நானாகவே நான்


'வாழ்க்கையே போர்க்களம்'
புளித்துப் போனதொரு வாசகம்
போர்க்களங்களைச் சந்திப்பதில் 
எனக்கு எந்தவித அச்சமுமில்லை
என் யுத்திகளை என்னிடமிருந்து
பறித்துக்கொள்ளாத வரை
என் கவசங்களை என்னிடமிருந்து
பிடுங்கி எறியாத வரை
நீங்கள் கண்டடைந்த யுத்திகள்
ஆகச் சிறந்தவைகளாகவே இருக்கட்டும்
நீங்கள் வைத்திருக்கும் கவசம்
வலிமையானதாகவே இருக்கட்டும்
என் யுத்தியே எனக்குச் சரியானதென்று 
என் கவசமே எனக்குப் பொருத்தமானதென்று
நான் பூரணமாக நம்புகிறேன்
உங்கள் ஆகச் சிறந்த யுத்தியைவிட
உங்கள் கவசத்தின் வலிமையைவிட
என் நம்பிக்கையின் வலிமை
என்னைக் காக்கும்
காக்கவில்லையெனிலும்
என் யுத்தியினால் நான் அடைந்த தோல்விகள்
ஒரு வகையில் எனக்கு வெற்றிகளே
உண்மையில் வெற்றி தோல்விகளில்
எனக்கு நம்பிக்கையில்லை
வாழ்வதில் மட்டுமே - அதில்
சுயமே ஜெயம்.
போலச் செய்தல் அவம்
போலச் செய்தல் சலிப்பு
உங்கள் கனவுகள்
உங்களுக்கு எப்படியோ
அப்படியேதான்
எனக்கு என் கனவுகள்
இவளுக்கு இவள் கனவுகள்
அவனுக்கு அவன் கனவுகள்
ஒருவனுக்குப் புகழ் பெருமை சாதனை
இன்னொருவனுக்கு நகை
வேறொருவனுக்கு நிலபுலம்
மற்றொருவனுக்குக் கடவுள்
காமம் காசு கார் என்று
ஒவ்வொருவனுக்கு ஒவ்வொன்று
ஆசையே வேண்டாம் என்கின்ற
ஆசை புத்தனுக்கு. 
புத்தனுக்கானது போதி
அதன் கீழே என்னை
அமர வைக்க முயலாதீர்கள்
என்னை மட்டுமல்ல -
எவரையும்.
எனக்கானது ஒரு புளிய மரமாகவோ
அவனுக்கானது ஆப்பிள் மரமாகவோ இருக்கலாம்
எனக்கு ஞானமே வாய்க்காமலும் போகலாம்
போதி மட்டுமல்ல
ஞானமும் புத்தனுக்கானதுதான்
அவனுக்கானது அவனுக்கு
உங்களுக்கானது உங்களுக்கு
எனக்கானது எனக்கு
எனக்கானது என்ன என்பதை
நானே கண்டடைவதுதானே சரி? 
எனக்கானதை கண்டடைவதற்கு முதலில் 
நான் என்னையே கண்டடைய வேண்டியிருக்கிறது 
எனவேதான் சொல்கிறேன் 
நீங்கள் நீங்களாகவே
அவன் அவனாகவே 
நானும் நானாகவே இருத்தல் இனிது
சுயமே ஜெயம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..