இன்னொரு நாள்...

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்பு தற்போது திருப்பத்தூர் பேருந்து நிலையம் அமைந்திருக்கும் இடத்தில் நடந்து கொண்டிருந்த ஒரு மாபெரும் அரசியல் கட்சிக் கூட்டத்திற்கு என் தாத்தா என்னை அழைத்துச் சென்றிருந்தார். அதுதான் நான் கலந்து கொண்ட முதல் கட்சிக் கூட்டம். அதுவே கடைசியும் என்று நினைக்கிறேன். 

திடலில் நெருக்கியடித்து நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டத்தின் ஆரவாரங்கள் ஆர்ப்பரிப்புகள், கைத்தட்டல்களுக்கு இடையேயும் கட்சித் தலைவரின் குரல் கனீரென்று ஒலித்துக் கொண்டிருந்தது. நாங்கள் நின்று கொண்டிருந்த இடத்திலிருந்து மேடை வெகுதொலைவில் இருந்தது. என் உயரத்துக்கு மேடை தெரியாத காரணத்தால் தாத்தா என்னைத் தன் தோள் மீது தூக்கிவைத்துக் கொண்டார். அவர் தோள்மீது அமர்ந்தபடிதான் மேடையில் முழங்கிக் கொண்டிருந்த 'கலைஞர் கருணாநிதி' அவர்களை நான் முதன் முதலில் பார்க்க நேர்ந்தது. 

கலைஞர் அப்போது ஏதோ ஒரு கதை சொன்னதாகக்கூட நினைவிருக்கிறது. அவருக்கு அருகில் சென்று பார்க்க முடியுமா என்று தாத்தாவிடம் கேட்டேன். அவரும் முயற்சி செய்தார், ஆனால் அந்தக் கூட்டத்தில் எங்களால் இரண்டடி கூட நகர முடியவில்லை. இன்னொரு நாள் நாம் அருகே சென்று பார்க்கலாம் என்றார். கூட்டம் முடிந்து வீட்டுக்கு திரும்பும் போது, வழியில் கலைஞரைப் பற்றியும் அண்ணாவைப் பற்றியும் பேசிக்கொண்டே வந்தவர், நாம் இந்தக் கூட்டத்துக்குச் சென்றது பற்றி உன் தந்தையிடம் கூறிவிடாதே என்றார். அது ஏன் என்று எனக்கு அப்போது புரியவில்லை. ஆனால் இப்போது புரிகிறது. என் தந்தையார் வலதுசாரிச் சிந்தனையாளர். தாத்தாவோ நாத்திகர். நான் இடையில் அக்னாஸ்டிக்காக நின்றுகொண்டிருப்பதற்குக் காரணம் இதுவாகவும் இருக்கலாம். தாத்தா கூட்டிச் சென்றது பற்றி நான் வீட்டிற்குச் சென்றவுடன் அப்பாவிடம் சொல்லி விட்டேன். ஆனால் அதைக் கேட்டவுடன் அவர் கோபம் கொள்ளவில்லை. மாறாக மகிழ்சியடைந்து அவரைப் பற்றி பெருமையாக பேசியதாகத்தான் நினைவு. 

தாத்தாவின் தோள் மீது அமர்ந்து வெகுதொலைவிலிருந்து பார்த்த ஒரு தலைவரின் இல்லத்துக்கே சென்று அவருக்கு அண்மையில் நின்று, தாத்தாவைப் பற்றியும் சிறுவயதில் அவரை தொலைவிலிருந்து நான் பார்த்ததைப் பற்றியும் பேசி, அவரது புன்னகையையும், ஆச்சர்யப் பார்வையையும் வாழ்த்தையும் பரிசாகப் பெற்று, நான் பரிசளித்த என்னுடைய புத்தகத்தை அவர் பெற்றுக்கொண்டு, பக்கங்களைப் புரட்டி  வாசித்த போது நெகிழ்ச்சியாக இருந்தது. தனக்கே உரித்தான கரகரத்த கம்பீரக் குரலில் "நான் திருப்பத்தூருக்கு பல முறை வந்து உரையாற்றியிருக்கிறேன்" என்றவர், "உங்கள் புத்தகத்தை நிச்சயம் வாசிக்கிறேன்." என்று தமிழ் எழுத்துலகின் உச்சத்தில் இருப்பவர்களில் ஒருவர் கூறக் கேட்டபோழ்து மகிழ்ச்சியாக இருந்தது. 



எனக்கும் அவருடைய கட்சிக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. அவருடைய திரைத் தமிழும், நினைவாற்றலும், எதிர்ப்புகளை எதிர்கொள்ளும் விதமும் எனக்கு மிகவும் பிடிக்கும். இவையனைத்துக்கும் மேலாக அவர் என்னுடைய தாத்தா மிகவும் நேசித்த ஒரு ஆளுமை. தாத்தா அன்று என்னுடன் இருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப் பார்க்கிறேன். அவர் சொன்ன 'இன்னொரு நாள்' வந்தது. ஆனால் அவர் என்னுடன் இல்லை.

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..