ஃப்ளோய்பெர்க் கோபுரம்


பெல்ஜியத்தில் வழக்கமாக சுற்றுலா பயணிகள் அறிந்திராத பல சுவாரசியமான இடங்கள் உள்ளன. அவற்றில் சில இடங்களைப் பற்றி நானே அவ்வப்போது எழுதி வந்திருக்கிறேன். வார இறுதி நாட்களில் இதுபோன்ற இடங்களுக்குச் சென்று வருவது என் வழக்கம். இவற்றுக்கெல்லாம் வரலாற்று முக்கியத்துவம் என்று பெரிதாக எதுவும் இல்லையென்றாலும், இவையும் என்னை வசீகரிக்கவே செய்கின்றன. பெல்கியம் நண்பர்களே அறிந்திராத ஆஃப்பீட் சுற்றுலா தளங்கள் இவை. அந்தப் பகுதிகளில் குடியிருப்பவர்களில்கூட ஒரு சிலர் மட்டுமே அவற்றின் சுவாரசியமான பின்னணி அறிந்திருப்பார்கள்.

Artwork of Vlooyberg by Jan Mennens

சென்னையில் வசித்தபோது இந்தியாவுக்கு வரும் ஐரோப்பிய நண்பர்களுக்கு நான்தான் சுற்றுலா வழிகாட்டி. சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சுற்றிக் காண்பிக்க அழைத்துச் செல்வேன். அதிசயம் என்னவென்றால் என்னை விட அவர்கள் சென்னையில் நிறைய இடங்களை தெரிந்து வைத்திருந்தார்கள். இந்த தக்ஷின் சித்ரா என்கின்ற ஒன்றெல்லாம் இருக்கிறது என்றே எனக்கு ஒரு பெல்ஜியம் நண்பர் சொல்லித்தான் தெரியும். சென்னை அடையாரிலுள்ள தியாசபிகல் சொசைட்டி, நான் மூன்று ஆண்டுகள் தங்கியிருந்த வீட்டிலிருந்து மூன்று கிலோமீட்டர் தூரம்கூட இல்லை. அந்த இடத்துக்கே என்னை முதன் முதலில் ஒரு வெளிநாட்டுக்காரர்தான் அழைத்துச் சென்றார். இதை 'அண்மை இகழ்ச்சி' என்று சொல்லலாமா? அருகிலிருக்கும் அற்புதங்களும், அருகிலிருப்பவர்களின் அருமைகளும் என்றுமே நமக்கு தெரிவதில்லை. அதைப் புரிய வைப்பதற்கு தொலைவில் இருப்பவனின் உதவி நமக்குத் தேவைப்படுகிறது. கடந்த முறை இந்தியா வந்திருந்த போழ்து ஏற்காடு சென்று என் ஆத்ம நண்பரை சந்தித்தேன். அவர் பெல்ஜியத்தில் பல வருடங்கள் வாழ்ந்துவிட்டுத் தாயகம் திரும்பியவர். பெங்களூருக்குச் சென்று கல்லூரி நண்பன் ஒருவனையும் சந்தித்தேன். இருவருமே என்னிடம் சொன்னது - "இங்கிருப்பவர்களையே என்னால் பார்க்க முடிவதில்லை. ஆனால் எங்கோயிருக்கும் உங்களின் தரிசனம் அடிக்கடிக் கிடைத்து விடுகிறது". அவர்கள் இருவரிடமும் நான் சொன்னது - "அண்மை என்பது அண்மையுமில்லை. தூரம் என்பது தூரமுமில்லை." 

ஃப்ளோய்பெர்க் கோபுரத்துக்கு வருவோம். நான் வசிக்கும் தீனன் நகரிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவிலுள்ள டீல்ட்-விங்கே என்கிற குறுநகரத்தின் புறநகர்ப் பகுதியில், பரந்து விரிந்த வயல்வெளிகளுக்கு மத்தியில் கம்பீரமாக நிற்கிறது இந்த 'ஃப்ளோய்பெர்க் கோபுரம்'.




முழுவதும் இரும்பினால் ஆன இந்தக் கட்டுமானத்தின் பகுதிகளை இந்த இடத்திற்குக் கொண்டுவந்து ஐந்தே மணிநேரத்தில் நிறுவி விட்டார்களாம். இந்தக் கட்டுமானத்தை வடிவமைத்தது என்பது 'அதன் எடைக்கு எதிரான ஒரு போர்' என்று கூறுகிறார் இதை வடிவமைத்து உருவாக்கிய 'ஈவ் வில்லெம்' என்கிற கட்டமைப்புப் பொறியாளர். வலிமையாகவும், எளிதில் தளர்வடையாமலும், அதிர்வுகளைத் தாங்கக்கூடியதாகவும் வடிவமைப்பது என்பது அவருக்கு பெரியதொரு சவாலாக இருந்திருக்கிறது.



நவீன கட்டிடக்கலை ரசிகர்களை மட்டுமன்றி, அந்த வழியே செல்லும் வழிப்போக்கர்கள் எவரையும் கவர்ந்திழுக்கும் வசீகரம் கொண்ட இந்த படிக்கட்டுச் சின்னத்தின் டீல்ட்-விங்கே நகர் அமைந்துள்ள இந்த பிராந்தியம், 'ஹாகலாந்து' என்று அழைக்கப்படுகிறது. இது 'ஹோகலாந்து' என்கிற டச்சு வார்த்தையிலிருந்துதான் வந்திருக்க வேண்டும். ஹோகலாந்து என்றால் உயர்நிலம். 'நெதர்லாந்து' நாட்டுக்கும் இப்படித்தான் பெயர் வந்தது. நெதர் என்றால் 'தாழ்வான' என்று அர்த்தம். நெதர்லாந்து என்றால் தாழ்நிலம், கடல்மட்டத்திலிருந்து தாழ்வான பகுதியில் அமைந்துள்ள நிலம். லாந்துக்கு 'நாடு' என்றும்கூட ஒரு பொருள் உள்ளது.


உயர்நிலத்தின் மீதமைந்த இந்த பன்னிரண்டு மீட்டர் உயரமுள்ள கோபுரத்தின் மீதேறி அதைச் சுற்றியுள்ள வயற்காடுகளை பார்க்க வேண்டும். கீழே இறங்கி வர மனமிருக்காது. இந்த கோபுரத்தின் பின்னணியும் சற்று சுவாரஸ்யமானதுதான். நீண்ட நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் வயற்காடுகளுக்கு மத்தியில் நான்கு மீட்டர் உயரமுள்ள ஒரு மரத்தினாலான கோபுரம் இருந்ததாம். டீல்ட் நகரத்திலுள்ள இளைஞர்களெல்லாம் கூடிப் பொழுதுபோக்கும் இடமாக அது இருந்திருக்கிறது. ஏதோ ஒரு பிரச்சினையின் போது சில நாசவேலைக்காரர்கள் அந்த கோபுரத்தை தீவைத்துக் கொளுத்தி விட்டார்களாம். பல ஆண்டுகளுக்கு அந்தச் சிதைந்த கோபுரத்தைக் கூட அப்புறப்படுத்த மனமில்லாமல் அப்படியே விட்டிருக்கிறார்கள். அங்கு செல்லும் வழியையும் மூடிவிட்டிருந்திருக்கிறார்கள். அதன் பிறகு திடீரென்று நகராட்சியில் ஒரு முக்கியமான விவாதப் பொருளாகியிருக்கிறது டீல்ட்-விங்கே கோபுரம். கோபுரத்தை மீண்டும் உருவாக்கி டீல்ட் நகரின் பெருமையை நிலைநாட்டவேண்டும், இழந்த அழகை மீட்டுக்கொண்டு வரவேண்டும் என்று விவாதித்து இருக்கிறார்கள். விவாதத்தின் போது ஒருவர், 'ஏற்கனவே இருந்த கோபுரத்தை விட உயரமானதாகவும், வலிமையானதாகவும், தீயினால்கூட அழிக்க முடியாததாகவுமான ஒரு நினைவுச்சின்னத்தை' உருவாக்கவேண்டும் என்று ஆலோசனை கூறியிருக்கிறார். அவருடைய கனவுதான் இன்றைக்கு கம்பீரமாகவும், வலிமையானதாகவும் நின்று கொண்டிருக்கும் இந்த 'ஃப்ளோய்பெர்க் கோபுரம்'.



நான் ஏற்கனவே கூறியது போல், இதற்குப் பின்னால் எந்தவித வரலாற்று முக்கியத்துவமும் இல்லை. ஆனால் ஐரோப்பாவின் பல்வேறு நகரங்களின் வீதிகளில் நடந்து செல்லும்போதெல்லாம் பல இடங்களில் இதுபோன்ற எளிமையான நினைவுச்சின்னங்கள்தான் என் கண்களில் தென்பட்டு ஆவலைத் தூண்டுகிறது. ஊசிமுனையில் குத்தப்பட்ட வண்டு, நிர்வாணமாக படுத்துக்கொண்டிருக்கும் பெண்; தலையில் தண்ணியை ஊற்றியபடி புத்தகத்தைப் படித்துக் கொண்டிருக்கும் மாணவன், ரொட்டி விற்பவன், படகு ஓட்டுபவன் என்று சாதாரண மனிதர்களுக்கான நினைவுச் சின்னங்கள் இங்கு ஏராளம். நான் சாதாரணர்களைக் கொண்டாட விரும்புபவன். எனவேதான் இவை என்னை ஈர்க்கின்றன. 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..