அலாவுதீனும் பூதமும்


"அலாவுதீன்" திரைப்படத்தை ஹாஸல்ட் நகரில் ஒரு 4Dx தியேட்டரில் பார்த்தோம். என்னவொரு வித்தியாசமான அனுபவம். கேமரா செல்லும் திசையிலெல்லாம் நம் இருக்கையும் நகர்கிறது. அரேபியாவின் நறுமணங்களைப் பற்றிய பாடல் வரிகள் வரும்போது உண்மையிலேயே நறுமணம் தெளிக்கப்படுகிறது. குகைக்குள் அலாவுதீன் விழுந்து உருண்டு ஓடி எழும்போது நம்மையும் அதையெல்லாம் செய்யவைக்கிறது இருக்கை. அலாவுதீனும் இளவரசியும் மாயக் கம்பளத்தில் அருவி மீது பறக்கும்போது நம் மீதும் சாரல் தெறிக்கிறது. காற்று வீசும்போது நமக்கு எதிரே உட்கார்ந்திருக்கும் பெண்களின் கூந்தல் பறக்கிறது. அரங்குக்குள் மின்னல் வெட்டுகிறது. மழை பொழிகிறது. அடுத்தமுறை திரையரங்குக்குப் போகும்போது குடையை எடுத்துச் செல்ல வேண்டும். படம் முடிந்த பிறகு, என் மகனுக்கு அரங்கை விட்டு வெளியே வர மனமில்லை. இருக்கையிலேயே அமர்ந்திருந்தான். அரேபியாவுக்கே குடியேறிவிடலாமா என்கிறான். இன்னும் கொஞ்ச நாளைக்கு வாண்டுகளெல்லாம் வில் ஸ்மித் பின்னால் ஓடப் போகிறது. இப்போதைக்கு அவர்தான் சாயின் ஆதர்ச நாயகன். 
அவன் பூதத்தைப் பற்றி பேசிக்கொண்டிருக்கும்போது, "அப்பா நயோமி ஸ்காட்டைத் தவிர வேறு யாரையும் பார்த்திருக்கமாட்டார் சாய்" என்று கூறிவிட்டு என்னை முறைத்துப் பார்த்தாள் ப்ரியா.
"ஆமா மம்மி, நிஜமாவே அந்த பிரின்ஸஸ் செம பியூட்டிஃபுலா இருந்தாங்க" என்று உண்மையை எடுத்துக் கூறி நிகழவிருந்த மகா யுத்தத்தை தடுத்து நிறுத்திவிட்டான் இரட்சகன். 
"எதிர்காலத்தில் பார்வையாளர்கள் தங்களையே கதாப்பாத்திரங்களாகத் திரையில் பார்க்கப் போகிறார்கள். நடிகர்களுக்கெல்லாம் வேலையே இருக்காது. அதற்கான தொழில்நுட்பம் வரப் போகிறது. இன்னும் சொல்லப் போனால், நாம் எந்த கதாபாத்திரம் என்பதைக்கூட தேர்வு செய்துகொள்ளலாம்." என்றேன்.
"செம ஐடியா ப்பா. நான்தான் அலாவுதீன்" என்றான்.
"அப்படியானால் நான்?" 
"நீ பூதம்"


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

ஸித்ரத்துல் முன்தஹா

புதுமைப்பித்தனின் செல்லம்மாள்

அறிவுத் தீனிக்கு ஒரு தகவலும் மூன்று கூறுமுறைகளும்..