கலையில் மடிதல்


'ட்டன் துள்ளல்' நடனக் கலைஞரும், நடிகருமான கலாமண்டலம் கீதானந்தன் அவர்களின் மறைவையொட்டி ஜெயமோகன் தன்னுடைய தளத்தில் எழுதியிருந்த "கலையில் மடிதல்" பதிவை நேற்று வாசித்தேன். ஓட்டன் துள்ளல் என்பது ஒரு தனிநபர் நடனக் கலை. நேரு இதை "ஏழைகளின் கதகளி" என்று வர்ணித்திருக்கிறார்.

கேரள மாநிலம் அவிட்டத்தூரில் ஒரு ஆலயத்தில் துள்ளல் நடனம் ஆடிக்கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு மேடையிலேயே உயிர் துறந்திருக்கிறார் கீதானந்தன். அதைப் பற்றி ஜெயமோகன் எழுதியிருக்கும் இந்த வரிகளை வாசித்துவிட்டு, காணொளியையும் பாருங்கள். It gave me Goosebumps! 

"... நெஞ்சடைப்பு ஏற்பட்டு மயக்கம் வருவதை உணர்கிறார். உயிரிழக்கக்கூடும் என்று தோன்றியிருக்கலாம். ஆகவே பாதி ஆட்டத்தில் திரும்பி ஆட்டத்தை முடிக்கும் முகமாக பாடகரை வணங்கியபடி சரிந்து விழுந்துவிட்டார்.

அர்ப்பணிப்பு அந்தச் சிறிய செயலில்தான் வெளிப்படுகிறது. மேடையிலேயே விழுந்துவிடலாம். ஆனால் அந்த ஆட்டம் வடிவமுழுமை பெறவேண்டும் என அவர் நினைத்தார். கலைஞர்களுக்குரிய இயல்புகளில் ஒன்று தன் கலைவடிவின் ஒத்திசைவு, முழுமைக்கான அவர்களின் தீவிரம். அதை ஒருவகை வெறி என்றே சொல்லலாம்.
...
...
அந்த மரணம் ஒரு குறியீடு போல் தெரிகிறது. அது ஒருவகை மனஎழுச்சியை உருவாக்குகிறது."


ஜீவா பற்றி சுந்தர ராமசாமியின் "ஜீவா காற்றில் கலந்த பேரோசை" கட்டுரை நினைவுக்கு வருகிறது. அவர் ஒரு நண்பரிடம், "ஜீவா மறைந்துவிட்டார்" என்று கூறியதற்கு ஸ்தம்பித்து நின்ற அந்த நண்பர் சிறிது நேரம் கழித்து, "கூட்டத்தில் பேசிக்கொண்டிருக்கும்போதா?" என்று கேட்டாராம். இன்னும் பலரும் அவ்வாறே கேட்டிருக்கிறார்கள். மேடையில் அவர் முழங்கிக்கொண்டிருக்கும்போதுதான் மடிந்திருக்கக்கூடும் என்று ஏன் அவர்கள் தாமாக மடத்தனமாக கற்பனை செய்துகொள்ளவேண்டும் என்றவர், ஜீவா தன்னுடைய உன்னத சேவையால் சாதாரணமானவர்களின் மனங்களில் எழுப்பியிருக்கும் சித்திரம் எத்தனை ஜீவகளையுடன்  காட்சி தருகிறது என்றும் எழுதியிருந்தார். இந்தக் கட்டுரையில் சு.ரா பேசியிருப்பதும் கலையில் மடிதலைப் பற்றித்தான்.

கீதானந்தன் அவர்களின் மரணம் குறியீடு போல் தெரிகிறது என்று குறிப்பிட்டிருக்கிறார் ஜெயமோகன். உண்மைதான். அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஒரு கலைஞன் கலை ஆற்றுகையில் மடிதல் என்பது அவன் அந்தக் கலையுடன் கலந்துவிட்டதற்கான குறியீடு. 

கருத்துகள்

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..