ஸீரோ யூரோ


இன்று (05-மே-2020) கார்ல் மார்க்ஸின் பிறந்த நாள். 
இரண்டு வருடங்களுக்கு முன்பு மார்க்ஸின் இருநூறாவது பிறந்தநாளை விமரிசையாகக் கொண்டாடியது ஜெர்மனியிலுள்ள அவர் பிறந்த ட்ரிய(ர்) நகரம். ரணகளப்படுத்தி விட்டார்கள் என்று சொன்னால் இன்னும் பொருத்தமாக இருக்கும். 
கார்ல் மார்க்ஸ் உருவம் பொறித்த போக்குவரத்து சமிக்ஞைகளை நகரெங்கும் நிறுவியிருந்தார்கள். அதை இன்றுகூட ஒரு சில இடங்களில் காணலாம். மார்க்ஸ் சிவப்பு உருவத்தில் நிற்கச் சொல்லி கைகாட்டினால் நிற்க வேண்டும். அவருடைய பச்சை உருவம் நடக்க ஆரம்பித்தால் நாமும் அவரோடு சேர்ந்து நடக்க வேண்டும். 
கார்ல் மார்க்ஸ் பியர், கார்ல் மார்க்ஸ் வைன் என்று மார்க்ஸ் மதுபானங்களை எல்லாம் விற்றதைக்கூட என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. ஆனால், "டஸ் கப்பிடால்" புத்தகத்தைக் கையில் ஏந்தியிருக்கும் அந்த ரப்பர் மார்க்ஸ் வாத்து பொம்மையை எதற்கு விற்பனை செய்தார்கள் என்பது இன்று வரை எனக்கு விளங்கவில்லை. 
இவையனைத்துக்கும் மேலாக, அவருடைய சித்தாந்தத்திற்குச் சிறப்பு செய்யும் வகையில் ட்ரிய(ர்) நகர சுற்றுலாத்துறை "ஸீரோ யூரோதாள்களை வெளியிட்டார்கள். இந்தியாவிலிருக்கும் என் பள்ளித் தோழன் கோபி கேட்டிருந்தான் என்பதற்காக கார்ல் மார்க்ஸ் இல்லத்தில் சில தாள்களை வாங்கினேன். ஆமாம், காசு கொடுத்துத்தான். 
“நான் பெல்ஜியத்திலிருந்து வருகிறேன். அவர் நாடுகடத்தப்பட்ட போது எங்கள் நாடுதான் அடைக்கலம் கொடுத்தது. எங்கள் ஊரில் இருக்கும்போதுதான் உலகப் புகழ்பெற்ற 'பொதுவுடைமை அறிக்கையை' எழுதினார். அதற்காகவாவது ஏதாவது தள்ளுபடி கிடைக்குமா?" என்றேன். 
“வாய்ப்பே இல்லை. காசு கொடுத்து வாங்குங்கள். காசு இல்லையென்றால் இடத்தைக் காலி செய்யுங்கள்." என்று கண்டிப்பாகக் கூறிவிட்டார்கள். 
கார்ல் மார்க்ஸின் வீட்டுக்கு முன்பு நான் எடுத்துக்கொண்ட புகைப்படம். 
“என் தந்தை என்னைக் கம்யூனிஸ்ட் என்று சதா திட்டிக் கொண்டேயிருக்கிறார். அதற்காகவாவது பார்த்து செய்யுங்கள்.." என்று மன்றாடிய பிறகு, பெருந்தன்மையுடன் ஸீரோ யூரோ தாள்களை வைத்துக்கொள்வதற்கு இலவசமாக மார்க்ஸ் முத்திரை பதித்த பளபளப்பானதொரு கவரைத் தந்தார்கள். இது என்னடா மார்க்சிஸ்டுக்கு வந்த சோதனை என்று அதை வாங்கிக்கொண்டு நன்றி சொல்லிவிட்டு வீடு திரும்பி விட்டேன். 

மார்க்ஸின் வீட்டிலிருந்து மாதவனின் வீடு ஒரு இரண்டரை மணிநேரப் பயணம்தான். 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..