ஒரு செரெண்டிபிட்டி அனுபவமும் சுஜாதாவும்

ந்த வாரம் ஒரு பன்னாட்டுக் கருத்தரங்கை ஏற்பாடு செய்திருந்தோம். பல நாடுகளிலிருந்து பேச்சாளர்கள் பரிந்துரைக்கப்பட்டு, அதிலிருந்து மொத்தம் எட்டு பேச்சாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தனர். பார்வையாளர்களும்கூட பல நாடுகளிலிருந்து வந்திருந்தார்கள். உலகம் முழுவதும் நேரடி ஒளிபரப்பு வேறு. கருத்தரங்குக்குச் சிறப்புப் பேச்சாளராக வந்திருந்த ஒரு பிரெஞ்சுப் பெண்மணி எங்களைக் கதிகலங்க வைத்துவிட்டார். அவருக்குப் பேசுவதற்குக் கொடுக்கப்பட்டிருந்த தலைப்பு "அலுவலகங்களை புதுமையாக வடிவமைத்து நவீனப்படுத்துவதின் மூலம் படைப்பாற்றலை மேம்படுத்துவது எப்படி?" என்பது. அவருடைய மேடைப் பிரவேசமே சற்று வித்தியாசமாக இருந்தது. ஒரு கருப்பு நீள் அங்கி அணிந்துக்கொண்டு, கையில் ஒரு ரோபோவோடு மேடையேறிய அந்தப் பெண்மணி, பிரான்சு நாட்டின் கட்டிடக்கலையைப் பற்றி பேச ஆரம்பித்தார். நெப்போலியனின் அரண்மனையில் மிகச் சிறப்பாக வடிவமைக்கப்பட்ட அவரது அலுவலகங்கள், பதினான்காம் லூயி கட்டிய வெர்சாய் அரண்மனை (Chateau de Versailles), ஃபான்டன்ப்லோ அரண்மனை என்று வரலாற்றிலிருந்து தன்னுடைய பேச்சை அவர்  தொடங்கியது மிகவும் சுவாரசியமாக இருந்தது. 

திடீரென்று அவருக்கு என்ன ஆயிற்றோ தெரியவில்லை. அவரது பேச்சில் சற்று உக்கிரம் கூடியது. தலைப்புக்குத் தொடர்பே இல்லாமல் குடியேற்றவாசிகளைப் பற்றிப் பேச ஆரம்பித்தார். அங்கிருந்து கால்பந்தாட்டக்காரர் ஸீனடீன் ஸிடானுக்குத் தாவினார். ஐரோப்பிய நாட்டு அரசாங்கங்களைச் சாடினார். பிறகு சற்றே அமைதியடைந்தவராய் சிறிது நேரம் நவீன அலுவலகங்களைப் பற்றிய காணொளி ஒன்றைக் காட்டி விளக்கினார். திடீரென்று மேடையில் முட்டிப் போட்டுக்கொண்டு அமர்ந்தவர் எங்கள் எல்லோரையும் எழுந்து நிற்கச் சொன்னார். அங்கிருந்தபடியே எங்கள் முன் விழுந்து வணங்கினார். பெல்ஜியத்திலிருப்பவர்கள் எல்லாம் மேதைகள் என்றார். Audacity, Serendipity, இன்ன பிற பதங்களை ஒரு இருபது முறையாவது சொல்லியிருப்பார். எல்லோரும் மிரண்டுபோய் அமர்ந்திருந்தோம். இதையெல்லாம் விளையாட்டுக்குச் செய்கிறாரா? சிரிக்கலாமா, கூடாதா? எப்போது சிரிக்கவேண்டும். எப்போது அமைதியாக இருக்க வேண்டும் என்று எனக்கு ஒன்றும் புரியவில்லை. அவருக்குக் கொடுக்கப்பட்டிருந்த நேரம் முடிந்திருந்தது. ஆனால், அவர் அதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை. முன் வரிசையில் அமர்ந்திருந்த நபர்களில் நான்கு பேரை மட்டும் மேடைக்கு வரச் சொன்னார். ஒரு பாடலைப் போட்டு நடனம் ஆட ஆரம்பித்தவர், அவர்களையும் தன்னுடன் சேர்ந்து ஆடச் சொன்னார். பாடல் என்ன தெரியுமா? பிரிட்னி ஸ்பியர்ஸின் "you better work bitch". பாடலின் கூடவே சேர்ந்து உரக்கப் பாடினார் (பேசினார்!). இப்படித்தான் நீங்கள் வேலை பார்க்கவேண்டும் என்று உரக்கக் கத்தி அறிவுறுத்தினார். பிறகு உணர்ச்சி மிகுந்த ஜெர்மானிய பாடல் ஒன்றைப் போட்டு அதை மொழிபெயர்ப்பு செய்தபடியே பாடிக்கொண்டு மெதுவாக ஆடினார். உண்மையிலேயே அந்தப் பாடல் நன்றாகத்தான் இருந்தது. ;-) பின்பு அரங்கத்தை மெதுவாக வலம் வந்தார். என்னருகே வந்தபோது எனக்குக் கொஞ்சம் நடுக்கமாக இருந்தது. மீண்டும் மேடைக்குச் சென்று அங்கு நடனமாடிக் கொண்டிருந்தவர்களிலேயே இளையவனும் அழகனுமான பிரேசில் நாட்டு ஆர்த்தூருடைய மேற்சட்டையைக் கழற்றச் சொல்லிவிட்டு, அவனுடன் சேர்ந்து டாங்கோ நடனம் (!!) போன்று எதையோ ஆட ஆரம்பித்தார். ஜெர்மானியப் பாடல் முடிந்தவுடன் அதற்கு கொஞ்சமும் தொடர்பில்லாத ஷகிராவின் பாடல் ஒன்று தொடங்கியது. பேச்சாளர் (??) எங்கள் எல்லோரையும் எழுந்து ஆடச் சொல்லி ஆணையிட்டார்.  

நான் அரங்கத்தைச் சுற்றி ஒரு நோட்டம் விட்டேன். ஒரு சிலர் ஷகிராவின் குரலில் மெய்மறந்து பரவசத்துடன் நடனமாடி க்கொண்டிருந்தனர். வேறு சிலர் நளினமாக  இடுப்பை ஆட்டியபடி பரதநாட்டியம் போன்று எதையோ செய்துகொண்டிருந்தார்கள். இன்னும் சிலர் கடுகடுப்புடன் அமர்ந்திருந்தார்கள். அதிலும் மூன்றாம் வரிசையில்  கைகளை இறுகக் கட்டிக்கொண்டு, கால் மேல் கால் போட்டபடி உட்கார்ந்திருந்த மனிதர் ஒருவரின் சிவந்த முகத்தைப் பார்ப்பதற்கே பயமாக இருந்தது. இதில் கொடுமையான விஷயம் என்னவென்றால், பேச்சாளர்கள் பேசப் பேச அவர்களுடைய பேச்சின் சாரத்தை ஓவியமாக வரைவதற்காக கேலிச்சித்திர ஓவியர் ஒருவரை ஏற்பாடு செய்திருந்தோம். அவர் என்னுடைய நண்பரின் மனைவி. அரங்கத்தின் இடது ஓரத்தில் வைக்கப்பட்டிருந்த வெள்ளைப்பலகையின் முன் அந்தப் பெண் என்ன வரைவதென்றே தெரியாமல் விக்கித்து நின்றுகொண்டிருப்பதைப் பார்ப்பதற்கே பரிதாபகரமாக இருந்தது.  

எனக்கென்னவோ வித்தியாசமாக இருக்கட்டும் என்பதற்காகவே கருத்தரங்கக் குழு உறுப்பினர் ஒருவர் இந்தப் பேச்சாளரைப் பரிந்துரைத்தாரோ என்கிற சந்தேகம் எழுந்தது. இருந்தாலும் அவருக்கு தைரியம் அதிகம்தான். அவர் இந்நேரம் கழிப்பறையை நோக்கி ஓடியிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. ஆனால், யோசித்துப் பார்த்தால் இதுவும் நன்றாகத்தானே இருக்கிறது. ஒரு சீரியஸான பேச்சை எதிர்பார்த்து வந்திருக்கும் நமக்கு பிரிட்னி ஸ்பியர்ஸின் பாட்டுக்கு நடனமாடும் வாய்ப்பு மீண்டும் ஒருமுறை வாய்க்கப் போவதில்லை. உண்மையில் இதைத்தான் படைப்பாற்றல் பெருக்குவதற்கான வழிமுறை என்கிறாரா அந்தப் பெண்மணி? அதிலும் சற்று உண்மை இருக்கவேதானே செய்கிறது. அருகிலிருந்த என் நெருங்கிய நண்பன் கூனிடம் (Koen), "இங்கு நடந்துகொண்டிருப்பது ஏதாவது புரிகிறதா உனக்கு?" என்றேன். என்னை முறைத்துப் பார்த்து, "டாட் ஃபெர்டோமெ" என்றான். அதை நான் மொழியாக்கம் செய்யப் போவதில்லை. அவனுக்கு இதெல்லாம் பிடிக்காது. இத்தனைக்கும் அவன் ஒரு பிளெமிங்கோ கிட்டாரிஸ்ட். ஆனாலும் பாருங்கள், அவனுடைய முகம்தான் கோபத்தைக் காட்டியதே தவிர, இடை என்னவோ ஷகிராவின் "Hips don't lie" பாடலுக்கு லேசாக அசைந்து கொண்டிருந்ததைக் காண முடிந்தது. 

"உங்களுக்கு கொடுக்கப்பட்ட நேரம் முடிந்துவிட்டது" என்று மூன்று முறை அட்டையை காண்பித்தாகிவிட்டது. ஒரு வழியாக இரக்கப்பட்டு பாடலை நிறுத்திய அந்தப் பெண்மணி, " நேரமாகிவிட்டது. நன்றி நண்பர்களே. மன்னித்து விடுங்கள். நேற்று இரவு சற்று அதிகமாகக் குடித்துவிட்டேன். இன்னும் போதை தீரவில்லை." என்றார். அப்போது கூனைத் திரும்பிப் பார்க்க எனக்கு தைரியம் வரவில்லை. அநேகமாக அவனுடைய குதிரைவால் கொண்டை தானாகவே அவிழ்ந்து விறைத்து வான்பார்த்து நின்றுகொண்டிருக்கக்கூடும் என்கிற எண்ணம் தோன்றியபோது எனக்குச் சிரிப்பு வந்தது. அடக்கிக்கொண்டேன். 

எல்லோரும் அரங்கத்தை விட்டு வெளியேறும்போது ஒரே சலசலப்பு. என்னுடைய தோழி ஒருவர், "மாதவன், serendipity என்றால் என்ன?" என்றார். அவனவன் கதிகலங்கிப் போயிருக்கும் நேரத்திலும் அவருக்கு இருந்த அந்த அறிவுப் பசி எனக்கு வியப்பளித்தது. "என்னைப் பொருத்தவரைக்கும் இந்த செஷனே serendipity-க்கு ஒரு நல்ல உதாரணம். ஆனால், கூன் இதை ஒத்துக்கொள்ள மாட்டான். எதற்கும் அவனிடமும் ஒருமுறை கேட்டுப் பாருங்கள்" என்றேன்.

இப்படிச் சொல்லிய பிறகு ஒருவித deja vu உணர்வு ஏற்பட்டது. மாலை வீட்டுக்கு வந்தவுடன் சுஜாதாவின் புத்தகம் ஒன்றைத் தேடிப் பார்த்தேன். நான் தேடியது கிடைத்துவிட்டது. சுஜாதா ஒரு வாசகரின் கேள்வி ஒன்றுக்கு இவ்வாறு பதிலளித்திருக்கிறார்.        

கேள்வி:
சார், சென்ற மாதம் ஆங்கிலப் புத்தகங்கள் படிப்பது எப்படி என்று கேட்டதற்கு முதலில் டிக்ஷனரி வாங்குங்கள் என்று சொல்லியிருந்தீர்கள். வாங்கிவிட்டேன். அடுத்து எங்கிருந்து தொடங்குவது?

பதில்:
நல்லது. டிக்ஷனரியை எடுத்து அதில் Serendipity என்பதற்கு அர்த்தம் பாருங்கள்.

இந்தக் கூர்மையைத்தான் நாம் சுஜாதாவோடு கொஞ்சம் தொலைத்துவிட்டோம் என்று நான் கூறினால் மறுப்பீர்களா? 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..