எந்தரோ மகானுபாவுலு..


ம்மா என்னை வயிற்றில் தாங்கியிருக்கும் போது அப்பா தினமும் 'பாலமுரளிகிருஷ்ணா' அவர்கள் பாடிய 'பத்ராசல ராமதாஸ்' கீர்த்தனைகளை தினமும் இரவு நேரங்களில் போடுவாராம். ஆனால் நான் பிறப்பதற்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பு அந்த கேஸட் தொலைந்துபோயிருக்கிறது. அதன் பிறகு எனக்கு இரண்டு (அல்லது மூன்று) வயதாகும் போது அதே கேஸட்டை சென்னையிலிருந்து மீண்டும் வாங்கி வந்தாராம். அதில் வரும் முதல் பாடலின் இசையைக் கேட்டவுடன் விரைந்து சென்று டேப் ரிகார்டர் அருகே நின்றுகொண்டு பாட முயன்றேனாம்.
பல வருடங்கள் கழித்து கோயமுத்தூரில் ஒரு கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருந்த சமயம் ஒரு விடுமுறையில் நான் அதே ஆல்பத்தின் சி.டியை வீட்டுக்கு வாங்கி வந்தேன். அப்போது என் தந்தை என்னிடம் வியந்து, சிலாகித்து சொன்ன விஷயம் இது. நான் பிறப்பதற்கு முன்பிருந்தே என் இதயத்துக்கு மிகவும் நெருக்கமான, பிடித்தமானதொரு இசையாக இருந்திருக்கிறது பாலமுரளிகிருஷ்ணா அவர்களின் குரல்.


நேற்றிரவுகூட அவர் பாடிய 'எந்தரோ மகானுபாவுலு' பாடலை கேட்டுக்கொண்டிருந்தேன். எனக்கு தெலுங்கு ஓரளவிற்கு புரியும். ஆனால் பேச வராது. நான் கற்றுக்கொண்டுப் பேச விரும்பும் நான்கு மொழிகளில் அதுவும் ஒன்று. நானறிந்த தெலுங்கெல்லாம் கீர்த்தனைகளும் அவற்றுக்கான அர்த்தங்களும் மட்டுமே. அவர் பாடிய எத்தனையோ கீர்த்தனைகளில் 'பலுக்கே பங்காரமாயனா', 'ராமச்சந்த்ருலு நாபை' போன்றவை எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் 'ராமச்சந்த்ருலு நாப்பை' கீர்த்தனையை தமிழாக்கம் செய்யும் அளவுக்கு என்னை வசீகரித்த குரல் அவருடையது. உண்மையில் மொழிபெயர்ப்பு செய்யும் பொழுது அவருடைய குரலே எனக்கு தமிழ் வார்த்தைகளை எடுத்துத் தந்தது என்று சொல்ல வேண்டும். இந்தக் கீர்த்தனை பத்ராசல ராமதாசு அவர்களின் 'நிண்ட ஸ்துதி' (பக்தியோடு வசை பாடுவது) மிகையாக இருக்கப் பெற்றது. அதிலும் 'சீதம்மா செப்பவம்மா...' என்று கெஞ்சலோடு அவர் பாடுவதைக் கேட்டுப் பாருங்கள். தந்தைகள் எப்போதுமே பிடிவாதமாகத்தான் நிற்பார்கள். எனவேதான் அவ்வப்போது நாம் தாயின் கருணையை நாடி ஓடி விடுகிறோம். "கல்லைப் போல கடினம் உன் கணவரது இதயம், கனிய மறுப்பதேனோ நின் மணாளனின் மனம்" என்று அந்த வரிகளை மொழிபெயர்த்திருந்தேன். தந்தையிடம் நேருக்கு நேர் பேச முடியாதவர்கள் தாயிடம் சென்று வசைபாடிப் புலம்புவார்களே, அந்த ரகம் இந்தப் பாடல்.


சில நாட்களுக்கு முன்பு 'சுஜாதா கட்டுரை பற்றி எழுதிய பதிவில்' நான் கண்ட கனவு பற்றியும் அதில் குறிப்பிட்டிருந்தேன். அந்தக் கனவில் நான் இறக்கும் தருவாயில் கடைசியாக 'எந்தரோ மகானுபாவுலு அந்தரிக்கி வந்தனமுலு..' என்று கூறிவிட்டு உயிர் விடுவதைப் பற்றி எழுதியிருந்தேன். கனவாகவே இருந்தாலும், உயிர் விடும் தருணத்திலும் தாய்மொழி மறந்து இன்னொரு மொழியின் வரிகளை உதிர்க்கத் தோன்றுகிறதென்றால், அது இசையின் வலிமையே அன்றி வேறில்லை. மொழியைக் காட்டிலும் வலிமையானது இசையே. நான் துவண்டு விழுந்த தருணங்களில் எனக்கு வலிமை தந்த நல்லிசையின் ஊற்றுக்கண் இன்றைக்கு சட்டென்று தன்னை நிறுத்திக்கொண்டுவிட்டது. காற்றில் கலந்து விட்ட இசை இனி என் காதுகளில் எப்போதும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

(மறுபகிர்வு: நவம்பர் 22, 2016 அன்று எழுதியது)

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..