வால்பாறையின் வனப்பும் பல வண்ண வலிகளும்..

மீபத்திய என்னுடைய சுற்றுலாக்களிலேயே நான் மிகவும் ரசித்தது கடந்த ஜூலை மாதம் நாங்கள் மேற்கொண்ட வால்பாறை பயணம்தான். அப்போது அங்கு கடும் மழைப் பொழிவு. நண்பர்களும் உறவுகளும் போகவேண்டாம் என்று அறிவுறுத்தினார்கள். நண்பர் பாபு, “அதனால்தான் நீங்கள் போகவேண்டும்” என்றார். கிளம்பினோம். ஆங்காங்கே மரங்கள் விழுந்து கிடந்தன. வால்பாறையும் அதன் சுற்றுப் பகுதிகளும் பச்சை வண்ணப் போர்வை போர்த்தியிருந்தன. இடையிடையே அருவிகள், சீற்றத்துடன் ஓடிக்கொண்டிருந்த ஆறுகள், வன விலங்குகள், நன்கு பராமரிக்கப்பட்ட சாலையில் வழிந்தோடிக்கொண்டிருந்த மழைநீர் என்று பார்த்த மாத்திரமே என்னை ஆனந்த நிலைக்கு கொண்டு போனது இயற்கை. இங்கு நான் இணைத்திருக்கும் புகைப்படங்கள் அப்போது எடுத்தவை. கேமரா கைவசம் இல்லை. கைபேசியில் எடுத்ததுதான்.
இந்தப் புகைப்படம் வால்பாறையிலிருந்து அதிரம்பள்ளி நீர்வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் சோலையாறு அணைக்கருகே எடுத்தது. உரலிக்கல்லைக் கடந்து மலைப்பாதையின் ஒரு வளைவிலிருந்து வெளியே வந்த போது தெரிந்த இந்தக் காட்சியைக் கண்டவுடன், சாரதியிடம் வாகனத்தை நிறுத்தச் சொல்லிவிட்டு கீழே இறங்கினோம். இடப்புறம் நீர்த்தேக்கம், வலப்புறம் அணையிலிருந்து மிகுதித் தண்ணீர் வழிந்தோடும் வடிகால், எதிரே தெரிந்த மலை அடிவாரத்தில் அமைந்த வண்ணமயமான வீடுகள் என்று நாற்புறமிருந்தும் இயற்கையின் அழகு என்னை நசுக்கிக்கொண்டிருந்தது. என் மகன் சொல்வது போல் கண்முட்டைகள் பிதுங்கி வெளியே வந்துவிடுமளவுக்கு அழகு.
சோலையார் அணையைக் கடந்து மலகப்பாறை செக்போஸ்ட் வழியாக அதிரப்பள்ளி செல்லும் மழைப்பாதை மிகவும் அழகாக இருக்கும். இடையே காட்டு விலங்குகள்,  குறிப்பாக யானைகள் கடந்து செல்லவும் வாய்ப்புகள் அதிகம். அவ்வப்போது கனமழை வேறு. "அவசியம் போக வேண்டுமா?" என்றார் அம்மா. எண்ணம் போல் வாழ்வு. மலைப்பாதையில் மரங்கள் விழுந்து சாலை  மோசமான நிலையில் இருப்பதாகச் சொல்லி கேரள எல்லையிலேயே எங்களைத் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பிவிட்டார்கள். சோலையாறு அணைக்கு அருகே ஒரு தேநீர் கடைக்குச் சென்று சூடான தேநீர் அருந்தினோம். இந்தப் புகைப்படம் அங்கு எடுத்தது. நேற்றுகூட அங்கு போய் ஒரு தேநீர் பருக வேண்டும் என்று தோன்றியது. இப்போதும்.
தேயிலைத் தோட்டத்தினூடே பங்களாவுக்கு திரும்பச் சென்றுகொண்டிருக்கும் வழியில் இந்தக் கண்கவர் காட்சி கண்ணில் பட்டது. நான் சொல்லாமலேயே புரிந்துகொண்டு செல்வம் காரை நிறுத்தினார். காரிலிருந்து இறங்கிப் பார்த்தேன். லேசான மழைத் தூறல். தொலைவில் வரி வரியாய் பச்சை. அதனிடையே ஆங்காங்கே பல வண்ணத் திட்டுக்கள். தேயிலைத் தோட்டப் பணியாளர்கள் வெவ்வேறு வண்ண மழைச்சட்டைகளை அணந்துகொண்டு தேயிலை பறித்துக்கொண்டிருக்கும் அந்தக் காட்சி ஒரு ஓவியம் போன்று என் கண்முன்னே விரிந்தது. அதை அப்படியே படம் பிடித்தேன்.
மறுபுறம் சென்று இந்த மழையிலும் மும்முரமாகத் தேயிலை பறிப்புப் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தவர்களைச் சந்தித்து உரையாட ஆவலாக இருந்தது. போகும் வழியில் ஓரிடத்தில் வண்டியை நிறுத்தி அவர்களைப் பார்க்க அருகே சென்ற எனக்குப் பெரும் அதிர்ச்சி. அவர்கள் அணிந்திருந்தது நான் நினைத்தது போல் மழைச்சட்டையெல்லாம் இல்லை. வெறும் பழைய சாக்குப் பைகளை ஒன்றிணைத்துத் தைத்து ஆடையாக உடுத்தியிருந்தார்கள். ஏதோ அவர்கள் ஆடம்பரமான மழைச்சட்டைகளை அணிந்திருந்தது போலெண்ணி அந்தக் காட்சியை தொலைவிலிருந்து ரசித்துக்கொண்டிருந்த எனக்கு அது குற்றவுணர்ச்சியைத் தந்தது.
நாங்கள் காரிலிருந்து இறங்கியவுடனே தோட்டத்துக்குள் பணியாற்றிக் கொண்டிருந்தவர்கள் எங்களை இன்முகத்துடன் அங்கு வரச் சொன்னார்கள். எல்லோருமே பெண்மணிகள். தோட்டத்துக்குள் இறங்கிச் சென்று, "இலை பறிக்க எனக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா?" என்று கேட்டேன். உடனே ஒரு பெண்மணி உற்சாகத்துடன் என்னுடனேயே வந்து ஒரு குழந்தைக்குச் சொல்லிக்கொடுப்பது போல் வகுப்பெடுத்தார். பெரும் குதூகலத்துடன் இலை பறிக்க ஆரம்பித்த எனக்கு சிறிது நேரத்திலேயே தோள்பட்டைப் பகுதியில் வலியெடுக்க ஆரம்பித்தது. இதைச் செய்வதற்குத்தான் நகரங்களில் தினமும் உடற்பயிற்சியகத்துக்குச் செல்கிறோம் அல்லவா. ஆனாலும் நாள் முழுக்க இவர்களால் எப்படி இந்தப் பணியைச் செய்ய முடிகிறது என்று வியப்பாக இருந்தது.
பிறகு அந்தப் பெண்மணிகளோடு உரையாடிக்கொண்டிருந்தோம். அவர்களுடைய வாழ்க்கையைப் பற்றிச் சொல்வதற்கு அவர்களிடம் அவ்வளவு விஷயங்கள் இருந்தது. எல்லோருமே கைதேர்ந்த கதைசொல்லிகள். அடிப்படை வசதிகளற்ற வாழ்க்கை, காட்டு மிருகங்களின் அச்சுறுத்தல், பெருமழை, மண்சரிவு, குழந்தை வளர்ப்பு என்று நாம் தினந்தோறும் காலையில் அருந்தும் தேநீருக்குப் பின்னால்தான் எத்தனைப் பிரச்சினைகள். தொலைவில் தெரியும் வனப்பைத் தேடிச் சென்ற என் முகத்தில் அந்த வனப்பு பல வண்ணங்களில் தன்னுடைய வலிகளை ஓவியமாய்த் தீட்டிக்கொண்டிருந்தது.  இவற்றையெல்லாம் கதைகளில் படிப்பதைக் காட்டிலும் அவர்களே கூறக் கேட்பது வேறுவித உணர்வைத் தந்தது. அருகே என் மகனும் இவற்றையெல்லாம் உணர்ச்சியுடனும் ஆச்சரியத்துடனும் கேட்டுக்கொண்டிருந்தான். தூரத்து வனப்புக்குப் பின்னால் இருக்கும் வலிகளையும் அன்று அவன்  உணர்ந்திருப்பான். அதே சமயம் அவர்கள் பேச்சில் தெரிந்த உறுதியையும், நையாண்டித்தனத்தையும் அவதானிக்கும் போது அவர்கள் அத்தனை வலிகளையும் துணிவுடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொண்டதாகவே எனக்குப் பட்டது.
மாறாக நகர்ப்புறங்களில் வசிக்கும் பெரும்பாலானவர்களுடன் பேசும் போது அவர்கள் கண்களில் தெரியும் அச்சமும் பேடிமையும் எனக்குப் பெரும் சோர்வையே அளிக்கிறது. கேட்டால் "வாழ்வா? சாவா?" பிரச்சினை என்கிறார்கள். மடிக்கணினிப் பையை முதுகில் மாட்டிக்கொண்டு அலுவலகம் செல்லும் போது சிறுத்தையா பின்னாலிருந்து வந்து தாக்கப்போகிறது? பெருமழை பெய்து வீடுகள் சிதைந்துவிடப் போவதில்லையே? நான் முன்பொரு பதிவில் கூறியது போல், "பிரச்சினைகள் அல்ல பிரச்சினை. பிரச்சினைகளை எதிர்கொள்ளும் துணிவின்மையே மாபெரும் பிரச்சினை".

(தொடரும்..)

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..