நிறைகுடம்

சென்னையில் ஒரு தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த காலகட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது.

சென்னை மாநகரின் போக்குவரத்து நெரிசலில் தினமும் விருகம்பாக்கத்திலிருந்த என் வீட்டிலிருந்து எம்.ஆர்.சி நகரிலிருந்த அலுவலகத்துக்குச் சென்று வருவது என்பது அன்றாடம் போருக்குச் செல்வதைப் போன்றது. இன்றைக்கு நிலைமை இன்னும் மோசமாகி விட்டிருப்பதை கடந்த முறை சென்னைக்கு வந்தபோது உணர்ந்தேன். தாம்பரத்திலிருந்து காலை கிளம்பி கிண்டி சென்று நண்பர்களோடு உணவருந்தி விட்டு சோழிங்கநல்லூர் செல்வதற்குள் ஒரு நாள் முடிந்து விடுகிறது.

என் மனைவியும் அதே நிறுவனத்தில் பணியாற்றியதால் இருவரும் அலுவலகத்துக்கு ஒன்றாகத்தான் சென்று வருவோம். பெரும்பாலான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களைப் போல், 'உள்ளே செல்வது மட்டுமே நம் கையில். வெளியே வருவது மேலதிகாரி மற்றும் உலகத்தின் வேறொரு மூலையில் அமர்ந்திருப்பவர்களின் கையில்' என்பது போன்ற சக்கர வியூக வழக்கமெல்லாம் அங்கு கிடையாது. ஐரோப்பிய நிறுவனமாதலால் வேலை-வாழ்க்கை சமநிலைக்கு முக்கியத்துவம் இருந்தது.  அப்போது எங்கள் நிறுவன இயக்குநராக இருந்தவரும் ஒரு ஐரோப்பியப் பெண்மணியே. இதுபோன்ற நிறுவனங்கள் இந்தியாவில் மிகவும் குறைவு என்பேன்.

வழக்கமாக வளசரவாக்கத்தில் வசிக்கும் நண்பரொருவர் எங்களுடன் வருவார். அன்றைக்கு அவரும் வராததால் நானும் என் மனைவியும் தனியாக அலுவலகத்துக்குச் சென்று கொண்டிருந்த போது, சைதாப்பேட்டை பேருந்து நிலையம் அருகே நண்பர் செந்தில் ஆறுமுகம் பேருந்திற்காக காத்துக்கொண்டிருந்ததைப் பார்த்தவுடன், காரை நிறுத்தி அவரையும் ஏற்றிக்கொண்டு புறப்பட்டோம். பாவம் செந்தில். பேருந்தில் சென்றிருந்தால்கூட கொஞ்சம் முன்னதாக அலுவலகம் சென்று சேர்ந்திருப்பார். நாங்கள் உதவி செய்கிறோம் பேர்வழிகள் என்று அவரையும் ஒரு பிரச்சினைக்குள் சிக்கவைத்து விட்டோம்.

இந்தியாவில் இருக்கும்போதே 'முடிந்த வரை' விதிகளை மதித்து ஓட்டும் சொற்ப பேர்களில் நானும் ஒருவன். ஐரோப்பிய நாடுகளைப் போன்று பாதசாரிகள் சாலையைக் கடக்கும் வரைக் காத்துக்கொண்டிருப்பேன். "அவர்களை ஏன் குழப்புகிறாய்?" என்று என் தந்தை ஒருமுறை என்னிடம் அறிவுறுத்தியிருக்கிறார். போக்குவரத்து சமிக்ஞையில் மஞ்சள் விளக்கு விழும் போது நிற்க முடிந்தால் நிற்பவன். அப்படி நின்று காரின் பின் பகுதியில் இடி வாங்கி, பல சமயங்கள் பல பேரிடம், குறிப்பாக ஆட்டோக்காரர்களிடம் இழிசொற்களைச் சன்மானமாகப் பெற்றிருக்கிறேன். இந்தியாவைப் பொருத்தவரை எல்லா சாலை விதிகளுக்கும், எழுதப்படாத மாற்று விதியொன்றை நம் மக்கள் வைத்திருப்பார்கள். அப்படியொரு மாற்று விதிதான் 'மஞ்சள் விளக்கு விழுந்தால் கடக்க முடிந்தவர்கள் கடந்து விடவேண்டும்' என்பது. சில கொலைகாரர்கள் சிவப்பு விழுந்த பின்பும் கடந்து செல்வார்கள். இங்கெல்லாம், நீண்ட நேரமாக பச்சை விளக்கு எரிந்து கொண்டிருப்பதை கவனித்தால், வெகுதொலைவிலேயே வண்டியின் வேகத்தைக் குறைத்துக்கொள்வார்கள். ஏனெனில் எந்நேரமும் சமிக்ஞை பச்சையிலிருந்து மஞ்சளுக்கு மாறலாம். பாதசாரிகள் நடைமேடையிலிருந்து சாலையைக் கடக்க எத்தனித்த அடுத்த கணம், தொலைவிலேயே வேகத்தைக் குறைத்துக்கொண்டு நிற்பதற்குத் தயாராகிவிடும் வாகனங்கள். குறுகிய சாலைகளில் மிதிவண்டிகளுக்குப் பின்னால் சப்தமின்றி மெதுவாகச் சென்று கொண்டிருக்கும் பேருந்துகளை அன்றாடம் பார்த்து அதிசயத்திருக்கிறேன்.

இதையெல்லாம் நம்முடைய பாரம்பரியமிக்க சமூகத்தில் எதிர்பார்க்க முடியாது. குழந்தைகள், வயதானவர்களைப் பற்றியெல்லாம்கூட கவலைப்படாமல் இரக்கமின்றி வாகனம் ஓட்டுவார்கள். பொறுப்பற்ற முறையில் ஒட்டுவதால் அன்றாடம் எத்தனை விபத்துகள் நேர்கின்றன. எத்தனை பேர் கவனக்குறைவால் காயமடைகிறார்கள், உயரிழக்கிறார்கள். 'சீட் பெல்ட் அணியுங்கள்' என்று கூறினால்கூட, அது ஆண்மைக்கு இழுக்கு என்பதுபோல் பார்வை வீசுகிறார்கள். வேதனை. என்னுடைய சாரதி ஒருவர், 'சீட் பெல்ட் உறுத்துது சார்' என்று விந்தையான காரணத்தைக் கூறினார். இவர்களுக்கு எப்படிப் புரியவைப்பது. என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொருத்தவரையில் இந்தியாவில் தீர்க்கப்பட வேண்டிய முக்கியமான பிரச்சினைகளில் இதுவும் ஒன்று. இதில் அரசாங்கத்தின் பங்கைவிட பொதுமக்களின் பங்கு அதிகம். அரசியல்வாதிகளின் தவறுகளை மட்டும் வாய் கிழிய பேசுகிறோம். ஆனால், ஒவ்வொரு குடிமகனும் தன் கட்டுப்பாட்டிலிருக்கும் செயல்களிலேயே ஒழுங்கீனமாக நடந்துகொள்ளும்போது, மற்றவர்களைப் பற்றிப் பேசி என்ன பயன்.

நான் கூற வந்த சம்பவமும் சாலை விதிகளைப் பின்பற்றாததால் அன்றைக்கு டி.ஜி.எஸ் தினகரன் சாலையில் நிகழ்ந்த ஒரு சிறு விபத்தைப் பற்றியதுதான். அந்தச் சாலையில் வந்து கலக்கும் குறுக்கு சாலையிலிருந்து திடீரென ஒரு பெண்மணி இரண்டு சக்கர வாகனத்தை ஒட்டிக்கொண்டு குறுக்கே வந்துவிட்டார். நிச்சயம் அவர்புறமிருந்த சமிக்ஞையில் சிவப்பு விழுந்திருக்க வேண்டும். இத்தனைக்கும் அந்தச் சாலையில் ஒருபுறம் வழியடைப்பு செய்திருந்தார்கள். எனவே மெதுவாகத்தான் அவர் ஒட்டி வந்திருக்க வேண்டும். நான் பிரதான சாலையிலேயே குறைவான வேகத்தில் சென்று கொண்டிருந்ததால் வண்டியை உடனே நிறுத்த முடிந்தது. இருப்பினும் அந்தப் பெண் நிறுத்த முயன்று முடியாமல் நிலைத் தடுமாறி விழுந்து விட்டார். நாங்கள் உடனே காரை ஓரங்கட்டிவிட்டு இறங்கி அந்தப் பெண்ணிடம் ஓடினோம். அந்தப் பெண் வண்டியைச் சாலையிலேயே கிடத்திவிட்டு தன் இடது கையைப் பிடித்தபடி சென்று நடைமேடை மீது அமர்ந்திருந்தார்.

'அடிபட்டிருக்கிறதா?' என்று அந்தப் பெண்ணிடம் கேட்டேன்.

உடனே இழிபுகழ்பெற்ற அந்த நான்கு எழுத்து வார்த்தையை என் மீது கோபத்துடன் பிரயோகித்தார்.

அதுவரை எனக்கிருந்த இரக்க உணர்வைக் களைந்து இத்தகைய பெண்ணுக்காக எதற்காக இறங்கி வந்தோம என்றாகிவிட்டது. என் மனைவிக்கு கோபம் வந்து, 'மைண்ட் யுவர் வோர்ட்ஸ்' என்று திட்ட ஆரம்பித்து விட்டாள். அநேகமாக என்னை இவ்வளவு கேவலமாகத் திட்டிய முதல் பெண்மணி இவராகத்தான் இருக்க வேண்டும்.

எனக்கு பின்னால் இரு சக்கர வாகனமொன்றில் வந்த நல்ல மனிதர் ஒருவர் அந்தப் பெண்ணின் ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்திவிட்டு வந்து, 'திஸ் ஈஸ் நாட் பேர். நீங்கள் பார்த்து வந்திருக்க வேண்டும். உங்கள் மீதுதான் தவறு.' என்று அந்தப் பெண்ணிடம் கூறினார்.

அந்தப் பெண்மணி, "உன் வேலையைப் பார்த்துக்கொண்டு போ" என்று அவரையும் திட்டிவிட்டு தொலைபேசியில் யாரிடமோ பேசினார். பிறகு என்னைப் பார்த்து, "யு வில் ரிக்ரெட் இட் பார் லைப்டைம். உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று கத்தினார்.

"என் மேல் எந்தத் தவறுமில்லை. நான் இங்கேயேதான் இருக்கப் போகிறேன். எதையும் எதிர்கொள்ளத் தயார்." என்று கூறினேன்.

அந்தப் பெண்ணின் வீடு அருகே எங்கோதான் இருக்க வேண்டும். வெகுவிரைவிலேயே அவருக்கு வேண்டிய யாரோ இரண்டு பேர் ஒரு திறந்த ஜீப்பில் வந்திறங்கினார்கள். அதில் ஒருவர் அரைக்கால் சட்டையும், டீ-ஷர்டும் அணிந்திருந்தார். சன் கிளாஸ் வேறு. அவரது தோற்றமே அவரது வர்க்கத்தை எடுத்துச் சொல்லியது. ஜீப்பை ஓரமாக நிறுத்தவேண்டும் என்கிற அடிப்படைக் குடிமை உணர்வுகூட அவருக்கு இல்லை. இன்னும் சொல்லப்போனால் அந்தப் பெண்ணைப் பார்த்து சரியாக விசாரிக்கவும் இல்லை. அநேகமாக அந்தப் பெண்ணின் கணவனாக இருக்கலாம்; சரியாகத் தெரியவில்லை.

"கையைக் காட்டு" என்றார். அருகிலிருந்தவன், "உள்ளடியாக இருக்கலாம்" என்றான்.

அந்தப் பெண் யாரோ அந்த இடத்திற்கு வந்துகொண்டிருப்பதாக அவர்களிடம் தெரிவித்தார்.

அந்த அரைக்கால் சட்டை, ஸ்கூட்டர் ஏதேனும் சேதமாகி இருக்கிறதா என்று பார்த்து விட்டு, என்னை நோக்கி வேகமாக நடந்து வந்து அடிக்கக் கையை ஒங்கினார். நான் உடனே அந்தப் பெண் செய்தத் தவறைக் கூறினேன். அருகே இருந்த மனிதரும் அதையே கூறினார். ஆனால் அந்த மனிதரோ எனக்கு எதிரே நெருங்கி வந்து என் மார்பை முட்டியபடி நின்று, "யு ஆர் டன். உன்ன உள்ள தள்ளாம விட மாட்டேன் டா" என்று மிரட்டினார். அப்போது அவர் வாயிலிருந்து தெறித்த ஒரு துளி எச்சில் என் முகத்தில் விழுந்தது. இடையே நாராசமான இழிசொற்கள் வேறு. 

பண்புமிக்க அந்த மனிதரிடம், "நீ என்ன வேண்டுமானாலும் பண்ணிக்கோ. எனக்குக் கவலை இல்லை. என் மீது தவறில்லை. போலீஸ் வரட்டும்." என்றேன்.

"ஹா ஹா.." என்று உரக்கச் சிரித்து, "வரட்டும் வரட்டும். வந்தா உனக்கே புரியும் நாங்க யாருன்னு." என்று அகம்பாவத்துடன் பேசினார்.

அவர்கள் பேசிய தொனியில், அந்தப் பெண்ணுடைய தந்தை நிச்சயம் ஒரு அரசியல்வாதியாக இருக்கவேண்டும் என்று தோன்றியது. தெரியவில்லை. செல்வாக்கு மிக்க ஒரு தொழிலதிபராகவோ அல்லது காவல்துறை அதிகாரியாகவோகூட இருக்கலாம். வெற்று அகங்காரத்தின் காரணமாக வேண்டுமென்றே இதை மிகப் பெரிய பிரச்சினையாக உருவாக்க முயல்கிறார்கள் என்று எனக்குப் புரிந்தது. ஆனால் அதையும் பார்த்து விடுவது என்று "நாமார்க்கும் குடியல்லோம்" என்கிற திடத்தோடு இருந்தேன். என் மனைவியை செந்திலுடன் நடந்தே அலுவலகத்துக்குப் போகச் சொன்னேன். அவர்கள் இருவருமே மறுத்து கோபமும் அச்சமும் ஒருசேர தாங்கியபடி அங்கேயே என்னுடன் நின்றுகொண்டிருந்தார்கள்.

அப்போது அருகே இருந்த மனிதர் என்னிடம், "நீங்கள் எதற்கும் கவலைப்படாதீர்கள். நான் ஒரு பத்திரிக்கையாளர். தி இந்துவில்தான் வேலை செய்கிறேன். என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம். அவர்கள் யாராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை." என்று கூறிவிட்டு யாரையோ கைபேசியில் அழைத்துப் பேசினார். உண்மையிலேயே நல்ல மனிதர். முன் பின் தெரியாத மனிதரைக் காப்பாற்றுவதற்காக யார் அவ்வளவு நேரம் நடுச்சாலையில் நிற்பார்கள்? அவருடைய பெயர்கூட இன்று என் நினைவிலில்லாதது வருத்தமாக இருக்கிறது.

அப்போது அரைக்கால் சட்டையின் அருகே நின்றுகொண்டிருந்த அந்த எடுபிடி, என் கழுத்தில் தொங்கிக்கொண்டிருந்த அடையாள அட்டையைப் பார்த்துவிட்டு, "ஓ, நீ அந்தக் கம்பெனியா? உனக்கு கிஷோரைத் தெரியுமா?" என்றார்.

'கிஷோர் என்னுடைய மேலதிகாரி' என்றேன்.

உடனே கிண்டலாகச் சிரித்த அந்த எடுபிடி, "அப்போ நீ நிச்சயம் காலி.' என்றார்.

எனக்கு அந்த நிலையிலும் சிரிப்பு வந்துவிட்டது. பார்ப்பதற்குப் படித்தவர்கள் போல் இருக்கிறார்கள். இவ்வளவு முட்டாள்தனமாகப் பேசிக்கொண்டிருகிறார்களே என்று நினைத்துக்கொண்டேன். தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை எல்லாம் என்ன அரசு நிறுவனங்கள் என்று நினைத்துவிட்டார்களா? இவர்கள் சொன்னவுடன் நம்மை வேலையிலிருந்து தூக்கி விடுவார்களாம். இத்தனைக்கும் கிஷோர் எனக்கு அண்ணனைப் போன்றவர். என் திறமையின் மீது அபார நம்பிக்கைக் கொண்டவர். எனக்குக் குழந்தை பிறந்த போது அவர் கூறியது இன்றும் நினைவிருக்கிறது. அப்போது நான் மிக முக்கியமானதொரு பணியில் நியமிக்கப்பட்டிருந்தேன். இருப்பினும், "இது உன் வாழ்க்கையிலேயே மிக முக்கியமான தருணம். உனக்கு எப்போது வேலைக்குத் திரும்ப வரவேண்டும் என்று தோன்றுகிறதோ அப்போது வா." என்று கூறிய அந்த மனிதரிடம்தான் இவர்கள் முறையிட்டு, என்னை வேலையிலிருந்து தூக்கி, என் வாழ்க்கையைச் சீரழிக்கப் போகிறார்களாம்.

தனிமனிதர்களையும், நிறுவனங்களையும் நம்பி வாழ்பவர்களல்ல நாங்கள். எங்களுடைய அறிவையும் உழைப்பையும் நம்பி வாழ்பவர்கள் என்பது இதுபோன்ற அதிகார வர்க்கத்தில் அமர்ந்து அடிவருடிகளை மட்டுமே நாள்தோறும் பார்த்துக்கொண்டிருக்கும் அறிவிலிகளுக்குத் தெரியாமல் இருப்பதில் வியப்பில்லை. தவறு தம் மீது இருப்பினும் அடுத்தவன் மீது அதிகார துஷ்பிரயோகம் செய்து பார்க்கத் துடிக்கும் அகங்காரம் கொண்டவர்கள். கீழே விழுந்ததற்கே நடுத்தெருவில் இவ்வளவு நாடகமாடும் இவர்களின் பணபலம், திரைமறைவில் என்னவெல்லாம் செய்யும் என்பதை நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை. உயர்படிப்பு முடித்துவிட்டு பன்னாட்டு நிறுவனத்தில் நல்ல வேலையில் இருக்கும் என்னைப் போன்ற மனிதர்களுக்கே இந்த நிலை என்றால், விவரம் ஏதுமறியாத ஒரு எளிய மனிதன் கிடைத்தால் இவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள்.

இவற்றையெல்லாம் சிந்தித்தபடி நின்றுகொண்டிருக்கும்போது அங்கே ஒரு கார் வந்து நின்றது. பிரச்சினை வெடிக்கப் போகும் தருணம் வந்து விட்டது என்று நினைத்தேன். காரில் வந்திறங்கியவர் எனக்கு மிகவும் பரிச்சயமானவராகத் தெரிந்தார். நேராக அந்தப் பெண்ணிடம் சென்று, "என்ன ஆச்சு மா?" என்றார். அவர் அந்தப் பெண்ணுக்கு என்ன உறவு என்று தெரியவில்லை. வயதைப் பார்க்கும்போது தந்தையாக இருக்க வாய்ப்பில்லை. அவருக்கு சற்றேறக்குறைய எழுபது வயதிருக்கும். ஒருவேளை அந்தப் பெண்ணின் தாத்தாவாக இருக்கலாம். தெரியவில்லை.

அந்தப் பெண் தன்னுடைய கையைக் காண்பித்து நடந்ததைச் சொல்ல ஆரம்பித்தார். அதற்குள் அந்தப் பெரியவர் யார் என்பது எனக்குத் தெரிந்துவிட்டது. அந்தப் பெண் சொல்வதைக் கொஞ்சமும் காது கொடுத்து கேட்காமல், "இதுக்கெல்லாம் என்னைக் கூப்பிடாதே என்று எத்தனை முறை சொல்லியிருக்கேன்" என்று கடிந்து கொண்டவர், அந்த அரைக்கால் சட்டையிடம் திரும்பி, "அவளை டாக்டர்கிட்ட அழைச்சிட்டு போ. உடனே எடத்த கிளியர் பண்ணுங்க." என்றார்.

நான் அவரிடம் நடந்ததை எல்லாம் விளக்கலாம் என்று அவர் அருகே சென்று , "சார்..." என்று ஆரம்பிப்பதற்குள்ளாகவே என்னிடம் திரும்பி, கனிவாக என்னுடைய தோள்மீது தட்டிக்கொடுத்தபடி, "தம்பி.. காரை எடுத்துட்டு நீங்க கிளம்புங்க தம்பி." என்றார். உண்மையிலேயே எனக்கு அப்போது மெய்சிலிர்த்துவிட்டது. இதை எழுதிக்கொண்டிருக்கும் இந்த நொடியிலும் அதே சிலிர்ப்பு.

இன்று அவர் உயிருடன் இல்லை. ஆயினும் என் நினைவுகளில் இருந்து அகலாத மாமனிதர் அவர். என்னிடம் தவறே இல்லைதான். இருந்தாலும் அவருடைய பெருந்தன்மை என்னை வியக்கவைத்தது. என் மீது துளிக் கோபமில்லை என்பது அவர் என் மீது வீசிய கனிவான பார்வையிலிருந்தே எனக்கு விளங்கியது. எங்களுடைய பிரச்சினையைக் காட்டிலும் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் எந்தவித இடையூறும் வந்துவிடக்கூடாது என்பதிலேயே கவனம் செலுத்தினார். அங்கு என்ன நடந்தது, தவறு யாருடையது என்பதை அவர் ஏற்கனவே நன்றாக அறிந்திருந்ததைப்போல் செயல்பட்டார். அவர் யாரென்பது முக்கியமில்லை. மேலும் அவர் என்ன காரணத்துக்காக, இதற்காகவெல்லாம் தன்னை அழைத்து இழிவுபடுத்தாதீர்கள் என்று அந்தக் குறைகுடங்களிடம் கோபப்பட்டாரோ, அதே காரணங்களுக்காகவே அவர் யாரென்பதைச் சொல்ல விரும்பவில்லை. ஆனால், ஒவ்வொரு பெரிய மனிதரைச் சுற்றிலும் இதுபோன்று குறைகுடங்கள் கூத்துகள் நிகழ்த்திக் கொண்டிருக்ககூடும். அவர்தம் பெயருக்குக் களங்கம் விளைவித்துக் கொண்டிருக்கக்கூடும் என்று அன்றைக்குப் புரிந்துகொண்டேன்.

"தம்பி.. காரை எடுத்துட்டு நீங்க கிளம்புங்க தம்பி!"

மேன்மக்கள் மேன்மக்களே. 'நிறைகுடம்' அவர். 

கருத்துகள்

  1. அருமையான வார்த்தைகள் :
    "ஒவ்வொரு பெரிய மனிதரைச் சுற்றிலும் இதுபோன்று குறைகுடங்கள் கூத்துகள் நிகழ்த்திக் கொண்டிருக்ககூடும். அவர்தம் பெயருக்குக் களங்கம் விளைவித்துக் கொண்டிருக்கக்கூடும் என்று அன்றைக்குப் புரிந்துகொண்டேன். "

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..