சாட்சி


ன்னுடைய மகனின் யூட்யூப் சானலுக்காக "பைசைக்கிள் தீவ்ஸ்" திரைப்படம் பற்றி அவன்   பேசுவதைப் பதிவு செய்து கொண்டிருந்தேன். திரைப்படத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தவன் திடீரென்று தடம் மாறி, "உண்மையான கலை என்பதின் அடையாளம் என்ன?" என்று உணர்ச்சிப்பெருக்கோடு கலையைப் பற்றி பேச ஆரம்பித்தான். இது அவன்தானா என்கிற வியப்பு எனக்கு. ஒரு கட்டத்தில், "Audience should feel it in the skin!" என்று கைகளைத் தேய்த்துக் காண்பித்தான். பேசி முடித்த பிறகு கைப்பேசியில் பதிவு செய்வதை நிறுத்தி விட்டு, "This is your best, Sai. I had goosebumps!" என்றேன். புன்னகை ஏந்திய முகத்துடன் அவனுடைய வழக்கமான பாணியில், "ஓ.." என்று மட்டும் சொன்னான். அவன் அகவயமானவன். ஆனால் காணொளிகளைப் பார்த்தால் இந்தக் கூற்றை நீங்கள் நம்ப மாட்டீர்கள். தமிழ் பற்றி, அவன் வாசிக்கும் புத்தகங்கள் பற்றி, அவனுக்குப் பிடித்த திரைப்படங்கள் பற்றி, பயணங்கள், அதில் கிடைத்த அனுபவங்கள், SCRATCH தளம் போன்றவை பற்றியெல்லாம் காணொளிகளை வெளியிட்டு வருகிறான். ஆனால், காமெராவை நிறுத்திவிட்டால் போதும், அவன் முற்றிலும் மாறுபட்டதொரு சிறுவனாகி விடுவான்.
"பைசைக்கிள் தீவ்ஸ்" காணொளியை அவனுக்குக் காட்டலாம் என்று போட்டால், "This is your best, Sai" என்று என்னுடைய குரல் கேட்டது. எனக்கு பகீரென்றது. ஆம், நான் பதிவு செய்ய மறந்திருக்கிறேன். எனக்குப் பெருத்த ஏமாற்றம். அவனிடம் காட்டிக் கொள்ளவில்லை ஆனால் மன்னிப்புக் கேட்டேன். "பரவாயில்லை அப்பா, இன்னொரு முறை பேசுகிறேன்" என்றான். மீண்டும் பதிவு செய்தோம். நன்றாகவே பேசினான்.
"ஆனால் நான் முன்பு போல் பேசவில்லை என்று நினைக்கிறேன், அப்பா" என்று வருத்தத்துடனும் சோர்வுடனும் சொன்னான். அவனுடைய கண்களில் நீர்க் கோர்த்துவிட்டது. 
"பரவாயில்லை சாய். கம் ஆன். நீ பல மேடைகளில் ஒரே நாடகத்தில் நடிக்கிறாய் என்று வைத்துக்கொள்வோம். ஒவ்வொரு முறையும் உன்னுடைய முழு ஆற்றலையும் தந்து முழுத் திறமையையும் வெளிப்படுத்தி நடிக்க வேண்டும். ஆனால் ஒவ்வொரு முறையும் உன்னுடைய கலை அதன் உச்சத்தைத் தொடுவதற்கு சாத்தியமில்லை. அதற்கு ஆத்மார்த்தமாக முயல வேண்டும். அவ்வளவே. இன்னொரு விஷயம். என்னை உன் அப்பாவாகப் பார்க்காதே. நான் உன் பார்வையாளன்; ரசிகன். உன் கலை அதன் உச்சம் தொட்ட தருணத்தின் சாட்சியும் நானே. அதை நான் மிகவும் ரசித்தேன். அதை எண்ணி நீ மகிழ்ச்சியடைய வேண்டும். அரங்கத்தில் இருப்பவன் ஒரே ஒருவன் என்றாலும் பார்வையாளன் பார்வையாளன்தான். எண்ணிக்கையில் என்ன இருக்கிறது? உனக்கு ஒரேயொரு பார்வையாளன் இருந்தால்கூட அவனுக்காக நீ உழைக்க வேண்டும். இன்னும் சொல்லப்போனால், யாருமே இல்லையென்றாலும் உன் கலை வெளிப்பாட்டில் நீ உச்சம் தொட முயல வேண்டும். ஏனெனில், ஒரு கலைஞனுக்கு அவனுடைய கலையுடன் ஆத்ம பந்தம் கொண்டிருத்தலே முக்கியமானது. பார்வையாளன் இரண்டாம் பட்சம்தான். பாராட்டும், பரிசும் கிளைவிளைவுகள்தான். இதே காரணத்துக்காக, யாருமே பார்க்கவில்லையென்றாலும்கூட நீ பேசும் காணொளிகளை உன் சானலில் போட்டுக்கொண்டே இருப்போம். நீ கலையைப் பற்றியும், கலைப் படைப்புகளைப் பற்றியும், கலைஞர்களைப் பற்றியும் பேசிக்கொண்டே இரு. விட்டோரியோ டி ஸிகாவின் கலை உன்னை இந்நேரம் பூக்களைத் தூவி வாழ்த்தியிருக்கும். அதற்கு என் சிலிர்ப்பே சாட்சி."
காணொளிக்கான இணைப்பு: https://youtu.be/wVw_kzrxK8s


மேலும், நாங்கள் லூவன் நகரில் வசித்து வந்தபோது திருடு போய்விட்ட எங்களுடைய மிதிவண்டியைப் பற்றியும், தினமும் அலுவலகத்திலிருந்து வந்த பிறகு அவனுடன் மிதிவண்டியில் லூவன் நகரைச் சுற்றிய அனுபவங்களையும் அவன் நினைவுகூர்ந்து பேசியிருந்தான். அந்த மிதிவண்டியைப் பற்றிய சிறு காணொளிக்கான முகநூல் இணைப்பைத் தருகிறேன். பார்த்து ரசிக்கவும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..