கதம்ப சாம்பார்

டந்த இரு தினங்களாக சமையலறையை என்னுடைய முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருக்கிறேன். இன்றைக்கு கதம்ப சாம்பார் செய்தேன். இது என்னுடைய சொந்த சமையல் குறிப்பு. பெயர்கூட நான் வைத்ததே. ஏற்கனவே அந்தப் பெயரை யாராவது பயன்படுத்தி இருந்தால் சண்டைக்கு வராதீர்கள். இந்தச் சோதனை முயற்சிக்கு ஒத்துழைப்புத் தந்த சாயிக்கும் ப்ரியாவுக்கும் நன்றி. 
கதம்ப சாம்பார் செய்துகொண்டிருக்கும் போதே இந்தக் குட்டி காணொளியை எடுத்து எங்கள் குடும்ப வாட்சேப் குழுவுக்கு அனுப்பினேன். அங்கு எனக்கு ஒரு நான்கைந்து "அப்ரென்டிசுகள்" இருக்கிறார்கள். அதிலும் எனக்கு வாய்த்த மைத்துனர்கள் இருக்கிறார்களே. சுடுதண்ணீருக்குக்கூட செய்முறை விளக்கம் கேட்கும் ரக சமையல் பழகுநர்கள். 
மகள் காயத்ரி, "கதம்பம் என்றால் என்ன சித்தப்பா?" என்று கேட்டாள். கதம்பம் என்றால் கூட்டுக்கலவை என்று பொருள். வீட்டிலுள்ள எல்லா காய்கறிகளையும் நறுக்கிப் போட்டு, குறைவான அளவு தேங்காய்த் துருவலைச் சேர்த்து, சாம்பார் பொடி மட்டுமல்லாது, மிளகு, தனியா, சீரகப் பொடிகளையும் அளவாகச் சேர்த்து சமைத்தேன். வழக்கமாக சாம்பாரில் சேர்க்கும் புளிக் கரைசலைத் தவிர்த்து விட்டேன். 
சாய் சாப்பிட்ட பிறகு, "அம்மாவின் சாம்பாரைவிட நன்றாக இருக்கிறது" என்று கூறினான். ப்ரியாவோ அம்மாவுக்கு வாட்சேப்பில் சற்று விரிவாகவே இப்படிச் செய்தியனுப்பி இருக்கிறாள். ஓய்வெடுக்கச் சொன்னால் எழுத்து!! வாசித்துப் பாருங்கள். 
- - - - - - - - - - - - - - - - -
ப்ரியாவின் வாட்சேப் செய்தி
- - - - - - - - - - - - - - - - -
இரண்டு நாட்களாகவே கடும் வயிற்றுவலி. ஏதும் அஜீரணத்தால் ஏற்பட்டதல்ல, இது அடி வயிற்றில். கிஞ்சித்தும் நகரக்கூட முடியாதபடி அவஸ்தை. என்னை ஒய்வெடுக்கும்படிச் சொல்லிவிட்டு சமையலையும், இதர பராமரிப்பு வேலைகளையும் தன் பொறுப்பில் எடுத்துக் கொண்டார் இளங்கோ. ஆக இரண்டு நாட்களாக நளபாகம்தான் வீட்டில். என்னாலும் சற்று ஆசுவாசமாக ஓய்வெடுக்க முடிந்தது. 
நேற்று அலுவலக பணிச்சுமையும் அதிகமாக இருந்ததனால் வழக்கமான சாம்பாரும் பொரியலும் செய்திருக்கிறார். என்னால் உண்ண முடியவில்லை. நான் நேற்று முழுவதும் திரவ ஆகாரங்களையே எடுத்துக் கொண்டிருந்தேன். ஆரஞ்சு சாறு போட்டுக் கொடுத்தார். 
இன்று மீண்டும் சாம்பாரே செய்ய ஆரம்பித்திருந்தார். எந்த பதார்த்ததைச் செய்ய ஆரம்பித்தாலும் அதன் ரிஷிமூலத்தையும் நதிமூலத்தையும் அலச ஆரம்பித்து விடுவார். இன்றும் அதே மாதிரி சாம்பார் உண்மையிலேயே மராட்டியர்களால்தான் அறிமுகபடுத்தப் பட்டதா அல்லது சங்க இலக்கியத்திலுள்ள கதம்ப சம்பாரம்தான் சாம்பாரா என தனக்குதானே வாதித்துக் கொண்டு சமையல் பணியைத் துவக்கியிருந்தார். ஏனெனில் அவர் சமைத்து நமக்கு உண்ண கிடைப்பதென்பது “செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும்“ என்கிற அளவில்தான். 😇
ஆனால் அவர் தயாரிக்கத் தயாரிக்க வீடு முழுவதுமே நறுமணமாகியிருந்தது. குளிர்சாதனப் பெட்டியிலிருந்த அத்தனை காய்கறிகளையும் நறுக்கியிருந்தார், கூடவே எல்லா பொடி வகைகளும் தேங்காய் துருவலும் வேறு இருந்தது. கதம்ப சாம்பார், என் சொந்த செய்முறையில் என்று பீதியைக் கிளப்பிக் கொண்டிருந்தார். இதென்னடா சாய்க்கு வந்த சோதனையென்று வலியோடு சேர்ந்து வயிறும் கலக்க ஆரம்பித்தது எனக்கு. ஆனால் அதன் தோற்றமும் மணமும் கவர்ந்திழுக்கத்தான் செய்தது. 
எல்லாம் தயாரானதும் இன்றாவது சாப்பிடு என்று அவர் வற்புறுத்தவே மறுக்க முடியாமல் நான் கொஞ்சம் சாப்பிடலாம் என ஆரம்பித்தேன். சற்றும் மிகையில்லாமல் சொல்கிறேன், ஒரு வாய் வைத்ததுமே அப்படியொரு புத்துணர்ச்சி அளித்தது. புளிப்பும், காரமும் உவர்ப்பும் மிகச் சரியான அளவில் இருந்தன. நல்ல மணம், நாவிற்கு இதமான சுவை. உண்மையில் இப்படியோரு சாம்பாரை நான் சுவைத்ததில்லை. 
பாலகுமாரன் அவர்களின் "உடையார்" நாவலில் பாண்டிய வீரர்கள் கோயில் பணிகளுக்காக சோழ நாட்டிற்கு வருகை தந்தபோது அவர்களுக்கு அளிக்கப்பட்ட உணவினை, "புளியும் காய்கறிகளும் கலந்து ஒரு குழம்பு; பெரிய இலைகளில் சோற்றைப் போட்டு அதன் மீது காய்கறி குழம்பை ஊற்றினார்கள்" என்று வர்ணித்திருப்பார். அதை வாசிக்கும்போது நமக்கு நாவில் எச்சில் ஊறும். 
இன்று இளங்கோவின் கதம்ப சாம்பருடன் சோற்றைக் குழைத்துச் சாப்பிட்டவுடன் "ஓ! அதுதானோ இது" என்று மூளையில் நியூரான்கள் கொக்கரித்தது. பாரம்பரியமும், பண்பாடும் நமது மரபணுக்களில் பொதிந்து காலங்காலமாக நம்முடனேயே வருவதுதானே. 
-

நான் தொண்டை நாடன். தொண்டை நாடு சான்றோருடைத்து என்பார்கள். இருந்தாலும் சோழ நாட்டுச் சோறு மரபணுவில் ஊறியிருக்கிறது என்கிறாள் ப்ரியா. மறுக்க மாட்டேன்.
 ஆனால் எனக்குச் சோழனின் சோறு நினைவுக்கு வரவில்லையென்றாலும் சிறுவயதில் என்னுடைய தாத்தாவின் தேநீர்க் கடைக்கு அருகே இருந்த சாலையோர உணவகத்து சாம்பாரின் மணத்தையும் சுவையையும் ஒத்ததாக இருந்தது. உண்மையில் இந்தச் சுவையைப் பல ஆண்டுகளாகத் தொலைத்துவிட்டு தேடியிருக்கிறது என் நாக்கு. இதுவும்கூட ப்ரியா சொன்ன அதே மரபணு சமாச்சாரம்தான். 

விரைவில் என்னுடைய கதம்ப சம்பாரத்துக்கான காப்புரிமைப் பட்டயத்துக்கு விண்ணப்பிக்க வேண்டும். ஏற்கனவே மராட்டியர்கள் சாம்பாரைத்
 தாங்கள் தமிழர்களுக்குக் அளித்த கொடை என்று பெருமையுடன் சொந்தம் கொண்டாடுவதால், கல்வெட்டுகள், சங்கப் பாடல்களிலெல்லாம் துப்பறிய வேண்டியிருக்கிறது. எனவே இதை லேசில் விட்டு விடக்கூடாது நண்பர்களே. அமெரிக்கர்கள் வருவதற்கு முன்பு விழித்துக்கொள்ள வேண்டும். கதம்ப சம்பாரம் பற்றி குறைந்தபட்சம் ஒரு காணொளியாவது விரைவில் செய்துவிட வேண்டியதுதான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..