ஆனந்தம் தரும் ஆக்சிஜன் தொழிற்சாலை

கோடையில் ஒருநாள் தோட்டத்தில் நிறைய வேலை இருந்தது. இந்தியத் தம்பி ஒருவரும் உடனிருந்து உதவி செய்தார். அவர் இல்லையென்றால் அன்றைக்கு முடிப்பதாக இருந்த வேலையை செய்து முடித்திருக்க முடியாது. பிறகு தானும் வீட்டுக்குள்ளேயே காய்கறிகளை பயிரிட விரும்புகிறேன் என்று கூறினார். உடனே கடைக்குச் சென்று இரண்டு நீளமான பூந்தொட்டிகள் வாங்கி வந்தோம். சிவப்பு முள்ளங்கி விதைகளையும், கொஞ்சம் பூச்சட்டி மண்ணையும் கொடுத்து அனுப்பினேன். 

சிறிது நாட்கள் கழித்து, இந்தப் புகைப்படத்தை 'ரேடிஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்' என்கிற குதூகல குறுஞ்செய்தியோடு வாட்ஸாப்பில் பகிர்ந்து நன்றி தெரிவித்தார். இந்தப் புகைப்படத்தை பார்ப்பதற்கே பேரானந்தமாக இருந்தது.


நல்ல விஷயங்களைப் பகிர்வதன் நோக்கமே இதுதானே. நமக்கு நல்லது என்று தோன்றுவனவற்றை நாமே முதலில் செய்து, பரீட்சித்துப் பார்த்து, திரும்பத் திரும்ப சளைக்காமல் அவற்றின் பலன்களை பிறருக்கு பகிர்ந்துகொண்டே இருப்பதன் மூலமாக ஒரு மாற்றத்தை நிச்சயம் உருவாக்கிவிட முடியும் என்று நம்புகிறேன். என் மகனிடம், 'நீ ஆப்பிள் சாப்பிடுவது நல்லது' என்றோ, 'புத்தகம் வாசி' என்றோ நாங்கள் கூறுவதில்லை. அவனோடு அமர்ந்து உண்போம். அவனுடன் சேர்ந்து வாசிப்போம். குழந்தைகள் நம் சொற்களைவிட நமது செயல்களுக்கே அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். என்னைப் போன்ற சில வளர்ந்த மனிதர்களும் அப்படித்தான். ;-) செய்து காண்பிக்காத வரையில் அறிவுரைகளுக்கு மரியாதையில்லை. நான் முகநூலிலோ, வாட்சாப்பிலோ மேலனுப்பப்படும் செய்திகளை விட, நண்பர்களுடைய சொந்த அனுபவங்களுக்கும், சொந்தப் படைப்புகளுக்கும், அல்லது 'மெய்ப்பொருள்' கண்டுவிட்டு பகிரும் நண்பர்களின் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். மற்றவற்றை கண்டுகொள்வதில்லை.  


காய்கறி செடிகளை வளர்ப்பதற்குத் தோட்டமே தேவையில்லை. உங்கள் வீட்டு சமையலறையே போதும். இரண்டாவது படத்தைப் பாருங்கள். என்னுடைய நண்பன் ராகுல் அவனுடைய வீட்டுச் சமையலறையிலேயே கொத்தமல்லி, பச்சை மிளகாய், புதினா, வெங்காயத்தடல் என்று பல செடிகளை வளர்த்து வருகிறார். ராகுல் ஜார்கண்டு மாநிலத்தைச் சேர்ந்தவன். அவருடைய தந்தையின் மாடி வீட்டில் அவர் அமைத்துள்ள தோட்டத்தின் புகைப்படங்களை ஒருமுறை காண்பித்தான். தோட்டத்துக்குள் வீடு சிக்கிக்கொண்டிருக்கிறது என்று கூறுமளவிற்கு அத்தனை வகையான செடிகள். ராகுலின தந்தை ஒரு வித்தியாசமான மனிதர்; சுவாரசியமான மனிதர் என்று கூற வேண்டும். அவர் நடைப்பயிற்சி செய்யும் பொழுதெல்லாம் ஒரு பையில் விதைகளை எடுத்துச் செல்வாராம். போகிற வழியில், சாலையோரமாகவோ, வெட்டவெளியிலோ செடிகள் வளர்வதற்குச் சாத்தியமிருந்தால் அங்கெல்லாம் விதைகளைத் தூவிக்கொண்டே செல்வாராம். இப்படி ஒரு நல்லாத்மாவா என்று எனக்கு இதைக் கேட்டவுடன் பிரமிப்பாக இருந்தது. இந்தியாவிற்கு வரும்போது அவரை நிச்சயம் சந்திப்பதாக இருந்தேன், ஆனால் பெல்ஜியத்துக்கே வந்து தரிசனம் கொடுத்தார். 


இவை நான் வீட்டுக்குள்ளேயே வளர்த்து வரும் காலிபிளவர், முட்டைக்கோஸ் செடிகள். சற்று வளர்ந்த பிறகு, இவை தோட்டத்திற்குப் புலம்பெயர்ந்துவிடும். இவற்றுக்கு இடையே இருப்பது சோற்றுக்கற்றாழை. ஆங்கிலத்தில் 'ஆலே வேரா' என்று கூறுவார்கள். ஆல்-இன்-ஆல் அழகுராஜா என்றுதான் கூறவேண்டும். அத்தகையதொரு அருமருந்து. இதுபோன்ற செடிகள் அதிகம் உள்ள வீடு ஒரு "ஆக்சிஜன் தொழிற்சாலை". என்னைப் பொருத்தமட்டிலும் இது இன்றைய அத்தியாவசியத் தேவை, குறிப்பாக (சென்னை போன்ற) பெருநகரங்களில் உள்ள வீடுகளில்.


குறைந்தபட்சம் கொத்தமல்லிச் செடியையாவது வளர்க்கலாம். பெல்ஜியம் குளிருடன் போராடி வளர்ந்து வரும் இந்தியக் கொத்தமல்லிச் செடிகளைப் பாருங்கள். நம்மூரிலா வராமல் போய்விடும்? சில வருடங்களாகவே இந்த விதைகளோடும், செடிகளோடும், மரங்களோடும், பறவைகளோடும் உறவாடி வருவது பேரானந்தமாக இருக்கிறது. 'யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகமும்'.

உங்களிடமிருந்தும் விரைவில் செடிகளின்... இல்லை, ஒரே ஒரு செடியின் புகைப்படத்தையாவது எதிர்நோக்கிக் காத்திருக்கிறேன்.

Go Green dearies! 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..