காந்தியம் தோற்கும் இடங்கள்



ரண்டு வருடங்களுக்கு முன்பு இந்தியா வந்திருந்தபோது மும்பை விமான நிலையத்தில் காந்தி சிலை ஒன்றைப் பார்த்தேன். நிஜமான காந்தியே வந்து அமர்ந்திருப்பது போல அவ்வளவு தத்ரூபமாக இருந்தது. நான் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நண்பர்களிடம் பகிர்ந்தேன். அவ்வளவுதான், என்னைத் தூக்கிப் பந்தாடிவிட்டார்கள். காந்தியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட என்னை காந்தியவாதியாக பாவித்தார்கள். காந்தியைப் பற்றி பல கோட்பாடுகளைக் கூறி எனக்கு அறிவொளியூட்டினார்கள். அவை பெரும்பாலும் வலைத்தளங்கள், திண்ணைப் பேச்சு, தேநீர்க்கடை விவாதங்களிலிருந்து அவர்கள் பெற்றுக்கொண்டவை. வரலாற்றுப் புத்தகங்கள் பக்கமே அவர்கள் தலைவைத்துப் படுத்திருக்கமாட்டார்கள். காந்தியின் சுயசரிதையை நிச்சயம் இவர்கள் தொட்டுக்கூடப் பார்த்ததில்லை என்பது அவர்கள் பேச்சிலிருந்தே தெரிந்தது. ஏனென்றால் இவற்றையெல்லாம் படித்திருந்தால் அவர்கள் விவாதத்துக்குத் துணைபுரிய அதில் இன்னும் நிறைய அம்சங்கள் இருக்கின்றனவே.

எனக்கும் சத்திய சோதனை படிக்கும்போது சில இடங்களில் சத்திய சோதனையாகதான் இருந்தது; அவர்மீதான விமர்சனங்கள் ஏராளம் இருக்கிறது. ஆனால், எந்த ஒரு மனிதனையும் முழுமையாக நிராகரிக்கவோ, முழுமையாக ஏற்றுக்கொள்ளவோ என்னால் முடிவதில்லை. ஏனெனில் முழுமை என்பது சாத்தியமேயில்லாத ஒன்று என்பதே என்னுடைய கருத்து. நான் செம்மைவாதியல்ல. ஆனால் ஒரு மனிதனைப் பற்றி முடிவெடுப்பதற்கு முன்பு அவனையும், அவனுடைய சூழலையும் புரிந்துகொள்ளும் முனைப்புடன் அவனை நேர்மையாக அணுக நினைக்கிறேன். அப்படித்தான் காந்தியையும் அணுகுகிறேன். 

உண்மையை விடப் பொய் மனிதர்களுக்கு மிகவும் பிடிக்கிறது. காரணம் பொய் பெரும்பாலும் அவர்களது அநுமானங்களுக்கு ஒத்துப்போவதாக இருக்கிறது. அவர்களுக்குச் சாதகமானதாக இருக்கிறது. அவர்களுக்குப் பிடித்தமானதாகவும் இருக்கிறது. இப்படி எதுவாக இல்லாவிட்டாலும், பொய் வளைக்கக்கூடியதாக இருக்கிறது. தமக்கு வேண்டியது போல் அவர்களால் வளைத்துக்கொள்ள முடிகிறது. இப்படி வளைக்கும் முயற்சியில் உண்மையின் அழகை சிறிது சிதைக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. உண்மையை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், வெறுக்கிறார்கள், நிராகரிக்கிறார்கள், முடிவில் விலகிச் சென்றுவிடுகிறார்கள். ஒரு கட்டத்தில் பொய்களே உண்மையாகவும் ஆகிவிடுகிறது. தனிமரமாய் இந்த வேடிக்கையை அது தரும் வலிகளைத் தாங்கிக்கொண்டு நின்று புன்னகைப்பதைத் தவிர, உண்மைக்கு வேறு வழியில்லை. 

ஜெயமோகன் அவர்கள் ‘காந்தியம் தோற்கும் இடங்கள்’ என்கிற தலைப்பில் ஆற்றிய உரை ஒன்றைப் பார்த்தேன். ஆழமான சிந்தனை, அதை அழகாக வெளிப்படுத்திருந்தார். அவரையுமே நான் என்னுடைய சொந்த விருப்பு வெறுப்புகளுக்கும், நான் கொண்டிருக்கும் கருத்து வேறுபாடுகளுக்கும் இடம் கொடாமல், புரிந்துகொள்ளவேண்டும் என்கிற முனைப்புடன் நேர்மையோடுதான் அணுகுகிறேன். படைப்பாளிகளைப் பற்றியும், பிற மனிதர்களைப் பற்றியுமான அவருடைய விமர்சனக் கட்டுரைகளில் எனக்குப் பிடித்த அம்சம் அதுதான். யாரைப் பற்றி எழுதினாலும், அந்த மனிதனின் வாழ்க்கையின் நீள, அகல, ஆழங்களில் முழுவதுமாக நீந்தி அனைத்தையும் எழுதுகிறார். நுனிப்புல் மேய்ப்பவர்கள் யார் யாருக்கு என்ன வேண்டுமோ அதை எடுத்துக்கொண்டு பாராட்டுகிறார்கள் அல்லது ஏசுகிறார்கள். நானுமே பல கட்டுரைகளை பல நேரங்களில் அப்படி நுனிப்புல் மேய்பவன்தான். ஆனால், ஆழமாகப் பார்த்திராத விஷயங்களில் என் மூக்கை நான் நுழைப்பதில்லை. அமைதியைக் கடைப்பிடிக்கவே  விரும்புகிறேன்.

காந்தியைப் பற்றிய அவருடைய உரை சிறிய உரைதானென்றாலும் பல விஷயங்கள் அதில் சுவாரசியமாக இருந்தது. குறிப்பாக ‘Decentralization’ பற்றி அவர் பேசியிருந்ததை மிகவும் ரசித்தேன். மேலாண்மை ஆலோசகர் என்கிற முறையில், இன்றைக்கு என்னுடைய வேலையே அதுதான். It is about reinventing the organizations by applying the principles of Decentralization and forming Self-organizing teams. அதைப் பற்றியெல்லாம் அவர் பேசியிருந்தது மிகவும் பிடித்தது.

இன்றைக்கு இத்தகைய சிந்தனைகளை இங்கே "ஆஹா", "ஓஹோ" என்கிறார்கள். அது சார்ந்து பல கருத்தரங்கங்களையும், பயிற்சி வகுப்புகளையும் நடத்தி வருகிறார்கள். உண்மையில் ஐரோப்பாவிலேயே அதிகம் சம்பளம் வாங்குபவர்கள் இந்தக் கொள்கைகளையெல்லாம் பேசிக்கொண்டிருக்கும் இந்த Agile Consultant-கள்தான். ஏனெனில் இந்த மாற்றங்களையெல்லாம் கொண்டுவருவதற்கு பகீரப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருக்கிறது. பல்வேறுபட்ட மனிதர்களுடன் உரையாடி, அவர்களுடைய கேள்விகளுக்கு தக்க விடையளித்து, பல தளங்களில் இந்த மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியிருக்கிறது. “Change or Become Extinct!” என்று கோஷங்கள் எழுப்பி புரட்சி செய்ய வேண்டியிருக்கிறது.  

இதையெல்லாம் மாற்ற இந்த காலத்திலேயே முடியவில்லை. காந்தி  அன்றைக்கே தொலைநோக்குப் பார்வையுடன் பேசியிருக்கிறார். "கிராம சுயராஜ்ஜியம்" பற்றி ஏற்கனவே படித்திருந்தாலும் அவருடைய உரையைப் பார்த்த பிறகே இப்படி என்னுடைய பணியுடன், இன்றைய நிறுவனங்களில் நிகழ்ந்து வரும் தவிர்க்கவே முடியாத மாற்றங்களுடன் இணைத்துப் பார்க்க முடிந்தது. ஒரு விஷயத்தைப் பற்றிய நம்முடைய புரிதல் ஒன்றாக இருந்தாலும், அது சார்ந்து அறிஞர்கள் எழுதுவதை வாசிக்கும்போதும், பேசுவதைக் கேட்கும்போதும் அது வேறொரு பரிமாணத்தைத் தந்துவிடுகிறது. 

நன்றி: ஷ்ருதி டிவி

இந்த உரையின் கடைசிப் பகுதியைப் பற்றி என்னுடைய பெல்கிய நண்பரிடம் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருந்தேன். "தீவிரவாத அமைப்புகளும், நிழலுலக அமைப்புகளும் இன்றைக்கு ஸ்லீப்பர் செல் கட்டமைப்புகள் மூலம் பரவலாக்கப்பட்டிருக்கிறது. ஆனால் காவல்துறையைப் பாருங்கள்? ஒரு மையப்படுத்தப்பட்ட அமைப்பு எப்படி பரவலாக்கப்பட்ட அமைப்பை எதிர்கொள்ளமுடியும்?" என்று விவேகமான கேள்வி ஒன்றை எழுப்பினார். இப்படியாக, காந்தியில் தொடங்கி தீவிரவாதத்தில் முடிக்கிறது இந்தப் பதிவு.   

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..