மொத்தக் குருதியாலும்..

ஜெயமோகனின் "இந்த இரவு இத்தனை நீளமானதென்று..." என்று ஒரு கவிதை. எனக்கு எட்டு வயதிருக்கும்போது அவர் எழுதிய கவிதை இது. என்னுடைய முப்பத்தெட்டாவது வயதில் அவருக்கு அதைப் பற்றி ஒரு கடிதம் எழுதினேன். அதை அவருடைய தளத்திலும் பகிர்ந்திருந்தார். அந்தக் கடிதம் உங்கள் வாசிப்புக்கு. 


ன்பு ஜெயமோகன்,

"தெரியும் நண்பரே.. புரிந்துகொள்ளமுடிகிறது." என்றுதான் இந்தக் கடிதத்தைத் தொடங்கவேண்டும், கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்குப் பிறகு தாமதமாக வரும் கடிதமாயினும். உங்களுடைய "இந்த இரவு இத்தனை நீளமானதென்று..." கவிதையை எப்போது வாசித்தாலும் அது என் மனதை ரணப்படுத்திவிட்டே செல்கிறது. ஆனால் அத்தோடு விடுவதில்லை, நான் ஒரு தந்தையாக, ஒரு கணவனாக எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று என்னையே சுயபரிசோதனை செய்துகொள்ளத் தூண்டுகிறது.   

2003-ஆம் ஆண்டு என்று நினைக்கிறேன். அப்போது நான் சென்னை கதீட்ரல் சாலையில் உள்ள சிட்டி வங்கியில் பணிபுரிந்துகொண்டு இருந்தேன். மாலைவேளைகளில் அலுவலகத்திலிருந்து நடந்து போகும் தொலைவிலிருந்த உட்லேண்ட்ஸ் ட்ரைவ்-இன் உணவகத்துக்கு உடன்பணிபுரியும்  நண்பர்களுடன் செல்வது வழக்கம். அன்றொரு நாள் மாலை நானும் என்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவர் மட்டும் சிற்றுண்டி அருந்தச்  சென்றோம். வேறு யாரும் இல்லாததால் அன்றைக்குச் சிறிது அந்தரங்கமாக உரையாடிக்கொண்டிருந்தோம். எப்பொழுது பார்த்தாலும் சண்டைப் பிடித்துக்கொண்டே இருந்த தன்னுடைய பெற்றோர்களைப் பற்றி மிகவும் வருத்தப்பட்டு பேசிக்கொண்டிருந்தார் நண்பர். 

சிறிது நேர யோசனைக்குப் பிறகு, "ஆனா, ஒருநாள் அவங்களுக்குள்ள இருந்த பிரச்சினைகள் எல்லாமே மொத்தமா முடிவுக்கு வந்துடிச்சிடா, மேடி" என்றார்.

"எப்படி?" என்று ஆர்வத்துடன் கேட்டேன். 

"என்னுடைய பன்னிரண்டாம் வகுப்பு இறுதித்தேர்வின் போது என்னுடைய அம்மா தன்னுடைய முடிவைத் தேடிக்கொண்டுவிட்டார். அதன் பிறகு சண்டைப்பிடிக்க என் தந்தைக்கு யாருமில்லை. அதனால் வீட்டில் அமைதி நிலவ ஆரம்பித்துவிட்டது." என்று கூறி அதிர்ச்சியளித்தார். அதற்கு மேல் அவருடைய முகத்தைப் பார்க்கக்கூட எனக்கு தைரியமில்லை. நிலைகுலைந்து போயிருந்தேன். அவரும் என்னைப் பார்ப்பதற்குச் சற்றுத் திணறித்தான் போனார். பிறகு, அவரே செயற்கையாகச் சிரிப்பை வரவழைத்துக்கொண்டு, "அத விடுடா.." என்று பேச்சை மாற்றிவிட்டார்.

இந்தப் பெற்றோர்கள் குழந்தைகளுக்கு எந்த பிரச்சினையும் வந்துவிடக்கூடாது என்று பொத்திப் பொத்தி வளர்க்கிறார்கள். ஆனால் அவர்களே ஒரு அதிமுக்கியப் பிரச்சினையாக இருப்பதை அவர்கள் உணர்வதே இல்லை. அவர்களுடைய மோதலும் பூசலும் குடும்ப ஒற்றுமையை சீர்குலைத்து எந்த அளவுக்கு குழந்தைகளை தீவிர உளச்சிக்கலுக்கு; அகச்சிக்கலுக்கு ஆளாக்குகிறது என்பது பற்றி துளி விழிப்புணர்வோ, அக்கறையோ அவர்களுக்கு இருப்பதாகத் தெரியவில்லை. உளவியல் ரீதியாக உண்மையில் இது குழந்தைகள் மீதான கொடிய வன்முறைப் பிரயோகம். 

"தன் மொத்தக் குருதியாலும் கேட்க விரும்பும் இந்த மகனின் வலியை எப்போது உணர்ந்துகொள்வீர்கள் இரக்கமற்ற பெற்றோரே?" என்று அத்தனைப் பெற்றோர்களையம் பார்த்துக் கேட்கவேண்டும் போலிருக்கிறது. 

இலக்கியம் எதற்கு, அதனால் என்ன பயன் என்று என்னுடைய உறவினர் இரண்டு வாரங்களுக்கு முன்பு கேட்டார். "இதற்குத்தான் உறவினரே. குறித்துவைத்துக்கொள்ளுங்கள். என் மகன் இதுபோன்றதொரு கவிதையை எழுதும் சந்தர்ப்பமே அவனுக்கு வாய்க்காது. அதுதான் இந்தக் கவிதையின் பலம், வெற்றி." என்று அவருக்கு இந்தக் கவிதையைப் பகிர்ந்திருந்தேன்.

இந்த இரவு இத்தனை நீளமானதென்று...

இந்த இரவு இத்தனை நீளமானதென்று எப்போதும் அறிந்திருக்கவில்லை.
எண்ணும்தோறும் நீளும் காலத்தின் விசித்திரத்தையும் அறிந்திருக்கவில்லை.
தனித்திருக்கும்போது எவரேனும் பிறரை நினைக்கிறார்களா என்ன?
தன்னை உண்ணும் விலங்கொன்று கண்டேன்
ஒருபோதும் ஆறாத பெரும்பசியுடன்.
நண்பரே, நண்பரே, இழந்துகொண்டே இருப்பதென்றால் என்னவென்று
தெரியுமா உங்களுக்கு?
சென்றநாட்களிலேயெ வாழ விதிக்கப்பட்டவனின் உடல்
நூறுமடங்கு எடைகொள்ளுமென்று தெரியுமா?
நண்பரே , இழந்துகொண்டே இருப்பதென்றால் என்னவென்று
தெரியாதா உங்களுக்கு?
சொல்லப்படாது போன சொற்கள் எப்போதும் முளைக்கின்றன
குருதியின் ஈரத்தில்.
அறியமுடியாத விஷயங்கள் எப்போதும் இருக்கின்றன நம்முடன்
நண்பரே, இப்போது அவர்களை நினைத்துக்கொள்கிறேன்.
அவர்களுக்கான உலகில் அவர்கள் இருக்கிறார்களென்று.
[இல்லாதவர்களாக எவரையேனும் நினைக்கமுடியுமா என்ன?]
அங்கே அவர்கள் கொண்டுசென்றதென்ன?
எஞ்சியவற்றையா? அடியில் தங்கியவற்றையா? உப்பில் விளைந்தவற்றையா?
எங்கிருக்கிறார்கள்? என்ன செய்கிறார்கள்?
இக்கணம் அறிய விரும்புகிறேன்,
என் மொத்தக் குருதியாலும் கேட்க விரும்புகிறேன்
இப்போதாவது அவர்கள் பேசிக்கொண்டார்களா என்று.
ஏன் அப்படி வெறுத்தார்கள் என்பதை
இப்போதாவது புரிந்துகொண்டார்களா என்று.

(ஜெயமோகன், 1987)

அன்புடன்,
மாதவன் இளங்கோ 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..