அபூர்வ ராகம்


பாபுவை சந்திப்பது என்பது எனக்கு கைபேசி பாட்டரியை சார்ஜ் செய்துகொள்வது போன்றது. வாலியுடன் மோதுபவர்களின் பாதி பலம் வாலிக்குச் சென்றுவிடும் என்று கூறுவார்கள். பாபுவைச் சந்திக்கும் போதெல்லாம் என்னுடைய பலம் இரண்டு மடங்காகி விடுவதாக உணர்கிறேன். அவரைச் சந்திக்கச் செல்வதெல்லாம் என்னுடைய சுயநலத்துக்காக மட்டுமே. இது போன்ற இன்னொரு மனிதனை நான் என் நாற்பதாண்டு கால வாழ்க்கையில் சந்தித்ததில்லை. அவரொரு அபூர்வ ராகம். இதே தலைப்பில் அவரைப் பற்றியும், எங்கள் உறவு பற்றியும், அவருடனான என்னுடைய அனுபவங்கள் பற்றியும் ஒரு புத்தகமே எழுதும் அளவுக்கு அத்தனை விஷயங்கள் இருக்கிறது. இப்போதைக்கு இந்தக் குறும்பதிவுடன் அதைச் செய்யத் தொடங்குகிறேன்.
இந்தியாவிலிருந்து பெல்ஜியத்துக்கு வந்திருந்த இளைஞர் ஒருவர் என்னைச் சந்திக்க அலுவலகம் வந்திருந்தார். என்னுடைய நண்பன் ஒருவன் சந்திக்கச் சொல்லி வலியுறுத்தியிருக்கிறான். "மீண்டும் நான் உன்னைச் சந்திக்கும் போது நீ வேறொரு ஆளாகியிருப்பாய். உன்னைக் கொலை செய்துவிடுவார். ஜாக்கிரதை." என்று எச்சரித்து அனுப்பி இருக்கிறான். உண்மையில் நான் அத்தகைய கொலைகாரனா என்று எனக்குத் தெரியவில்லை. ஏன் அப்படிச் சொன்னான் என்று அவனைத்தான் கேட்கவேண்டும். ஆனால், என்னைக் கொலை செய்த சிலரில் முக்கியமானவர் பாபு. ஒவ்வொரு சந்திப்புக்குப் பிறகும், "இனி என்னைப் புதிய உயிராக்கி, மதி தன்னை தெளிவு செய்துகொண்டு" வந்திருக்கிறேன். பாரதியின் இந்தப் பாடல் வரிகளும் அவருக்கு மிகவும் பிடித்த ஒன்று. சென்னையில் ஒன்றாக வசித்திருந்த காலத்திலிருந்தே என்னை அடிக்கடி உரக்கச் சொல்லச் சொல்லி ரசிப்பார்.


நாங்கள் சென்னைவாசிகளாக இருந்தபோது செய்த அட்டூழியங்கள் கொஞ்சமில்லை. திடீரென்று ஒருநாள் சினிமா துறைக்குச் செல்லலாம் என்று முடிவெடுத்து மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்தோம். தற்செயலாக எங்களுடைய முதல் விளம்பரப் படத்தில் நாங்கள் இருவர் மட்டுமே மாடல்கள். கெல்லீசில் இருக்கும் துணிக்கடை ஒன்றுக்கான விளம்பரப் படம் அது. உதயநிதி ஸ்டாலினும் - கிருத்திகாவும் அப்போதுதான் ஒரு விளம்பர நிறுவனத்தை துவங்கியிருந்தார்கள். எங்களுக்கு மட்டுமல்ல, அவர்களுடைய விளம்பர நிறுவனத்துக்கும் அதுதான் முதல் வாய்ப்பு. உதயநிதி காரை ஒட்டிக்கொண்டுச் செல்ல, நான், கிருத்திகா, பாபு உட்பட அனைவரும் அமர்ந்துகொண்டு வடக்கு உஸ்மான் சாலையிலிருந்த ஒரு ஸ்டுடியோவுக்கு சென்றபோது பேசியதெல்லாம் இப்போது நினைவுக்கு வருகிறது. இருவருமே புகைப்படப் படப்பிடிப்பு முடியும் வரை அங்கேயே நின்றிருந்தார்கள். இருவருமே எளிமை விரும்பிகள் என்று தோன்றியது. சில நாட்களுக்குப் பிறகு, கெல்லீசில் உயரத்தில் வைக்கப்பட்டிருந்த ஒரு மிகப்பெரிய விளம்பர பலகையில் பாபுவும் நானும் நின்று கொண்டிருந்ததை, இரவு பன்னிரண்டு மணிக்குச் சென்று பார்த்து இருவரும் நார்ஸிஸிஸ்ட்டிக்காக ரசித்துக்கொண்டிருந்தோம். சேத்துப்பட்டிலும் இன்னொரு பெரிய விளம்பரப் பலகையை வைத்திருந்தார்கள். அதன் பிறகு பலமுறை அந்தக் கடைக்குச் சென்றோம். கடை முழுவதும் எங்கள் முகங்கள்தான். எங்களுக்கே வெட்கமாக இருந்தது. எங்களையே நாங்கள் சுயபகடி செய்துகொள்வதற்கு என்றுமே தயங்கியதில்லை. அதுவும் பாபுவைப் பற்றி சொல்லவே தேவையில்லை. ஒருமுறை எங்களுக்கே அங்கு துணிகளை வாங்கிக்கொண்டோம். துணிப்பையிலும் நாங்கள் புன்னகைத்துக்கொண்டிருந்தோம். ஒரே சிலிர்ப்பாகவும் அதே சமயம் சிரிப்பாகவும் இருந்தது. அதன் பிறகு இன்னும் பல விளம்பரப் படங்களில் நடித்தோம்.


எங்கள் உறவு வித்தியாசமானது. என் மனைவி, "உனக்கென்ன? உன் காதலரைச் சந்திக்கப் போகிறாய். குஷிதான் போ!" என்று கிண்டல் செய்வாள். பொய்ம்மையையும் பாவனைகளையும் மட்டுமே விரும்பும் இவ்வுலகில், உண்மையில் நான் நானாகவே முழுவதுமாக வெகு சிலரிடம்தான் வெளிப்பட முடிகிறது. அதில் ஒருவர் பாபு. அனுமனுக்கு அவன் பலம் தெரியாது என்பார்கள். ஜாம்பவான் அவருக்கு நினைவூட்டிக்கொண்டே இருப்பாராம். நான் அனுமனா என்று எனக்குத் தெரியாது. ஆனால் அவர் நிச்சயம் ஜாம்பவான். எனக்கு மட்டுமல்ல. நான், இன்னொரு நண்பன் பென் மற்றும் எங்களைப் போன்ற பலருக்கு. 
இன்று என்னைச் சுற்றி இருக்கும் நல்ல நண்பர்கள், உறவுகளில் பலர் எனக்கு அவர் மூலமாக அறிமுகமானவர்களே. எல்லோருமே உயர்ந்த லட்சியத்தை நோக்கி உயரே பறந்துகொண்டிருப்பவர்கள். முதலில் அவருடைய மனைவி சரண். ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்காக சரண் எடுத்துவரும் முயற்சிகள் பாராட்டத்தக்கது. கூகிளில் "ஆட்டிசம் குழந்தைகளுக்காக" என்று தேடினால் சரணின் காணொளிதான் முதலில் வரும். சரண் பற்றியும், சரணாலயம் - Sharanalayam பற்றியும், ஆட்டிசத்துக்கான "தேர்ட் ஐ” பயிற்சி மையத்தைப் பற்றியும், சரணின் அம்மா வனிதா அவர்கள் பற்றியும், அவர்கள் எனக்குச் செய்த உதவிகள் பற்றியும் பிறகு எழுதுகிறேன். அதேப்போல் நண்பன் பென்னைப் பற்றி விரிவானதொரு கட்டுரை மட்டுமல்ல, ஒரு ஆவணப்படமே எடுக்கும் எண்ணமிருக்கிறது. "உயரே பறந்துகொண்டிருப்பவர்கள்" என்று உவமையாகக் கூறினேன். ஆனால் பென் விஷயத்தில் அது வெறும் உவமையல்ல. உண்மையாகவே பறத்தல் சார்ந்த லட்சியம் அவருடையது. அவர் பறப்பது மட்டுமல்லாமல் கூடவே எங்களையும் பறக்கவைத்துக்கொண்டிருப்பவர். அவருடைய கடந்த ஐரோப்பிய பயணத்தின் போது நாங்கள் வானில் புள்ளென பறந்துப் பறந்து அடித்த லூட்டிகளையெல்லாம் தனிப் பதிவாக எழுதப் போகிறேன். நம் மக்களுக்கு மசாலா சினிமா, கிரிக்கெட், அரசியல், கோயில், குளம் தவிர வேறு எதிலும் நாட்டம் கிடையாது. நம் சமூகம் சற்றே ரசனையுள்ள சமூகமாக மாறினால் இவரைப் போன்றவர்கள் தொட்டிருக்கும் உயரமே வேறாக இருந்திருக்கும்.


இலட்சியமற்ற மனிதராகத் தன்னைக் காட்டிக்கொண்டிருந்தாலும் சந்தேகத்திற்கு இடமின்றி பாபு ஒரு இலட்சியவாதிதான். பொள்ளாச்சியை உலக வரைபடத்தில் சேர்க்கவேண்டுமென்பது அவருடைய கனவு. பதினைந்து வருடங்களுக்கு முன்பு ஆழியார் அணைக்கு அருகே நடந்து சென்றுகொண்டிருக்கும் பொழுது அதை என்னிடம் கூறினார். இல்லாவிட்டால் பொள்ளாச்சி போன்ற விவசாயப் பண்ணைகள் சூழ்ந்த நகரத்தில் "ஸ்லேவ்ஸ்" (The Slaves) போன்றதொரு புதுமையான உணவகத்தை கொண்டுவந்திருக்க முடியாது. நானும் பாபுவும் சென்னையில் ஒரு நிறுவனத்தில் ஒன்றாக வேலை பார்த்துக்கொண்டிருந்த சமயம். எங்களுடைய மேலாளர் மும்பையிலிருந்தும் நாங்கள் சென்னையிலிருந்தும் பணியாற்றிக்கொண்டிருந்தோம். அன்றொருநாள் எங்களுடைய மேலாளர் தொலைபேசி வழியாக எங்கள் டைரக்டருக்கு நாங்கள் உருவாக்கி வந்த மென்பொருளை விளக்கி டெமோ கொடுத்திருக்கவேண்டியது. ஆனால் அன்று அது டெமோ கொடுக்கும் நிலையில் எல்லாம் இல்லை. "எனக்கு வேறொரு முக்கியமான வேலை இருக்கிறது. எனக்கு பதிலாக நீ கொடுக்க முடியுமா?" என்று பாபுவை மாட்டிவிட்டு அவர் தப்பித்துக்கொண்டு விட்டார். பாபு என்னையும் அழைத்துக்கொண்டு போனார். டைரக்டருக்கு அன்றைக்கு வீட்டில் ஏதோ பெரிய பிரச்சினை ஏற்பட்டிருக்கவேண்டும். டெமோ கொடுத்துக்கொண்டிருக்கும் பொழுது இடைவிடாது கேள்விகள் கேட்டு துளைத்தெடுத்துவிட்டார். ஒரு புழுவைப் போன்று நெளிந்துகொண்டிருந்தோம் நானும் பாபுவும். ஒவ்வொரு க்ளிக்குக்கும் எங்களிடம் திரும்பி ஒரு திட்டு. அலுவலகத்தில் இந்த அளவுக்கு யாரும் எங்களிடம் கடுமையாக நடந்துகொண்டதில்லை. விரக்தியோடு வெளியே வந்தவுடனே பாபு ஒரு புன்னகையுடன் என்னிடம் கேட்ட கேள்வி - "ஏதாவது படத்துக்குப் போகலாமா?" என்பது. அதுதான் பாபு. உள்ளே நடந்ததைப் பற்றி பேசவே இல்லை. அங்கிருந்து நேராக பைக்கை எடுத்துக்கொண்டு சாந்தி தியேட்டருக்கு 'அழகி' படம் பார்க்கப் போய்விட்டோம். அங்கே படத்தில், "எங்கே செல்லும் இந்த பாதை" என்று இளையராஜா அவரும் அழுது எங்களையும் அழவைத்தார். படம் முடிந்தவுடன் சரவண பவனுக்கு போனால் ஒருவரும் மதிக்கவில்லை. நீண்ட நேரம் கழித்து ஆர்டர் எடுக்க வந்த நபர் ஒவ்வொரு ஆர்டருக்கும் வித்தியாசமாக கண்களை விரித்து, "நீ அவ்வளவு பெரிய ஆளா" என்று கேட்பது போன்றதொரு பாவனையில் தலையை ஆட்டிக்கொண்டே குறிப்பு எழுதிக்கொண்டு போனார். அது என்ன வகையான பாவம் என்று எனக்கு இன்றளவும் புரியவில்லை. சிறிது நேரத்தில் உணவு வந்து சேர்ந்தது. ஆனால் நாங்கள் கேட்டது ஒன்று வந்தது ஒன்று. அன்று பிறந்ததுதான் "ஸ்லேவ்ஸ்”. அதன் பிறகு ஐந்தும் வருடங்கள் கழித்தே பொள்ளாச்சியில் முதல் உணவகம் ஆரம்பிக்கப்பட்டது. இப்போது கோவையிலும் இரண்டாவது உணவகம் இயங்கி வருகிறது. "வாடிக்கையாளர்களே எஜமானர்கள்" என்பதே ஸ்லேவ்ஸின் மந்திரம். மற்றேனைய பவன்-களைப் போலல்லாமல் உணவகத்தில் புதுமையான உட்புற வடிவமைப்புக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும். நடுத்தரவர்க்கத்துக்கு ஐந்து நட்சத்திர அனுபவம் வழங்கவேண்டும் என்கிற உயரிய நோக்கமே அதற்குக் காரணம்.

சமீபத்தில்கூட கோவையில் புரோ’ட்டா (BRO`TAA) என்கிற பெயரில் தென்னிந்தியாவில் முதன்முறையாக உணவலை உணவகம் ஒன்றைத் துவங்கியுள்ளோம். உண்மையில் உணவகங்களை ஆரம்பித்து உணவை விற்பனை செய்ய வேண்டும் என்பது எங்கள் நோக்கமல்ல. புரோ'ட்டா ஒரு கருத்தாக்கம். ஒரு கனவு. பெருங்கனவு. வாடிக்கையாளர்களை நண்பர்களாகவும் உறவினர்களாகவும் காணவேண்டும் என்பது அது. சுவையான உணவு படைக்க ஆயிரம் உணவகங்கள் இருக்கின்றன. ஆனால் ஆத்மார்த்தமாக அன்பு கலந்து தாய்மை உணர்வோடு உணவு படைக்கும் உணவகங்கள் இங்கு குறைவு. புரோட்டா உணவகத்தில் நண்பர்கள் விரும்பினால் சமையலறைக்குக்கூட செல்ல அனுமதிக்கிறோம். முதல் முறை மட்டுமே வாடிக்கையாளராக நீங்கள் வரவேண்டும். இரண்டாம் முறை வரும்போது நண்பராகவோ, உறவினராகவோதான் வரவேண்டும். குறைகள் இருந்தாலும் வீட்டில் அம்மாவிடம் சொல்வதுபோல் எங்களிடம் சொல்லலாம்.


மனிதன் ஒரு சமூக விலங்கு. தொழில்நுட்ப வளர்ச்சி குறிப்பாக செயற்கை நுண்ணறிவு மற்றும் நகரமயமாக்கல் போன்றவை மனிதர்களை மென்மேலும் அடைத்துவைக்கவே செய்கிறது. அதுமட்டுமின்றி சமூகத்திலும் ஆயிரமாயிரம் பிரச்சினைகள். ஒன்றடுத்து ஒன்றாய் மனிதர்களைத் தாக்கிக்கொண்டே இருக்கிறது. இவற்றிலிருந்து அவர்களை சற்று நேரம் வெளியே கொண்டுவந்து மகிழ்ச்சியுடன் வைத்திருக்கும் வேலையைச் செய்வது என்பதை எங்கள் கடமையாக வைத்திருக்கிறோம். எல்லாவற்றையும் மறந்துவிட்டு நாம் எல்லோரும் சங்கமித்துக் கொண்டாடும் இடம் புரோ'ட்டாவாக இருக்கவேண்டும் என்பது எங்கள் அவா. அவ்வளவே. புரோ'ட்டாவை வெறுமனே சந்தைப்படுத்தும் விதமாக இவற்றைச் சொல்லவில்லை. பாரதி சொன்னதுபோல் "பெரிதினும் பெரிது" எங்கள் கனவு. உண்மையிலேயே "நட்பான சேவை, சுவைமிகு உணவு, உணவலை கொண்டாட்டம்" - இவையே எங்கள் தாரக மந்திரம். இவற்றில் எதிலும் சமரசம் செய்துகொள்ள விரும்பவில்லை. ஆனால் இவையனைத்திலும் அடுத்த கட்டத்துக்குச் செல்வதற்கு தொடர்ந்த முயற்சிகள் எடுத்து வருகிறோம். பரோட்டா உணவுதான். ஆனால் "புரோ'ட்டா" என்பது, அந்த உணவுடன் அன்பை, நட்பை, மகிழ்ச்சியை உட்பொருட்களாக ஆத்மார்த்தமாகச் சேர்த்து நண்பர்களுக்கு வழங்க விரும்புகிறோம்.


ஜெர்மனியில் மிக அதிகமான சம்பளத்துக்கு தகவல் தொழில்நுட்பத் துறையில் ஆலோசகராக பணிபுரிந்துகொண்டிருந்தவர். அனைத்தையும் தூக்கி எறிந்துவிட்டு வந்ததற்கு முக்கியமான காரணம் - "தேசம் சார்ந்த கனவுகள்". கடந்த ஐந்து வருடங்களாக பொள்ளாச்சியில் பலூன் திருவிழாவை முன்னின்று நடத்தி வருகிறார்கள் பாபுவும் பென்னும். கடந்த ஜனவரியில் பலூன் திருவிழாவுக்காகவே இந்தியா வந்திருந்தேன். நம்முடைய விழாவுக்கு நாமே போகாமலிருந்தால் எப்படி. அத்தனைக் கொண்டாட்டமாக இருந்தது. பாபுவின் இலட்சியக் கனவு மெய்ப்பட்டு விட்டது என்று கூறினால் அது நிச்சயம் மிகையில்லை என்று நினைத்துக்கொண்டேன். பொள்ளாச்சி நிறுவனம் ஒன்றின் லோகோவில் "Pollachi" என்கிற வார்த்தையில் "l"-களுக்கு பதிலாக இரண்டு தென்னை மரங்களைக் கொண்டு அழகாக வடிவமைத்திருந்தார்கள். அதில் "i -க்கு மேலுள்ள புள்ளிக்கு பதிலாக பலூனை வைத்துவிடலாம்" என்று பாபுவிடமும், நண்பர் பென்னிடமும் கூறினேன். "இனி பொள்ளாச்சி என்றால் நம் நினைவுக்கு வரப்போவது தென்னை மரங்களும் பலூனும்தானே. தென்னை மரங்கள் நம் தாத்தாக்கள் இங்கிருந்தே உழைத்து உருவாக்கியது என்றால், பலூன் நாம் திரைகடலோடிக் கொண்டுவந்து சேர்த்தது என்று பெருமையாக கூறிக்கொள்ளலாம்." என்றெல்லாம் ஜனவரி மாதப் பதிவொன்றில் எழுதியிருந்தேன். ஆனால் இப்போது கூகிளில் சென்று பொள்ளாச்சி என்று தேடித் பாருங்கள். மனம் வலிக்கிறது. தீமை வலியது. ஒன்றை உருவாக்குவது எவ்வளவு கடினம். ஆனால் அதை அழிப்பது எவ்வளவு எளிது. அரசியல் ரீதியாகவும் எவ்வளவு அழுத்தம் இதுபோன்ற நிகழ்வுகளுக்கு. இதோ இப்போதுகூட புகைப்படப் போட்டி ஒன்று சர்வதேச அளவில் நடத்தப்பட்டு வருகிறது. உலக அரங்கில் இந்தியாவை எங்கோ தூக்கிக்கொண்டு போய் வைக்கவேண்டும் என்ற கனவுகளோடு எவ்வளவு உழைத்து கண்ணாடி மாளிகை கட்டுகிறார்கள் லட்சியவாதிகள். ஆனால் அந்த மாளிகையின் மீது உள்ளிருந்தபடியே கல்லெறிந்துச் சிரிக்கிறது குரூரச் சமூகம். 
நம் நதிகள் சாக்கடைகளாகிக் கொண்டிருக்கின்றன. நம் காடுகள் கட்டிடங்கள் ஆகிக் கொண்டிருக்கின்றன. நம் சாலைகள் குப்பைக் கூளங்கள் ஆகிக்கொண்டிருக்கின்றன. பிரக்ஞையின்றி இவற்றைச் செய்துகொண்டிருக்கும் அத்தனை தேச துரோகிகளும் தேசியக் கொடிக்கு வீர வணக்கம் செலுத்திவிட்டு தேசிய கீதம் பாடி எளிதாக தேசப்பற்று மிக்கவர்களாகிவிடுகிறார்கள். ஒருமுறை ப்ரசல்சு மாநகரின் மையத்தில் நடைபாதையின் தூய்மையைப் பார்த்துவிட்டு அப்படியே தரையில் விழுந்து புரண்டார் பாபு. மிகையே இல்லை. இது போன்று இந்தியாவை மாற்றவேண்டும் என்று ஆதங்கப்பட்டார். ஐரோப்பாவில் அவரோடு எங்கு சுற்றினாலும் அவர் அடிக்கடி உதிரும் வாக்கியம் இதுவே. ப்ரஸல்ஸ் மாநகரில் நான், பாபு, சரண் மூவரும் ஒரு சர்வதேச விழாவுக்குச் சென்றிருந்தோம். அங்கு வந்திருந்த அத்தனைப் பேரும் தங்கள் தேசியக் கொடியைத் தங்கள் தலையிலும் இடுப்பிலும் கட்டிக்கொண்டிருந்தார்கள். நாம் மட்டும் இதைச் செய்ய முடியாது. தேச துரோகிகள் என்று கூறிவிடுவார்கள் என்று பேசிக்கொண்டிருந்தோம். உண்மைதான். நாம் பாவனைகளுக்குப் பழக்கப்பட்டவர்கள். நம் வீட்டுப் பெரியவர்களைப் போலவே நம் சமூகமும் வேண்டுவது தேசத்தின் சின்னங்களின் மீதான மரியாதையே. வெற்று வாய்ச்சொல் வீரர்கள். ஆனால் பாபு போன்றவர்களுக்கு இருப்பது காதல்! அதை மற்றவர்கள் தங்கள் அளவுகோல்களைக் கொண்டு எந்த நாளிலும் அளந்து முடிக்க முடியாது. அத்தனை இரைச்சல்களுக்கிடையேயும் இவர்கள் தங்கள் இசையை மீட்டிக்கொண்டேதான் இருப்பார்கள். அபஸ்வரங்களால் என்றுமே புரிந்துகொள்ள முடியாத, இனம் மதம் தேச எல்லைகளைத் தாண்டிய மானுட மகிழ்ச்சி சார்ந்த உண்மையான கனவுகளோடு திரியும் அபூர்வ ராகங்கள். 
தொடரும்.. மிளிரும்..

கருத்துகள்

  1. உன் குத்தமா? என் குத்தமா?
    யாரை நானும் குத்தம் சொல்ல?

    பதிலளிநீக்கு
  2. உன் குத்தமா? என் குத்தமா?
    யாரை நானும் குத்தம் சொல்ல?

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..