சூப்பர்மேன் நினைவுப் படிகம்

(மாணவர்களுக்கான 'தினமலர் பட்டம்' இதழுக்காக எழுதியது)

சௌதாம்ப்டன் பல்கலைக்கழகத்தின் ஆப்டோ-எலக்ட்ரானிக்ஸ் ஆராய்ச்சி மையத்தைச் (Optoelectronics Research Centre) சேர்ந்த விஞ்ஞானிகள் பல பில்லியன் ஆண்டுகள் ஆனாலும் அழியாமல் நீடித்திருக்கும் திறன் கொண்ட தரவு சேமிப்பகத்தை உருவாக்கி டிஜிட்டல்  தரவு சேமிப்பில் ஒரு புதிய சகாப்தத்தைத் தொடங்கியுள்ளார்கள்.   

நன்றி: சௌதாம்ப்டன் பல்கலைக்கழகம்

அதிவேக (ஃபெமடோசெகண்ட்) லேசர் ரைட்டிங் மூலம் ஐந்து பரிமாணத்  தரவுகளை  கண்ணாடியில்  பதிக்கவும், மீட்கவும் செயல்முறைகளை உருவாக்கியுள்ளார்கள். குவார்ட்ஸ் கண்ணாடியில் உருவாக்கப்பட்ட நானோ கட்டுமானங்களினூடே இந்தத் தரவுகள் பதியப்படுகின்றன. ஒரு படிகத்தில் 360 டெராபைட்டு தரவு கொள்திறன் கொண்ட இந்த 5-D சேமிப்பகம் ஆயிரம் டிகிரி செல்சியஸ் வெப்பநிலையைத் தாங்கக்கூடிய அளவிற்கு வெப்ப உறுதித்தன்மை கொண்டது. அறை வெப்பநிலையில் 13.8 பில்லியன் ஆண்டுகள் வரை அசராமல் இருக்குமாம்.

நன்றி: சௌதாம்ப்டன் பல்கலைக்கழகம்

"மனித குலத்தைப் பற்றிய அத்தனை ஆவணங்களையும், தகவல்களையும் இந்தத் தொழில்நுட்பத்தின் மூலம் பாதுகாத்து எதிர்காலத் தலைமுறைகளுக்காக விண்வெளியில் வைத்துவிடலாம் என்பதை நினைத்தாலே சிலிர்ப்பாக இருக்கிறது." என்கிறார் சௌதாம்ப்டன் பல்கலைக்கழக பேராசிரியர் பீட்டர் கசான்ஸ்கி. இந்தத் தொழில்நுட்பத்தை மேலும் வளர்க்கவும், வணிகரீதியாக முன்னெடுத்துச் செல்லவும் தொழில்துறைப் பங்காளர்களைத் தேடி வருகிறது ஆராய்ச்சிக் குழு. புகழ்பெற்ற சூப்பர்மேன் திரைப்படத்தில் இதுபோன்றதொரு கண்ணாடி நினைவுப் படிகம் வரும். ஆதலால் இதற்கு 'சூப்பர்மேன் மெமரி கிறிஸ்டல்' என்றும் பெயர் வைத்துள்ளார்கள். 

நன்றி: வார்னர் புரோஸ்

உண்மையிலேயே சூப்பர்மேன் என்று தனியாக வேறு எவருமில்லை. நாம் நடந்து வந்தப் பாதையை சற்றுத் திரும்பிப் பார்த்தால் அது நாமேதான் என்பது நமக்குப் புரிய வரும். கிட்டத்தட்ட ஆறாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் காகிதமெல்லாம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே, மெசபடோமியாவில் களிமண்ணில் எழுத ஆரம்பித்தவன் மனிதன். களிமண் காகிதத்தில் எழுதப் பயில்வதற்கென்றே சிறப்பு பள்ளிக்கூடங்கள் எல்லாம் இருக்குமாம். அப்படித் துவங்கி பனையோலை, பேப்பரென்று தொடர்ந்து, 1.44 மெகாபைட்டு கொள்திறன் கொண்ட நெகிழ்வட்டு (Floppy Disc), பின்பு குறுவட்டு (Compact Disc) என்று வளர்ந்து தற்போது பில்லியன் ஆண்டுகள் நிலைத்து நிற்கக்கூடிய 360 டெராபைட் தரவு கொள்திறன் கொண்ட படிகத்தை உருவாக்கியுள்ள நாம்தானே சூப்பர்மேன்கள்? இந்தப் படிகத்திலுள்ள தரவுகளை நெகிழ்வட்டுக்குள் சேமிக்க வேண்டுமானால் கிட்டத்தட்ட 25 கோடி நெகிழ்வட்டுக்கள் தேவை. இப்படிப்பட்ட சூப்பர்மேன்களாகிய நம்முடைய தகவல்கள் அனைத்தையும் தாங்கி நம்முடைய நினைவகமாக என்றென்றும் இருக்கப்போகும் இந்தப் பெட்டகத்துக்கு 'சூப்பர்மேன் நினைவுப் படிகம்' என்னும் பெயர் நிச்சயம் பொருந்துமல்லவா?

எத்தனையோ ஆயிரம் வருடங்களாக நாம் கற்றவை, பெற்றவை, உருவாக்கியவை என அத்தனையும் பற்றிய அனைத்து தகவல்களும் நிலைத்து நிற்கவும், நமது நாகரிகத்தின் கடைசி ஆதாரத்தை பாதுகாக்கவும் இந்தத் தொழில்நுட்பம் நிச்சயம் உதவும் என நம்புகிறேன். 


நன்றி : தினமலர் 'பட்டம்' இதழ்

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..