ஸ்டீபன் ஹாக்கிங்கும் என் வீட்டுத் தக்காளிச் செடிகளும்..

டந்த வருடம் கோடை விடுமுறைக்கு தாயகத்துக்கு வந்திருந்த பொழுது, இங்கே என் தம்பிகள் அருணும், கார்த்திக்கும் தினமும் வந்து எங்கள் தோட்டத்திலுள்ள செடிகளுக்கு நீரூற்றி, பொறுப்பாக கவனித்துக் கொண்டார்கள். நான் ஐந்து வாரங்கள் கழித்து ஊரிலிருந்து திரும்பிவந்து பார்த்த பொழுது எல்லா செடிகளும் நலமாகவே இருந்தன - தக்காளிச் செடிகளைத் தவிர. அவற்றிற்கு மட்டும் என்ன ஆனதோ? ஆனால், அவைகளிடம்தான் நானும் என் மகனும் அன்றாடம் மாலைவேளைகளில் பேசுவதை வழக்கமாகக் கொண்டிருந்தோம். அலுவலகத்திலிருந்து மாலை வீட்டுக்குத் திரும்பியவுடன் முதலில் தோட்டத்திற்குத்தான் செல்வேன்.  

'Hey Boys!' என்றுதான் அவர்களை அழைப்பேன். அவர்கள் வளர வளர அவர்களோடு நானும் என் மகனும் செல்ஃபியெல்லாம்  எடுத்திருக்கிறோம். ஆனால் அன்று அவர்கள் இருந்த நிலையை பார்த்தவுடன் அனைவருமே வருத்தம் அடைந்தோம். 'My Boys!!' என்று சோக ஸ்மைலியோடு நண்பர்களுக்குச் செய்தி அனுப்பினேன். நண்பர்களுக்கும் காரணம் தெரியவில்லை. "தெரியவில்லை மேடி. இரண்டு நாட்களுக்கு ஒருமுறை வந்து நீரூற்றினோம். ஆனால் தக்காளிச் செடிகள் மட்டும் செத்துவிட்டது போல் தெரிகிறது." என்றார்கள்.

 ஊரிலிருந்து திரும்பி வந்ததால் ஏற்பட்ட வெறுமையோடு இதுவும் சேர்ந்து பெரும்சோர்வை ஏற்படுத்தியது. அதன் பிறகு நான்கு நாட்களுக்குத் தோட்டம் பக்கமே போகவில்லை; போகப் பிடிக்கவில்லை. அப்போதுதான் இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் நினைவுக்கு வந்தார். இருபத்தோரு வயதில் அவருக்கு 'Motor Neurone Disease' வந்து உடல் முழுவதும் செயலிழந்து போனது. "இன்னும் இரண்டு வருடங்கள்தான் அவர் உயிரோடு இருப்பார்" என்று கூறி மருத்துவர்கள் கைவிரித்துவிட்டனராம். ஆனால்,  ஸ்டீபன் ஹாக்கிங் ஒரு நம்பிக்கைவாதி. தன்னம்பிக்கையின் உச்சம் எது என்று யாராவது என்னிடம் கேட்டால், தயங்காமல் அவருடைய வாழ்க்கையைத்தான் காட்டுவேன். இன்றைக்கு அவருக்கு வயது எழுபத்து நான்கு. அவரால் பேச முடியாது, நடக்க முடியாது - எதற்கு இப்படி விவரித்துக்கொண்டு - அவரால் அவரது உடலைக்கொண்டு எதையும் செய்ய முடியாது. அவரது வலது பக்க கன்னத்தின் தசைகளின் ஒரு பகுதி மட்டும் சற்று செயல்படும். அதன் மூலமாக அவர் தட்டச்சு செய்வதை அவருக்கென்றே பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்டு, அவருடைய சக்கர நாற்காலியோடு இணைக்கப்பட்டுள்ள கணிப்பொறி மற்றவர்களிடம் வாசித்துக் காண்பிக்கும். அவருக்குப் பிடித்தமான குரலை  அவரே தெரிவு செய்துள்ளார். இந்தக் குரல்தான் அவருக்கும் உலகத்துக்குமான ஒரே தொடர்பு.

ஒருமுறை அவரிடம், "எப்படி இத்தனை வருடங்கள் இதுபோன்ற உடலோடு வாழ்ந்து வருகிறீர்கள்?" என்று கேட்ட போது அவர் கூறியது, "While there is life, there is hope". அவருடைய இந்த வாசகம்தான் ஒரு காலகட்டத்தில் எனக்கு எல்லாமாயும் இருந்திருக்கிறது. அதைப் பற்றி "எனது போராட்டமும் சில படிப்பினைகளும்" கட்டுரையிலும் எழுதியிருக்கிறேன். அன்றைக்கு இந்த வாசகம் மீண்டும் நினைவுக்கு வந்தவுடன், நேரே தோட்டத்துக்குச் சென்று உயிர் மட்டுமே ஒட்டிக்கொண்டிருந்த தக்காளிச் செடிகளுடன் பேச ஆரம்பித்தேன். அவற்றை சுத்தம் செய்ய ஆரம்பித்தேன். நீரூற்றினேன். தினமும் பேசினேன். நம்புங்கள், எந்த உரமும் இடவில்லை. இரண்டு வாரங்கள்கூட ஆகியிருக்காது ஆனால் செடிகள் பச்சை பசேலென்று மீண்டும் வளர்ந்தன. நாற்பதுக்கும் மேலாக தக்காளி காய்த்தது. கீழேயுள்ள இந்த இரண்டு படங்களையும் பாருங்கள்: 


(before)


(after)

ஆம். தாவரங்களுக்கும் உணர்விருக்கிறது. நான் அவற்றை நேசித்தது போலவே அவையும் என்னை நேசித்திருக்கலாம். அதைச் சற்று தாமதமாகவே உணர்ந்தேன். அது மட்டுமல்ல. இதிலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் ஒன்று இருக்கிறது: "நம் வாழ்க்கை எத்தனை மோசமாக வேண்டுமானாலும் இருக்கலாம். ஆனால் வாழ்வு என்று ஒன்று இருக்கும் வரை, எதற்கும் சாத்தியம் இருக்கிறது. அந்த வாழ்க்கையின் மீதும், உங்கள் மீதும் நம்பிக்கை வையுங்கள். மற்றதைத் தூக்கி எறியுங்கள். போராடுங்கள்!".

While there is life, there is hope. So, fight!

நன்றி: நூல்வெளி - உங்கள் பக்கம்

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..