சித்தி (Siddhi)

லக்கியத்தில் எனக்கு மிகவும் பிடித்த வடிவம் 'சிறுகதை'. இலக்கியப் பரிச்சயம் இல்லாதவர்கள் சிறுகதை என்றால் சிறிய கதை என்றே நினைத்துக்கொண்டு இருக்கக்கூடும். 'சிறுகதை என்றால் என்ன?' என்பதை பல இலக்கிய மேதைகள் தெளிவாக ஏற்கனவே எழுதிவிட்டார்கள். தமிழில் எழுதப்பட்ட சிறந்த சிறுகதைகளை ஓரளவுக்கு வாசித்துவிட்டேன் போலிருக்கிறது என்று நினைத்துப் பெருமிதம் கொள்ளும் பொழுதெல்லாம் "கல்லாதது உலகளவு" என்று யாரேனும் வந்து என் தலையில் கனமாகக் குட்டுகிறார்கள். கடந்தமுறை அதைச் செய்தது சகோதரர் அகநாழிகை பொன்.வாசுதேவன் அவர்கள். 

வழக்கமாக இந்தியாவுக்கு வரும்போதெல்லாம் நிறையப் புத்தகங்கள் வாங்கி வருவேன். அதற்கென்றே தனியாக ஒரு பெட்டியை ஒதுக்கிவிடுவதுண்டு. ஏற்கனவே வாங்கி வந்த புத்தகங்களே நிறைய வாசித்து முடிக்கப்படாமல் இருந்ததால், அந்த முறை புத்தகக் கடைகளுக்கே செல்லவில்லை. இந்தியாவுக்கு வந்து புத்தகக் கடைகளுக்குப்  போகாமல் திரும்பியது அநேகமாக அதுதான் முதன்முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஆனால் வாசு அவர்கள் நிறைய புத்தகங்கள் கொடுத்து அனுப்பினார். "உங்களுக்காக நான் எடுத்து வைத்த இன்னும் சில புத்தகங்களைக் கொண்டு வர முடியாமல் போய்விட்டது" என்று வருத்தப்பட்டார். அவர் கொடுத்த புத்தகங்களில் ஒன்றுதான் - 'மா.அரங்கநாதன் கதைகள்'.


இதற்கு முன்பு மா.அரங்கநாதனின் ஒரே ஒரு படைப்பைக்கூட வாசித்ததில்லை. வாசி என்று வாசு கொடுத்திருக்கிறார் என்பதால் வாசிக்க ஆரம்பித்தேன். புத்தகம் என்னை உள்ளிழுத்துக்கொண்டது. ஆனால் மா.அரங்கநாதன் கதைகள் ஏன் இவ்வளவு நாட்களாக என் கண்களில் படவில்லை? ஏன் பேசப்படவில்லை? அல்லது நான் ஏன் கேள்விப்படவில்லை? என்றெல்லாம் யோசித்துக்கொண்டிருந்தேன். என் கேள்விகள் அத்தனைக்கும் அவருடைய சிறுகதை ஒன்றே பதிலாகக் கிடைத்தது.

'சித்தி' (Siddhi) என்கிற சிறுகதை அது.    

திலீப்குமார் உட்பட பல படைப்பாளிகளை ஜெயமோகன் அவர்களின் திறனாய்வாளன் பட்டியல் மூலமாகவே அறிந்துகொண்டேன். கிட்டத்தட்ட 260 சிறுகதைகள் அடங்கிய பட்டியல் அது. சிறுகதைகளை வாசித்த பிறகு அந்தப் படைப்பாளிகள் சிலரின் நூல்களை வாங்கி வாசித்தேன். எஸ்.ராமகிருஷ்ணன் அவர்களும் தமிழின் நூறு சிறந்த சிறுகதைகளைத் தெரிவு செய்து பட்டியலிட்டிருக்கிறார். அண்மையில் டிஸ்கவரி பேலஸ் அந்தச் சிறுகதைகள் அத்தனையும் அடங்கிய தொகுப்பு ஒன்றையும் வெளியிட்டிருக்கிறது. ஒருவேளை இந்தப் பட்டியலில் மா. அரங்கநாதனை விட்டுவிட்டார்களா என்று மீண்டும் எடுத்துப் பார்த்தேன். தவறு என்னிடமே. பட்டியலில் இடம்பெற்றிருந்த மா. அரங்கநாதன் கதைகளை நான்தான் வாசிக்கத் தவறியிருக்கிறேன். 

அந்தச் சிறுகதையை தட்டச்சு செய்து நண்பர்களிடம் பகிர்ந்துகொள்வதற்கு சோம்பலாக இருந்ததால், இணையத்தில் தேடினேன். எப்போதும்போல் அழியாச்சுடர்கள் தளம் கைக்கொடுத்தது.  சிறுகதை என்றேன். சிறிய கதையும்கூட. வாசித்துப் பாருங்கள். 


கதையில் வரும் "நான் எனக்காவே ஓடுகிறேன்" என்கிற வரி என்னுடைய கல்லூரி நண்பன் கிருஷ்ணனை நினைவுபடுத்தியது. ஓடுவதற்காகவே ஓடிக்கொண்டிருந்தவன் அவன். கல்லூரி நாட்களில் சனிக்கிழமை இரவுகளில் பெரும்பாலும் திரைப்படம் பார்க்கச் சென்றுவிடுவோம். மற்ற நாட்களில் பத்து மணிக்கெல்லாம் விடுதிக்குத் திரும்பிவிட வேண்டும் என்கிற விதி இருந்தது. படம் பார்த்துவிட்டு எல்லோரும் பேருந்து பிடித்து விடுதிக்கு திரும்பி வருவோம். கிருஷ்ணன் மட்டும் ஓடியே விடுதிக்கு வந்து சேர்ந்துவிடுவான். பல சமயங்களில் பேருந்தின் பின்புறக் கண்ணாடி வழியே அவன் ஓடி வருவதைப் பார்த்து, "யாருக்காக இந்த நள்ளிரவில் ஓடிக்கொண்டு இருக்கிறான்? எதற்கு இப்படி  ஓடுகிறான்? இதனால் இவனுக்கு என்ன லாபம்?" என்று எண்ணிச் சிரித்ததுண்டு; வியந்ததுண்டு. போக்குவரத்து சமிக்ஞைகளில் பேருந்து நிற்கும் பொழுதெல்லாம் எங்களைக் கடந்து செல்லும் அவனைப் பார்த்து உரக்கக் கத்துவோம். அத்தருணங்களில் ஒரு புன்னகையை வீசிவிட்டு கடந்து சென்ற அவன் இன்றைக்கும் மாறவில்லை. மாறியது இடம் மட்டுமே. கோவைக்கு பதிலாக மஸ்கட்டில் தினமும் பன்னிரண்டு கிலோமீட்டர் ஓட்டம் என்று இப்படி ஓடிக்கொண்டே இருக்கும் அவன் மீதான வியப்புக்கும் விடையளித்தது சித்தி.  


நண்பன் கிருஷ்ணன்

ஓடுவதற்காகவே ஓடுவது. ஆடுவதற்காகவே ஆடுவது. எழுதுவதற்காகவே எழுதுவது. வாழ்வதற்காகவே வாழ்வது. இன்றைக்கு நாம் செய்துகொண்டிருப்பதெல்லாம் இவையல்ல. அதற்கு நேர்மாறாக, நமக்கு வேண்டுவதெல்லாம் பரிசுகள், விருதுகள், இலக்குகள்.

நாட்டிய சாஸ்திரத்திலிருந்தும் சில வரிகள் நினைவுக்கு வருகிறது: 

"யதோ ஹஸ்த ததோ திருஷ்டி
யதோ திருஷ்டி ததோ மனா 
யதோ மனஸ் ததோ பாவா
யதோ பாவா ததோ ரசா"

"கைகள், கண்கள், மனம், பாவம் இவை அனைத்தும் ஆற்றும் கலையில் கலந்திருக்கும் நிலையில்தான் ரசசித்தி கிட்டும்". இது நாட்டியக் கலைக்கு மட்டும் அல்ல, கிட்டத்தட்ட எல்லா செயல்களுக்கும் பொருந்தும் - எழுத்து உட்பட. நாம் செய்யும் செயலில் கலையில் சித்தி உண்டாக இந்த விழிப்புணர்வும், ரசனையும் முக்கியம் அன்றோ?

மா. அரங்கநாதன் அவர்களுடைய தளத்தைக் கண்டடடைந்து அவரது நேர்காணல் ஒன்றைப் பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன ஒரு கம்பீரமான குரல்!


தமிழ் எழுத்துலகில்தான் எத்தனை மேதைகள். அவர்களுடைய எண்ணங்களில் ஊற்றெடுத்து, தூரிகைவழி அருவியாகக் கொட்டும் எழுத்து, ஒரு வற்றா நதியாக ஓடிக்கொண்டே இருக்கிறது. அள்ளிப் பருகத்தான் ஆட்களில்லை. ஆயினும் அதற்குக்கெல்லாம் அவர்கள் கவலைப்படுவது இல்லை. அவர்கள் வேண்டுவது சித்தி மட்டுமே.

கவலைப்படவேண்டியது நாம்தான். இந்தப் புத்தகத்தைக் கொடுத்தபோது, தான் அவரைச் சந்திக்கப் புதுவைக்குச் செல்வதாக வாசு கூறினார்; என்னையும் அழைத்தார். ஆனால் என்னால் போக முடியவில்லை. அவரோடு சென்றிருக்கவேண்டும் என்று இப்போது தோன்றுகிறது. இனி விரும்பினாலும் நான் அவரைச் சந்திக்க முடியாது. 

அவர் சித்தியடைந்துவிட்டார். 


கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..