வேர் பிடித்த விளைநிலங்கள்


வேதாகமத்தில் பதிமூன்றாம் அதிகாரத்திலிருந்து எனக்கு மிகவும் பிடித்த சில வரிகளைக் கடந்த வருடம் இங்கு பகிர்ந்திருந்தேன். நண்பர்கள் பலரிடம் பலமுறை அதைப் பற்றி சொல்வதுண்டு. சொல்வதற்குக் காரணமும் உண்டு. பொதுவாகவே நான் சந்திக்கும் இளைஞர்கள் அத்தனைப் பேரிடமும் பாகுபாடின்றி அவர்களின் வளர்ச்சிக்காக என்னுடைய வழிகாட்டுதல்களை வழங்குவதுண்டு. கேட்பதற்குக் காதுள்ளவர்கள் கேட்கிறார்கள். அதில் சிலர் செயல்படுத்தவும் செய்கிறார்கள். மற்றவர்கள் காதுள்ளவர்களின் வளர்ச்சியைப் பார்த்துப் பொருமுகிறார்கள்.அத்தகைய அனுபவம் அண்மையில்கூடக் கிடைத்தது.

‘நெய்தலின் பிள்ளை’ ஜோ டி குருஸ் அண்ணனுடைய தன்வரலாற்று நூலான "வேர் பிடித்த விளைநிலங்கள்" தற்போது வாசித்துக் கொண்டிருக்கிறேன். நான் மேற்சொன்ன பதிமூன்றாம் அதிகாரத்து வரிகளிலிருந்தே நூலைத் தொடங்கி இருக்கிறார். எனக்கும் அண்ணனுக்குமான பந்தம் ஆத்மார்த்தமானது. அவரும் நானும் பல புள்ளிகளில் இணைந்திருப்பதாக உணர்ந்ததுண்டு. தற்போது இந்தப் பதிமூன்றாம் அதிகாரப் புள்ளியிலும். இன்னும் பல புள்ளிகள் என்பது பக்கங்களைப் புரட்டப் புரட்டப் புலப்படுகிறது.

நூலின் தொடக்க வரிகளை உங்களுக்காகப் பிரத்யேகமாக இங்கு தருகிறேன்.


விவிலியத்தில் பல்வேறு உவமைகள் கூறப்பட்டாலும் என்னைக் கவர்ந்தது என்னவோ அந்த விதைப்பவன் உவமைதான். 

காலம் நெருங்கியபோது விவசாயி ஒருவன் தன் நிலத்தில் பயிர் செய்ய விதைகளோடு  புறப்பட்டானாம். பையில் வைத்திருந்த விதைகளை ஒவ்வொன்றாக ஊன்றிப் பார்க்க ஆசை. ஆனாலும் காலம் கடுகி நிற்கிறதே! கையால் அள்ளித் தூவிக்கொண்டே வருகிறான். தூவும் வேளையில் காற்றடிக்கிறது. மழை பொழிகிறது. இயற்கையின் இடர்பாடுகள். 

தூவிய விதைகள் பாறையில், பாதையில், ஓடையில் முட்செடிகளின் நடுவில், பண்பட்ட நிலத்தில் விழுகின்றனவாம். 

பாறையில் விழுந்தவை முளைக்கவேயில்லை. பாதையில் விழுந்தவை முளைக்கின்றன. ஆனால் வழிப்போக்கர்களின் காலில் மிதிபட்டு நசுங்கிவிடுகின்றன. ஓடையில் விழுந்தவை முளைத்து நிலைகொள்ள முடியாமல் அழுகி நீரோட்டத்தில் இழுத்துச் செல்லப்பட்டுவிடுகின்றன. முட்செடிகளின் நடுவில் விழுந்தவை முளைத்து சூழலால் நெருக்கப்படுகின்றன. 

பண்பட்ட நிலத்தில் விழுந்து முளைத்து பலன் தந்த விதைகள் பற்றி விதந்தோத ஏதுமில்லை. முட்செடிகளின் நடுவில் விழுந்த விதையும் முளைத்தெழுந்து நிற்கிறது. பலன் தருகிறது. அது எப்படிச் சாத்தியம்.

போராட்டங்களுக்கு மத்தியில் வாழும் வாழ்க்கையில்தான் ஒரு முழுமை தெரிகிறது. எங்கே, எந்த நிலத்தில் பிறக்கப் போகிறோம்? யாருடைய மகனாக, மகளாக என்பதை நாம் அறிவதில்லை. பிறப்பதற்காகக் கிடைக்கும் சக்தியும், பிறந்தபின் கிடைக்கும் பந்தமும், பாசமும், சூழலும், மொழியும், உறவும், பகையும், பொருளாதாரமும், சமூகமும், நம்முடைய இன்றைய வளர்ச்சியின் வேர்கள் ஆகிவிடுகின்றன. 

நான் முட்செடிகளின் நடுவில் விழுந்த விதை. இன்று அந்த விதைதான் முளைத்துச் செடியாகி, மரமாகி நிற்கிறது. அதன் ஒவ்வொரு அசைவும், வளர்ச்சியும் விழுப்புண்களோடு ஒவ்வொரு கிளையும், இலையும், பூவும், காயும், கனியும் இன்று கதை சொல்லும். காரணம் அவை அவமானங்களும், அலட்சியங்களும் அடியுரமாய் மாறிப்போனதால் வந்தவை.


எனக்கு ஒருமுறை அவர் எழுதியிருந்த கடிதத்திலும், "அவமானமும், அலட்சியமும்தான் நமக்கெல்லாம் அடி உரம்" என்று சொல்லி முடித்திருந்தார். இந்த நூல் வெளிவருவதற்கு முன்பே எழுதிய கடிதம் என்று நினைக்கிறேன். இது அவருடைய அனுபத்திலிருந்து உதித்த வரி என்பது அவர் பட்டியலிட்டிருக்கும் அவமானங்களைப் பார்த்தாலே தெரிகிறது. நம்மில் பலர் அதுபோன்ற அவமானங்களைச் சந்தித்திருக்கிறோம், அலட்சியங்களை எதிர்கொண்டுதான் வருகிறோம். எனவே அது நூலுக்காக மட்டும் எழுதப்பட்டப் பகட்டு வாக்கியம் இல்லை. சத்தியத்தில் தோய்ந்தெடுத்த மந்திரம். 

நண்பன் கார்த்திக் புகழேந்தியின் ஜீவா படைப்பகம் "வேர் பிடித்த விளைநிலங்கள்" நூலின் கிண்டில் பதிப்பைக் கொண்டு வந்திருக்கிறது. அதற்கு அவருக்கு நன்றி சொல்ல வேண்டும். நூலை எளிதாகத் தரவிறக்கி கிண்டிலில் வாசித்துக் கொண்டிருக்கிறேன்; கிட்டத்தட்ட முடித்துவிட்டேன். ஓவியங்களை, குறிப்பாக பாட்டியின் ஓவியத்தை யார் வரைந்தார்கள் என்று தெரியவில்லை. சிறப்பாக வந்துள்ளது.



முழுவதுமாக வாசித்து முடித்துவிட்டு எழுதியிருக்க வேண்டும். ஆனால் என்னால் இதை இப்போது எழுதிப் பகிராமல் இருக்க முடியவில்லை. மேலும் என்னைப் பெரிதும் கவர்ந்த, "ஆழிசூழ் உலகு" மற்றும் "கொற்கை" போன்ற அவருடைய புதினங்களைப் பற்றி எழுதவும், காணொளியில் பேசவும் விருப்பமிருக்கிறது. எந்தவொரு உண்மையான ஆசையும் நிறைவேறும் என்கிற நேர்மறைச் சிந்தையுடையவன் நான். இவையெல்லாம் வெறும் புதினங்களல்ல. ஆவண நூல்கள்.   

இலக்கிய நூல்களும், மேதைகளின் (தன்)வரலாற்று நூல்களும் கற்றுக் கொடுக்கும் பாடங்களுக்கு ஈடு இணையில்லை. உண்மையில் அவை நூறு சுய உதவி நூல்களை வாசிப்பதைவிட மேலானது என்பதை உணர்ந்துகொள்வதற்கு எனக்கு பதினைந்து வருட வாசிப்பு தேவைப்பட்டது. எனவேதான் என்னைச் சுற்றி உள்ள இளைஞர்களிடம் மனிதர்களின் வரலாற்று நூல்களையும், மனிதர்களையும் வாசியுங்கள் என்று அறிவுறுத்தி வருகிறேன். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன். நான் விதைப்பவன் மட்டுமே. நீங்கள் விளைநிலங்கள். விதைப்பவனிலும் விதையிலும் இல்லை. விளைநிலத்தில் ஒளிந்திருக்கிறது விருட்சத்தின் ரகசியம்.

கிண்டில் பதிப்பை வாங்க விருப்பமுள்ளோருக்காக  இணைப்பு:  அமேசானில் வேர் பிடித்த விளைநிலங்கள்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..