற்படும் மாற்றங்களை உணர முடிகிறது." 
"நல்லது. உனக்குள் ஏற்படும் மாற்றங்களை அவதானி. பிறகு தோன்றியதைச் செய். நான் அரசவைக்குச் சென்று வருகிறேன்." என்று கூறிவிட்டு சித்தார்த்தன் அந்தப்புரத்தை விட்டு வெளியேறினான்.
சித்தார்த்தன் ஞானி ஆனதை ஆனந்தன் உட்பட அரசவையில் எவருமே உணரவில்லை. தன்னுடைய அன்றாடப் பணிகளை எந்தவித மாற்றமுமின்றி செய்து முடித்துவிட்டு மாலை அந்தப்புரத்துக்கு திரும்பியவனிடம் யசோதரையை எங்கு தேடியும் காண முடியவில்லை என்பதை அழுதுகொண்டே முறையிட்டார்கள் அவளுடைய அந்தப்புரத் தோழிகள். 
அவர்களுக்குத் தன்னுடைய பதிலைக்கூடச் சொல்லாமல், அத்தனையும் ஏற்கனவே அறிந்தவன் போல் துளிச் சலனமின்றி அவனுடைய அறைக்கு மென்மையாக நடந்து சென்ற சித்தார்த்தன், அங்கு படுக்கையில் உறங்கிக்கொண்டிருந்த குழந்தை ராகுலனின் அருகில் அமர்ந்தான். சிறிது நேர யோசனைக்குப் பிறகு அவனிடம் சன்னமான குரலில் பேசத் துவங்கினான்.
"உன் அன்னை நிச்சயம் திரும்பி வருவாள், ராகுலா. ஆனால், அப்போது அவள் முற்றிலும் மாறியிருப்பாள். அவளுடைய இன்றைய செயலுக்கு உன்னிடமும் என்னிடமும் மன்னிப்பு கேட்கவும் செய்வாள். நீயும் அவளைப் பின்தொடர்ந்து செல்வாய். அவள் எவற்றையெல்லாம் தவிர்க்கச் சொல்லி அவளுடைய சீடர்களுக்கு அறிவுறுத்தப் போகிறாளோ, அவை அத்தனையையும் அவளுக்குரிய சகல மரியாதைகளுடன் அவர்கள் நடத்திக் காட்டுவார்கள். மிகுந்த மதிப்புடன் அவள் அவமதிக்கப்படுவாள்; மறுப்புடன் ஏற்கப்படுவாள். அவளே நினைத்தாலும் நேரப் போவதையெல்லாம் தடுத்து நிறுத்த முடியாது. இதுவே உலக நியதி. வேறேதேனுமொரு பொருளற்ற பெயரால் அவளுடைய பக்தர்களால் பல்லாயிரம் ஆண்டுகள் அவள் கொண்டாடப்படுவாள். அவள் பெற்ற ஞானமோ அவளுடைய போற்றுதலுக்குரிய சீடர்களின் வியாக்கியானங்களாலேயே கொன்றழிக்கப்படும். நான் அவளுடைய கணவன் சித்தார்த்தனாக மட்டுமே அறியப்படுவேன். ஆனால் நான் பெற்ற ஞானமோ, யார் கண்களுக்கும் புலப்படாததொரு மறைநிலை மெய்ம்மையாக இந்தப் பிரபஞ்ச வெளியெங்கும் சுடர் விட்டு எரிந்துகொண்டிருக்கும்."

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..